Wednesday, July 7, 2010

தீவிரவாதத்துக்கு எதிராய் ஒரு தொடர் போராட்டம்


வீரப்பன் கூட்டாளிகளுடன் பர்கூர் வனப்பகுதியில் கொட்டமடித்துக் கொண்டிருந்த வருடங்களில் மலைவாழ் ஏழை மக்களின் அன்றாட நிலையற்ற வாழ்வு மேலும் பாதிப்புக்குள்ளானது. தேடுதல் வேட்டையில் இறங்கிய அதிரடிப்படையினரின் விசாரணை நடவடிக்கை ஒருபுறம், வீரப்பன் கூட்டாளிகளின் அச்சுறுத்தல் மறுபுறம் என்று இருதலைகொள்ளி எறும்பு போல் அவஸ்தையான வாழ்க்கை. வீரப்பன் கேங்கும் பச்சை சீருடை கையில் துப்பாக்கி. அதிரடிப்படையினரும் அதே கெட்அப். மலைவாழ்மக்களுக்கு இருசாராரரும் “கேங்க்” தான் வரும் தொல்லையும் ஒன்றுதான்! வீரப்பன் வேட்டை முடிவுற்றது அங்கு வாழும் மக்களுக்கு விடிவுகாலம் எனலாம்.

சட்டீஸ்கர் மாநிலம், தாண்டேவாடா, ராஜ்னந் கிராமம், பிஜாபூர் மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளுக்கும், அதிரடிப்படையிருக்கும் நடக்கும் அதிரடி தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். கொத்துக் கொத்தாக மத்திய ரிசர்வ் படை வீரர்கள் ஒரே தாக்குதலில் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சர்வதேச அளவில் இந்த பிரச்சனை பாதுகாப்பு வல்லுனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உள்நாட்டு பாதுகாப்பிற்கு சவாலாக அமைந்துள்ள இந்த பிரச்சனையில் அணுகுமுறை, அதிரடிப்படையினரின் பயிற்சி, ஆயத்த நடவடிக்கைகள், இருப்பில் உள்ள ஆயுதங்கள், கண்ணி வெடியை தவிர்க்கக்கூடிய வாகனங்கள் பாதுகாப்பு படையினருக்கு அளிக்கப்படும் சாதனங்களின் அளவு மற்றும் செயல்திறன் இவைகள் பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது.

காட்டுப் பகுதியில் இனம் தெரியாத எதிரிகளை சல்லடைப் போட்டு தேடுவது என்பது மிகவும் கடினமானது. சில அடர்த்தியான காட்டுப்பகுதியில் 10 அடிக்குமேல் பாதை தெரியாது. வனப்பகுதியில் பல குக்கிராமங்கள் இருக்கும். காலம் காலமாக வனப்பகுதியில் வாழும் மலைவாழ்மக்களுக்கு காட்டுப் பாதைகள் அத்துப்படியாக இருக்கும். அவர்களது உதவியில்லாமல் தேடுதல் வேட்டையில் ஈடுபடும் பாதுகாப்புப் படையினரால் குறைந்தபட்ச இலக்கையும் அடைய முடியாது.

சட்டீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா மற்றும் அதை சுற்றியிருக்கக்கூடிய மலைவாழ்மக்கள் பகுதியில் நிலவிவரும் மாவோயிஸ்ட் பிரச்சனை ஏதோ ஒளிந்துகொண்டிருக்கும் சில தீவிரவாதிகளால் உருவாக்கப்படுகிறது என்று கணித்து அணுக முடியாது. இது இருமுனை சமுதாய இனப் பிரச்சனை. ஒன்று சட்டம் ஒழுங்கு மற்றொன்று மக்கள் நலம் அவர்களது முன்னேற்றம். சுதந்திரம் அடைந்து 60 வருடங்கள் கழிந்தும் மலைவாழ்மக்களின் ஏழ்மை நிலையில் மாற்றம் இல்லை என்பதை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி நாட்டின் இறையாண்மைக்கு பாதகம் விளைவிக்கும் விதத்தில் வன்முறையை தூண்டி இருக்கிறார்கள். இரு கோரமான நிகழ்வுகள். சிந்தல்நாரில் 76 மத்திய ரிசர்வ் போலிசார் ஏப்ரல் மாதம் கண்ணி வெடி மற்றும் துப்பாக்கித் தாக்குதலில் உயிரிழந்தது. மற்றொன்று மே மாதம் 17ம் தேதி சிங்காவரம், தாண்டேவாடா அருகில் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து கண்ணிவெடியால் தகர்த்தப்பட்டு 35 அப்பாவி மக்கள் உயிரிழந்தது. இந்த இரு சம்பவங்களும் அங்கு பணியில் ஈடுபட்டிருக்கும் பாதுகாப்பு படையினருக்கு பெரும் பின்னடைவு எனலாம்.

மத்திய ரிசர்வ் போலிஸ் ஒரு மாநிலத்திற்கு பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டால் அந்தப்படை மாநில காவல்துறையோடு இணைந்து பணிபுரிய வேண்டும். உள்ளூர் காவல்துறைக்கு அந்தப்பகுதி போக்குவரத்து தெரியும் மக்களைத் தெரியும். போதிய தகவல் இல்லாமல் உள்ளூர் காவலரின் உதவியின்றி “வனப்பகுதி ஆதிக்கம்” என்ற குறிக்கோளை நிறைவேற்ற முற்பட்டதால் வந்த விளைவு இந்த உயிரிழப்பு என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிரடிப்படை செயல்இயக்கங்களை மேற்கொள்வதற்கு முன்பு பாதையில் உள்ள ஆபத்தை தெரிவு செய்து முன்னேறவேண்டும். இந்த ‘தடம் திறவு ரோந்து’ ஒரு அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கை. வீரர்கள் ஒரு வரிசையில் செல்லவேண்டும். கும்பலாக செல்லக்கூடாது. இடைவெளிவிட்டு செல்லவேண்டும். மற்றவர்களுக்கு தெரியாத வகையில் இயற்கை மறைவுகளை பயன்படுத்தி முன்னேறவேண்டும், பேசக்கூடாது, சமிக்ஞை மூலம் தகவல் கொடுப்பது, அதிக சுமையை தவிர்த்தல் போன்ற எச்சரிக்கை விதிகள் ஒழுங்காக கடைபிடிப்பதில் சுணக்கம் ஏற்பட்டால் இத்தகைய அசம்பாவிதங்கள் ஏற்படும். ஒரு குறிப்பிட்ட நோக்கமும் இன்றி அதிக நாட்கள் தொடர்ந்து வனப்பகுதியில் ரோந்து சென்றதால்தான் இந்த பேரிழப்பு ஏற்பட்டது என்று முன்னாள் பஞ்சாப் மாநில அதிரடிப்படைத் தலைவர் திரு கே.பி.எஸ் கில் குறைகூறியுள்ளார்.

மாவோயிஸ்டுகளாலும், பாதுகாப்புப் படையின் நடவடிக்கையாலும் மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாழாவதோடு ஒருபுறம் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாவது வேதனைக்குரியது. அதைவிடக் கொடியது தினமும் பயத்தில் செத்துப் பிழைப்பது. அவர்களது மனநிலையை சரியாகப் புரிந்து கொண்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது.

‘வசந்தகால இடி முழக்கம்’ என்று விவரிக்கப்பட்ட தீவிர கம்யூனிசப் புரட்சி 1969ம் வருடம் நக்ஸல்பாரியில் சாரு மாஜும்தார், கானு சன்யால் என்பவர்களால் துவங்கப்பட்டு காட்டுத் தீ போல் பலமாநிலங்களுக்கு பரவியது. நிலச்சுவாந்தாரர்கள், அடைமான தொழிலில் அதிகவட்டி ஈட்டுபவர்கள், பணக்காரர்கள் போன்ற சமுதாயத்தின் எதிரிகள் ஒழிந்தால்தான் சமுதாயம் நிலைப்படும் என்ற வன்முறைக் கலாச்சாரத்தை மாவோயிஸ்டுகள் தமது அடிப்படை கொள்கையாகக் கொண்டு பரவவிட்டனர். துவங்கப்பட்ட மூன்று ஆண்டுகளில் சுமார் நாலாயிரம் வன்முறைச் சம்பங்கள். மேற்குவங்கத்தில் மட்டும் சுமார் 3000 அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன. உள்நாட்டுப் பாதுகாப்பை குலைக்கும் இப்போராடத்தை முறியடிக்க ராணுவம், மத்திய ரிசர்வ் படை, காவல்துறை கொண்ட மும்முனை எதிர்தாக்குதல் ‘ஆபரேஷன் ஸ்டீபில்சேஸ்’ என்ற பெயரில் இடர் தகர்ப்புப் போர் முடுக்கிவிடப்பட்டது. ஜுலை 16 1972ம் வருடம் இவ்வியக்கத்தின் தலைவர் சாரு மாஜும்தார் கைது செய்யப்பட்டு ஜுலை 28ம் நாள் போலிஸ் காவலில் உயிரிழந்தார். அதன் பிறகு எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளால் இந்த இயக்கம் தொய்வு அடைந்தது.

1970 – 85 ல் தமிழக போலிசார் மேற்கொண்ட முனைப்பான நடவடிக்கைகளால் இடதுசாரி தீவிரவாதம் களையப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் “க்ரே ஹெளன்ட்ஸ் என்ற சிறப்பு காவல்படையின் துணிவான நடவடிக்கையால் தீவிரவாதிகள் கொட்டம் அடக்கப்பட்டு அவர்கள் அண்டை மாநிலங்களான சட்டீஸ்கர், ஒரிசா, ஜார்க்கண்டில் தஞ்சம் புகுந்தனர். மத்திய பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டு நவம்பர் 2000 ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டீஸ்கர் மாநிலத்தில் தீவிரவாத விழுதுகள் வேரூன்றியுள்ளது. நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆட்சியைப்பிடித்தது இடது தீவிரவாதத்தின் வளர்ச்சிக்கு ஒரு காரணம். இந்தியாவில் உள்ள 602 மாவட்டங்களில் சுமார் 190 மாவட்டங்களில் இவர்களது ஆதிக்கம் பரவியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு 2005ல் இருந்து இந்த இயக்கம் “சிவப்பு இடைவழி” மாநிலங்களில் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

தீவிரவாதத்தை எதிர்கொண்டு சட்டம் ஒழுங்கு நிலை நாட்டுவது காவல்துறையின் முக்கிய பொறுப்பு. அதனை அவர்கள் சரிவர செய்வதற்கு எல்லாவிதமான உபகரணங்கள், பயிற்சி பெற்ற வீரர்கள் கொண்ட மத்திய ரிசர்வ் படை, தரமான தகவல் பரிமாற்றம் போன்ற ஒருங்கிணைந்த செயல்திறனால் அமைதி என்ற இலக்கை அடைய முடியும். அமைதி ஏற்பட்டால்தான் வளர்ச்சிப் பணிகள் சரிவர இயங்கும். மக்களின் அடிப்படை தேவைகளான வாழ்வாதாரம், கல்வி, மருத்துவ வசதி, தண்ணீர், மின் இணைப்பு சரிவர கொடுக்கப்படாமல் கனிவளம் கொண்ட பகுதிகளில் சுரங்க உரிமம் கொடுப்பது மட்டும் வளர்ச்சியாகாது. சுரங்க கம்பெனிகள் தோண்டுவதற்கு தேவையான வெடிமருந்து பொருட்களை மாவோயிஸ்டுகள் அபகரித்து பாதுகாப்புப் படையினர் மீது தாக்குவதற்கு உபயோகிக்கிறார்கள் என்பது உண்மை. இதனால் தான் வீரப்பன் வேட்டையிலும் வெற்றி பெறுவதற்கு கனி சுரங்க உரிமம் கொடுப்பது ரத்து செய்யப்பட்டது. வெடிமருந்து நடமாட்டம் அறவே நிறுத்தியதால் தான் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்த முடிந்தது.

“சல்வா ஜுடும்” என்ற பாதுகாப்புப் படையினருக்கு சாதகமாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் அமைக்கப்பட்ட விழிப்புணர்வு குழுவைச் சேர்ந்தவர்கள் தான் சமீப தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். சல்வா ஜுடுமை சேர்ந்தவர்கள் போலிஸாருக்கு உளவு பார்த்து தகவல் கொடுக்கிறார்கள் என்பதற்காக அவர்களை பழிவாங்கினோம் என்கிறார்கள் மாவோயிஸ்டுகள். சல்வா ஜுடுமின் சட்ட விரோத செயல்களும் பாதுகாப்புப் படையினரின் அத்துமீறல்கள், அப்பாவி மக்களை துன்புறுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

தீவிரவாதத்தை முறியடிப்பது ஒரு தொடர் போராட்டம். விடிவதற்குள் வெற்றியடைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியுமல்ல சாத்தியமுமல்ல. சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை மூலம், செயற்கையாக வெற்றியடைந்தோம் என்ற புள்ளி விவரங்களால் பலன் இல்லை. அதே சமயம் மாவோயிஸ்டுகளுக்கு வரிந்து கட்டிக்கொண்டு அவர்களது சட்டவிரோத போராட்டத்தை போற்றிடும் மேலோட்ட மனித உரிமை ஆர்வலர்கள், பாதுகாப்பு படையினர் மீதும், அப்பாவி மக்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதலை கண்டு கொள்ளாமல் இருக்கும் அவர்களது இரட்டை நிலைப்பாடு சமூக விரோதிகளை தூண்டும் வண்ணம் உள்ளது என்றால் மிகையல்ல. எந்தத் தரப்பில் உயிர் பறிபோனாலும் அது சமுதாயத்திற்கு இழப்பு.

தீவிரவாத இயக்கத்தலைவர்களை இனம் கண்டு அவர்களை தனிமைப்படுத்தி கடுமையான நடவடிக்கை, மக்களை அரவணைத்து பாதுகாப்பு நடவடிக்கை அடிப்படை வளர்ச்சிப் பணிகள் என்ற ஒருங்கிணைந்த மும்முனை திட்டம் வளமான பாதைக்கு அழைத்துச் செல்லும். மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முன்பிருந்தது போல் தண்டகாரண்ய மேம்பாட்டுத் திட்டம் என்ற பாதுகாப்போடு அடங்கிய வளர்ச்சித் திட்டம் இதற்கு வழிவகுக்கும்.

No comments: