‘கொடுத்ததெல்லாம் கொடுத்தார் அவர் யாருக்காக கொடுத்தார். ஒருத்தருக்கா கொடுத்தார் இல்லை ஊருக்காக கொடுத்தார்‘ முதலமைச்சர் அவர்கள் இரண்டு நாள் அரசு அதிகாரிகள் ஆலோசளைக் கூட்டத்திற்குப் பிறகு காவல் துறைக்கு அளித்த அறிவுப்புகளை படித்த போது பழைய அந்தப்பாடல் தான் நினைவுக்கு வந்தது. ஓரு ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு இத்தகைய முடிவுகள் அறிவிக்கப்படும் முறை எந்த மாநிலத்திலும் இல்லை. இது நமது முதலமைச்சரின் உன்னத அணுகுமுறை. அதனால் தான் மற்ற மாநில காவல்துறை அதிகாரிகள் நமது மாநிலத்தைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள்.
எந்த ஒரு துறையின் முன்னேற்றத்திற்கும் திட்டமிடுதல் மிக அவசியம். திட்டங்கள் மேலிருந்து கிழே வர வேண்டுமா அல்லது களத்தில் ஆராயப்பட்டு மேலே சமர்ப்பிக்கப்பட்டு முடிவு செய்ய வேண்டுமா என்பது முக்கியம். இதை ‘டாப் டௌன்‘ அல்லது ‘பாட்டம் அப்‘ என்று வல்லுனர்கள் இருவகைப்படுத்துவார்கள். திட்டங்கள் உயர் மட்டத்தில் தீட்டப்பட்டு திணிக்கப்படுவதைவிட நடைமுறைக்கு எது உகந்தது, இப்போதைய சூழலில் எந்த திட்டம் உடனே செயல்படுத்த வேண்டும் என்று அராய்ந்து முடிவு செய்வதே தீர்கமான முடிவாக இருக்கும். மக்களையும் திருப்தி அடைய செய்யும். அந்த விதத்தில் மாவட்டங்களில் பணி செய்பவர்கள் உடனே நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளைப்பற்றி விவரிப்பதை கேட்டு அறிந்து அதற்கு எற்றவாறு ஒப்புதல் உடனே அளிப்பது களத்தில் உள்ள அதிகாரிகளுக்கு ஊக்கம் அளிப்பது மட்டுமின்றி மேலும் பணிகள் சிறப்பாக செயலாற்ற தூண்டு கோலாக அமையும்.
நடந்து முடிந்த சட்ட சபைத் தேர்தலின் போது இரண்டு முக்கிய பிரச்சனைகள் மக்கள் முன் இருந்தது. ஒன்று சட்டம் ஒழுங்கு, பொது அமைதி மற்றொன்று மின்சாரப்பற்றாக் குறை. சமூக விரோதிகள் மீது சட்டம் பாய வேண்டும். மின் வெட்டு வெட்டப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. ஏழை விவசாயிகளின் நில அபகரிப்புக் குற்றங்கள் கடந்த சில வருடங்களாக பெருகின அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பவில்லை. பலம் படைத்தவர்களின் குறுக்கீட்டால்தான் காவல்துறை முடங்கியிருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. உயர் அதிகாரிகளும் பாரா முகமாக இருந்தனர். இப்போது அத்தகைய குற்றங்களை பதிவு செய்து விசாரிப்பதற்கு நில அபகரிப்பு விசாரணைப் பிரிவு மாவட்டங்களில் துவங்கியிருப்பது எல்லோருடைய வரவேற்பையும் பெற்றுள்ளது. முதல் அறிவிப்பாக நடந்து முடிந்த காவல் அதிகாரிகளின் கூட்டத்தில் அந்த அமைப்பை மேலும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அத்தகைய நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு துவக்கப்பட இருக்கிறது.
நிலம் பரிமாற்றம் பிரச்சனைகள் சிவில் சம்பந்தப்பட்டதாக இருக்கும் பட்சத்தில் காவல்துறை தலையிடக்கூடாது என்ற விதி இருக்கிறது. ஆனால் மிரட்டி நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவில் பிரச்சனை என்று விட்டு விட முடியுமா? அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்கி விட்டு அவர்களே மனமுவந்து விற்றவர்கள் என்று வாய்கூசாமல் கூறும் கயவர்களை என்ன செய்வது! கடும் குற்ற நடவடிக்கை மட்டுமின்றி, அபகரிக்கப்பட்ட நிலம் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மேற்பார்வையிடும் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கபடுகிறதா என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
காவல் நிலையங்களில் வரவேற்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு வருபவர்களை அலக்கழிக்காமல் புகார்கள் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற திட்டம் 2002-ல் அமல் படுத்தப்பட்டது. அதற்கென்று ஒரு பெண் உதவி ஆய்வாளர், பெண் காவலர் எல்லா காவல் நிலையங்களுக்கும் நியமிக்கப்பட்டனர். நகர காவல் நிலையங்களில் பிரதனமாக ‘ரிஸப்ஷன் சென்டர்‘ என்று பிரத்யேக வரவேற்பாளர் அறையும் ஒதுக்கப்பட்டது. இது எல்லா காவல் நிலையங்களுக்கும் படிப்படியாக நிறைவேற்றபடவில்லை. இப்போது அந்த திட்டத்திற்கு புத்துயிர் கொடுக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு வருபவர் வசதிக்காக நாற்காலியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மனுதாரர்களை காக்க வைக்காமல், மனு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நியாயமாக செய்தால் மக்கள் ஆதரவு கிடைக்கும்.
போக்குவரத்துப் பிரச்சனை எல்லோரையும் பாதிக்கும் ஒரு பிரச்சனை, எங்கு சென்றாலும் அது நம்மை துரத்துகிறது நம்மை அங்கும் இங்கும் நகர முடியாமல் முடக்குகிறது. எற்கெனவே குறுகலான சாலைகள், வாகன அதிகரிப்பை சமாளிக்க முடியவில்லை. சென்னையில் மட்டும் 45 லட்சத்திற்கும் மேலான வாகனங்கள் இருக்கின்றன. போக்குவரத்து நெரிசலை சமாளிக்க திட்டமிடுதல் அவசியம். சாலைகளை அகலப்படுத்துதல், வளைவுகளை நேராக்குதல், ஒரு வழிப்பாதை அமலாக்கத்திற்கு உகந்த பாதைகளை தெரிவு செய்தல், போக்குவரத்திற்கு இடைஞசலாக நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றுதல், போக்குவரத்து விதிகளை பாரபட்சமின்றி அமலாக்குதல் சாலை உபயோகிப்பவர்களிடத்தில் சாலைப்பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்ற எவ்வளவோ செயல்பாடுகள் ஒருங்கிணை0ந்தால் தான் போக்குவரத்து நெரிசல் ஒரளவுக்கு சமன்படும்.
இது மட்டுமின்றி, மின்வாரியம், சென்னை குடிநீர் வாரியம், தொலை தொடர்பு நிறுவனங்கள், மாநகராட்சி, மெட்ரோ போக்குவரத்து கழகம், காவல் துறை, தீயணைப்புத்துறை இவை எல்லம் ஒன்றாக பணி செய்ய வேண்டும். குப்பை அகற்றாவிட்டால் அதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகி விடுகிறது. மேலை நாடுகளில் இரவு நேரங்களில் குப்பை அகற்றப்படுகிறது. தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டு நாள் துவங்கும்போது நகரம் பொலிவுடன் விளங்குகிறது. ஆனால் நமது நகரங்களில் தான் நாள்பூராக குப்பை அகற்றுகிறார்கள் அதுவும் போக்குவரத்து அதிகமாக இருக்கும் வேளையில் குப்பை லாரி ரோடு நடுவில் நின்று இடைஞல் செய்வது வேதனை அளிக்கும் காட்சி.
ஒவ்வொரு துறையும் திட்டமிடாது ரோடுகளைத் தோண்டுதல் பணி முடிந்த பிறகு சாலை சீரமைப்பதில் தாமதம் ஏற்படுத்துதல் மேலும் நெரிசலை அதிகரிக்கும். அறிவிக்கப்பட்ட மேலாண்மை திட்டம் மூலம் இத்தகைய களத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். பல இடங்களில் பொருத்தப்பட்ட காமிராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் ப்ளேட்டுகள் படம் பிடிக்கப்பட்டு அதிலிருந்து வாகன உரிமையாளர் தகவல்கள் கணினி மூலம் பெற முடியும். போக்குவரத்து காவலர் வாகனங்களை நிறுத்தி சலான் கொடுக்க வேண்டியதில்லை, கணினி மூலம் சென்று விடும். க்ரெடிட் கார்ட் முலமாகவும் அபராதத்தொகை செலுத்தலாம். கண்காணிப்பு காமிராக்கள் பல இடங்களில் செயல் புரிவதன் மூலம் விதிகள் மீறல் மற்றும் சாலைப் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்தல் மேன்மையடையும் என்று எதிர்பார்க்கலாம்.
போக்குவரத்து அதிகமில்லாத நேரத்தில் தானியங்கி சமிஞைகளின் சிவப்பு விளக்கு நமது பொறுமையை சோதிக்கும். சாலைகளில் நவீன சென்சார்கள் பொறுத்தப்பட்டால், எந்த திசையில் போக்குவரத்து அதிகம், எங்கு குறைவு என்பதை கணித்து சமிஞைகள் அதற்கெற்றவாறு மாறும். அதுவும் மேலாண்மை திட்டம் மூலம் அமல் படுத்த வேண்டும்.
சாலை விபத்தில் காயமுற்றவரை மருத்துவமனையில் ஒரு மணி நேரத்திற்குள் அனுமதித்து சிகிச்சையளித்தால் உயிர் காப்பாற்ற முடியும். இந்த ‘ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை‘ என்று இன்று பேசப்படுகிறதே தவிர நடைமுறைப்படுத்துவதில் பல பிரச்சனைகள். தனியார் முயற்சியாக பல அமைப்புகள் அந்த சிக்கல்களைத் தீர்த்து உதவி செய்ய முன்வந்துள்ளனர். சாலைப்பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் அரசுப் பணியாளர்களுக்கு ‘முதல் உதவி‘ பயிற்சி, அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் அவசர சீகிச்சைப் பகுதி மேப்படுத்தி உடனடி சிகிச்சை வழங்குதல், ஆம்புலன்ஸ் வசதி பெருக்குதல் இவை எல்லாம் இதில் அடங்கும். இதை சரிவர நிர்வகித்தால்தான் சாலை விபத்து உயிரிழப்பபை குறைக்க முடியும். தமிழ் நாட்டில் சாலை விபத்துக்களில் உயிரிழப்பு ஆண்டு ஒன்றுக்கு சராசரி 15,000, காயமுற்றோர்கள் சுமார் 1,00,000 என்பது மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகம். மற்ற நாடுகளில் சாலைப்பாதுகப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது இங்கு அரசு அதிகாரிகளின் மெத்தனத்தால் உயிரிழப்பு அதிகாரித்துக் கொண்டே போகிறது.
கிராம கண்காணிப்பு குழுக்கள் 1936-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இத்தகைய குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தந்த சரக பிரச்சனைகளை ஆராய்ந்து மக்கள் ஒத்துழைப்போடு தீர்வு காணும் மிகச்சிறந்த அமைப்பு. இந்த அமைப்பை மேப்படுத்துவதற்காக ரூபாய். 2 கோடி நிதி ஒதுக்கியிருப்பது நல்ல முடிவு.
உழைக்கும் வர்கம் தான் நாட்டின் வலிமை. இளைஞர்களை நல்வழிப்படுதுவதில் எந்த அளவிற்கு பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பங்கு இருக்கிறதோ அந்த அளவு காவல்துறையினருக்கும் பங்கு உள்ளது. வீடுகளிலும், பள்ளிகளிலும் நல்லியல்புகள் பயிற்றுவிக்கப்படவில்லை என்றால் அதனால் எழக்கூடிய சமுதாயப் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியது காவல் துறையின் பொறுப்பாகி விடுகிறது. மாவோயிஸ்ட் பிரச்சனைகள் சிகப்பு தாழ்வார மாநிலங்களில் படர்ந்ததற்கு பல காரணங்களில் இளைய சமுதாயத்தை அரவணைக்க தவறியதும் ஒன்றாகும்.
‘பாய்ஸ் கிளப்‘ என்ற சிறார் மன்றங்கள் சென்னையில் முக்கியமாக குடிசைப்பகுதிகளில் சமுதாயத்தில் நலிவுற்ற குடும்பங்களின் சிறுவர்களை குற்றங்களில் ஈடுபடாதவாறு நல்வழிப்படுத்த அமைக்கப்பட்டுள்ளது. இவை காவல்துறையின் கட்டுப்பாட்டில் அரசு உதவியோடு இயங்குகின்றன, பல தனியார் தொண்டு நிறுவனங்களும் உதவி புரிகின்றன. 2003-ம் ஆண்டு இந்த சிறார் மன்றங்கள் மேலும் மேம்படுத்த அரசு மானியம் வழங்கியது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகள் இவற்றை மேலும் மேப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்போது இந்த அமைப்பிற்கு வழங்கப்படும் மானியத்தை அரசு உயர்த்தியுள்ளது. குற்றங்கள் நடவாமல் தடுப்பதிலும், குற்றவலையிலிருந்து நலிவுற்ற சிறுவர்களை காப்பாற்றுவதில் காவல் துறையினர் முனைப்பாக செயல்பட வேண்டும்.
காவலருக்கும், இராணுவ வீரர்களுக்கு உள்ளது போல் கான்டீன் வசதி ஒருவரப்பிரசாதம். அகாலவேளையில் பணிபுரியும் காவலர்க்கு பொருள் வாங்க அலைய முடியாது. விற்பனை வரி விலக்களித்து மலிவு விலையில் நிறுவப்பட இருக்கும் பல பொருள் அங்காடியில் தேவையானவற்றை வாங்கலாம். இந்த பயனளிப்பு ஒய்வு பெற்ற காவலருக்கும், மறைந்த காவலர் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டிருப்பது முதலமைச்சரின் பெருந்தன்மையான செய்கை. இவ்வாறு இருபத்தைந்து அறிவுப்புக்கள் மக்கள் நலனுக்கும் காவலர் நலனுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
காவல்துறையினர் அரசு நிர்வாகத்தின் பிரதிநிதிகள். சீருடை அணிந்திருப்பதாலும், சட்டங்களை அமல்படுத்துவதாலும் அவர்களது பணிகள் வெளிப்படையாக தெரிகிறது. அதிக விமர்சனத்திற்கும் உட்படுத்தப்படுகிறது.
“காவல்துறையின் செயல் அப்பழுக்கற்று அமைய வேண்டும். காவல்துறையின் தூய்மையான பணிதான் அரசு நிர்வாகத்தின் மேலாண்மைய பிரதிபலிக்கிறது” என்ற முதலமைச்சரின் பொன் வரிகளை மனதில் கொண்டு காவல்துறை மக்கள் சேவையில் நேர்மையுடனும் கடமையுணர்வோடும் தம்மை அர்ப்பணிக்கவேண்டும்.
-----
This Article published in Dinamani Newspaper on 25.11.2011
No comments:
Post a Comment