Friday, June 20, 2014

'குப்பையால் குவியும் குற்றங்கள்" தினமணி கட்டுரை தேதி.18.06.2014


இலைபோட்டு சாப்பிடலாம் அவ்வளவு பளிங்கு மாதிரி இருக்கிறது என்றார் மஸ்கட்டிலிருந்து வந்த நண்பர்.  அவர் சொன்னது மஸ்கட்டின் சாலைகளும் நடை பாதைகளும் அந்தளவு சுத்தமாக இருப்பது பற்றி!  இந்தியர்கள் வெளிநாட்டில் விதிமுறைகளைப் பின் பற்றி ஒழுங்கு மரியாதையாக இருக்கிறார்கள்,  ஆனால் நமது நாட்டில் ஒழுக்கமும் இல்லை சுத்தமும் இல்லை என்ற கூற்று  திரும்பத்திரும்ப பலர் அங்கலாய்க்க கேட்டிருக்கிறோம் ஆனால் திருந்தியபாடில்லை.
     வாரணாசியில் பேசிய பிரதமர் மக்களின்  சுத்த உணர்வைத்தான் வலியுறுத்தினார். கங்கையை சுத்தப்படுத்துவேன் என்று சூளுரைத்திருக்கிறார். அதற்கு மக்களின் ஒத்துழைப்பையும் கோரியிருக்கிறார். நமது பல திட்டங்கள் முழமையாக செயல்படுத்தப்படுவதில் பல சிக்கல்கள் முளைக்கின்றன.  அதில் எல்லாதரப்பினரின் ஒத்துழைப்பை வெறுவதில் தான் பெரும் சிக்கல்.  சர்வசாதாரணமாக குப்பையை கண்ட இடத்தில் போட்டு விடுகிறார்கள்.  ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம், கன்னியக்குமாரி கடற்கரை, நதிக்கறை போன்ற சுற்றுலா செல்லும் மையங்களிலும் கோயில்களிலும் கழிவுப் பொருட்கள் மலைபோல் குவிகின்றன.
நதிகளில் பிராணிகளின் சடலங்களையும் ஈவிரக்கமின்றி சுகாதார உணர்வுன்றி போட்டு விடுகிறார்கள்.  சமீபத்தில் தன்னார்வுக் தொண்டர்கள் தாமிரபரணி நதி சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டபோது வண்டி வண்டியாக வருடக்கணக்காக தேங்கிய கழிவுப்பொருட்களை அகற்றினர்.  ‘மகாத்மா காந்தி வீட்டுக்கு ஒரு வேலை திட்டத்தில்’ வெட்டியாக மம்மட்டியோடு உட்கார்வதை விட்டு இத்தகைய சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபடுத்தினால் கிராமப்புரங்களுக்கு நல்லது.
     பூமியின் சீதோஷ்ண நிலை உயர்ந்து வருவது கவலைக்கிடமாக உள்ளது என்று வானிலை ஆராய்ச்சியாளர்களின் சர்வதேச கருத்தரங்குகளிலும், பயிற்சிக் கூடங்களிலும் விவாதிக்கப்படுகிறது.  ஆனால் விவாதத்தோடு நின்று விடுகிறது.     மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுவதில்லை. வெப்ப நிலை உயர்வு உலகை எதிர்நோக்கியிருக்கும் மிக பெரிய பிரச்சனை.  சமீபத்தில் பசிபிக் மகா கடல் ஒட்டி அமைந்துள்ள மார்ஷல் தீவிற்கு அருகில் இரண்டாம் உலகம் போரில் உயிரிழந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வீரர்களின் சவப்பெட்டிகள் கடலில் உருண்டு கரையில் தள்ளப்பட்டு 26 சடலங்கள் மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அந்த அளவிற்கு கடல் நீர் மட்டம் உயர்ந்து நிலத்தை சுவீகரித்துக் கொண்டுள்ளது.  இது ஒரு அபாயச் சங்கொலி. மார்ஷல் தீவின் தலைவர் கிரிஸ்தோவர் லீக் கூறுகையில் பழைய கரையோரங்கள் மாறிவருகின்றன, தீவு குறுகி வருகிறது என்று கவலை தெரிவித்துள்ளர்.  ஐக்கிய நாடுகள் சுற்றுப்புற சூழல் அறிக்கைப்படி 1993ல் இருந்து 2009 வரை மார்ஷல் தீவுப்பகுதிகளில் கடல் உயரம் சுமார் 12 மில்லி மீட்டர் உயர்ந்துள்ளது. உலக அளவு சராசரி கடல் உயர்வைக் காட்டிலும் இது நான்கு மடங்கு அதிகம். 
மனிதனின் தன்னிச்சையான பொறுப்பற்ற இயற்கை அழிப்பு செயல்களால் உலகின் ஐந்து பெரும் கடல்கள் பொங்கி வருகின்றன.  இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் நான்கு அடி உயர்ந்து விடும் பல தீவுகளை விழுங்கி விடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
     எந்த ஒரு இன்னல் ஏற்பட்டாலும் அதிகமாக பாதிக்கப்படுவது ஏழைகள்தான் என்பதை பார்க்கிறோம். பூமியின் வெப்ப உயர்வால் அதிகமாக பாதிக்கப்படப்போவதும் ஏழை நாடுகள்தான். நமது அண்டை நாடான வங்கதேசம் இயற்கை பேரழிவில் சிக்கியுள்ளது. வட கிழக்கு பருவ மாற்றத்தில் வரக்கூடிய புயல் கோரமாக கரையை தாக்குவது வங்க தேசத்தைதான்.  இது போதாது என்று வெப்ப நிலை உயர்வால் கடல் நீர் நிலத்தில் பரவுவதால் கடலோர  கிராமங்களிலுருந்து மக்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.  வங்க தேசத்தில் அடுத்த நாற்பது ஆண்டுகளில் 17 சதவிகித கடலோர நிலப்பரப்பு அழிந்து விடும் என்றும் சுமார் 2 கோடி மக்கள் இடம் பெயர வேண்டிய அபாய நிலை உள்ளது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.  வங்க தேசப் பிரச்சனை என்று சும்மா இருந்து விட முடியாது. குடிபெயரும் மக்கள் இந்தியாவிற்குத்தான் வரவேண்டும்.  அழைய விருந்தாளியாக பிரச்சனைகளும் கூடவரும்.
     வளர்ச்சியடைந்த நாடுகளும் அங்கு உள்ள தொழிற்சாலைகளும் தான் சுற்றுப்புற மாசு பெருகுவதற்கு முக்கிய காரணம்.  ஆனால் அதிகமாக மாசினால் ஏற்படும் தாக்கம் உணரப்படுவது ஏழை நாடுகளில்.
     வருடா வருடம் ஜுன் 5ம் தேதி உலக பூமிநாள் அனுசரிக்கப்படுகிறது.  ‘வெட்’ என்ற வேர்ல்ட் எர்த் டே(World Earth Day) இந்த வருடம் புதன் கிழமை ‘வெட்’   அன்று உதித்தது நம்மை தீர்க்கமாக உணரச் செய்வதற்காகத்தான் என்று கொள்ள வேண்டும்.
     பிரசித்திப் பெற்ற கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வளாகங்களில் ஆண்டு தோறும் புகுமுக மாணவர்களும் பட்டம் பெற்று வெளிவரும் மாணவர்களும் இணைந்து மரம் நடும் விழா நடத்துகிறார்கள்.  அங்கு தழைத்தோங்கும் மரங்கள் காலம் காலமாக கடந்த மாணவர்களின் சாதனைகளை பறைசாற்றும். வரும் மாணவர்களை குளிர்ந்த காற்றோடு நிழல் தந்து ஆசிர்வதிக்கும்.  நமது கல்லூரிகளிலும் பிரிவு உபச்சார விழாக்களில் மரம் நடுவதை வழக்கமாக கொள்ளலாம்.
     பூமியின் வளிமண்டலம் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய கிரகணங்களிலிருந்து உயிரினங்களை பாதுகாக்கிறது.  ‘கிரீன் ஹவுஸ்’ என்ற இந்த பசுமை வீடுச் சூழல் மாசு ஏற்படுத்தும் புகைகளாலும் தொழிற்சாலைகள் வெளியிடும் நச்சு வாயுக்களாலும் பாழடைகிறது.  வளிமண்டலத்தில் ஓட்டை விழுகிறது. பூமியின் வெப்ப நிலை உயர்வதற்கு இதுதான் முக்கிய காரணம்.
     நாம் சுவாசிக்கும் உள் மூச்சு மரங்களின் வெளிமூச்சு.  மரங்கள்தான் மாசுக் கட்டுப்பாட்டு காவலர். நிர்வாகத்தில் தவறு நிகழ்ந்தாலும் தனது பணிகளை தவறாது செய்வது காடுகளும் அடர்ந்த மரங்களும்தான்.  ஐக்கிய நாடுகள் அமைப்பு நிலப்பரப்பில் 34 சதவிகிதம் காடுகள் அடர்ந்து இருக்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது.   நமது நாட்டில்  சராசரி 20 சதவிகிதம் தான் உள்ளது.  அருணாச்சல் பிரதேசம், சட்டிஸ்கர் போன்ற அடர்ந்த காடுகள் உள்ள மாநிலங்களிலும் மரங்கள் அழிக்கப்படுகிறது.  காடுகள் சுருங்கி வருகின்றன.
     வனமஹோத்ஸவம், சமூக காடுகள் என்று பல திட்டங்கள் உள்ளன. முழுமையாக நிறைவேற்றவதில் எல்லோரும் முனைப்பாக செயல்ப்பட வேண்டும்.  120 கோடி ஜனத்தொகையுள்ள நமது நாட்டில் ஒவ்வொருவரும் ஒரு மரத்தையாவது பேண வேண்டும் என்று முயற்சி எடுத்தால் நாடு எவ்வளவு  வளம் பெறும்! மும்மாரி பெருவாரியாக நிறையும்.  அவ்வாறு மரம் நடுவதையே உயிர் மூச்சாக கொண்டுவுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு.முல்லை வனம் என்ற இளைஞர். இது வரை அவர் 89 லட்சம் மரங்களை நாடெங்கிலும் நட்டுள்ளார். தமிழ்நாட்டில் அவர் வளர்த்த மரங்கள் 24 லட்சம் அதில் சென்னையில் மட்டும் இரண்டு லட்சம் மரங்கள். ‘கலாம் பசுமை திட்ட அமைப்பு’ மூலம் இவரது சேவையை பாராட்டி திரு.அப்துல்கலாம் அவர்கள் விருது வழங்கியுள்ளார்கள்.
     கழிவுப் பொருட்கள் மேலாண்மை ஒரு முக்கிய நிர்வாக பிரச்சனையாக கருதப்படுகிறது.  சுற்றுப்புறச் சூழல் சட்டங்கள் 1971ல் இருந்து நடைமுறையில் உள்ளது.  1986ம் வருடம் பூரண சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்தது.
     சுற்றுபுற சூழல் பாதுகாப்பு ஒரு முக்கிய கடமையாக அரசியல் சாசனத்தில் 51A பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. எல்லா ஜீவராசிகளையும் பாதுகாப்பது, மாசு கட்டுபாடு, மரம் வளர்த்தல் குப்பைகளை சுகாதாரமான முறையில் கழிவு செய்தல் இவை எல்லாம் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பில் அடங்கும்.
     சுற்றுப்புற சூழல் சட்டத்தில் சுற்றுப்புறம் என்பது தண்ணீர், காற்று, நிலம் உயிரினங்கள் அவற்றுக்குள் இருக்கும் ஒட்டுறவு அவற்றின் பாதிப்பு இவை எல்லாம் உள் அடக்கும் என்று விவரிக்கப்பட்டுள்ளது.  சுற்றுப்புறத்தை பாதிக்கும் எந்த ஒரு செயலும், விதிகளுக்கு உட்படாத நடவடிக்கைகளும் இந்த சட்டப்படி குற்றம்.  குப்பைகளை ஒழுங்கீனமாக தெருவில் போடுவதும் குற்றம்.  உரிய வேளையில் உள்ளாட்சி அலுவர்கள் அகற்றாததும் விதிகள் மீறலாகும்.
     குப்பை மேடுகள், பாழடைந்த குடியிருப்புகள்,  அசுத்தமான தெருக்கள்  போன்ற இடங்கள்தான் குற்றங்கள் முளைப்பதற்கு உரமிடப்பட்ட தளங்கள்.  பளிச்சென்று ஒரு இடமிருந்தால் அதற்கு மரியாதை தனித்துவமாக கிடைக்கும்.      குப்பைகள் அசுத்தமான சூழல்தான் குற்றங்கள் பெருகுவதுற்கு காரணம் என்பதை காவல்துறை உணர வேண்டும்.  எங்கும் ரோந்து பணியில் இருக்கும் காவல் வாகனங்கள், குப்பை அகற்றப்படாத இடங்களை மாநகராட்சிக்கு தெரிவித்து அவற்றை அகற்றுவது முக்கியமான குற்ற தடுப்பு நடவடிக்கை என்பதை அதிகாரிகளுக்கு வலியுறுத்த  சென்னை காவல் ஆணையர் உறுதியளித்துள்ளார்.
     தனியார் அலுவலகங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன,  ஆனால் அரசு அலுவலகங்களில் அந்த ஒழுக்கத்தை பார்க்க முடிவதில்லை.  தனியார் மருத்துவ மனைகளில் அதிகம் கொடுத்தாலும் சுகாதாரம் பராமரிக்கப்படுகிறது.  அந்த அளவில் அரசு மருத்துவமனைகளில் ஏன் இருக்கக்கூடாது.  மேற்பார்வையிடும் அலுவலர்கள் அர்ப்பணிப்போடு செயல்பட்டால் நிச்சயமாக சாத்தியமாகும்.
 சென்னை அரசினர் தோட்டத்தில் நிறுவப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, சென்னை அரசு பொது மருத்துவமனையிலும் இந்த சுத்தத்தை பார்க்க முடிகிறது.  எல்லா மருத்துவமனைகளிலும் இதனை செயல்படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
     ஒரு நகரத்தின் கலாச்சார பிரதிபலிப்பு சுத்தமான தெருக்கள், மிளிரும் தெருவிளக்குகள், பராமரிக்கப்பட்ட சாலைகள், ஒழுக்கமான போக்குவரத்து.  இவைதான் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பிற்கும், பொதுமக்கள், உள்ளாட்சி ஊழியர்களின் சீரிய செயல்பாட்டிற்கும் அத்தாட்சி.  இதற்கு பொருளாதார முதலீடு ஒன்றும் தேவையில்லை.  அன்றாட பணிகளை சரிவர செய்தாலே போதும்.  சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படும்.

     ‘காக்கை குருவி எங்கள் சாதி’  என்றார் பாரதியார்.  சுற்றுப்புறம் பரிமளிக்க இருந்தால் பறவையினமும் பசுமையும் தழைக்கும்.  பறவைகளின் நண்பர் சலீம் அலி கூறியது போல ‘மனிதன் இல்லாமல் பறவைகள் வாழும் ஆனால் பறவைகள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது’ என்பது உண்மையான கூற்று.  சிந்திக்க வேண்டும்.

No comments: