Monday, November 3, 2014

இந்தியர்களைத் துயிலெழுப்பிய அன்னி பெசன்ட்! - தினமணி கட்டுரை 16.10.2014



     அக்டோபர் மாதத்திற்கு என்ன ஒரு மகிமை! நாம் நேசிக்கும் பல மாமனிதர்கள் இவ்வுலகில் அடி வைத்த மாதம் என்ற பெருமை! நமது தேசத் தலைவர்கள் மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஜெயபிரகாஷ் நாராயணன், இரும்பு மனிதர் வல்லபாய் படேல், சுப்பிரமணிய சிவா பிறந்த  மாதம் அக்டோபர். ஏன் வால்மீகியின் ஜெயந்தியும் புரட்டாசி மாதத்தில்.  நம் நாட்டிற்காக அர்ப்பணிப்போடு உழைத்த தேசிய தலைவர் அன்னி பெசன்ட் அம்மையாரின் ஜெயந்தி அக்டோபர் ஒன்று. ஆனால் அவரை நாம் அதிகம் நினைவில் கொள்வதில்லை.
     1893-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உலக சமய மாநாட்டில் “சகோதர சகோதரிகளே” என்று தன் பேச்சைத் துவங்கி கூடியிருந்தவரின் ஆத்மார்த்த வரவேற்பை பெற்ற நிகழ்வை அந்த மாநாட்டிற்குச் சென்ற அன்னி  பெசன்ட் நேரில் கண்டார்.  மனிதப் பிறவியின் நோக்கம் இந்த பிரபஞ்சத்தின் விந்தைகள், மதங்களின் நெறிகள் இவைகளுக்கான விடைகளின் தேடலின் முடிவு இந்தியாவில் கிடைக்கும் என்ற உணர்வு உதிக்க அதே ஆண்டு இந்தியாவின் தென்முனை தூத்துக்குடி துறைமுகத்தில் வந்திறங்கினர்.
     அன்னி பெசன்ட் இளம்பருவத்தில் அனுபவித்த கஷ்டங்கள் வேறொருவருக்கு ஏற்பட்டிருதால் விரக்தியின் எல்லைக்கே சென்றிருப்பார்.  ஐந்து வயதில் தந்தை இறப்பு, சில வருடங்களில் சகோதரன் இறப்பு, இரு சிறு குழந்தைகளை  வைத்து அன்னியின் தாயார் தனது உழைப்பால் இன்னல்களுக்கு  இடையில் வளர்த்தது என்று அன்னியின் இளம் பிராயம் கஷ்ட ஜீவனத்தில் கழிந்தது.  ஆனால் அதுவே மற்றவர்களுக்கு உதவுவதே வாழ்க்கையின் குறிக்கோள் என்ற ஒரு ஆழமான வைராக்கியத்தை அளித்திருக்க வேண்டும். 
வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்ற தேடலில் இறங்கினாள். தான் சார்ந்திருந்த மதத்தின் இறுக்கமான கோட்பாடுகள் உறுத்தியது. உண்மையை தேடும் உள்மனதிற்கு ஏற்புடையதாக அமையவில்லை. இந்நிலையில் பத்தொன்பது வயதிலேயே ப்ராங்க பெசன்ட் என்ற போதகருடன் திருமணம்.  பத்தாம் பசலியான புகுந்த இடத்தில் நிம்மதியில்லை.  அடுத்தடுத்து பிறந்த இரு குழந்தைகளின் உடல்நிலை பாதிப்பு, அவர்களை நலம் பெற வைப்பதில் மாதக்கணக்காக போராட்டம் என்று தொடர் கஷ்டங்கள். குடும்ப வாழ்க்கை சகிக்காமல் விவாகரத்து,  குழந்தைகள் மீது உரிமை பெற கோர்ட்டில்  வழக்கு, அன்புத்தாயாரின் மரணம் கொடுத்த வேதனை மதங்கள் மீது கொண்ட அவ நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.
     1872-ம் வருடம் பிளாவட்ஸ்கி அம்மையாரின் பிரம்ம ஞான சபையில் தன்னை இணைத்துக் கொண்டார். சோஷலிஸ கொள்கைகளில் அதிக பற்று கொண்டு ஃபேபியன் இயக்கத்தில் இணைந்து அப்போதைய உயர்ந்த சிந்தனையாளர்கள் பர்னாட் ஷா, பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், வெல்ஸ், வெர்ஜீனியா உல்ப். போன்றவர்களோடு சிந்தனைப் பரிமாற்றம் செய்து கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்தது.   மனித பிறவி, மதம், அரசியல் சமுதாய ஏற்றத்தாழ்வு பற்றிய நிதர்ஸன உண்மைகள் அவரை மிகவும் பாதித்தது.  சமுயத்தில் மனிதப்பண்பு உயரவேண்டும் மனித நேயம் நிலைப்பட வேண்டும் என்ற திடமான முடிவோடு பிரம்ம ஞான சுவையோடு இணைத்துக் கொண்டார்.
     எவ்வாறு ராமகிருஷ்ணா பரமஹம்சருக்கு ஞான ஒளி சீடராக விவேகானந்தர் அமைந்தாரோ அதே போல் பிளாவட்ஸ்கி அம்மையாருக்கு அன்னி பெசன்ட் உண்மை தொண்டராக பிரம்ம ஞான சபையின் கொள்கைகளை இந்தியாவில் பல இடங்களுக்கு சென்று மக்களோடு பகிர்ந்து கொண்டதோடு அதே சமயம் இந்தியாவின் பழம்பெருமை, கலாச்சாரம் என்ற பொக்கிஷத்தை சுமந்து கொண்டு அதைப்பற்றி ஸ்மரணையின்றி கொத்த அடிமைகளாக வாழும் இந்தியர்களைக் கண்டு மனம் வருந்தினார்.
     கல்வி மூலமாகத்தான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் அதுவும் பெண் கல்வியின் அவலநிலை கண்டு கல்வி முன்னேற்றத்திற்கு பல முயற்சிகள் எடுத்துக் கொண்டார்.  1898ம் ஆண்டு வாரணாசியில் பெண்களுக்கான கல்வி கூடத்தை நிறுவினார்.
     காசியில் நிறுவப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரியை மையமாக வைத்து தர்பங்கா மஹாராஜா ராமேஸ்வர பிரதாப் சிங் தலைமையில் காசி இந்து பல்கலைக்கழகம் உருவாக அஸ்திவாரம் போடப்பட்டது.  இந்து சமயத்தையும் இந்திய பண்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட புதிய கல்வித்திட்டம் அவர் நிறுவிய பெண்கள் கல்லூரியில் 1904ம் அறிமுகப்படுத்தினார்.  அந்த கல்வித் திட்டம் பல்கலைக்கழகத்தின் அடிப்படை சித்தாந்தமாக அமைந்தது.  1921ம் வரும் காசி பல்கலைக்கழகம் பெசன்ட் அம்மையாரின் சேவையைப் பாராட்டி கொளரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
     கல்வி பயில்வது பள்ளி கல்லூரியில் மட்டும் அல்ல வாழ்க்கையும், சூழலும் சுற்றமும் கல்வி புகட்டுகின்ற அதனை கிரகிக்க முயல வேண்டும் என்ற மூதுரையை முற்றிலும் அன்னி செயலாக்கியதினால்தான் அவர் மிகச்சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர் பேச்சாளர் என்று பல பரிமாணங்களில் சோபிக்க முடிந்தது. 
     அன்னி பெசன்ட் முற்றிலும் தன்னை சமுதாயப்பணியில் அர்ப்பணித்தது மட்டுமல்ல உண்மையாகவும் தைரியமாகவும் கருத்துக்களை சமுதாயத்தோடு பகிர்ந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  அவரது கருத்து சுதந்திரத்தால் பல எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது.  அறிஞர் சார்லஸ் பிராட்லோவுடன் சேர்ந்து ஆண் பெண் மணம் புரிதல், கருத்தடை, ஜனத்தொகை அதிகரிப்பால் ஏழைகள் படும் இன்னல் இவை குறித்து இவர்களது மதசார்பற்ற கொள்கைகள், பிற்போக்கான மதபோதகர்கள் மாற்றத்தை சுயநலதிற்காக புறக்கணிக்கும் கனவான்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.   நீதிமன்றத்தில் நாத்திகம் பரப்புவதாக அவதூறு வழக்கு தொடரப்பட்டது ஆறுமாதம் தண்டனை விதிக்கப்பட்டது.  அதனால் அசரவில்லை அன்னி.  மேல்முறையீட்டில் நிரபரதியாக வெளி வந்து, ஆண் பெண் உறவு, விவாகம் பற்றிய கருத்துக்களை துண்டு பிரசுரமாக வெளிட்டடார்.  அவை லட்சக்கணக்கில் விற்பனையானது.  பல மொழிகளிலும் வெளிவந்தது.
     முற்போக்கு சிந்தனை நிறைந்த அன்னி இந்தியாவிற்கு வந்தபோது இங்கிருந்த சமுதாய சூழலைக் கண்டு மாற்றம் கொண்டு  வர  வேண்டும் என்று விழைந்ததில் வியப்பில்லை.  சமுதாய முன்னேற்றம், மாற்றம், விழிப்புணர்வு, ஆண் பெண் சம நோக்கு இவைகளை தனது துவக்கப்பணியாக  தமிழ்நாட்டில் செயலாக்கியது தமிழருக்கு பாக்கியம்.  ‘மகன்கள் மகள்கள்’ என்ற அமைப்பை 1912ம் வருடம் ஏற்படுத்தி மகன் மகள் பாகுபாடின்றி குடும்பத்திலும் வெளி உறவுகளிலும் நடத்தப்பட வேண்டும் என்ற குறிக்கோளை  வலியுத்தினார்.
இந்தியாவில் முதல் மாமன்ற உறுப்பினர் என்ற பெருமை கொண்டவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள். இரு சமூக சீர்திருத்தவாதிகள் ஒருமித்த கருத்தோடு இணைந்ததில் வியப்பில்லை. இந்திய பெண்களின் நிலையை உயர்த்தவும் சமுதாய பிற்போக்கான பிணைப்புகளிலுருந்து பெண்களை விடுவிக்கவும் இந்திய மாதர் சங்கம் என்ற அமைப்பை 1913ம் வருடம் ஊருவாக்கினார். டாக்டர் முத்துலட்சுமியோடு இணைந்து பெண்களுக்கு சம கல்வி, ஆண்களுக்கு இணையான உரிமைகளை நிலைநாட்ட பல முயற்சிகள் மேற் கொண்டார்.
     இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் அதற்கு போராட வேண்டும் என்ற எண்ணத்தை வித்திட்டவர் அம்மையார் அவர்கள்.  “இந்தியாவே விழித்தெழு” என்ற தனது கட்டுரைகளின் தொகுப்பினை 1913ம் வருடம் வெளியிட்டு அதன் மூலம் விடுதலைக்கான விழிப்புணர்வை நாடெங்கும் பரவச் செய்தார்.
     நாட்டின் இளைஞர்களை ஒன்றிணைக்க ஒரு அமைப்பு தேவை என்று உணர்ந்து இந்திய இளைஞர்கள் சங்கம்(YMIA) 1914 வருடம் துவங்கினார். எவ்வாறு உடற் பயிற்சிக் கூடம் மூலம் உடலை வலுவடைச் செய்கிறோமோ அதுபோல, கல்வி, விவாதம் மூலம் சீரிய குடிமகனாக அரசியல் உணர்வோடு உருவாகும் மையமாக இச்சங்கம் வளர்ந்திட வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்தார்.  இச்சங்கம் இப்போது நூற்றாண்டு சேவையை கொண்டாடுகிறது.
     “சுயாட்சி பேரியக்கம்” என்ற விடுதலை போராட்டத்தை சென்னையில் துவக்கியதற்கு பேருதவியாக இருந்தவர் பாலகங்காதர திலக் அவர்கள்.  விடுதலை வீரர் தாதாபாய் நௌரோஜி தலைவராக செயல்பட்டார். அடையார் ஆலமரம் போல அன்னி பெசன்ட் தூவிய விடுதலை விருட்சத்தின் விழுதுகள் நாடெங்கும் விழுந்தன.  மூதறிஞர் ராஜாஜி,
சர் சி.வி. ராமசாமி, வி.கலியாண சுந்தரனார்,சுப்பிரமணிய ஐயர், இந்து பத்திரிகை ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் போன்றோர் சென்னையிலும், மோதிலால் நேரு, சாப்ரூ, தாஸ் போன்ற பல பெருந்தலைவர்கள் அகில இந்திய அளவிலும் முனைந்து செயல்பட்டனர்.  அன்னையின் சுதந்திர முழுக்கம் பல இடங்களிலும் ஒலித்தது.  பிரிட்டிஷ் அரசு 1917 ஜுன் மாதம்  அன்னையை சிறையிலிட்டது.  ஆனால் எதிர்ப்பு மேலும் வளர்ந்தது.  அன்னை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
     அகில இந்திய காங்கிராஸ் தலைவராக 1917-ம் வரும் கல்கத்தாவில் நியமிக்கப்பட்டார்.  காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவர் அன்னி பெசன்ட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
          அன்னையின் மனித வாழ்க்கையின் தாத்பரிய தேடல்  பிரம்ம ஞான சபையில் ஐக்கிய மானதில் முடிவுற்றது.  பிரம்ம ஞான சபை தலைவராக 1907ல் இருந்து மதங்களின் ஒற்றுமைக்காக பாடுப்பட்டார்.  உண்மை நெறி நேர்மையான பாதை மனித நேயம்,சகோதரத்துவம் இவைதான் பிரம்ம ஞான சபையின் கொள்கைகள்.  அவைதான் எல்லா மதங்கள் சங்கமிக்கின்ற கோட்பாடுகள்.
     அன்னை இந்தியாவையும் இந்தியர்களையும் வெகுவாக நேசித்தார்.  மகாத்மா காந்தி அவர்கள் அன்னி பெசன்ட் தான் இந்தியர்களை நீண்ட துயிலிலிருந்து தட்டி எழுப்பி சுதந்திர உணர்வை செலுத்தினார் என்று பாராட்டியுள்ளார்.  தமிழறிஞர் திருவிகா அவர்கள் அம்மையாரால் வெகுவாக கவரப்பட்டார்.
     “அம்மையாரின் கிளர்ச்சி என்னுள் கனன்றுக் கொண்டிருந்த கனலை எழுநாவிட்டு எரியச் செய்தது. வெஸ்லி கல்லூரிப் பணியை விட்டு விடத் தூண்டியது.  தேசபக்தன் இதழ்க்கு ஆசிரியனாக்கியது.  தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. மொத்தமாகச் சொல்ல வேண்டுமானால் என் வாழ்க்கைப் போக்கையே மாற்றி அமைத்தது.  என வாழ்க்கைப் போக்கை முற்றிலும் மாற்றி அமைத்த அன்னி பெசன்ட் எனக்கு அன்னை வசந்தை ஆனார்.” என்று மனம் நெகிழ கூறியுள்ளார்.
     புனித அக்டோபர் மாதத்தில் “சான்றோர்களை போற்றுதும்” என்று காலச்சுவட்டில் தன் வாழ்வை அர்ப்பணித்த காந்தி, அன்னி பெசன்ட், சாஸ்திரி, ஜெய பிரகாஷ், படேல் போன்றவரை நினைவு கூர்வோம். அவர்கள் சமுதாய இன்னல்களுக்கு எதிராக போராடினார்கள் வெற்றி கண்டார்கள். ஆனால் நமது சுணக்கத்தால் சமுதாயத்தை வலுவிழக்கச் செய்யும் காளான்களாக முளைத்துள்ள சாதி மத பேதம், பாலியல் கொடுமை, குழந்தைகள் வன்கொடுமை நமக்கு சவாலாக இருக்கின்றன.
     நாலாந்திர நடிகர்களை பின் தொடர்கிறோம் ஒரு கைலாஷ் சத்யார்த்திக்கு நோபல் பரிசு கிடைத்தபிறகுதான் யார் இந்த இந்தியர் என்று அறிய முற்படுகிறாம்.  குலையும் சமுதாய மதிப்பீடுகள் முகத்தில் அடிக்கிறது.
     இன்னொரு அன்னை வசந்தை, காந்தி, சாஸ்திரி, காமராஜ் அம்பேத்கர் வரமாட்டார்கள்.  அவர்கள் இட்டுச் சென்ற பாதையில் உபாதைகள் முளைக்காமல் கண்காணித்தலே நாம் செய்யக்கூடிய மிக பெரிய சமூக சேவை.



No comments: