‘குருதிப்புனல்’ என்ற கமல்ஹாசன் படத்தில் தீவிரவாதிகளின் வெறித்தனம் திறம்பட சித்தரிக்கப்பட்டிருக்கும். அவர்களோடு மோதும்போது நல்லது கெட்டது பார்க்க முடியாது. விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா இல்லையா என்பதை ஆராய நேரமிருக்காது. யுத்தக்களத்தில் உயிரோடு இருப்பவன்தான் வெற்றி பெறுகிறான். சிஐடி போலிசார் தீவிரவாத இயக்கத்தில் ஊடுருவி அங்கிருந்து தகவல் அனுப்புவது நுண்ணறிவுப் பிரிவின் உச்சகட்ட வெற்றி எனலாம். குருதிப்புனல் படத்தில் தீவிரவாத இயக்கத்தில் ஊடுருவிய அதிகாரி அந்த இயக்கத்திற்கு தலைமை தாங்கும் வாய்பைப் பெறுவதற்கு சக அதிகாரியை தன்னை சுடச் சொல்லி உயிரைத் தியாகம் செய்வது படத்தின் உச்சகட்ட காட்சி. இவ்வாறு உயிரைப் பணயம் வைத்து பல சாதுர்யமான சாகசங்களை காவல்துறை செய்திருக்கிறது என்றாலும் மதவாத தீவிரவாத இயக்கங்கள் மற்றும் மாவோயிஸ்டு தீவிரவாத அமைப்புகளில் ஊடுருவுவது அவ்வளவு எளிதல்ல.
மும்பை 26/11 பயங்கர நிகழ்விற்குப் பிறகு தீவிரவாதம் பூனேயில் தலைதூக்கியது. சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு, நாள்: 13 பிப்ரவரி 2010; இடம்: பூனேயில் உள்ள பிரபலமான ஜெர்மன் பேக்கரி. இது சாதாரணமாக வெளிநாட்டினர் வந்து போகும் இடம். இது ஆச்சார்ய ரஜ்னீஷ் என்ற ஒக்ஷோவின் ஆசிரமத்திற்கு அருகில் உள்ளது. ஆசிரமும் தீவிரவாதிகள் குறியில் இருந்தது. ஆனால் தெய்வாதீனமாக தப்பியது.
அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் பிடியில் இருக்கும் டேவிட் ஹெட்லியின் இந்திய வரவு பற்றியும் பல இடங்களில் குண்டு வைத்து தீவிரவாதத்தை பரவவிடச் செய்யும் திட்டம் பற்றியும் பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மும்பை, பூனே என்று மராட்டிய மாநிலத்தில் உள்ள பல இடங்களில் மட்டுமின்றி தமிழகம் உட்பட பல மாநிலங்களை அவன் கண்காணித்தாகவும் அறியப்படுகின்றன.
தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் பற்றிய தகவல் சேகரிப்பது மிகவும் கடினம். சாதாரணமாக நுண்ணறிவுப் பிரிவுகளில் ஒவ்வொரு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளுக்கு ஒரு குழு அமைத்து கண்காணித்து தகவல் சேகரிப்பது என்பது வெளிப்படையான தகவல் சேகரிக்கும் முறை. இரகசியமாக உளவாளிகள் மூலம் தகவல் சேகரிப்பது இரண்டாவது வகை. தொழில் நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களை உபயோகித்து தகவல் சேகரிப்பது மற்றொரு வகை. செய்தித் தாள்கள், இணையதளம், தொலைக்காட்சி மற்றும் ஏனைய ஊடகங்கள் மூலமாக வரக்கூடிய செய்திகள், நிகழ்வுகள், அரசியல்வாதிகளின் அறிக்கைகள் இவற்றை ஆராய்ந்து நடக்கப்போவதை அனுமானித்து சொல்வது பயிற்சி பெற்ற நுண்ணறிவு அதிகாரிகளுக்கு கைவந்த கலை. இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைப்பது நுண்ணறிவுப் பிரிவின் மேல்மட்ட அதிகாரிகளின் பணி.
மே நான்காம் தேதி ஃபாய்ஸல் ஷாசாத் என்ற பாகிஸ்தானைச் சேர்ந்தவன் நியூயார்க் நகரின் டைம் சதுக்கம் என்ற பிரசித்திப்பெற்ற பொருளாதார மைய சாலையில் காரில் குண்டு வைத்தற்காக கைதுசெய்யப்பட்டிருக்கிறான். அமெரிக்காவிற்கு நல்லகாலம் குண்டு வெடிப்பதற்கு நிறுத்திவைத்திருந்த காரிலிருந்து வந்த புகையைக் கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வாகனத்தை கைப்பற்றி வைக்கப்பட்ட குண்டினை செயலிழக்கச் செய்தனர்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டியிலிருந்து புகை வந்ததை முதலில் பார்த்தவர் லான்ஸ் ஆர்டன் என்ற தெருவில் சில்லறை துணி விற்கும் நடைபாதை வியாபாரி அவர் உடனே ரோந்து செய்து கொண்டிருந்த வேய்ன் ராடிகன் என்பவருக்கு தகவல் கொடுத்தார். அந்த ரோந்து அதிகாரி தகவலை அலட்சியம் செய்யாமல் உடனடியாக களத்தில் இறங்கி அந்த இடத்தில் இருந்தவர்களை முதலில் வெளியேற்றினார். பதறிப்போய் தலைமையிடத்திற்கு தகவல் கொடுத்து அதிரடிப்படை ஒன்றும் வரவழைக்கவில்லை. நிதானமாக அந்த நேரத்தில் டைம்ஸ் சதுக்கத்தில் ரோந்து பணியில் இருந்த அலுவலர்களை வைத்து பாதுகாப்பு சிறந்தவகையில் செய்யப்பட்டது. இது நிகழ்ந்தது சனிக்கிழமை. இரண்டு நாட்களுக்குள் அந்த வண்டியின் உரிமையாளர் பற்றியும், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வைத்தும் சந்தேக நபர் ஷாசாத்தை போலிஸார் கைது செய்ய முடிந்தது. அவர் நியூயார்க்குக்கு அருகில் உள்ள கனெக்டிகட்டில் கம்யூட்டர் என்ஜினியர் துபாய்க்கு தப்ப இருந்தவரை, விமானத்திலிருந்து இறக்கியது, மின்னல் வேகப் புலனாய்வின் முதல் வெற்றி.
லான்ஸ் ஆர்டன் கடமைவுணர்வோடு செயல்பட்ட நாள் மே 2-ம் தேதி சனிக்கிழமை, இரண்டு நாட்கள் கழித்து அவருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஓபாமாவிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. ஆர்டனின் கடமைவுணர்வையும், உரிய சமயத்தில் தகவல் கொடுத்ததை ஒபாமா அவர்கள் வெகுவாகப் பாராட்டினார் என்ற செய்தி பரவியது. சாதாரண தெரு வியாபாரி, மக்களின் பாராட்டைப் பெற்ற நாயகனானார். ஜனாதிபதி நேரில் பாராட்டியது, ஒரு பேராபத்திலிருந்து பொருளாதார தலைநகர் காப்பாற்றப்பட்டது, நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்பட்டது என்பதற்காக மட்டுமல்ல ஆர்டன் போல் பொதுமக்களும் கடமைவுணர்வோடும், விழிப்புணர்வோடு இருந்தால்தான் தீவிரவாதத்தை முறியடிக்கமுடியும் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்தது.
எந்த ஒரு பெரிய சதிதிட்டம் தீட்டப்பட்டாலும் அதை நிறைவேற்றுவதற்கு உள்ளுர்வாசிகளின் உதவி இன்றியமையாதது. ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலின் புலன் விசாரணனயில் சம்பவம் நடந்த இடத்தில் உடந்தையாக இருந்தவர்கள் சம்பந்தப்படடிருப்பதும் கைது செய்யப்பட்டபின் இவர்களா அப்படி சூழ்ச்சி செய்தார்கள் என்று மலைக்கும்படி இருக்கும்.
தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் எங்கு பயங்கரங்களை நிகழ்த்த திட்டமிடுகிறார்களோ அங்கு ‘ஸ்லீப்பர் செல்’ என்று ஒரு சிலரைக் கொண்ட கமுக்க குழாம் ஒன்றினை அமைப்பார்கள். இவர்கள் மூலமாக தகவல் பெற்று சதித் திட்டத்தை நிறைவேற்றுவார்கள் இத்தகைய கமுக்கப்படை பற்றி தகவல் சேகரிப்பது காவல்துறைக்கு ஒரு சவால் எனலாம்.
மும்பாய் குண்டு வெடிப்பு சதியில் உதவிய இரண்டு குற்றவாளிகளிடமிருந்து தாக்குதலுக்கு உள்ளான தாஜ் ஹோட்டல், ரயில் நிலையம், மருத்துவமனை, லியோபால்ட் சிற்றுண்டி விடுதி இவைகளுடைய வரைபடம் கைப்பற்றப்பட்டது. ‘ஸ்லீப்பர் செல்’ எனப்படும் கமுக்கக் குழாமை சேர்ந்த இவர்கள் கச்சிதமாக தகவல் சேகரித்திருக்கிறார்கள். இவ்வாறு தகவல் சேகரிப்பது, முக்கிய இடங்களை நோட்டமிடுவது, பாதுகாப்பு வளையங்களை சோதித்துப் பார்ப்பது, வெடிப்பொருட்கள், ஆயுதங்கள் சேகரித்தல், தாக்குதலுக்கு குறிவைத்த இடத்திற்க்கு வெள்ளோட்டம் விடுவது, இறுதியாக தாக்குவதற்கு தயார் நிலையில் இருத்தல் இந்த ஆறு ஆயத்த ஏற்பாடுகள் இன்றி தீவிரவாத திட்டம் நிறைவேறாது. இந்த ஆறு கட்ட நடவடிக்கையில் ஏதாவது ஒன்றை இனம் கண்டால் பாதுகாப்பு படை வெற்றி கண்டு விடும். சந்தேக நபர் சம்பந்தப்படாத இடத்தில் நடமாடுவதை விழிப்போடு கண்காணித்தாலே போதும்.
“தீவிரவாதி பலமுறை தோற்கலாம்; ஒருமுறை வென்றால் போதும்; ஆனால், பாதுகாப்புப் படை ஒவ்வொரு முறையும் வெல்ல வேண்டும்”, என்ற சாத்திரம் இந்த பாதுகாப்பு பணியின் சாபக்கேடு!
காவல்துறை இந்த பொருதிலாப் போரில் முந்தவேண்டும் என்றால் பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம். தில்லி பாட்லா பகுதியில் செப்டம்பர் 19 2008-ல் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் தில்லி போலீஸ் ஆய்வாளர் ஷர்மா உயிரிழந்தார். பாட்லா வீட்டினை காவல்துறை முற்றுகையிட்ட பின் தான் அங்கு தீவிரவாதிகள் தங்கியிருந்தனர் என்பது அக்கம்பக்கத்வருக்கு தெரிய வந்தது. அதற்கு பிறகுதான் அங்கிருந்தவர்களில் சந்தேக நடவடிக்கைப்பற்றி மக்கள் கூற ஆரப்பித்தனர், முன்னமே தகவல் கொடுத்திருந்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
இம்மாதிரியான நேர்வுகளில் தான் காவல்துறையின் அணுகு முறையில் நூதனம் தேவை. எடுத்த எடுப்பிலேயே எங்கே, யார், எவர், எப்படி, எவ்வாறு என்று கேள்விகளை அடுக்கினால் ஒன்றும் பேராது. முதலில் நம்மிடம் உள்ள வெளிப்படையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டு அப்பகுதி மக்களின் நம்பிகையைப் பெற வேண்டும். வெறியர்களின் தாக்குதலில் அதிகமாகப் பாதிக்ப்படுபவர்கள் அப்பாவி மக்கள் தீவிரவாதிகள் எந்த பொது இடத்தை தாக்குவார்கள் என்பதைக் கணிக்க முடியாது. சமுதாயத்தின் சமன் நிலையைக் குலையச்செய்வதுதான் பயங்கர வாதிகளின் நோக்கம்.
இத்தகைய பயங்கரவாத தாகுதல் என்ற விகார யுத்தத்தில் பொது மக்கள் முக்கிய பங்குதாரர்கள் என்பதை மறக்கலாகாது. சமுதாயத்தை பொதுவாகப் பாதிக்ககூடிய பிரச்சனைகளான சுகாதாரம், தொற்று நோய், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, ஹெச்ஐவி (HIV) போன்றவைகளுக்கு பல விழிப்புணர்வு முகாம்களும், பேரணிகளும் மக்களை ஈடுபடுத்தி நடத்தப்படுகின்றன. அதே வகையில் பொது மக்களும் தெரிந்தோ தெரியாமலோ தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்களுக்கு உதவக் கூடாது என்பதை தெளிவாக உணர்த்த வேண்டும். நமக்கேன் வம்பு என்று தகவல் கொடுக்காமல் ஒதுங்குவதும் ஒரு வகையான மறைமுக உடந்தை என்பதை மறுக்க முடியாது.
தீவிரவாதம் ஒரு வழிப்பாதை. அதில் உழலும் வெறியர்கள் திரும்ப வழியில்லை. ஆனால் அவர்கள் பிடியில் வழியில்லாமல் சிக்கியவர்கள் திருந்த வழியுண்டு. காவல் துறையின் பாரபட்சம்மற்ற நேர்மையான துணிவான நடவடிக்கையும் பொதுமக்களின் ஈடுபாடும்தான் அதற்கு வழி வகுக்கும்.
published in Dinamani on 20.05.2010