Tuesday, March 17, 2009

தெய்வீகப் பணி




அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அவர்களின் பதவியேற்பு உரை உலகத் தலைவர்களின் சிறந்த சொற்பொழிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அறுபது ஆண்டுகளுக்கு முன் சிற்றுண்டி விடுதியில் கருப்பர் என்பதால் உணவு மறுக்கப்பட்டவரின் மகன் நாட்டை ஆளும் வாய்பையும் அளிக்கக் கூடிய அரசியலமைப்பு தான் அமெரிக்க ஜனாநாயகத்தின் மகத்துவம் என்று கூறியுள்ளார்.


மகாகவி பாரதியார் “என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்” என்று ஏங்கினார். அடிமை மோகத்தில் மடிந்த கிடந்த மக்களுக்கு “ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரப் பாதையை வகுத்தார். இத்தகைய புனிதமான தனிமனிதனின் சுதந்திரம் ஜனநாயக அரசியலமைப்பு ஒன்றில் தான் பாதுகாக்கப்படுகிறது. குறைகள் எவ்வளவு இருந்தாலும் மற்ற அரசியலமைப்புகளை ஒப்பிடுகையில் ஜனநாயக அமைப்பு தான் சிறந்தது என்றார் இரண்டாவது உலக போரின் வெற்றி நாயகன் வின்ஸ்டன் சர்ச்சில். உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகம் என்ற பெருமை கொண்டது நம்நாடு. 15-வது மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 71.4 கோடி வாக்காளர்கள் 543 பிரதி நிதிகளை தேர்தெடுக்க உள்ளார்கள். தேர்தல் இயந்திரத்தின் நீண்ட பயணம் துவங்கப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் தேர்தல் நடத்துவது அரசு நிர்வாகத்திற்கு ஒரு சவாலாக உள்ளது. அரசு பணிகள் இயல்பாக நடைபெற வேண்டும், சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும்; தற்போதுள்ள தேர்தல் விதிகள்படி அரசு அதிகாரிகள் நடுவுநிலை பிறழாமல் நடக்க வேண்டும் என்பவை நிர்வாகத்தின் இலக்குகளாக இருக்க வேண்டும்.


தேர்தல் பிரசாரத்தின் போது எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், தேர்தல் அன்று அத்தியாவசியமான பணிகள், தேர்தலுக்குப் பிறகு அமைதி காக்க வேண்டிய பொறுப்பு என்று தேர்தல் பணிகளை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். இந்த மூன்று கட்ட நடவடிக்கைகளிலும் பொது அமைதியை காப்பது நிர்வாகத்தின் தலையாய கடமை. வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் அசம்பாவிதங்கள் நேராமல் தடுப்பது தான் திறமையான நிர்வாகத்தின் அடையாளம்.


பொது அமைதியை வருவாய்துறையும், காவல்துறையும் நடுநாயகர்களாக நின்று செயலாற்றினால்தான் பாதுகாக்க முடியும். பொதுத் தேர்தலில் இந்த இருதுறையினரின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள்தான் நிர்வாகத்தின் வெற்றியை உறுதி செய்யும்.


தேர்தலுக்குமுன் முதல் கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும்.


கடந்த கால நிகழ்வுகளை மறந்தால் “பட்டகாலிலே படும்” என்பது போல மீண்டும் பூதாகரமான விளைவுகள் உண்டாகும் என்பதை நினைவில் கொண்டு, எங்கெங்கு முன்பு பிரச்சனைகள் எழுந்ததோ அந்த இடங்களில் முன்னெச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பிடி ஆணைகள் நிலுவையில் உள்ள பழைய குற்றவாளிகளை கண்டறிந்து நீதிமன்ற காவலில் ஒப்படைக்க வேண்டும். ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போக்கிரிகள், கெட்ட நடத்தைக் காரர்கள் இவர்களது குறிப்புகளை எடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். தேர்தல் சம்பந்தமான வழக்குகள், முக்கியமாக வன்முறை சம்பவங்கள், ஆள்மாறாட்டம் செய்தது, போலி அடையாள அட்டை தயாரித்தல் போன்ற ஏற்கெனவே பதிவு செய்த வழக்குகளில் புலன் விசாரணை முறையாக செயல்பட்டிருக்கிறதா என்று கவனித்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடந்த வழக்குகளில் துரித விசாரணையே பிற்கால நிகழ்வுகளை தவிர்க்கவல்லது.


இப்போதிருக்கக்கூடிய பயங்கரவாத விளைவுகளை உணர்ந்து அதனை முறியடித்தல் காவல்துறையின் முக்கிய பொறுப்பு. காவல்நிலைய சரகத்தில் உள்ள வெடிமருந்து மற்றும் படைகலன் உரிமங்கள் பார்வையிட்டு சரி செய்தல், மீறல்கள் உண்டாயின் தக்க நடவடிக்கை எடுத்தல் ஆகியவை காவல்நிலைய அதிகாரியின் முக்கிய கடமைகள் ஆகும்.


காவல்துறைக்கு வேறு பணிகள் வந்துவிட்டாலே சமூகவிரோதிகளுக்கும் கள்ளச் சாராய முதலைகளுக்கும் கொண்டாட்டம் தான். கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதை முக்கிய நடவடிக்கையாக கொள்ள வேண்டும். கள்ளச்சாராயத்தில் ஈடுபடுவர்களை கைது செய்வது ஒருபுறம், அவர்கள் உபயோகப்படுத்தும் கச்சா பொருட்கள், உபகரணங்களை கைப்பற்றி இந்த சட்ட விரோத தொழிலின் மூலதனத்தை முடக்க வேண்டும்.

தேர்தல் பிரசாரத்தின் போது முக்கிய நபர் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது மற்றொரு முக்கியப் பணி. தேர்தலில் போட்டியிடும் எல்லா கட்சிகளும் பிரசாரம் செய்வதற்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், இதில் பாகுபாடு இருக்கக் கூடாது என்பதை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. அந்தந்த சரக அதிகாரி உள்ளூர் அரசியல் கட்சி பிரதிநிதிகளை வைத்து பேசி சுமுகமாக பிரச்சனைகளை தீர்வு செய்யலாம். இத்தகைய நல்லிணக்கக் கூட்டம் முக்கிய தலைவர்கள் வரும்பொழுது மற்ற கட்சியை சேர்ந்தவர்கள் விட்டுக் கொடுத்து காவல்துறையோடு ஒத்துழைப்பு கொடுக்க உதவும்.

தேர்தல் ஆணையம் சமீபகாலத்தில் தேர்தல் சுமுகமாக நடைபெறுவதற்கு அறிவுரைகள் வழங்கியுள்ளது. அந்த ஆணைகளை நடைமுறைப்படுத்துவது காவல்துறையின் முக்கியப் பொறுப்பாகும். இந்த தெளிவான ஆணைகளினால் சட்ட ஒழுங்கு நிர்வாகம் எளிதாகியுள்ளது என்பது உண்மை. பொது இடங்களில் விளம்பர பலகைகள் வைப்பது, ஆதரவு வாசகங்கள் எழுதுவது, தனியார் இடங்களில் அனுமதியின்றி பிரச்சாரத்திற்காக பயன்படுத்துதல் போன்றவை காவல்துறைக்கு பிரச்சனை விளைவிக்கக்கூடியவை. இதில் அதிக கவனம் செலுத்தி முன்னெச்சரிக்கை எடுத்து தவிர்க்காவிட்டால் பின்பு பெரிதாகி விளைவுகள் விபரீதமாகும். எல்லா கட்சிகளுக்கும் பாரபட்சமின்றி பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறதா அல்லது விசேஷ சலுகைகள் சிலருக்கு அளிக்கப்படுகிறதா என்பதைத்தான் தேர்தல் ஆணைய பார்வையாளர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றார்கள். ஆதலால் விதிமீறல்கள் இன்றி பார்த்துக் கொள்வது காவல்துறைக்கு நல்லது.


தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பே பிரச்சாரம் முடிவடைந்து எல்லோருடைய கவனமும் ஓட்டுச்சாவடி பக்கம் திரும்பும். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியும் சராசரி 1200 வாக்காளர்கள் கிராமப்புறங்களிலும், நகர்புறங்களில் 1350 வாக்காளர்கள் வரை கொண்டதாக இருக்கும். வாக்காளர்கள் வீட்டிலிருந்து அதிகபட்சம் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்குள் வாக்குச்சாவடி அமைய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. தமிழ்நாட்டில் 51,602 ஓட்டுச்சாவடிகள் 32 மாவட்டங்களில் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் சுமார் நான்கு கோடி பதிமூன்று லட்சம். ஓட்டுச்சாவடியின் 100 மீட்டர் எல்லைக்குள் எந்த கட்சியின் விளம்பரம் மற்றும் கடைசி நிமிட ஆதரவு வேண்டுதலோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அந்தந்த ஓட்டுச்சாவடியின் காவல் அதிகாரிகளை சார்ந்தது. பிரச்சாரம் ஓய்ந்த பிறகு திரை மறைவு நடவடிக்கைகள் நடவாமல் தடுக்க, தகவல் சேகரிப்பு தீவிரப்படுத்தி சட்டவிரோத சக்திகளை ஒடுக்க வேண்டும்.


தேர்தல் தினம் புனிதமான நாள். தமிழ்நாட்டில் பல கிராமங்களில் மக்கள் தேர்தல் நாளை ஒரு திருவிழா போல கொண்டாடும் பழக்கம் உள்ளது. அதிகாலை எழுந்து குளித்துவிட்டு, பளிச்சென்று உடை உடுத்தி, சாமி கும்பிட்டு மேளதாளத்துடன் வாக்குச் சாவடிக்கு செல்வதை பார்க்க முடியும்.

இத்தகைய பாமர மக்களின் வெகுளித்தனமான ஈடுபாடும், கடமையுணர்வும் தான் நமது ஜனநாயகத்தின் வலிமை. நகர்புறங்களை எடுத்துக் கொண்டால் தேர்தல் விடுமுறை நாளில் சொந்த வேலைகளை கவனிப்பது அல்லது விடுமுறையை பயன்படுத்தி கேளிக்கையில் விரயமாக்குவது என்பது சர்வசாதாரணமாக நடக்கும். ஓட்டுப் போடாமல் இருப்பதும் ஒரு ஜனநாயக உரிமை என்று நியாயப்படுத்தும் வாதமும் கேட்க முடியும். ஆனால் ஓட்டுரிமையை சட்டப்படி பிரயோகப்படுத்துவது ஒவ்வொருவரது கடமை.

இந்தியாவிலேயே மொடக்குறிச்சி சட்டசபை தொகுதியில்தான் அதிகமாக 1033 வேட்பாளர்கள் 1996-ம் வருடம் போட்டியிட்டனர். இரண்டு வருடம் அல்லது அதற்கு அதிகமாக தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. வழக்கு மேல் முறையீட்டில் இருந்தாலும் விதிவிலக்கு கிடையாது. தண்டனை பெற்றவர், நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளவர் வாக்களிக்க முடியாது. ஒரு மக்களவை தொகுதியில் பதிவாகிய வாக்குகளில் ஆறில் ஒரு பங்கிற்கு குறைவாக எடுத்த வேட்பாளர் தனது டெபாசிட் தொகையான ரூபாய்.10,000/-த்தை இழக்கிறார். ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது.

வாக்காளர் அடையாள அட்டை, மின் அணு இயந்திரம் இவை இரண்டும் வெகுவாக ஓட்டுச்சாவடியில் எழக்கூடிய பிரச்சனைகளை தீர்த்துவிட்டது. ஓட்டுச்சாவடி தேர்தல் அதிகாரி வாக்காளர் அடையாள அட்டை உண்மையானதா என்பதை தணிக்கை செய்து ஓட்டுப்போட அனுமதி அளிக்கிறார். தமிழ் சினிமாவில், நகைச்சுவைக் காட்சியில் ஓட்டுச்சாவடிக்குச் சென்று வருபவரைப் பார்த்து “என்னண்ணே ஓட்டுப் போட்டாச்சா” என்று கேட்பார்கள். அதற்கு அவர் “என்ன ஒத்தாசயப்பா நம்ம ஊர்ல! நமக்கு ஏன் கஷ்டம்ன்னு யாரோ ஓட்டு குத்திட்டான்” என்று அங்கலாய்ப்பார்! இம்மாதிரி கள்ள ஓட்டுப் போட்டால் இந்திய தண்டனைச் சட்டம் 171 பிரிவு 4-ன்படி ஒரு வருடம் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தவறு நடந்திருந்தாலும், உண்மையான வாக்காளர் ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார். அந்த ஓட்டு ‘அளிக்கப்பட்ட வாக்கு’ என்று தேர்தல் விதி 42-ன்படி தனியாக வைக்கப்படும்.
வாக்காளர்களை வாகனங்களில் ஓட்டுச்சாவடிக்கு அழைத்துச் செல்வது மக்கள் பிரதிநிதிகள் சட்டப்படி முறையற்ற நடவடிக்கை. பிரிவு 133-ல் இதற்கு மூன்று மாதம் வரை தண்டனை என்றுள்ளது. வாக்குச்சாவடியை கைப்பற்றுதல், வாக்குச்சாவடி அருகில் வன்முறையில் ஈடுபடுதல், வாக்காளர் செல்ல முடியாமல் இடர்விளைவித்தல் வாக்காளரை ஈர்க்கும் வகையில் பணம், பொருள் கொடுப்பது போன்ற குற்றங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரிக்கும், காவல்துறைக்கும் அதிகாரம் உள்ளது.


வாக்களிக்கும் நாளன்று மதியம் ஓட்டுச்சாவடிகளில் சலசலப்பு அதிகமாக இருக்கும். ஊழியர்களும் தொடர்ந்து பணியில் உள்ளதால் சிறிது அசரும் நேரம். அப்போதுதான் பிரச்சனைகள் எழக்கூடும். இத்தருணத்தில் மேற்பார்வையிடும் அதிகாரிகள் முனைப்பாக செயல்பட்டு சுமுகமாக வாக்கெடுப்பை நிறைவு செய்ய வேண்டும். தேர்தல் நேரம் முடியும் வரை யார் வாக்குச்சவாடியில் வரிசையில் உள்ளார்களோ அவர்கள் எல்லோரும் வாக்களிக்க வசதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்ணணு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் சென்று வாக்கு எண்ணும் நாளன்று அசம்பாவிதம் நேராமல் கண்காணிக்க வேண்டும். தேர்தல் முடிவு அறிவித்த பிறகு வெற்றி ஊர்வலத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பாக வேறு சட்டம் ஒழுங்கு நிகழ்வுகள் ஏற்படாமல் கண்காணிப்பு தொடர வேண்டும்.
வன்முறை எங்கு நடந்தாலும் அங்கு சென்று அதனை தடுத்துக் கட்டுக்குள் கொண்டுவருவது காவல்துறையின் கடமை. இதற்கு யாருடைய உத்திரவோ அனுமதியோ தேவையில்லை.


தேர்தல் நேரப் பாதுகாப்புப் பணி மகத்தானது. ஒவ்வொரு காவலரது பணியும் முக்கியமானது. அவருக்குப் பின்னால் காவல்துறை என்ற உன்னத கூட்டமைப்பின் சக்தி இருக்கிறது, மக்களின் நன்மதிப்பு என்ற சக்தி நம்மைச் சுற்றி அரணாக இருக்கிறது.


தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதால் தேர்தல் பணிகள் தெய்வீகப் பணிகள் என்பதை உணர்ந்து முழு ஈடுபாடுடன் பாரபட்சமின்றி காவல்துறை கடமையாற்ற வேண்டும்.



இந்த கட்டுரை தினமணி நாளிதழில் 17.03.2009 பிரசுரிக்கப்பட்டது.

Friday, March 6, 2009

மாமனிதர் பூர்ணம் விசுவநாதன்





வாழ்க்கை ஒரு சங்கீதம். நீலாம்பரியில் ஆரம்பித்து முகாரியில் முடியும் என்பார்கள். ஆனால் பூர்ணம் விசுவநாதன் வாழ்க்கை நீலாம்பரியில் ஆரம்பித்து நீலாம்பரியில் முடிவில்லாமல் தொடர்கிறது. எனது தமக்கை உமா அப்பாஜியின் பூத உடலைப் பார்த்து கடந்த இரண்டு வருடம் “எனது குழந்தையாக இருந்தாயே அப்பாஜி” என்று ஏங்கியது மனதில் அப்படியே நிற்கிறது.

பூர்ணம் விசுவநாதன் என்றதுமே நினைவுக்குவருவது அரவது பிரசன்னமான Personality. 1958 என்று நினைக்கிறேன். எனது தாத்தா பூர்ணம் ஐயர் பெரியகுளத்தில் காலமானார். எனது தந்தை உடனே பெரியகுளம் சென்றுவிட்டார். டில்லியிலிருந்த எனது சித்தப்பா சென்னைக்கு எங்கள் வீட்டுக்கு வந்தார். சிறுவனாகிய எனக்கு அப்போது அவர் பெரிய ‘Hero’ மாதிரி காட்சி அளித்தார்!

ஆஜானுபாகுவான செக்கச்செவேர் என்ற உருவம். சுருட்டைத்தலை. Hirthik Roshan கண்ணாடி, full Suit. அப்போதே அவரிடம் முழுமையாக ஈர்க்கப்பட்டேன். பிறகு அவர் நாடகத்துறையில் முழுமையாக ஈடுபடுவதற்காக சென்னைக்கு மாற்றலாகி வந்தார். சித்தப்பா, சித்தி மாதத்திற்கு ஒரிரு முறையாவது எங்களது வீட்டிற்கு வருவார்கள் வீடே களை கட்டிவிடும் - சந்தோஷமான நாட்கள்.

ஒருமுறை நானும் எனது தம்பியும் அப்பாவிடம் போராடி ஒரு சினிமா பார்ப்பதற்கு அனுமதி பெற்றிருந்தோம். அன்று சித்தப்பா, சித்தி வீட்டிற்கு வந்தனர். வழக்கம் போல சுவாரஸ்யமான ஹாஸ்யப் பேச்சு. அதில் மெய் மறந்து இதைவிட வேறென்ன entertainment வேண்டும் என்று சினிமாவிற்குச் செல்ல தோன்றவில்லை.

எங்களது தந்தை, சித்தப்பவின் தாயார் ஒரு கடமை வீராங்கனை – தியாகத்தின் வடிவம். பாட்டியிடம் எனது தந்தையும் சித்தப்பாவும் அளவு கடந்த அன்பு வைத்திருந்தனர். டில்லியிலிருந்து எங்கள் பாட்டி அவரது கடைசி காலத்தில் எங்களோடு இருந்து சென்னையில் காலமானார். சித்தப்பா தனது உணர்ச்சிக் குமுறலை ‘அம்மா....!’ என்று ஒரு காவியமாக எழுதி அது ஆனந்த விகடனில் முத்திரைக் கதையாக பிரசுரம் செய்யப்பட்டது.

1968-ம் வருடம் எனது அக்காவின் கல்யாணநாளின் முந்தையநாள் எனது அத்தை (தந்தையின் அக்கா) அகால மரணம் அடைந்தார். அப்போது எனது சித்தப்பா தான் கல்யாணம் தடைபடாமல் நடக்கட்டும் என்று தான் முன்னின்று மற்ற காரியங்களை கவனித்துக் கொண்டார். அது மறக்க முடியாததொன்று.

அவரது நாடகங்கள் ஒன்று விடாமல் நான் பார்த்ததுண்டு. நான் ஐ.பி.எஸ்-ல் சேர்ந்த சமயம். பயிற்சிக்கு சென்னை வந்திருந்தபோது எனது சக அதிகாரிகளான திரு.விஜயகுமார், கோபாலகிருஷ்ணன், சேஷாத்திரி, சித்தப்பாவின் நாடகம் பார்க்க வேண்டும் என்றனர். அப்போது அவர் நடித்த வாஷிங்டனில் திருமணம் பிரபலமாக நடந்து கொண்டிருந்தது. நான் சித்தப்பாவிடம் சொல்லி எனது சக அதிகாரிகளை அழைத்துக் கொண்டு அந்த நாடகம் பார்த்தது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

குழந்தைகள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். அவர்களுக்கு இணையாக பேசுவார். அவர்களை சந்தோஷப்படுத்துவதில் அவருக்கு ஆனந்தம். எங்களது பள்ளி நாட்களில் எங்களை sub-urban train-ல் தாம்பரம் வரை அழைத்துக் சென்று முதல் ரயில் சவாரி கொடுத்தார்.
அவரது நகைச்சுவை நடிப்பில் மட்டுமல்ல எழுத்திலும் உண்டு. அவரது ஹாஸ்யக் கதைகளை மீண்டும் மீண்டும் படித்து ரசித்ததுண்டு. தனது மகள் பத்மஜாவை வைத்து பத்மஜாவின் மூக்கு என்று நகைச்சுவையான கதை எழுதினார்.

அவருக்கு உறுதுணையாக எல்லாவிதத்திலும் இருந்தார் எங்களது சுசீலா சித்தி. எல்லா நாடகங்களுக்கும் அவர் தவறாது சென்று முன்வரிசையில் உட்கார்ந்திருப்பார். சித்தப்பா அதை ராசியாகவே கருதினார். மணிக்கணக்காக வீட்டில் ஒத்திகை நடக்கும். எல்லோருக்கும் சளைக்காமல் டிபன் காப்பி கொடுப்பார். சித்தப்பா வீட்டிற்கு சாப்பிட போவது என்றால் நன்றாக பசி வரவழைத்துக் கொண்டு போவோம். சாப்பாடு அவ்வளவு பிரமாதமாக இருக்கும். உபசரிப்பு அதைவிட சிறப்பாக இருக்கும்.

நான் ஜனாதிபதி விருது வாங்கும் விழாவிற்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நான் சென்னை மாநகர ஆணையராகப் பொறுப்பேற்ற வருடத்தில் எனது வீட்டிற்கு வந்து வாழ்த்து தெரிவித்து அகமகிழ்ந்தது மறக்க முடியாதது.

சித்தப்பா ஒரு உணர்ச்சி பிழம்பு. என்னை எங்கு பார்த்தாலும் ‘என்ன பிரதர்’ என்றுதான் விளையாட்டாக கூப்பிடுவார். அவர் ஒரு பெரிய கலா ரசிகர். எல்லாக் கச்சேரி, நாடகங்களுக்கும், நாட்டியங்களுக்கும் செல்வார். சாப்பாட்டுப் பிரியர். அவர் சாப்பிடுவதே ரசிக்கக் கூடியதாக இருக்கும் எல்லோரிடமும் அதிகமாக அன்பு செலுத்துவதால் நாங்கள் அவரது அன்புக் கட்டளைக்கு படிய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

நான் அவர் நடித்த பெரும்பாலான படங்களைப் பார்த்து விட்டேன். இப்போதும் எந்த டி.வி.சேனலை அலசினாலும் அவரது படம் இல்லாமல் இருக்காது. அவரது இயல்பான நடிப்பு எல்லோரையும் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. மகாநதியில் அவரது நடிப்பு எல்லோரையும் நெகிழவைக்கும் “அவர் மகாநதியில் கொடுமைப்படுத்தும் சிறைக் காவலர் பற்றி ‘மஹா பாபி அவன் சாப்பாட்டிற்கு உலை வைப்பான்” என்று சொல்வது, கேவலத்துடனும், அருவருப்புடன் அவனைப் பார்ப்பதும் மறக்க முடியாத காட்சிகள்”. நான் சிறைத்துறை பொறுப்பேற்ற பிறகு நிர்வாகத்தில் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று முயற்சி எடுத்து கொண்டிருப்பதற்கு அவரது தத்ரூபமான நடிப்பு உந்துதலாக அமைந்தது.

சீனக் கவிதை ஒன்று உண்டு -----
“மலைஉச்சிக்கு மூச்சிறைக்க ஓடினேன்
உச்சி மீது மரம் கண்டேன்
மரத்தின் மேல் ஒரு பட்டாம் பூச்சி
பறந்து கொண்டிருந்தது
இறங்கி வந்தேன் – இன்னும்
அது என் நெஞ்சில் படபடத்துக்
கொண்டிருக்கிறது ”.
அநாயாசமாக மலை உச்சியை எட்டிய பட்டாம்பூச்சி பறப்பது போல சிகரத்தை எட்டிய அவரது நடிப்பு அநாயாசமானது, இயல்பானது, தத்ரூபமானது!. அதனால்தான் அவர் இன்றைக்கும் நமது நினைவில் படபடத்துக் கொண்டிருக்கிறார்.

மரணம் அவரிடம் தோற்றது. ஏனென்றால் அவர் இன்னும் நம்மிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது வாழ்க்கை தொழவேண்டிய வாழ்க்கை. மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதில் சந்தோஷம் அடைந்தவர்.

Caesar தோன்றிய இடத்தில் ரோஜா அதிக சிறப்பாகவும், ஜொலிப்புடன் இருக்கும் என்பார்கள். அதேபோல் பூர்ணம் விசுவநாதன் சந்ததியனர் அவரால் உருவாக்கப்பட்டவர்கள், வளர்ந்தவர்கள், வாழ்க்கையில் பிரகாசிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

Tuesday, March 3, 2009

கையளவா கைது?


காவல்துறையை பெருமை படுத்திய சில படங்களில் “தங்கப்பதக்கமும்” ஒன்று அதில் வரும் ‘நல்லதொரு குடும்பம், பல்கலைக் கழகம்’ என்ற பாடல் காட்சிகளை ரசித்திருக்காதவர்கள் இருக்க முடியாது. கருத்துள்ள பாடல், ரம்யமான இசை சந்தோஷம் ததும்பும் காட்சிகள் சிவாஜியின் கம்பிரமும் குறும்பும் கலந்த அசைவுகள் குதூகலமூட்டுவதாக அமைந்தன. ஆனால் பாடல் முடிவில் போலீஸ் ஆய்வாளர் வருவார் ஒரு பிடி ஆணையோடு! காவல் அதிகாரியான சிவாஜி சீருடை அணிந்து தனது மகனையே கைது செய்வதாக அறிவிப்பார். பாசத்திற்கு அப்பாற்ப்பட்ட கடமையை சித்தரிக்கும் அற்புதமான காட்சி அமைப்பு.

தமிழ் திரையில் கல்யாணக் காட்சிகளில் திடீரென்று போலீஸ் வரும். மணமகனை கைது செய்து அழைத்து செல்வார்கள். எல்லோரது சந்தோஷம் பாழடையும். இரவு திடுதிப்பென்று நுழைந்து தூங்கியவரை கைது செய்வதாக சினிமாவில் பரபரப்பாக காண்பிக்கப்படும். அதுமட்டுமன்றி காவலில் கொடுமை, “முட்டிக்கு முட்டி தட்டுவேன்” என்ற வசனம் வரும் காட்சிகள் சர்வ சாதாரணம். மொத்ததில் கைது என்பது பிரச்சனைக்குரிய விஷயம் என்பது தெளிவு. ஏனெனில் அது தனி மனிதனின் சுதந்திரத்தை பாதிக்கும் நடவடிக்கை.

காவல்துறைக்கு அதிக அவப் பெயர் கொடுக்கக்கூடிய பணி கைது சம்பந்தப்பட்டதுதான். ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டால் புலன் விசாரணை மேற்கொண்டு குற்றம் புரிந்தவர் என்று கூறப்படுபவர் எந்த அளவுக்கு சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் ஆராய்ந்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவரை கைது செய்ய முற்படும்பொழுதுதான் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. முறையற்ற கைது, போலீஸ் காவலில் துன்புறுத்தல், மருத்துவ வசதி அளிக்கத் தவறுதல் என்று பல குற்றச்சாட்டுகள் எழுகின்றன. குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, காவல்துறைக்கு அவப் பெயர் ஏற்படுகிறது.

காவல்துறை நடவடிக்கை என்றாலே குற்றம் செய்தவரை கைது செய்வதில் தான் என்றும், இதுவே போலீஸின் முக்கிய கட்ட நடவடிக்கை என்ற கருத்து மக்களிடையே இருக்கிறது. கைது செய்யவில்லை என்றால் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அல்லது கையூட்டுப் பெற்று வேறுவிதமான தலையீட்டால் கைது செய்ய தயக்கம் என்று போலீஸ் மீது குறைகள் சொல்லப்படுகின்றன.

குற்றவியல் நடைமுறையில் பிடிக்கக்கூடிய குற்றம் (பிடியாணையின்றி), பிடிக்கமுடியாத குற்றம் (பிடியாணை வேண்டும் குற்றம்) என்று இரண்டு வகையாக குற்றங்கள் பிரிக்கப்படுகின்றன. வழக்கு விசாரணையில் இருக்கும் பொழுது வழக்கில் சம்பந்தப்பட்டவர் விசாரணையில் குறுக்கிடக்கூடாது என்பதற்காகவும், வெளியில் இருந்தால் வேறுவிதமான எதிர்மறைப் பிரச்சனைகள் ஏற்படும் என்பதாலும் சில சமயம் பாதிக்கப்பட்டவர்கள் பழிவாங்கும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அடிப்படையிலும் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கைது செய்துதான் விசாரணை நடத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விசாரணை முடிந்து இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணையில் எதிராளியை ஆஜர் ஆக பணிக்கலாம். ஆதலால் உடனடியாக எல்லா வழக்குகளிலும் கைது செய்ய முற்படுவதும், கைது செய்துவிட்டாலே வழக்கு விசாரணை முடிந்தது என்று கருதுவதும் தவறான அணுகுமுறை.

இந்திய ஆவணக் காப்பகத்தின் குறிப்புகளின்படி இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் செய்யப்படும் கைது கடந்த முப்பத்தைந்து வருடங்களில் 100 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. 1973-ம் வருடம் 13.80 லட்சம் நபர்கள் கைதானார்கள். இதுவே 2007-ம் வருடம் 27.8 லட்சமாக உயர்ந்துள்ளது. இதர சமூக சட்டங்களில் கைதானவர்கள் எண்ணிக்கை 1973-ம் வருடம் 26.87 லட்சமாக இருந்தது. 2007-ம் வருடம் 40.87 லட்சமாக அதிகரித்துள்ளது. குற்ற வழக்குகளில் அதிகமாக கைது செய்யும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழகத்தில் இந்திய தண்டனை சட்டம் மற்றும் இதர சட்ட வழக்குளில் 2007-ம் வருடம் 7.33 லட்சம் நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 65,091 பெண்களும் அடங்குவர்.

‘அரஸ்ட்’ என்றாலே எல்லோருக்கும் பகீரென்று நினைவுக்கு வருவது காவலில் கொடுமை, சுதந்திரம் பாதிக்கப்படும் நிலை. ஆனால் கைது என்பது சமுதாயத்தில் அமைதியை காப்பதற்கு சில சமயங்களில் தேவையான நடவடிக்கை. நீதி என்ற தராசில் தனிமனிதன் சுதந்திரம், அவர் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகளுக்கு உட்பட்ட செயல்கள் சமமாக உள்ளதா என்று சீர்தூக்கி சட்டம் முடிவு செய்கிறது. குற்றம் புரியும் தனி மனிதனின் சுதந்திரம் முக்கியமா அல்லது சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் பெருவாரியான மக்களின் சுதந்திரம் பிரதானமானதா என்ற ஒரு கேள்வி எழும்பொழுது சமுதாய அமைதிக்காக தனிநபர் சுதந்திரம் சட்டப்படி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டிய நிலை உருவாகிறது. சட்டத்தை மீறுபவரா, சட்டத்தை மதிப்பவரா என்ற வினாவிற்கு கைது நடவடிக்கை மூலம் சட்டம் விடை அளிக்கிறது. இதிலிருந்து ‘அரஸ்ட்’ என்பது மிக கவனமாக வேறு வழியில்லை என்ற நிலையில் செய்யப்பட வேண்டியது என்பது புலனாகிறது. ஆனால் நடைமுறையில் எதற்கெடுத்தாலும் கைது என்பதும், கைதானவர்கள் அதையே சுயலாபத்திற்கும், விளம்பரம் தேடலிலும் உபயோகப்படுத்துவது விசித்திரமான வளர்ச்சி.

உச்ச நீதிமன்றம் பிடியாணையின்றி புலன் கொள் குற்றம் என்பதை வைத்துக் கொண்டு மட்டும் ஒருவரை கைது செய்து விட முடியாது, கைது செய்யக்கூடிய அதிகாரம் இருந்தாலும் அதை பிரயோகிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளதா என்பது ஆராயப்பட வேண்டும் என்று ஒரு தீர்ப்பில் கூறிவுள்ளது. ஏனெனில் ஒருவரை கைது செய்து காவல் நிலைய காப்பில் வைப்பது ஒருவருக்கு பெருத்த அவமானத்தையும், அவரது சுயமரியாதைக்கு களங்கமும் விளைவிக்கிறது.. அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது. தனிமனிதன் சுதந்திரத்தை பறிப்பது என்பது சாதாரணமாக எடுக்கக் கூடிய முடிவு அல்ல என்பதை காவல்துறை நினைவில் கொள்ளவேண்டும். பொதுவாக அவசியம் ஏற்பட்டலொழிய ஒருவரது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதை மனதில் கொண்டும், கைது செய்வதால் பிரச்சனை வரக்கூடிய நேர்வுகளில் போலீஸார் தமது தற்காப்பிற்காகவும் கைது நடவடிக்கையை கூடுமானவரை தவிர்க்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் தெளிவாக கூறியுள்ளது. பல வருடங்களுக்கு முன்னால் மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக கொண்டு வரப்பட்ட ஒரு ஆசிரியர் அவமானம் தாங்காமல் காவல்நிலையத்தில் தூக்கு போட்டுக் கொண்ட சம்பவம் ஒன்றே தராதரமின்றி கைது செய்வது தவறு என்பதை உணர்த்துகிறது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 41-ல் உள்ள பிரிவுகளில் கைது செய்யக்கூடிய அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. பிரிவு 43-ன்படி பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டவரை கைது செய்ய பொதுமக்களுக்கும் அதிகாரம் உண்டு என்றும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குற்றங்கள் நடவாமல் தடுப்பதற்கு சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்ய போலீஸுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் இத்தகைய அதிகாரம் முறையாக செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுகளை மறுக்க முடியாது. இதன் அடிப்படையில்தான் சமீபத்தில் சட்ட சீர்திருத்த மசோதா மக்களவையில் கொண்டு வரப்பட்டது. விவாதத்திற்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டது. விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. திருத்தப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 41 பிரிவில் காவல்துறைக்கு கைது செய்யும் அதிகார வரம்பு வகுக்கப்பட்டுள்ளது. சாதாரண வழக்குகளில் குற்றச்சாட்டப்பட்டவருக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் ஏழாண்டுகள் தண்டனை பெறக்கூடிய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை மட்டும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கைது செய்யலாம் என்பதும் முக்கியமான அம்சங்களாகும். இதன் மூலம் எல்லா வழக்குகளிலும் கைது செய்ய வேண்டும் என்று காவல்துறையை நிர்பந்திக்கும் நிலை மாறும். இதை காவல்துறை தமக்கு அனுகூலமாக கொள்ளலாம்.

குற்றத்தடுப்பு நடவடிக்கையிலும், சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவதிலும் கைது செய்யக்கூடிய அதிகாரம் காவல்துறைக்கு உதவுகிறது என்றாலும் முறையற்ற செயல்களால் இந்த அதிகாரத்தின் பயனளிப்பு, பாதிப்புகளை ஒப்பிடுகையில் பாதிப்புதான் அதிகம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். கைது செய்யும் நேர்வில் கடைபிடிக்க வேண்டிய முறைகளை 11 கட்டளைகளாக டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. பெண்களை கைது செய்யும்பொழுது கவனமாக இருக்க வேண்டும். பெண் போலீஸார் போதுமான அளவில் இருக்க வேண்டும். அரஸ்ட் செய்யும்பொழுது மேலை நாடுகளில் சர்வசாதாரணமாக விலங்கிடுகிறார்கள். எல்லா ரோந்து வாகனங்களிலும் கைவிலங்கு வைக்கப்பட்டிருக்கும். ஆனால் நமது நாட்டில் பயங்கரமான குற்றவாளிகள் தப்பிக்கக்கூடும் என்ற நிலையில் அதுவும் கைவிலங்கிடுவதை உரிய பதிவேடுகளில் பதிவு செய்துதான் கைவிலங்கிட முடியும். விலங்கிடுதல் பற்றி உச்சநீதிமன்றம் பிரேம் சங்கர் சுக்லா (எ) தில்லி நிர்வாகம், சிட்டிசன் ஃபார் டெமாக்ரசி (எ) அஸ்ஸாம் ரிட் வழக்குகளில் காவல்துறையினரோ, சிறைப்பணியாளர்களோ, தன்னிச்சையாக ஒரு கைதியை கைவிலங்கிடக்கூடாது என்று தெளிவுபடுத்தியுள்ளது. நீதிபதியின் அனுமதியின்றி கைவிலங்கிடுபவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்கு ஆளாவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.

கைது செய்து குற்றம் சாட்டப்பட்டவரை போலீஸ் கைகோர்த்து நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதை பத்திரிக்கையிலும், தொலைக்காட்சிகளிலும் பார்க்கிறோம். ஆனால் “கைது கையளவோடு” நின்றுவிடுவதில்லை. மேலே கூறிய பல நடைமுறை விதிகள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பது காவல்துறையினரின் கடமை. இந்தப் பொறுப்பை சுமையாகக் கருதி அசட்டையாக இருக்க முடியாது. அவ்வாறு கைது செய்ய வேண்டிய வழக்குகளிலும், காவல்துறையினரே அவரை ஜாமீனில் விடுதலை செய்ய அதிகாரம் உள்ளது. நீதிமன்றக்காவலில் அனுப்புவதைக் குறைக்க வேண்டும் என்று துறை சார்ந்த அறிவுரைகள் உள்ளன. ஜாமீனில் விடும் அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்தினால் வழிக்காவலுக்கு பணியாளர்களை விரயமாக்க வேண்டியதில்லை. சிறைச்சாலைகளிலும் நெரிசல் குறையும். எப்படியும் வசதிபடைத்தவர்கள் கோர்ட்டில் உடனடியாக ஜாமீன் பெற்று விடுகின்றனர். ஜாமீன் கொடுக்க முடியாமல் சிறையில் ஏழை மக்கள்தான் அவதியுறுகின்றனார். குற்றவியல் சட்டம் 167 பிரிவின் கீழ் வழக்கின் தன்மையைப் பொறுத்து 30 நாட்களிலோ அல்லது 60 நாட்களிலோ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் கைதானவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றுள்ளது. ஆனால் ஜாமீன் கொடுக்க முடியாமல் மூன்று மாதங்களுக்கு மேல் சிறையில் வாடும் ஏழைகள் ஏராளம். வக்கீல்கள் போராட்டத்தில் நீதிமன்றம் நடை பெறாத நிலையில் நிலைமை மேலும் மோசமாகும் சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு எந்த தீர்வும் சம்பந்தப்பட்ட அமைப்புகளிலிருந்தும் சமுதாய நல்லுள்ளம் படைத்தவர்கள் மூலம் வந்தால்தான் நிலைக்கும். பிரச்சனைகள் விசுவரூபம் எடுக்கவிடாமல் தக்கத் தருணத்தில் அதனை முடிவுக்கு கொண்டுவருவதுதான் விவேகம். அதுவே தெருவிற்கு வந்து விட்டால் விபரீதம்தான், அதன் பிறகு காவல்துறை மூலம் சமாளிக்க முற்படுவதும், காவல்துறையும் தனது முனைப்பான நடவடிக்கையால் சீரமையும் என்று நம்புவதும் பிரச்சனைக்கு தீர்வாகுமா என்பது கேள்விக்குறியே.