Friday, March 26, 2010

உற்றார் யாருளரோ?


கார்த்திக் – அழகுவடிவிலான முருகனின் பெயர். சென்னைக்கு அருகில் உள்ள உத்தண்டி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் கார்த்திக் ஏதோ ஒரு சஞ்சலத்தில் தனது உயிரை மாயித்துக் கொண்டுள்ளான். மாதாமாதம் நடத்தப்படும் வகுப்புத் தேர்வில் முறைகேடாக நடந்துகொண்டதற்காக பிடிக்கப்பட்டு எங்கே பெற்றோருக்குத் தெரிந்துவிடுமோ என்ற சஞ்சலத்தில் இந்த விபரீத முடிவுக்கு வந்துள்ளார்.

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கல்விக்கூடங்களில் நடத்தப்படும் தேர்வுகள் மாணவனின் அறியாமையை மட்டுமே கணிக்கிறது அவனது அறிவாற்றலை அல்ல என்று கூறியுள்ளது எவ்வளவு உண்மை. தற்கொலை என்பது மற்ற குற்ற நிகழ்வுகளைப்போல் அதிக மக்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் சமுதாயமும் ஒருவனது தற்கொலைக்கு காரணமாகிவிடுகிறது. மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை, புகுந்த வீட்டில் கொடுமை தாளாமல் மணமான பெண் தற்கொலை, தொழில் தோல்வி, காதலில் தோல்வி, வேலையில்லா திண்டாட்டம், கடன் தொல்லை என்று கணக்கில் அடங்காத காரணங்களால் மக்கள் தமது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். சமீபத்தில் ஜெர்மனியில் தலைசிறந்த கால்பந்து வீரர் ராபர்ட் என்கே தன் மீது ஏற்பட்ட அவநம்பிக்கையால் கால்பந்து விளையாட்டில் முன்போல ஜொலிக்கமுடியாது என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது விளையாட்டு வீரர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன் நமது நாட்டின் கால்பந்து வீரர் சத்தியன் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டது மறக்க முடியாது.

மனோதத்துவர்கள் ஆய்வுப்படி தற்கொலை செய்து கொள்ளும் முடிவு ஒருவர் விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்படும் நிலையில் எடுக்கப்படுகிறது என்றும் அந்த நிலையில் எது சுலபமான வழி என்று புலப்படுகிறதோ அந்த வழியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இத்தகைய மனநிலையில் அவர்களுக்கு உதவி கிடைத்தால் அவர்களை அந்த நிலையில் இருந்து மாற்றிவிடலாம். சில தனியார் தொண்டு அமைப்புகள் இத்தகைய முடிவு எடுப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஆலோசனை வழங்குகிறது.

இளைஞர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுவதற்கு காரணம் பெரியவர்களின் தவறான அணுகுமுறை எனலாம். அவசர உலகத்தில் இத்தகைய பிரச்சினை உள்ளவர்களிடம் பேசுவதற்கு நேரமில்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மனதுக்கு பட்டதை விளைவுகளைச் சிந்திக்காமல் வார்த்தைக் கணைகளால் கொட்டி விடுவது தற்கொலைக்கு மறைமுகமான காரணமாகிவிடுகிறது. கொட்டிய வார்த்தையை அள்ள முடியாது என்பார்கள். பெரும்பாலான தற்கொலைகள் விவேகமற்ற சொல் அம்புகளால் விளைகின்றன என்பது உண்மை.

கேரள மாநிலம் படிப்பறிவில் இந்தியாவில் முதலிடம் வகிக்கும் மாநிலங்களில் ஒன்று. ஆனால் அங்கு தற்கொலைகள் அதிகம். ஆண்டிற்கு சுமார் 9000 நபர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் 2008, 2007ம் ஆண்டுகள் முறையே 14425, 13811 நபர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 10 ஆண்டுகளில் அகில இந்திய அளவில் செய்து கொள்ளப்பட்ட தற்கொலை கணக்கை எடுத்துக் கொண்டால் முந்தைய 10 ஆண்டுகளைவிட சுமார் 28 சதவிகிதம் அதிகமாகியுள்ளது. இந்தியாவில் 2007 ம் ஆண்டு 1,22,637 நபர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் 2008ம் ஆண்டில் உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் எண்ணிக்கை 1,25,017 ஆகும். சராசரி ஒரு லட்சம் ஜனத்தொகைக்கு 10 பேர் தம் உயிரை மாயித்துக் கொள்கின்றனர்.

எதற்காக தற்கொலை என்ற விபரீத முடிவு எடுக்கப்படுகிறது, காரணங்கள் யாவை, சுற்றுப்புற பாதிப்புகள், படிப்பறிவின் தாக்கம் போன்ற நிலைகளிலிருந்து இந்த பிரச்சனை ஆராயப்பட வேண்டும். கடந்த 10 வருடங்களில் மக்கள்தொகை பெருக்கத்தை எடுத்துக் கொண்டால் (2008 ம் ஆண்டு மக்கள் தொகை 115.3 கோடி) 1 லட்சம் மக்கள் தொகைக்கு தற்கொலையில் இறப்போர் எண்ணிக்கை 10.8-ல் இருந்து 2007, 2008ம் ஆண்டுகளில் மாற்றமில்லை.

அறிவாற்றலிலும், கலைத்திறனிலும் சிறந்து விளங்கும் மாநிலம் மேற்குவங்காளம். அந்த மாநிலத்தில் தான் 2008ம் ஆண்டு எல்லா மாநிலங்களைவிட அதிகமாக 14,852 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. மேற்குவங்காளம், மஉறாராஷ்டிரம், ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நாட்டின் தற்கொலை நிகழ்வுகளில் 56.2 சதவிகிதம் மற்ற 23 மாநிலங்கள் மைய அரசுப் பகுதிகளில் 43.8 சதவிகிதம் என்ற புள்ளி விவரம் நம்மை சிந்திக்க வைக்க வேண்டும். அதிக ஜனத்தொகை உள்ள மாநிலமான உத்திரபிரதேசத்தில் மொத்த தற்கொலைகளில் 3.3 சதவிகிதம் எண்ணிக்கையில் 4125 மட்டுமே நிகழ்ந்துள்ளது.

தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் சுமார் 14000 தற்கொலைகள் ஆண்டொன்றுக்கு நிகழ்கின்றன. இது மொத்த நிகழ்வுகளில் 10 சதவிகிதம் ஆகும். தற்கொலைகளின் தலைநகரம் பெங்களூரு எனலாம். ஏனெனில் அங்கு 2008ம் ஆண்டு 2396 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. அதே ஆண்டில் மும்பையில் 1111, தில்லியில் 1107, சென்னையில் 1319 பதிவாகியுள்ளது. சென்னையைவிட அதிகமாக கோயம்புத்தூரில் 1353 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. நகரங்களுக்கே உரித்தான மனதுக்கு அழுத்தம் தரக்கூடிய அவசர உலக அன்றாட வாழ்க்கைப் போராட்டங்கள் தற்கொலைக்கு காரணமாகி விடுகின்றன. சிக்கிம், நாகாலாந்து, மிசோரம், உறிமாசலபிரதேசம், காஷ்மீர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் 2008ம் ஆண்டு முந்தைய ஆண்களைவிட 10 சதவிகிதம் தற்கொலைகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன.

தற்கொலை என்றால் நமது நினைவுக்கு வருவது அபலைப் பெண்கள் மணம் முடித்து புகுந்த வீட்டில் எழக்கூடிய பிரச்சனைகள் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்வது ஒன்று தான். சமீபத்தில் சேலையூரில் மணமான 2 வருடங்களில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டது டௌரி பிரச்சனைக் காரணமாக நிகழ்ந்தது என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு கைக்குழந்தை வேறு உள்ளது. இருந்தும் இத்தகைய முடிவுக்கு இந்த இளம் தாய் தள்ளப்பட்டாள் என்பது வேதனைக்குரியது. இந்தியவில் 2008 ம் வருடம் 3038 பெண்கள் டௌரி சம்மந்தமான நிகழ்வுகளில் இறந்துள்ளனர். தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 2008 ம் ஆண்டு 207 மற்றும் 2009 ம் ஆண்டு 194.

இளமை என்றென்றும் இனிமை என்று போற்றப்படுகிறது. ஆனால் 15 வயதிலிருந்து 29 வயதுவரை உள்ள இளைஞர்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். மொத்த தற்கொலை எண்ணிக்கையில் இது 35.7 சதவிகிதம் ஆகும். ஆண்பால், பெண்பால் என்ற அடிப்படையில் கணக்கெடுத்தால் ஆண்கள் 64 சதவிகிதம், பெண்கள் 35 சதவிகிதம். ஆனால் பதினாலு வயதுக்குட்பட்ட தற்கொலை பாதிப்பிற்கு உள்ளாகிய குழந்தைகளைக் கணக்கிட்டால் 49 சதவிகிதம் சிறுவர்கள், 51 சதவிகிதம் சிறுமிகள். ஆகக்கூடி பாதிக்கப்படும் ஆண், பெண், குழந்தைகளின் மனநிலை ஒத்திருப்பது கண்கூடு.

தற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்தால் குடும் மற்றும் பொருளாதார பிரச்சனையால் ஆண்கள் பெருவாரியாக தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் பெண்கள் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், ஆசாபாசங்களின் பாதிப்பாலும் இத்தகைய முடிவெடுக்கின்றனர். தனிப்பட்ட காரணங்களான டௌரி பிரச்சனை, தகாத உறவால் ஏற்பட்ட கருத்தரிப்பு, மலட்டுத்தன்மை, விவாகரத்து, கற்பழிப்பு என்று பெண்களுக்கே உரித்தான பிரச்சனைகளுக்கு கணக்கில்லை.

ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் பொதுவான பிரச்சனை குடும்பச் சச்சரவு. 2008 ம் ஆண்டு புள்ளி விவரப்படி தற்கொலை செய்து கொண்ட 1.25 இலட்சம் மக்களில் 15 வயதிலிருந்து 29 வயதுக்குட்பட்டவர்கள் 10,027 இளைஞர்கள் குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதே காரணத்திற்காக 11,363 நடுத்தர வகுப்பினர் உயிர்விட்டுள்ளனர்.

அறுபது வயதுக்கு மேற்பட்ட 9230 வயோதிகர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு உடல்நலக் குறைவே முக்கிய காரணம். இதில் 15 சதவிகிதம் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள். குழந்தைகள் தற்கொலை அதிகமாக உள்ள மாநிலம் மேற்குவங்காளம்.

ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொள்வது நெஞ்சை உலுக்கும் சம்பவம். இந்த புள்ளிவிவரம் முதன் முறையாக 2008ம் ஆண்டு சேகரிக்கப்பட்டது. கிடைத்த விவரங்கள்படி தேசிய அளவில் 484 உயிரிழப்புகள் அதில் ஆண்கள் 202 பெண்கள் 282 பதிவாகிய 290 நிகழ்வுகளில் பீஉறார் மாநிலத்தில்-162, ராஜஸ்தான்-86, ஆந்திரபிரரேசம்-40, தமிழகத்தில்-12 பதிவாகியுள்ளன.

ஒருவரது வேலை அடிப்படையில் ஆராய்ந்தால் சுயவேலையில் ஈடுபடுபவர்கள் 39.8 சதவிகிதம் மொத்த தற்கொலைகளில் அடங்குவர். வீட்டை நிர்வகிக்கும் கல்யாணமான பெண்கள் 54.8 சதவிகிதம். ஆனால் அரசு வேலையில் உள்ளவர்கள் 1.7 சதகவிகிதம் தான். மற்றப்பணிகளை ஒப்பிட்டால் அரசுப்பணியில் பணிச்சுமை குறைவு அதனால் மனச்சுமைக் குறைவு என்று கொள்ளலாம். மாணவர்கள் மற்றும் வேலையில்லாதவர்களின் அளவு 12 சதவிகிதம்.

திருமணம் இன்பமான துன்பமானது என்பார்கள். தற்கொலை முடிவுற்கு தள்ளப்படுபவர்களில் 70.3 சதவிகிதம் திருமணமானவர்கள், 22 சதவிகிதம் திருமணமாகாதவர்கள், விவாகரத்து செய்தவர்கள் மூன்று சதவிகிதம்.

படிப்பறிவின்மையும், வேலையின்மையும் சந்தர்ப்பவசத்தால் தற்கொலை முடிவுக்கு காரணமாகின்றன. எழுதப்படிக்கத் தெரியாதவர்கள், ஆரம்பக்கல்வி அளவு குறைவாக படித்தவர்கள் மொத்த கணக்கில் 46 சதவிகிதம் உள்ளனர். வாழ்க்கை சீராக அமைவதற்கு கல்வி தான் ஆதாரம் என்பது தெளிவு..

இந்தியாவின் ஜனத்தொகையில் 55 சதவிகிதம் இளைஞர்கள். தற்கொலை என்ற சாபக்கேடு இளைஞர்களை அதிகமாக தாக்குகிறது என்பது கசப்பான உண்மை குழந்தைப் பருவத்திலிருந்து இளமை பருவத்தை அடைவதை இரண்டும்கெட்டான் வயது என்பார்கள். உடல் ரீதியாகவும், மனம், சிந்தனை, உணர்வுகள் வெளி நிகழ்வுகளின் தாக்கம் என்று பலவகைப்பட்ட மாறுதல்கள் இளமை பருவத்தில் சந்திக்க நேரிடும். இந்த இக்கட்டான பருவத்தில் உற்றார் யாருளரோ என்ற ஏக்கம் ஏற்படுவது இயல்பு. அவர்களுக்கு உற்ற நண்பனாக உறுதுணையாக நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கை கொடுக்க வேண்டும். பெரியோர்களின் பக்குவமான அணுகுமுறைதான் அதை உறுதி செய்ய முடியும்.

Wednesday, March 17, 2010

உலக நுகர்வோர் தினம்



ஜனநாயக அமைப்பில் மக்களுக்கு உரிமைகள் பல இருக்கின்றன ஆனால் அதைப்பற்றிய புரிதல் இல்லை.

2) ஒரு நாட்டின் பொருளாதாரம் மக்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கிறது. தொன்று தொட்டு வணிகமும் வியாபாரமும் சமுதாய வளர்ச்சியோடு இணைந்துள்ள்து. ஒரு நாடு செழிப்பாக இயங்க வேண்டும் என்றால் நேர்மையான வணிகம் இன்றியமையாதது. “No Nation is Destroyed by Trade”

3) வணிகம் முறையாக இயங்கவில்லை என்றால் வியாபாரமும் விவசாயமும் படுத்துவிடும்.

தமிழரின் பண்டைகால வணிகமுறை
“ கொள்வதும் மிகை கொளாது
கொடுப்பதும் குறை கொடாது “
எவ்வளவு நிதர்சன உண்மை.

4) “Customer is important” வாடிக்கையாளர்களே முதன்மையானவர் என்றார் மகாத்மா காந்தி அவர்கள். நுகர்வோரை புறக்கணித்தாலோ, ஏமாற்றினாலோ வியாபாரம் முடிவில் படுத்துவிடும். பண்டம் மாற்று முறையில் வணிகம் செய்த காலத்தில் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உழைப்பிற்கு ஏற்றவாறு பண்டம் கொடுக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் இது மாறி பணத்தின் ஆதிக்கம் தலை தூக்கிவிட்டது. நாணயம் வியாபாரத்தின் நாணயத்தை நசுக்கி விட்டது.

5) இத்தகைய சூழலில் நுகர்வோரின் உரிமைகளைப் பற்றி எடுத்துச் சொல்லவும் உரிமைகளை நிலை நாட்டவும் எடுக்கப்படும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது.

6) ‘ஏமாற்றாதே ஏமாறாதே’ என்பதில் அர்த்தம் புதைந்திருக்கிறது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் தழைப்பார்கள். அதிக வட்டி என்று முதலீட்டார்களை ஈர்த்து முடி0வல் அவர்கள் ஏமாற்றப்பட்டு பல வழக்குகள் பதிவாயின. நாட்டில் இத்தைகைய மோசடி அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம். சுமார் 10 லட்சம் முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை இழந்துள்ளார்கள். இழந்த பணம் சுமார் ரூபாய் 3000 கோடி. இவ்வளவு நடந்த பிறகும் ஏமாறுபவர்கள் ஏமாந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

7) “எந்த படியால் அளக்கிறோமோ, அந்த படியால் அளந்து கொடுக்கப்படும்” என்கிறது பைபிள். எவ்வளவு தெளிவான கட்டளை! உழைப்பில்லாமல் சம்பாதிக்க முடியாது. நுகர்வோரின் நம்பிக்கையை சம்பாதித்தால்தான் வியாபாரம் நிலைத்து நிற்கும். சம்பாத்தியமும் நிலைக்கும். அதற்கு நுகர்வோர் விழிப்புணர்வு இருந்தால், உழைப்பிற்கு மதிப்பு கொடுத்தால் இத்தகைய மோசடிகள் நிகழாது.
நாணய வியாபாரம் நாணயமாக நிகழும். நுகர்வோர் கொடுப்பது பணம் மட்டும் அல்ல. அது அவர்களின் உழைப்பு அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.

நுகர்வோர் பாதுகாப்பே அதற்கு வழிவகுக்கும்.

வெந்து தணியுமா தீ

பெங்களூரு கார்ல்டன் வணிக வளாகத்தில் பிப்ரவரி திங்கள் 23 ஆம் நாள் நிகழ்ந்த கோர தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக மாண்டனர் 59 நபர்கள் தீக்காயமுற்றனர். இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ விரைவாக மற்ற இடங்களுக்கும் பரவியதில் தகிக்கும் புகை மூட்டம் எல்லா தளத்திலும் மாடி படிக்கட்டுகளிலும் சூழ்ந்தது. வெளியேறுவதற்கு வழிதெரியாத பயத்தில் மாடிக்கட்டிடத்திலிருந்து குதித்ததில் காயமுற்று உயிரிழந்தனர். தீயினால் உண்டாகும் உஷ்ணம் ஒருவரை கதிகலங்கச் செய்துவிடும். சுயநிலையை இழந்து செய்வதறியாது தவித்து நிலை குலைந்து எடுக்கும் முடிவு விபரீதத்தில் முடியும். நியூயார்க் உலக வர்த்தக மைய இரட்டை கோபுர தீவிரவாதத் தாக்குதலினால் உண்டான தீ விபத்தில் பலர் இவ்வாறு நிலை தடுமாறி மாடியிலிருந்து குதித்து உயிரிழந்தனர்.

பெங்களூரு விபத்தின் பூர்வாங்க ஆய்வில் மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது என்றும், வெளியேறுவதற்கான வாசல்கள் மூடப்பட்ட நிலையில் சிக்கிக்கொண்ட மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள். அடுக்கு மாடிக் கட்டிடங்களில் வைக்கவேண்டிய தீ பாதுகாப்பு உபகரணங்கள் வைக்கப்படவில்லை, தீ பரவாமல் தடுக்கக்கூடிய தானியங்கி தண்ணீர் உமிழும் சாதனங்கள் பொருத்தப்படவில்லை. போதுமான அவசரகால வெளியேற்ற நிலைகள் இல்லை, தீ அபாய ஒலிகள் பொருத்தப்படவில்லை என்று நிறைவேற்றப்படாத பாதுகாப்பு பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மேல் மாடிக் கட்டிடம் பூட்டப்பட்டிருந்தது. அங்கு தீப்பற்றக்கூடிய ஜெனரேட்டர் ஆயில் வைக்கப்பட்டிருந்தது மிகவும் அபாயகரமானது. தெய்வாதீனமாக இது தீப்பற்றவில்லை. இதில் தீ பரவியிருந்தால் முழுக்கட்டிடமும் சரிந்திருக்கும் பல உயிர்களை பலி கொண்டிருக்கும்.

பொதுமக்களின் பாதுகாப்பு பற்றி சிறிதேனும் அக்கறையிருந்தால் இத்தகைய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்காது. இது பணம் சம்பாதிக்கும் பேராசையின் உச்சக்கட்டம் என்றால் மிகையில்லை.

அடுக்குமாடிக் கட்டிடங்கள் பின்பற்ற வேண்டிய தீப்பாதுகாப்பு முறைகள் தேசிய கட்டிட விதிகள் 2005 என்ற தொகுப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தது 15 மீட்டர் அதாவது சுமார் 50 அடி உயரமுள்ள கட்டிடம் இந்த விதிகளுக்குள் வரும். சென்னையில் இப்போது சுமார் 60 மீட்டர் உயரம் வரை கட்டிடங்கள் அமைந்துள்ளன. உயர்மாடி கட்டிடங்கள் தீயணைப்புத் துறையின் தடையின்மைச் சான்றிதழ் பெற்ற பின்னரே சென்னை பெருநகர வளர்ச்சி கழகத்தில் கட்டிடம் கட்ட அனுமதி பெற பரிசீலிக்கப்படும். அடுக்குமாடி கட்டிடத்தின் உயரத்தைப் பொறுத்து குறைந்தபட்சம் ஏழு மீட்டர் இடைவெளி கட்டிடத்தைச் சுற்றிலும் இருக்க வேண்டும். தீ விபத்து ஏற்படும் தருணத்தில் தீயணைப்பு வாகனங்கள் கட்டிடத்தைச் சுற்றிலும் நிறுத்தி தீயணைப்புப் பணிகளை திறம்பட செய்திட இத்தகைய இடைவெளி தேவை.

அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலக, வணிக வளாகங்கள் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்கள் சிறியதானாலும் பெரியதானாலும் பொதுவாக கடைபிடிக்க வேண்டிய சில பாதுகாப்பு விதிகள் தேசிய கட்டிட விதிகள் தொகுப்பில் கூறப்படுகின்றன. ஒவ்வொரு மாடி தாழ்வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு தீயணைப்பான்கள் பொருத்த வேண்டும். அவசரகாலத்தில் வெளியேறுவதற்கு வழிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அதற்கான சமிக்ஞைகள் தெளிவாக போடப்பட்டிருக்கவேண்டும். அபாயஒலி கருவிகள் பொருத்த வேண்டும். விடுதிகளில் தீ ஏற்பட்டால் தானாக நீர் உமிழும் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். அவசரகாலத்தில் எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான ஒத்திகை நடத்தப்பட்டு கட்டிடத்தை உபயோகிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பெங்களூரு இந்தியாவின் கணினி விஞ்ஞான தலைநகரம் என்று கருதப்படுகிறது. அதுவும் அசம்பாவிதம் நடந்த இடம் எலக்ட்ரானிக் சிட்டி என்று புதிதாக உருவாக்கப்பட்ட நவீன நகரத்தில் அமைந்துள்ளது. இத்தகைய இடத்திலேயே விதிகள் கடைபிடிக்கவில்லை என்றால் மற்ற இடங்களில் உள்ள கட்டிடங்களின் நிலை எவ்வாறு இருக்கும்.

சட்டங்களும் நிலையாணைகளும் நன்கு இயற்றப்படுகின்றன. ஆனால் அமல் படுத்துவதில்தான் சுணக்கமும் சிக்கலும் வருகின்றன. குறிப்பிட்ட சதுர அடி பரப்பளவு கட்டிடம் உள்ளது என்றால் குறிப்பிட்ட அளவு தாங்கக்கூடிய நீர்கிடங்கு நிறுவப்படவேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் இந்த நீர் தீயணைப்பதற்கு உபயோகப்படுத்த வேண்டும். ஆனால் இதை அமைப்பதில் சிக்கனம் பிடிப்பார்கள். தாழ்வாரங்களும், நிலைப்படிகளும் தடுப்புகள் இல்லாது தடையில்லாமல் அவசர நேரத்திலும் மக்கள் வெளியேற உதவவேண்டும். ஆனால் பெங்களூரு கார்ல்டன் கட்டிடத்தில் தாழ்வாரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் இயங்குகின்றன. நிலைப்படிகள் இரும்பு கம்பிகளால் தடுக்கப்பட்டு சப்புச்சரவு பொருட்கள் வைக்கும் இடங்களாக மாற்றப்பட்டுள்ளன. மொட்டை மாடிக்கு செல்லும் வழி பூட்டப்பட்டு இருந்தது. அது திறந்திருந்தால் மக்கள் அங்கு சென்று அனல் கக்கும் புகையிலிருந்து தப்பித்திருக்கலாம்.

கட்டிடங்களில் திறந்த வெளிப்பகுதி கட்டாயமாக பராமரிக்கவேண்டும் என்ற விதி கடைபிடிப்பதில்லை. பல அலுவலகங்களில் இடப்பற்றாக்குறைக் காரணமாக தாழ்வாரங்களில் எழுத்தர்கள் பணிபுரிவதைக் காணலாம். அரசாங்க அலுவலகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

தீயணைப்புத் துறைக்கு சராசரி ஒரு நாளுக்கு சுமார் நூறு தீயணைப்பு அழைப்புகள் வருகின்றன. கோடைகாலத்தில் வெப்பம் காரணமாக அழைப்புகள் அதிகமாக வரும். 2009 ஆம் ஆண்டு 21,441 தீவிபத்துகள் ஏற்பட்டன. சென்னையில் 2354 தீ விபத்துகள் ஏற்பட்டன. விபத்துக்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109. இந்தியாவில் 2008-ம் ஆண்டு வரை தீ விபத்துகள் பற்றிய புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் படி 2008-ம் ஆண்டில் 32,620 தீ விபத்துகள் சம்மந்தமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 22,454, காயமுற்றவர்கள் 2987.

தீக்காயங்கள் போன்று கொடியது வேறொன்றும் இருக்க முடியாது. அதனால் தான் “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது” என்று ஒரு கொடியச் செயலுக்கு மேற்கோள் காட்டப்படுகிறது. 1979-ம் ஆண்டு தூத்துக்குடி நகரில் ஒரு திரையரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 168 நபர்கள் உயிரிழந்தனர். காயமுற்று உயிருக்கு போராடியவர்களை வாழையிலையில் படுக்க வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டது மறக்க முடியாதது. 2004-ம் வருடம் கும்பகோணத்தில் 93 சிறு குழந்தைகள் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாண்டனர். இந்த நிகழ்வு தொடர்பாக 483/2004 அவினாஷ் மெஉறரோத்ரா எதிர் யூனியன் ஆப் இந்தியா என்ற பொது நல வழக்கில் உச்ச நீதிமன்றம், பள்ளிகளில் தீத்தடுப்பு சாதனங்கள் சரிவர பொருத்தப்பட்டுள்ளதா, விபத்துகளை தடுக்க எல்லாவித முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதை அரசுத் துறைகள் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதன்படி எல்லாப் பள்ளிகளையும் ஆய்வு செய்யும் பொறுப்பினை தீயணைப்புத் துறை மேற்கொண்டுள்ளது.

பாதுகாப்புத் தணிக்கை மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது பற்றிய காலாந்திர ஒத்திகை மிகவும் இன்றியமையாதது. தீயணைப்புத் துறை இத்தகைய பாதுகாப்புத் தணிக்கையை சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், வேலூர், திருநெல்வேலி போன்ற முக்கிய நகரங்களில் கடந்த ஒருவருடமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் இருப்பில் இருக்கும் கணக்குப்படி 964 உயர்மாடிக் கட்டிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 661 உயர்மாடிக் கட்டிடங்கள் உள்ளன. பாதுகாப்பு தணிக்கையில் கண்டறியப்பட்ட பல குறைபாடுகளை அந்தந்த உரிமையாளர்களுக்கும், பயன்படுத்துவோருக்கும் பாதுகாப்பை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக மக்கள் கூடும் வணிக வளாகங்களில் பாதுகாப்பு மேம்படுத்த வேண்டும். மின்சார கம்பிகள் தீப்பாதுகாப்பு கவசங்களோடு பொருத்தப்பட வேண்டும். மின்சார இணைப்புகள் சந்திப்பில் தீ எதிர்ப்பு கவசங்கள் பெட்டிகளில் மூடப்பட்டிருந்தால் மின்கசிவினால் தீப்பொறி உண்டானாலும் அது பெட்டிக்குள்ளேயே அடங்கி விடும், பரவாது. 70 சதவிகித தீ விபத்துக்கள் மின்கசிவினாலும், மின்சார இணைப்புகளின் சக்திக்கு மீறி குளிர்சாதன பெட்டிகள், இயந்திரங்கள் உபயோகிப்பதால் ஏற்படுகிறது.

கடைகளில் அவசரகால வெளியில் செல்லும் பாதையே இருக்காது. இருந்தாலும் அது பூட்டப்பட்டிருக்கும். எல்லாக் கடைகளிலும் எளிதில் பற்றி எரியக்கூடிய அட்டைகள், காகிதங்கள் குவியலாக ஓரத்தில் வைத்திருப்பார்கள். இவையெல்லாம் அபாயத்தின் அறிகுறிகள். பல பிரபலமான சிற்றுண்டி விடுதிகளின் சமயல் கூடத்திற்கு சென்றால் சாப்பிடவே தோன்றாது. புகை வெளியேற்ற விசிறி பொருத்தப்பட்டிருக்காது. அடுப்புகள் இடைவெளியில்லாது வரிசையாக இருக்கும். நெரிசலில் சமைத்துக் கொண்டிருப்பார்கள். வெளியேற தனிவழி இருக்காது. இத்தகைய தவறுகளை சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்ய தீயணைப்புத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

நமது இல்லங்களிலும் சாதாரண தீத்தடுப்பு பாதுகாப்பு முறைகள் கடைபிடிப்பதில்லை. அடுப்புக்கு காஸ் சிலிண்டரிலிருந்து இணைக்கும் ட்யூப் காலந்தவறாமல் மாற்றப்படவேண்டும். அது நைந்து போய் காஸ் கசிவு ஏற்பட்டாலும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. இரவு படுக்கு முன் காஸ் வெளிவரும் துவாரத்தை மூடவேண்டும். காலையில் சமையலறையில் காஸ் கசிவு ஏற்பட்ட வாசம் இருந்தால் மின்விளக்கு போடக்கூடாது. உடனடியாக கதவை திறந்து கசிந்த காஸ் வெளியேற்றப்பட வேண்டும். சமையலறையில் சிலிண்டர் வெடிக்கும் சம்பவங்கள் இத்தகைய அசிரத்தையினால் ஏற்படுகிறது. தழைய தழைய உடைகள் அணிந்து சமையல் செய்யக்கூடாது. புடவைத் தலைப்பை வைத்து சூடான பாத்திரங்களை அடுப்பில் இருந்து இறக்குவதால் புடவையில் தீப்பற்றி பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

பல அடுக்குமாடி குடியிருப்புகளில் தீயணைப்பான்கள் வைத்திருப்பார்கள். ஆனால் அவை வேலை செய்கிறதா என்று சரிபார்க்க மாட்டார்கள். தீயணைப்பு ஆய்வும் காலமுறையாக செய்யப்பட வேண்டும். கேபிள் டிவி இணைப்பு சரியில்லை என்றால் கூக்குரலிடுகிறோம். ஆனால் நமது பாதுகாப்பில் கோட்டை விடுகிறோம்.

“நில், படு, உருண்டோடு” (Stop, Drop and Roll) என்பது தீப்புகையிலிருந்து நம்மை பாதுகாப்ப உதவும் தாரக மந்திரம். சமையலுக்கு உதவும் நெருப்பு கொழுந்து விட்டு எரிந்து தீயாக பரவினால் ஆபத்து. தீ சாதாரணமாக தணியாது. உரிய சமயத்தில் அணைக்காவிட்டால் எரியக்கூடிய பொருட்கள் வெந்தபின் தான் தணியும். பாதுகாப்பு விதிகளை சரிவர கடைபிடித்தால் தீ விபத்துக்களை தவிர்க்கலாம். விபத்தினையே முழுமையான பாதுகாப்பு. அது நமது கையில்.
இக்கட்டுரை தினமணி நாளிதழில் 02.03.2010 அன்று பிரசுரிக்கப்பட்டது

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்



னித உரிமைகள் மனிதகுலம் தோன்றியதிலிருந்து உணரப்பட்டு வந்தது என்பது சரித்திர ஏடுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மாயன் குடியினர் தங்களது சமுதாயக் கட்டுப்பாட்டிற்காக பல சட்டங்கள் நடைமுறைப்படுத்தினர். அதில் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கிரேக்க ரோமாபுரி எகிப்து பெர்ஷியா போன்ற நாகரிகங்கள் தழைத்த காலகட்டங்களில் மனித உரிமைகள் பற்றி உணர்ந்திருந்தனர். அதனை நிலைநாட்ட போராடவும் செய்தனர். இங்கிலாந்தில் 1215ம் வருடம் மக்கள் சக்தியை சந்தித்த ஜான் என்ற மன்னன் ‘மாக்ன கார்ட்டா’ என்ற மனித உரிமைகள் அடங்கிய பிரேரணையை கையெழுத்திட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இது மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றி. இன்றைய நவீன காலத்தில் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்ச்சி பிரான்ஸ், அமெரிக்க நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டத்தின் விளைவாக ஏற்பட்டது. வில்லியம் லாய்ட் கேரிஸ் என்ற அமெரிக்கர் 1831 ஆம் ஆண்டு ‘லிபரேட்டர்’ என்ற பத்திரிகையில் “Human Rights” என்ற சொற்றொடரை முதலில் பிரயோகம் செய்தார் என்றும் அதற்குப் பிறகு இது வழக்கில் வந்தது என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் மனித உரிமைகள் ஆணையம் முக்கியமான உரிமைகளை முன் நிறுத்தி அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. வறுமை ஒழிப்பு, மனித உரிமைகள், கல்வி, காவல் காப்பில் பாதுகாப்பு (கஸ்டோடியல் கேர்) போன்ற பல உரிமை பிரச்சனைகள் ஒவ்வொரு வருடமும் விவாதிக்கப்படுகின்றன. இந்த வருடம் பலதரப்பட்டவர்களை அரவணைப்போம் பாகுபாடுபடுத்தலை தடுத்து நிறுத்துவோம் என்ற அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ம் நாளிலிருந்து ஒரு வருடம் இந்த பிரச்சனை சமுதாயத்தில் ஆராயப்பட்டு மக்களிடையே நல்லிணக்கம் ஏற்பட முயலவேண்டும் என்று மனிதஉரிமைகள் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பலதரப்பட்ட மக்களை அரவணைத்து வழிநடத்த எந்த ஒரு காரணத்தை காண்பித்தும் பாகுபாடு படுத்துதல் தவிர்க்கப்பட வேண்டும். ஒருவரது பிறப்பு, ஜாதி, அவர் பின்பற்றும் மதம், இனம் என்பதன் அடிப்படையில் வேறுபாடு கிடையாது என்பது தான் மனித உரிமைகளின் அடிப்படை நோக்கம். ஆனாலும் இப்பொழுதுள்ள நிலையில் குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தவர்கள் அவர்களுக்குரிய உரிமைகள் மறுக்கப்படுவது மட்டுமல்லாது அவர்கள் இன்னல்களுக்குள்ளாவதையும் காண்கிறோம்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள், அநீதிகள், வன்முறைகளை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்ற கருத்தரங்கம் ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்யப்படுகிறது. பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஒப்புக் கொண்டு அதை எவ்வாறு தடுப்பது, தவிர்ப்பது என்பதை பற்றி நமது நாட்டில் மட்டுமல்ல உலக அளவில் இந்த பிரச்சனை ஆராயப்படுகிறது. அதனால் தான் 1979ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை இந்த பிரச்சினையை உணர்ந்து பெண்கள் தங்களுக்கு சேரவேண்டிய உரிமைகளை எவ்வாறு பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஒரு உடன்படிக்கை டிசம்பர் 18, 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதில் இந்தியா உட்பட 187 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. நவம்பர் 26ம் நாள் ஒவ்வொரு வருடமும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை முன் நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி அதனை களைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென எல்லா நாடுகளிலும் இம்மாதியான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் சொல்லுவதிலும் செயலிலும் காணப்படும் வேறுபாடு தான். நமது சிந்தனையும், போதனையும், செயலும் ஒத்து இருக்க வேண்டும். பெண்களுக்கு சமஉரிமை கொடுக்கப்படவேண்டும், அநீதிகள் இழைக்கக்கூடாது, டௌரி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற மேடைகளில் பேசப்படுகிறது. ஆனால் நடைமுறையில் பார்த்தால் இன்றும் பெண்கள் புகுந்த வீட்டில் கொடுமை படுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு கல்யாணத்திலும் ஆடம்பரச் செலவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இத்தகைய அநீதிகள் கருவறையில் இருந்து கல்லறை வரை தொடர்ந்து இழைக்கப்படுகிறது என்பதை காண்கிறோம். சிசுக்கொலை, பெண்கல்வி மறுப்பு, பெண் குழந்தைகள் வித்தியாசமாக நடத்தப்படுதல், ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிப்பது, மேல்படிப்புக்கு அனுப்பாமல் இருப்பது, விவாகத்தின்போது பணம், நகை மற்றும் உயர்ந்த விலை பொருட்களை டௌரியாக கேட்பது, கல்யாணம் முடிந்த பிறகும் ஒவ்வொரு கட்டத்திலும் மேலும் பணம் கொண்டு வரச் சொல்வது, கணவன் இறந்து விட்டால் விதவை பெண்ணை குடும்பத்தில் இருந்து ஒதுக்குவது என்று பெண்களுக்கு ஓயாமல் பிரச்சனைகள் இழைக்கப்பட்டு அவர்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

“குறுகியமனப்பான்மை, மதம், ஜாதி, இனம் போன்ற பேதங்களுக்கு இடங்கொடாது இந்தியர்களாகிய நாம் தலைநிமிர்ந்து வான் நோக்கி உயர்வோம், திடகாத்ரமாக ஒன்றுபடுதலில் இணைந்திருப்போம்” என்று பண்டித ஜவஉறர்லால் நேரு அவர்கள் 1955ம் வருடம் கொடுத்த அறிவுரை இன்று இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. கிராமங்களில் தான் இந்த வேற்றுமைகள் மாறாமல் உரிமைப் பிரச்சனைகளுக்கு இடமளிக்கின்றன என்றால் நகரங்களிலும் இத்துகைய காழ்ப்புணர்ச்சிகள் தலைதூக்குகின்றன.

ஆஸ்திரேலிய நாட்டில் முக்கியமாக மெல்போர்ன் நகரில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது அங்குள்ள காவல்துறையின் மெத்தனமான நடவடிக்கை கவலை அளிப்பதாக உள்ளது. தாராளமயம், உலகமயம் என்ற பரிமாண வளர்ச்சியில் உலகம் சுருங்குகிறது என்றாலும் பலதரப்பட்ட மக்களை ஆதரிக்கும் பண்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. உள்ளூர்வாசிகளை விட வெளியூரிலிருந்து பிழைக்க வருபவர்கள் கடுமையாக உழைப்பதால் கொடுக்கப்பட்ட வேலையை தக்கவைத்துக் கொள்கின்றனர். இதனால்தான் மும்பையில் வடஇந்தியர்களுக்கு எதிராகவும் மேலும் சில மாநிலங்களில் இனவாரியாக பிரச்சனைகள் தலைதூக்குகின்றன. அயல்நாட்டவர்கள் தமது வாழ்வாதாரத்திற்கு உலை வைக்கிறார்கள் என்ற முறையற்ற உணர்வுதான் இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படுவதற்கு காரணம் என்பது தெளிவு.

பொதுவாக கல்விக் கூடங்களில் பலதரப்பட்ட மாணவர்கள் சகஜமாக பழகவும் பயிலவும் சுமூகமான சூழல் நிலவும் என்றுதான் எதிர்பார்ப்போம். ஆனால் ‘ராகிங்’ என்ற “சிதைவுச் சீண்டல்கள்" குறைந்தபாடில்லை. சமீபத்தில் ஒரு கல்லூரி வளாகத்தில் மாணவன் சிதைவுச் சீண்டல் விளைவாக மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டான் என்ற செய்தி வந்தது.

சில மாதங்களுக்கு முன்பு தில்லியில் உள்ள பிரதான பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி அவரது ஆசிரியரால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். தொல்லை தாங்காமல் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தியாவில் மட்டுமல்ல மேலைநாடுகளில் பல பல்கலைக்கழகங்களில் இத்தகைய கொடுமைகள் நிகழ்கின்றன என்றும், அமெரிக்காவில் மூன்றிலிருந்து ஐந்து மாணவிகளில் ஒரு மாணவி இத்தகைய மேலோட்டமான பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார் என்று புள்ளியல் விவரம் தெரிவிக்கிறது. இத்தகைய நிகழ்வுகளில் கொடுமை படுத்துபவர் தெரிந்தவர் அதனால் வெளியில் சொல்வதற்கு கூச்சப்பட்டு விளைவுகள் பற்றிய பயத்தினால் வேறுவழியின்றி பொறுத்துக் கொள்கிறார்கள் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

சமீபத்தில் அரியானா மாநிலத்தின முன்னாள் டிஜிபி ரத்தோருக்கு, ருசிகா கிர்உறாத்ரா என்ற பெண்ணை பாலியல் கொடுமை படுத்தியற்காக சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இதன் மூலம் சமுதாயத்தில் நிலவும் குழந்தைகள் பாலியல் கொடுமை பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அக்ஷரா என்ற மும்பை தன்னார்வ தொண்டு நிறுவனம் 2007ல் 44 கல்லூரிகளில் மேற்கொண்ட ஆய்வில் 533 பெண்களிடம் நடத்திய நேர்காணலில் சுமார் முந்நூறு பெண்கள் (61 சதவிகிதம்) பாலியல் கொடுமைக்கு உள்ளானவர்கள் என்ற விவரம் வெளிவந்துள்ளது. மற்ற நகரங்களில் கூடுதலாகவோ குறைவாகவோ அத்தகைய நிலவரம் இருக்கும் என்று யூகிக்கலாம். மல்லுக்கட்டிக்கொண்டு பிரச்சனைகளை எதிர்கொள்வதில் இந்தியர்கள் மேலைநாட்டவர்களுக்கு சளைத்தவர் இல்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் உறில்லாரி கிளிண்டன் கூறியதற்கு ஏற்ப இந்த கொடுமையை முனைப்பாக எதிர்க்கொள்ள வேண்டும்.

மனிதர்களை வைத்து இழிவாணிபம் செய்யும் முறை தழைத்து ஓங்கும் சர்வதேச வாணிபமாக வளர்ந்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. ஆசிய நாடுகளிலிருந்து இவ்வாறு வேலைக்காக கொத்தடிமைகளாக பணியில் அமர்த்தப்படுபவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை கடந்துள்ளது. அதில் கணிசமாக இந்தியர்களும் உள்ளனர்.

குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தல், காப்பில் உள்ளவர்களை துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், விசாரணையின்றி கைதிகள் சிறையில் இருத்தல் போன்ற மனித உரிமைப் பிரச்சனைகள் நம்மை நெருடவேண்டும். பார்வையால், சிந்தனையால், செய்கையால் வஞ்சனை செய்தல், கொடுமைகளை பாராமல் இருத்தல் இவையும் ஒருவகை மனித உரிமைகள் மீறல்களே.
அரசியல் சாசனத்தில் 51A என்ற பிரிவில் மக்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி பட்டியலிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாத்தல், பொதுசொத்துக்களை பாதுகாத்தல், பெண்களை கண்ணியமாக நடத்துதல், நாடு உயர ஒவ்வொருவரும் தமது பணிகளை திறம்பட செய்தல் போன்றவை இதில் அடங்கும். உரிமைகள் பெறவேண்டும் அதே சமயம் நமது கடமைகளை நிறைவு செய்ய வேண்டும். சட்டத்தை மதிப்பவர்க்கே உரிமைகள் துணை போகும், கடமைகளை புறக்கணிப்பவர்கள் மீது சட்டம் பாயவேண்டும்.

உயிர் உடமைகளுக்கு பாதுகாப்பு சுதந்திரம் சமத்துவம் கண்ணியம் ஆகிய அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பாதுகாப்பாக பெட்டகத்திற்குள் வைப்பதற்காக அல்ல அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியது நமது கடமை. பலதரப்பட்ட மக்களை அரவணைப்போம். பாகுபாடுகளையும் வேறுபடுத்துதலையும் வேரோடகற்றுவோம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உணர்வினைப் பரவச் செய்வோம்.

இக்கட்டுரை தினமணி நாளிதழில் 03.02.2010 அன்று பிரசுரிக்கப்பட்டது