உலகம் ஒரு கிராமம் என்றவாறு நாடுகளிடையே இடைவெளி குறுகி வருகிறது.
பன்னாட்டு வணிக ஒப்பந்தம் மற்றும் உலக வணிகமயமாக்கலை
தொடர்ந்து பல நாடுகள் இடையே பண்டம் பரிமாற்றல், தொழில் நுட்ப தொடர்பு சுலபமாக அமைந்துள்ளது.
“வெட்டுக் கனிகள் செய்து தங்கமுதலாம்
வேறு பல பொருளுங் குடைந்தெடுப்போம்
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவைவிற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டுவருவோம்” என்று உலக வணிகத்திற்கு அவன் காலத்தே பாரதி பாடி உரைத்தான்.
ஆனால் குடைதெடுக்கும் தங்கம் என்ன, பல களிமனங்கள் காற்றலைகள் என்று பஞ்ச பூதங்களில்
ஊற்றெடுத்து ஆழிபேரலையாய் உருவெடுக்கும் ஊழலை இப்போது பார்த்தால் மனம் வெதும்பி பாடியிருப்பான்.
உலக வணிக முறை சீராக இயங்க தடங்கலாக இருப்பது ஊழல் என்பதை உணர்ந்த
ஐக்கிய நாடுகள் சபை ஊழலை தடுக்கவும் தவிர்க்கவும் 1990ல் இருந்து கூட்டு முயற்சி பல
கலந்தாய்வு கூட்டங்கள் மூலம் எடுத்துள்ளது. ஊழல் தடுப்பு உடன்படிக்கை 2003ம் ஆண்டு டிசம்பர்
9ம் நாள் கையெழுத்திட்டு டிசம்பர் 14 2005ல் பிரகடனப்படுத்தப்பட்டு அமலுக்கு வந்தது. இதுவரை 140 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு
தத்தம் நாட்டில் அமல்படுத்த துவங்கியுள்ளன.
இந்தியா 2011ம் ஆண்டுதான் நாடாளுமன்றத்தில் வைத்து பிரகடனத்தை நிறைவேற்ற நடவடிக்கை
எடுத்துள்ளது. பிரிட்டன் போன்ற பல நாடுகள்
கையூட்டு தடுக்கும் சட்டம் (ப்ரைபரி ஆக்ட்) அமல்படுத்தியுள்ளது. இன்னும் லோக்பால்,
லோக் ஆயுக்தா, ஒருங்கிணைந்த ஊழல் தடுப்பு சட்டம் இந்தியாவில் விவாத அளவில் தான் பாராளுமன்றத்தில்
உள்ளது. தனியார் முறைகேடுகளையும் ஒருமுகப்படுத்தும் சட்டம் விரைவிலே நிறைவேற வேண்டும்.
1964ம் ஆண்டு அரசு
நடவடிக்கைகளில் ஊழலை தவிர்க்க எடுக்க வேண்டிய செயல் முறைகளை ஆராய்ந்து சந்தானம் தலைமையிலான
கமிட்டி பரிந்துரைகளை அளித்தது. அதன் அடிப்படையில்
உருவானதுதான் சிவிசி எனப்படும் மத்திய விழிப்பணர்வு ஆணையம். ஒவ்வொரு வருடமும் முக்கியமான
ஊழல் தடுப்பு செய்தியை முன்நிறுத்தி அதற்கான விழிப்புணர்வை நாடெங்கிலும் எடுப்பதற்கு
எல்லா அரசுத்துறைகளுக்கும் சிவிசி அறிவுறுத்தும், ஊழல் ஒழிப்பு உறுதிமொழியும் எடுக்கப்படும்.
2013ம் வருடம் அரசு தனது தேவைக்கான கொள் முதலில் வெளிப்படைத்தன்மையும்,
ஊழலற்ற முறையையும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. வளர்ச்சிப் பணிகளுக்காக அரசுதுறைகள் முலமாக கொள்முதல்
மதிப்பு வருடத்திற்கு சுமார் ரூபாய் பனிரெண்டாயிரம் கோடி. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிச் குறியீட்டில்
முப்பது சதவிகிதம். இதில்தான் அதிக கவனம் செலுத்த
வேண்டும். ஊழலற்ற நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிவிசி இந்த பொருண்மையை
முன் வைத்தது. எந்த அளவிற்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது அதன் விளைவாக ஊழல் குறைந்தன என்பது கேள்விக்குறி. காற்றலை, நிலக்கரி போன்ற இயற்கை வளங்கள் ஒதுக்கீட்டில்
எழுந்த முறைகேடுகள் நீதிமன்றங்கள் பார்வைக்கு வந்துள்ளன.
எட்டு அத்தியாயம் 71 ஷரத்துக்கள் கொண்ட ஐநா உடன்படிக்கையில்
எல்லா நாடுகளும் ஊழல் தடுப்பு முறைகளை மேம்படுத்தவும் நன்னெறி வழிகளுக்கு ஊக்கம் அளிக்கவும்
வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்
வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்படும் சொத்துக்களை மீட்க பரஸ்பர உதவி நல்க வேண்டும்
என்று 54 1A பிரிவில் தெளிவாக உள்ளது. ஊழல் தொடர்பு சொத்துக்களை முடக்க நாடுகளுக்கிடைய
சட்ட உதவி புரிந்துணர்வு ஒப்பந்தமும் இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக கலந்தாய்வு தொடர்ந்து
நடந்து சர்ச்சைக்கு முடிவில்லாமல் இருந்தது.
வளர்ந்து வரும் நாடுகளில் அரசியல் நிலையாமை, ராணுவ ஆதிக்கம் அரசு அதிகாரிகளின்
வஞ்சகம் காரணமாக ஊழல் தறிகெட்டு ஊழல் பணம் பாதுகாப்பான நாடுகளில் பதுக்குவது தொடர்ந்து
வருவதால் ஒரு கட்டத்தில் சொத்து மீட்பு முக்கியமான நடவடிக்கையாகிறது. கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மீட்க வழிவகை செய்யும் சர்வதேச சொத்து
மீட்பு அத்தியாயம் ஐந்தில் உள்ளடக்கிய ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டதின் அடிப்படையில்தான் வளர்ந்து வரும் பல நாடுகள் இந்த
உடன்படிக்கையில் ஒப்புதல் அளிக்க முன் வந்தன.
தற்போது மத்திய அரசு உச்ச நீதிமன்றம் ஆணையின்படி வெளிநாடுகளில்
பதுக்கப்பட்ட கணக்கில் வராத பணத்தை மீட்க விஷேச விசாரணை குழாமை நீதிபதி ஷா தலைமையில்
அமைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் இதில் எடுக்கப்படும்
நடவடிக்கைகளின் முன்னேற்றதை முனைப்பாக கண்காணிக்கிறது. அதை விட முக்கியம் நாட்டில் புழங்கும் கணக்கில்
வராத பணத்தை வெளிக் கொணரும் நடவடிக்கை.
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் இரும்பு மனிதர் சர்தார் படேல்
அவர்களின் பிறந்த ஜயந்தியை வைத்து நாடெங்கிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த மறு வருடமே ராணுவத்திற்கு
வாகனங்கள் வாங்குவதில் முறைகேடு பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதே படேல் அவர்கள் பொது வாழ்வில் தரம் தாழ்ந்து
வருவது பற்றியும், ஆளுமையிலும் நிர்வாகத்திலும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை,
மனவேதனை அளிக்கிறது என்று தனது வருத்தத்தை தெரிவித்தார். நிலமையை சீர்செய்ய தேவை மாற்றம் ஆனால் வீண் சர்ச்சைதான்
தொடர்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த
சர்ச்சை முழுநடவடிக்கையின்றி இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது!
இந்த வருடம் மத்திய விஜிலன்ஸ் கமிஷன் தொழில் நுட்பம் எவ்வாறு
ஊழலை தவிர்க்க முடியும் என்பதை மையக் கருத்தாக அறிவுத்துள்ளது. அரசு நிர்வாகத்தில் பல சட்ட திட்டங்கள் உள்ளன. பல்வேறு துறைகளில் நிர்வாக நெறிமுறைகள் விதிகள்
உள்ளன. அதனை புரிந்து கொண்டு அமல் படுத்துவதே
அரசு ஊழியருக்கு பிரமிப்பை ஏற்படுத்தும். குழப்பமான
விதிகளுக்கும் குறைவில்லை. இத்தகைய குழப்பமான
விதிகள்தான் ஊழலுக்கு வித்திடுகிறது.
ஊழலை தவிர்ப்பதற்கு முதல் நடவடிக்கை விதிகளை சுலபமாக்குதல்,
தேவையற்றவையை நீக்குதல் எல்லோரையும் சமமாக பாவித்து விதிகளை நடைமுறை படுத்துதல். ஆனால் சுலபமாக்குவது சுலபமல்ல என்பதை கண்கூடாக பார்க்கிறோம். உதாரணமாக காவல்துறையில் புகார் கொடுக்க கணினி மூலமாக
பதிவு செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இயலவில்லை. அரசு விதிகளை புரிந்து கொள்வதை
ஜனரஞ்சக அறிவு எனலாம். எவ்வளவுதான் படித்திருந்தாலும் இந்த ஜனரஞ்சக நடைமுறை அறிவை அடைவது
பிரம்ம பிரயத்தனம் என்றால் மிகையில்லை. சம்மந்தப்பட்ட துறைகளும் தங்களது உடும்புப்
பிடியை லேசில் தளர்த்த மாட்டார்கள்.
இந்த சூழலில் தான் தொழில் நுட்பம் மக்களின் உதவிக்கு வரும் என்ற
எதிர்பார்ப்பு உள்ளது. மத்திய விஜிலன்ஸ் கமிஷன் தொழில் நுட்பத்தை கடைபிடிக்க அரசுதுறைகளை
அறிவுத்தியது வரவேற்றக்தக்கது. அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக பல போரட்டங்கள் நடத்தி
மக்களின் கவனத்தையும் அரசின் பார்வையையும் இந்த முக்கிய பிரச்சனை மீது திருப்பினார். அதில் ஒரளவு வெற்றியும் கண்டார். தெய்வாதீனமாக அதே சமயம் சிஏஜியின் தலைவர் வினோத்
ராயின் 2ஜி அறிக்கையும் ஹிமாலய ஊழலை மக்கள் முன் வைத்தது.
அன்றாட வாழ்க்கையில் மக்கள் எதிர்க் கொள்ளும் அரசு துறைகளில்
சங்கடமின்றி சேவையைப் பெற தொழில் நுட்பம் அதிக அளவில் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வருவாய், காவல்துறை, கிராம நிர்வாகம், வட்டாட்சியர் அலுவலகம், பதிவுத்துறை, போக்குவரத்துத்துறை,
பல்வேறு அன்றாட நடவடிக்கைகளுக்கு உரிமங்கள்
மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் துறைகள், இவ்விடங்களில் தான் மக்கள் அதிகமாக அல்லல்
படுகிறார்கள்.
ஜனத்தொகை அதிகமாக இருப்பதால் தேவைகளும் அதிகம். சம்பந்தப்பட்ட
துறைகளுக்கு எண்ணிக்கைகளை சமாளிக்க முடியாத நிலை. இதனால் வேகமாக சேவையை பெற மக்கள்
குறுக்கு வழி நாடுகிறார்கள். நப்பாசை பிடித்த
ஊழியர்கள் சந்தர்பத்தை பயன்படுத்தி கை நீட்டுகிறார்கள் ஊழல் ஊடுருவுகிறது ஊழியர்கள்
கை ஒங்குகிறது. ஒடுங்கும் அப்பாவி மக்கள் மேலும்
ஒதுக்கப்படுகிறார்கள்.
மக்கள் நேராக எதிர்க் கொள்ளும் துறைகளில் கணினி மூலம் தகவல்களை
பதிவு செய்து நடவடிக்கை எடுத்தல் மக்களுக்கு அரசின் சேவை சுலபமாக வந்தடையும். ‘இ-சேவா’ என்ற முறை பல இடங்களில் வழிமுறைகளை சுலபமாக்கியுள்ளது.
அரசு பணியாளர்கள் நியமனம், பணிமாற்றம், கல்வி நிர்வாகம், மருத்துவமனை
நிர்வாகம் இவைகளில் நேரும் தவறுகள் நேர்முகமாக பாதிப்பு தெரியாது, ஆனால் அதன் விளைவின்
அழுத்தம் அதிகம். பணியாளர் தேர்வில் வெளிப்படைத்தன்மையும் காலதாமதமின்றி தேர்வுகளின்
முடிவுகள் பணிநியமன ஆணை அளித்தால்தான் நம்பிக்கை பிறக்கும். அரசுப்பணியாளர்கள் சுமார் முப்பது வருடம் பணியில்
இருக்கக் கூடியவர்கள். அவர்களது தேர்வு நேர்மையாக
நடந்தால்தான் அவர்கள் நேர்மையாக பணிபுரிவார்கள் என்று எதிர்பார்க்கலாம். நேர்காணலே கோணலாக இருந்தால் பணியும் சறுக்கல்கள்
நிறைந்த கோணலான பாதையில்தான் செல்லும். சம்மந்தபட்ட துறையும் சரியும். கணினிமூலம் தகவல்
பரிமாற்றம் நிர்வாக சீர்திருத்தம் வெகுமளவு சறுக்கல்களை தவிர்க்கும்.
தவறு செய்யும் அரசு ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புத்துறை மூன்று
வகையாக குற்ற நடவடிக்கை எடுக்கிறது. கையும் களவுமாக கையூட்டு பெறும்போது பிடிப்பது
ஒரு வகை. விதிகளை மீறி சட்ட விரோதமாக நடவடிக்கை
எடுத்து லஞ்சம் பெறுவதை கோப்புகளை ஆராய்வது மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது
இரண்டாவது வகை. மூன்றாவது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தலை ஆராய்ந்து நடவடிக்கை
எடுத்தல். முதல் இரண்டு வழிகளும் தவறு செய்யும்
ஊழியரை ஊழல் குற்றத்தோடு நேராக இணைக்கும்.
மூன்றாவது வழியான வரவிற்கு அதிகமான சொத்து என்பது சுற்றி வளைக்கும் வழி. எந்த ஒரு நபரும் வீட்டில் உள்ள ஒவ்வொரு குந்து மணிக்கும்
கணக்கு காட்டுவது முடியாத காரியம். அபாண்டமாக ஜோடனை செய்வதற்கும் நேர்மையற்ற புலன்
விசாரணை அலுவலர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கும்.
நேர்மையற்ற விசாரணையும் அதைத் தூண்டி துணை போவதும் ஊழலின் ஒரு பரிமாணம் தானே.
அரசு நிர்வாகம் கோப்புக்களோடு நின்றுவிடாது மக்களின் வாழ்க்கையை
கோலமிட வல்லது. அன்றாட வாழ்க்கைக்கு இடையூறின்றி
உதவிக்கரம் கொடுக்கும் அரசே வல்லரசு. மத்திய அரசில் உள்துறை,பாதுகாப்பு, தொழில்கள்,
உணவு,நிதி என்று ஐம்பத்தொரு அமைச்சகங்கள் உள்ளன.
சிவிசி, மனித உரிமை என்று கண்காணிப்பு ஆணையங்கள் மத்தியிலும் மாநிலங்களிலும்
எல்லா நேர்வுகளையும் பார்வையிடுகின்றன.
நிர்வாக மேல் மட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், சட்ட திருத்தங்கள்,
நாட்டின் இயற்கை வளங்கள் பயன்படுத்தல், அரசியல் சாசன கட்டமைப்பை பாதுகாத்தல் இவை அரசியல்
திறம் சார்ந்தவை. இங்கு தொழில் நுட்பத்தைவிட
நேர்மையான சிந்தனையும் மக்கள் பயன்பாட்டை உள்ளடக்கிய நோக்கமும் தான் முக்கியம். அவைதான்
ஊழலற்ற பாதையை வகுக்கும்.