Saturday, April 17, 2010

தட்டிக் கேட்கத் தயங்காதீர்


ஒவ்வொரு வருடமும் மார்ச் 15ம் நாள் 1983ம் வருடத்திலிருந்து நுகர்வோர் விழிப்புணர்ச்சி தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளரை மையமாக வைத்துதான் வியாபாரம் நடத்த வேண்டும் என்றும் நுகர்வோரே மன்னர் என்ற அளவில் போற்றுதலுக்குரியவர் என்று கூறினாலும் நடைமுறையில் இது நேர்மாறாக இருப்பதைக் காண்கிறோம். மற்றவர்களை மிதித்தாவது நாம் முன்னேறி செல்லவேண்டும் எப்படியாவது பணம் சம்பாதிப்பதுதான் பிரதானம் என்ற நிலை வந்து விட்டது..

நுகர்வோர் புறக்கணிப்பிற்கு முக்கிய காரணம் நுகர்வோரே என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும். நுகர்வோர் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதின் முக்கிய நோக்கங்கள், நுகர்வோரின் உரிமைகளைப்பற்றி புரிதல் ஏற்படுத்துதல், பாதுபாப்பு அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்துதல் ஆகும். விற்கப்படும் பொருள் பற்றிய குறிப்பு தெளிவாக இருக்க வேண்டும். தகவல் பெறுவது இரண்டாவது உரிமை. எந்தப் பொருளை எப்படி வாங்க வேண்டும், எவ்வாறு எங்கு வாங்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை மூன்றாவது உரிமையாகும். நுகர்வோர் குறைகள் கேட்கப்பட வேண்டும், கோரிக்கைகளுக்கும் நியாயம் வழங்கப்படவேண்டும் என்பது நான்காவது உரிமை. நுகர்வோர் பாதுகாப்பு, தகவல் அறிதல், தெரிவு சுதந்திரம், விசாரணைக்கு வழி. இந்த நான்கு உரிமைகளும் நுகர்வோர் பாதுகாப்பிற்கு அரண்களாக விளங்கும் தூண்கள்.

தமிழரின் பண்டைகால வணிகமுறை
“ கொள்வதும் மிகை கொளாது
கொடுப்பதும் குறை கொடாது “
எவ்வளவு போற்றுதலுக்குரிய அணுகுமுறை!

“Customer is important” வாடிக்கையாளர்களே முதன்மையானவர் என்றார் மகாத்மா காந்தி அவர்கள். நுகர்வோரை புறக்கணித்தாலோ, ஏமாற்றினாலோ வியாபாரம் முடிவில் படுத்துவிடும். பண்டம் மாற்று முறையில் வணிகம் செய்த காலத்தில் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உழைப்பிற்கு ஏற்றவாறு பண்டம் கொடுக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் இது மாறி பணத்தின் ஆதிக்கம் தலை தூக்கிவிட்டது. நாணயம் வியாபாரத்தின் நாணயத்தை நசுக்கிவிட்டது.

அவசர உலகில் அடாவடித்தனமும், ஆர்ப்பரிப்பும் பெருகிவிட்டது. இந்த சூழலில் கேள்வி கேட்க தயங்குகிறோம். சகிக்கக்கூடாதவை சகிக்கப்படுவதால், சகிக்கக்கூடாதவை சகிக்கக்கூடியதாகிவிடுகிறது. அனுபவரீதியாக இதை பார்க்கிறோம். அநீதியைக் கண்டால் தட்டிக்கேட்க துணிவில்லை. நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்குகிறோம். நாம் பணம் கொடுத்து பொருள் வாங்கும் பொழுது அது தரமானதாக உள்ளதா என்று பார்க்க வேண்டியது நமது பொறுப்பு. காட்சிக்கு இனியதாக இருந்தால் மட்டும் போதாது. அது மனதுக்கும் உடலுக்கும் இதமாக இருக்க வேண்டும். தரம் நிர்ணயிக்கும் ஆணையத்தின் அங்கீகாரம் ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ளதா என்று கவனிக்க வேண்டும். பிரபலமான மற்றும் மக்களின் ஆதரவைப் பெற்ற பொருட்கள் பொதுவாக போலிகள் தயாரிப்பில் சிக்குகின்றன. இத்தகைய பொருட்கள் வாங்கும்பொழுது மேலும் கவனம் செலுத்த வேண்டும்.

“ஏமாற்றாதே ஏமாறாதே“ என்பதில் அர்த்தம் புதைந்திருக்கிறது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் தழைப்பார்கள். அதிக வட்டி என்று முதலீட்டாளர்களை ஈர்த்து முடிவில் ஏமாற்றப்பட்டு பல வழக்குகள் பதிவாயின. நாட்டில் இத்தகைய மோசடி அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம். சுமார் 10 லட்சம் முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை இழந்துள்ளார்கள். இழந்த பணம் சுமார் ரூபாய் 3000 கோடி. இவ்வளவு நடந்த பிறகும் ஏமாறுபவர்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

மேல்நாட்டு பொருட்கள் மீதுள்ள மோகம் இன்றும் குறைந்தபாடில்லை. மேலைநாடுகள் அல்லது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது என்ற முத்திரை இருந்தால் கண்ணை மூடி வாங்குகின்றனர். மக்களின் இந்த மனநிலையை வைத்து போலிப் பொருட்கள் மேலை நாடுகளில் தயாரிக்கப்பட்டதாக முத்திரை குத்தப்பட்டு விற்பனைசெய்யப்படுகிறது. அழகு சாதனப் பொருட்கள், சோப்பு, தைலம், வாசனைப் பொருட்களில் போலிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ட்ரேட் மார்க் – வணிகக் குறி சட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் முதல் அறிக்கைகளின் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. காவல்துறைக்கு இருக்கும் வேலைப்பளுவில் இத்தகைய குற்றங்களைப் பற்றி தகவல் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். அவர்களாக சென்று கண்டுபிடிப்பது வெகு சில வழக்குகளே.

கொடுங்கையூரில் 1998 ஆம் வருடம் தீவிரவாதிகள் நடமாட்டம் பற்றிய தகவலில் ஏராளமான வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. இப்போது போலி மருந்து வகைகள் சிக்கியுள்ளன. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட் துரித நடவடிக்கையில் சந்தேகத்தின் அடிப்படையில் ஏராளமான மருந்துவகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. காலாவதியான மருந்து வகைகள் உட்கொள்வதால் மருந்தின் பலன் குறைவாக இருக்கும் வேறு பாதிப்பு இருக்காது என்ற தவறான எண்ணம் மக்களிடம் உள்ளது. இத்தகைய மருந்துகள் உடம்பிற்கு தீராத தீங்கு இழைக்கும் என்பதை உணர வேண்டும்.

ஐக்கிய நாடுகளின் உலக சுகாராத அமைப்பு போலி மருந்து வகைகள் மற்றும் காலாவதியான மருந்துகள் அதிகமாக நடமாடும் நாடு இந்தியா என்று தனது ஆண்டறிக்கையில் கூறியுள்ளது. இத்தகைய மருந்து வகைகளின் புழக்கத்தின் மதிப்பு ஆண்டொன்றுக்கு சுமார் 5000 கோடி ரூபாய் என்று மதிப்பிட்டுள்ளது. இது இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்து வகைகளின் வியாபாரத்தில் 20 சதவிகிதம் ஆகும். உலகில் புழக்கத்தில் இருக்கும் போலி மருந்துவகைகளில் 35 சதவிகிதம் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன என்பது பெருமைக்குரியது அல்ல. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உலகின் 23 சதவிகித போலி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் 1940, திருத்திய சட்டம் 1982ல் போலி மருந்து செய்தலுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. வேறு ஒரு மருந்து போல தோற்றம் கொடுக்க போலி லேபிள்கள் முத்திரைகள் பொருத்தப்பட்டு அசல் போன்ற தோற்றத்தோடு தயார் செய்தல் இந்த சட்டத்தில் அடங்கும். உலக அளவில் போலி மருந்துகள் நடமாட்டத்தின் மதிப்பு 20 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில் போலி மருந்துகளால் பலர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவில் 1998ம் வருடம் மூளைக்காய்ச்சலுக்கு போலி மருந்து உட்கொண்டதால் சுமார் 2500 ஏழை மக்கள் உயிரிழந்தனர். ரஷியாவில் போலி மருந்துகள் உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் பத்து மடங்காக அதிகரித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை போலி மருந்துகளின் உறைவிடம் வடமாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், பீஉறார். தில்லிக்கு அருகில் உள்ள குர்கான் என்ற இடத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து பருகிய 33 குழந்தைகள் சில வருடங்களுக்கு முன்பு பரிதாபமாக இறந்தன. அந்த மருந்தில் “டையெத்தலீன் க்ளைகால்” என்ற பொருள் கலந்திருந்ததால் குழந்தைகளின் சிறுநீரகம் செயலிழந்து மரணம் ஏற்பட்டது. இம்மாதிரி பெரியதும், சிறியதுமாக நிகழ்வுகள் நமது நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய குறைபாடுள்ள மருந்து வகைகளால் இந்தியாவில் நாளொன்றுக்கு 10 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என கணக்கிடப்பட்டுள்ளது.

போலி மருந்துகள், காலாவதியான மருந்துகள் நடமாட்டம் குறித்தும் கலப்பட மருந்துகள் பற்றியும் போதுமான விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏன் மருத்துவர்கள் மத்தியில் இல்லை என்பது வேதனைக்குரியது. தில்லி, அரியானா மாநிலங்களில் அவ்வப்போது பறிமுதல் செய்யப்படும் போலி மருந்துகள் மத்திய ஆசிய நகரங்களிலிருந்து கடத்தப்பட்டு வந்துள்ளது என்று தெரிகிறது. அரியானாவில் உள்ள ‘பதிண்டா’ என்ற இடம் போலி மருந்துகள் தயாரிப்பின் புகலிடம் இராஜஸ்தான் மாநிலத்தில் அருகில் உள்ளது. இத்தகைய போலி நிறுவனங்களை கண்காணிக்கவும், பதிவாகிய தயாரிப்பாளர்கள் முறையாக தரமான மருந்துவகைகள் தான் தயாரிக்கின்றனரா என்பதை தணிக்கை செய்யவும் மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களது பொதுநலன் பேணுவது மிக முக்கியமான பொறுப்பு. போலி மருந்துகளால் பாதிக்கப்படுபவர் ஏழை மக்கள். சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றாலும் இருக்கும் சட்டத்தை சரிவர அமல்படுத்தவேண்டும். ஊழலின்றி அவரவர் நிலையில் பணிகளை முனைப்புடனும் நேர்மையாகவும் செய்தால் இத்தகைய பிரச்சனைகள் எழ வாய்ப்பில்லை.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது ஆன்றோர் வாக்கு. மக்களுக்கு சென்றடையும் அரசுப் பணி தெய்வீகப்பணி என்றால் ஐயமில்லை. அரசுப் பணிகளை நுகரும் மக்கள் தமக்குக் கிடைக்க வேண்டிய பலன் சரியாக கிடைக்காவிட்டால் முறையிட வேண்டும். உலகெங்கும் மனித உரிமைகளில் கண்ணியமும், சமத்துவமும் முக்கியமாக கருதப்படுகின்றன. பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து பாகுபடுத்தலை அறவே தவிர்த்து நியாயமான முடிவுகள் எடுக்க வேண்டும். அதனால் தான் நிர்வாகத்திற்கு முகமில்லை என்பார்கள். தரமான நேர்மையான சேவை மக்களுக்கு சென்றடைய வேண்டும். விற்பனைக்குரிய பொருளின் தரம் நிர்ணயம் செய்து வாங்குவது போல மக்கள் வரிப்பணத்தில் அரசுப்பணி புரியும் அலுவலர்கள் பணிகளும் தரமானதாகவும், மக்களுக்கு பயனுள்ளதாகவும் அமைய வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு முறையிடவோ, தகவலறியவோ, அரசு அளிக்கும் பயன்பெறவோ வரும் மக்கள் மற்றும் காவல் நிலையங்களில் புகார் கொடுக்கவரும் பாதிக்கப்பட்டவர் கண்ணியமாக நடத்தப்படவேண்டும். இதுவும் ஒரு முக்கியமான மனித உரிமை.

நுகர்வோர் உரிமையும், அடிப்படை மனித உரிமை. மக்களிடம் அவர்களது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு மிகக் குறைவு. உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை பலப்படுத்துவது நமது கடமை. ஆரோக்கியமான சமுதாயம் தழைக்கவும், ஜனநாயகத்தின் ஆளுமைபெருகவும் நுகரும் மக்களின் விழிப்புணர்வு இன்றியமையாதது.


published in Dinamani 09.04.2010

No comments: