Friday, October 16, 2009

உல்லாசம் பொங்கும் தீபாவளி


தீபாவளி நமது கலாச்சாரத்தோடு ஒன்றி தொன்று தொட்டு வரும் பண்டிகை. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நமது நாட்டின் ஆத்ம பலம். எந்த சமயத்தவரது பண்டிகை எனினும் அந்நாளில் மற்றவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து சமுதாயத்தில் ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பமாகவே கொள்ளவேண்டும்.

தீபாவளிப் பண்டிகை என்றாலே புத்தாடை, இனிப்பு, பரஸ்பரம் சுற்றமும் நட்பும் கூடிமகிழ்தல். விருந்து, கேளிக்கை விளையாட்டு என்று இன்பமாக கழியும் நாட்கள். வாணவேடிக்கை, பட்டாசு வகைகள் இல்லாமல் தீபாவளி நிறைவு பெறுவது இல்லை. பெயரியவர்களும் குழந்தைகளோடு பட்டாசு வெடிப்பதில் கலந்து கொள்வதை காணலாம். தொலைக்காட்சி மற்றும் நவீன கேளிக்கைகள் தோன்றாத காலத்தில் தீபாவளி மிக விமர்சையான கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையாக இருந்தது. பெற்றோரோடு சென்று துணி எடுப்பது, நாட்கணக்காக தையல்காரரிடம் அலைவது, கூட்டுசேர்ந்து இனிப்பு, காரம் செய்வது, தந்தையோடு சென்று பட்டியல்படி பட்டாசு வாங்குவது, மழையிலிருந்து அதை காப்பாற்றி வெதுவெதுப்பாக பாதுகாப்பது, விடியற்காலை குளித்து முதலில் யார் பட்டாசு விடுவது என்று போட்டி போடுவது, சூடாக சிற்றுண்டி அருந்தி தீபாவளி மருந்து மயக்கத்தில் சந்தோஷத்தில் திளைப்பது. இவையெல்லாம் - 30 வருடங்களுக்கு முன்னால். இப்போது தொலைக்காட்சி பெட்டி முன் சிறப்பு தீபாவளி நிகழ்ச்சிகள் பார்ப்பதில் கழிகிறது. இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே என்று ஏங்கத் தோன்றும்.

தீபாவளியோடு சேர்ந்து வருவது பட்டாசு வெடிகளால் ஏற்படும் விபத்துக்கள். மாறிவரும் சமுதாய சூழலில் முன்பு இருந்தது போல் இல்லாமல் பெரியவர்களுடைய கவனம் பல திசைகளில் ஈர்க்கப்படுகிறது. குழந்தைகள் மீது செலுத்த வேண்டிய மேற்பார்வையின் அளவும் தேய்ந்துவிட்ட நிலையில் இத்தகைய பட்டாசு சம்மந்தப்பட்ட தீ விபத்துக்கள் குறைவில்லாமல் தொடர்கின்றன.

தமிழகத்தில் சராசரி வருடத்திற்கு 20,000 தீ விபத்து சம்மந்தப்பட்ட அழைப்புகள் தீயணைப்புத் துறைக்கு வருகின்றன. 2008 ஆம் வருடம் 17,433 தீ அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் பட்டாசு சம்மந்தப்பட்ட தீ விபத்துகள் 393 ஆகும். சென்னையில் மட்டும் 102 பட்டாசு தீ விபத்து அழைப்புகள் பெறப்பட்டன.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயம் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்புப் பிரிவு இயங்குகிறது. இந்தப் பிரிவில் 2008 ம் வருடம் பட்டாசுவெடி தீ விபத்தினால் 56 நபர்கள் காயமுற்று அனுமதிக்கப்பட்டனர். இவற்றில் 19 பேர் உள்நோயாளிகள். ஸ்டான்லி மருத்துவமனையில் 12 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். சந்தோஷமாக கழிக்க வேண்டிய நாளில் வேதனையோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியநிலை. இது நாமே வரவழைத்துக் கொண்டதைத் தவிர வேறில்லை.



விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டியது. முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் விதிகளை மீறாமல் மதித்து நடந்தால் அசம்பாவிதங்களை தவிர்க்கலாம். தீயணைப்புத் துறை பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு தீ பாதுகாப்பு தணிக்கை செய்து தடையின்மைச் சான்றிதழ் வழங்குகிறது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிமங்கள் வழங்குகின்றனர். மாவட்டங்களில் வருவாய்த்துறையும், 15 கிலோவிலிருந்து 200 கிலோ வரை பட்டாசு உற்பத்தி செய்யும் இடத்திற்கு வெடிபொருள் சட்டப்படி மத்திய அரசின் வெடிமருந்து கட்டுப்பாட்டு அலுவலரிடமிருந்து உரிமம் பெறவேண்டும். 200 கிலோவிற்கு மேற்பட்டு மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள முதன்மை வெடிமருந்து கட்டுப்பாட்டு அலுவலரால் இந்திய வெடிமருந்துச் சட்டம் மற்றும் வெடிமருந்து விதிகள் அடிப்படையில் இத்தகைய உரிமங்கள் வழங்கப்படுகின்றன. விதிமீறல்களுக்கும் சட்டத்திற்கு புறம்பாக பட்டாசு பொருட்கள் தயாரித்தால் 5000 ரூபாய் அபராதம் மற்றும் 3 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கலாம்.

அதிக அளவில் பட்டாசு தயாரிப்பதற்கு உரிமம் பெற்ற 590 நிறுவனங்கள் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெடிமருந்து மற்றும் பட்டாசு வைத்துக்கொள்வதற்கென 29 உரிமதாரர்கள் உள்ளனர்.

பட்டாசு தொழிற்சாலையிலும், வெடிமருந்துகள் தயாரிப்பதற்கு உபயோகப்படுதப்படும் இராசாயனப் பொருட்களை பயன்படுத்துவதில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.



அங்கீகரிக்கப்படாத இரசாயனப் பொருட்கள் உபயோகிக்கக் கூடாது.
இரசாயனக் கலவைகள் தேவையான அளவு தயார் செய்யவேண்டும். மிதக்கலவைகளை ஒருமணி நேரத்திற்கு அதிகமாக வைத்தல் கூடாது.
ஒவ்வொரு இரசாயனப் பொருளையும் தனித்தனி அறையில் வைத்து தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ள வேண்டும்.



வேலை துவங்குவதற்கு முன் மேற்பார்வையாளர் சேமிப்பு கிடங்கு, தயாரிக்கும் அறைகளை பார்வையிட வேண்டும். வேண்டாத பொருட்களோ, விநோதமான வாசமும் இருந்தால் பரிசோதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.



வெப்பநிலை 40 டிகிரி சென்டிகிரேடுக்கு அதிகமாக இருந்தாலோ, காற்றின் ஈரப்பதம் குறைவாக இருந்தாலோ வேலை துவங்கக்கூடாது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களையே வேலையில் அமர்த்த வேண்டும். எக்காரணத்தை கொண்டும் தொழிற்சாலைகளுக்குள் குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது
ஒரு அறையில் நிர்யணிக்கப்பட்ட பணியாள்ர்களுக்கு அதிகமாக இருக்கக் கூடாது.



பட்டாசு பொருட்களை அனுமதிக்கப்பட்ட உலர்மேடையில் மட்டுமே உலரவைக்க வேண்டும். இரும்பு பட்டைகள் பொருத்திய பெட்டிகள், முக்காலிகள், இருப்பு ஆணிகள் கொண்ட பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
இடி, மின்னல் ஏற்படும் சூழலில் வேலையை நிறுத்தி பாதுகாப்பு இடங்களுக்கு வரவேண்டும். பட்டாசு வெடி சோதனையை திறந்த வெளியில் செய்ய வேண்டும்.

2004 ம் வருடத்திலிருந்து செப்டம்பர் 2009ம் வருடம் வரை பட்டாசு தொழிற்சாலைகளில் 28 பெரிய விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 106 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் 225 நபர்கள் காயமடைந்துள்ளனர். சேதாரம் ரூ. 68.60 இலட்சம். இந்த எல்லா விபத்துகளும் கவனக்குறைவாலும், விதிகளை பின்பற்றாததாலும் ஏற்பட்டவை.



பட்டாசு வைக்கும் இடங்களிலும் பாதுகாப்பு அவசியம். குறைந்த பட்ச தீயணைப்பு சாதனங்களான வாளி தண்ணீர், மண் தீயணைப்பான்கள் வைத்தல் வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 24.09.09 அன்று பாதுகாப்பு உணர்வில்லாமல் மற்றவர்களுடைய நலனையும் பாராமல் குடியிருப்பு பகுதியில் பட்டாசுகளை விற்பனைக்கு முடக்கி வைத்ததால் அவை வெடித்து கட்டிடமும் நிலைகுலைந்து 10 பேர் உயிரிழந்தனர்.



சென்னை உயர்நீரிமன்றம் ரிட் மனு எண். 38180/2005 ராமசாமி எதிர் தீயணைப்பு, காவல் மற்றும் சம்மந்தப்பட்ட ஏனைய துறைகள், பட்டாசு கிடங்குகள், விற்பனை மையங்கள் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளை கொடுத்துள்ளது. கடைகளுக்கு இடையில் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஆயிரம் கிலோவிற்கு மிகாமல் கடையில் பட்டாசு வைக்கவேண்டும். தற்காலிக கடைகள் தீக்கிறையாகாத பொருட்களால் மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் உச்சநீதிமன்ற ரிட்மனு 72/1998 மஉறாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மனுவில் அதிக ஓசையால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு ஒலி அலை 125 டெசிபலுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறது. மேலும் இத்தகைய ஒலி மருத்துவமனை, கல்விமையங்கள், நீதிமன்றங்களுக்கு அருகில் எழுப்பக்கூடாது. இந்த விதிப்படி ஆட்டம்பாம், அதிக ஒலி எழுப்பும் சரவெடி மேலே குறிப்பிட்ட மையங்களுக்கு அருகிலோ வேறு எங்குமோ வெடிக்கக்கூடாது.

பட்டாசு வெடிக்கும் பொழுது பெரியவர்கள் மேற்பார்வை தேவை. கையில் வைத்து வெடித்து சூரத்தனத்தைக் காட்டக் கூடாது. ஒரு வாளி தண்ணீர் வைத்து வெடித்த கம்பிகள், குச்சிகளை போட வேண்டும். அடுக்கு மாடி கட்டிடத்தில் ராக்கெட் போன்றவைகளை கொளுத்தக்கூடாது. குடிசைப் பகுதி அருகில் பட்டாசு கொளுத்தக்கூடாது. காலணி மற்றும் பருத்தி ஆடைகளை அணிந்தால் நலம்.



பட்டாசு விபத்துகளில் பாதிக்கப்படுவது குழந்தைகள். தீக்காயங்களைவிட கொடியது வேறொன்றுமில்லை. காயம் ஆறுவதற்கு நாளாகும், பட்ட இடம் விகாரம் அடையும். சமீபத்தில் விருதுநகரில் நடந்த விபத்தில் கொடியமுறையில் ஒரு குழந்தை உயிரிழந்தது. பெற்றோர் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகளை ஒரு அறையில் வைத்திருந்தனர். அவர்கள் வேலைக்கு சென்றிருந்தனர் குழந்தை பள்ளியிலிருந்து திரும்பி பட்டாசை மறைத்துவைத்த அறையினுள் நுழைந்து கிடைத்த பட்டாசை வெடிக்க முயன்றிருக்கிறது. விபத்து ஏற்படுகிறது. புகைமண்டலத்தில் சிக்கி குழந்தை இறந்து விடுகிறது. வேலையிலிருந்து திரும்பிய பெற்றோர் குழந்தை பள்ளியிலிருந்து திரும்பவில்லை என்று பள்ளிக்குச் சென்று தேடுகின்றனர். பின்புதான் வீட்டிலேயே குழந்தை உயிர்விட்டது தெரியவருகிறது. இதைவிடக் கொடுமை இருக்க முடியாது.

பாதுகாப்பு நமது கையில் தான் இருக்கிறது. பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு நிமிடமும் வேண்டும். சாலை விதிகளை மதிப்பது, தலைக்கவசம் அணிவது, வாகன இருக்கை பெல்ட் போடுவது, வீட்டை பாதுகாப்பாக வைப்பது, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பது, தீ விபத்துகள் தவிர்ப்பது இவற்றில் கவனமாக இருக்க வேண்டும். உல்லாசமான தீபாவளி துன்பமில்லா இன்பம் பொங்கும் தீபாவளியாக அமைய வேண்டும்.








This Article Published in Dinamani Newspaper on 16.10.2009

Friday, October 9, 2009

கவர்ச்சித் திட்டங்கள் ஜக்கிரதை

“கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததால் கொடி அசைந்ததா”
என்று கரணம் காரணம் மையமாக கவிநயம் மிக்க கண்ணதாசன் பாடல் மறக்க முடியாதது. மோசடி வலையில் திரும்ப திரும்ப விழும் முதலீட்டார்களின் நிலைமையைப் பார்க்கும் போது
“ஏமாளிகளால் ஏமாற்றுபவர்களா
ஏமாற்றுபவர்களால் ஏமாளிகளா” என்று கேட்கக் தோன்றுகிறது.
“சிட்டி லிமோசின்ஸ்” என்ற நிறுவனத்தில் அப்பாவி மக்கள் முதலீடு செய்து பணத்தை பறிகொடுத்துள்ளர்கள். இழப்பு நூறு கோடி ரூபாய்க்கு மேலிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது இந்த நிறுவனம் இந்தியாவில் முக்கிய நகரங்களான மும்பை, தில்லியில் இயங்கி வருகிறது.
. “டைம் ஷேர்” என்று சுற்றுலா தலங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் வருடத்திற்கு சில நாட்கள் பங்கு வாங்கும் வர்த்தக முறை பல வருடங்களாக இயங்குகிறது. வாங்கிய குறிப்பிட்ட நாட்கள் அடிப்படையில் அந்த விடுதியிலோ அதோடு இணைந்த மற்ற விடுதிகளிலோ தங்கலாம், அதை வாடகைக்கு விடலாம் போன்ற பல வகையில் உபயோகிக்கலாம். இதன் அடிப்படையில் தான் வாகன உரிமை என்று வாகனங்களின் மீது ஒரு தொகை முதலீடு செய்து அந்த வாகனம் வாடகைக்கு விடப்பட்டு ஈட்டும் லாபத்தில் பங்கு முதலீட்டை பொருத்து கொடுக்கப்படுகிறது. இந்த வகையில் உருவானதுதான் லிமோசின் நிறுவனம்.
கவர்ச்சிகரமான பல திட்டங்கள் மக்களை ஈர்ப்பதற்கு அறிவிக்கப்படுகின்றன. நாம்தான் முதலீடு செய்வதற்கு முன் திட்டங்களை ஆராய்ந்து வியாபார நோக்கத்தை அறிந்துகொண்டு வியாபாரம் துவங்குபவரின் நாணயத்தையும், தகுதியினையும் தெரிந்து கொண்டு முதலீடு செய்யவேண்டும்.
1990ல் இருந்து கவர்ச்சிகரமான அறிவிப்புகள் நிறைந்த பத்தாண்டுகள் என்று கூறலாம். முதலீடு செய்பவர்களுக்கு 24 சதவிகிதம் வட்டி, முதலீடு செய்த உடனே முன்வட்டி, தங்க நாணயம், குளிர்சாதனப்பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி போன்ற பல பரிசுகள் என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. முதலீடு செய்த பணம் விவசாயப் பண்ணை பராமரிப்புதற்கு செலவிடப்பட்டு முதலீட்டார்களுக்கு அரிசியும், தானிய வகைகளும், காய்கறியும் வழங்கப்படும், பால்பண்ணை மூலம் பால் விநியோகிக்கப்படும் என்றும் இத்திட்டங்களின் பரிமாணங்கள் பல. அப்பாவி மக்களும் கவர்ச்சியில் மயங்கி தாம் கொடுத்த பணத்திலிருந்துதான் ஒரு பங்கு முன்வட்டி, பரிசு என்று கொடுக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளாமல் முதலீடு செய்தனர். இத்தகைய வங்கிசாரா நிதிநிறுவனங்கள் முதலீட்டார்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கு முதல் சில ஆண்டுகளுக்கு கூறியபடி வட்டி மற்றும் சலுகைகளை கொடுத்து அதன் மூலம் மேலும் பல சந்தாதாரர்களை வலையில் சிக்கவைப்பார்கள். நீர்குமிழி போல் வெடித்து சிதறும் நிலையில் நிறுவனம் மூடப்படும். பணம் இழந்தவர்கள் காவல் துறையினரிடம் தஞ்சமடைவார்கள்.
இம்மாதிரியான வழக்குகள் அதிகரிக்கவே குற்றப் புலனாய்வுப் பிரிவில் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் தலைமையில் விரிவாக்கப்பட்டது. 1997-ம் வருடம் தமிழ்நாடு முதலீட்டார்கள் பாதுகாப்பு சட்டம் (TANPID ACT) இயற்றப்பட்டது. மோசடி நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துக்களை முடக்கி பொது ஏலம் மூலம் இழந்த பணத்தை ஓரளவு ஈடுகட்ட வழிவகை செய்யும் அதிகாரம் இந்த சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் பொருளாதார குற்றப் புலனாய்வுத் துறை முதலீட்டாளர்களுக்கு அவர்கள் செலுத்திய தொகையில் ஒரு பகுதியாவது நீதிமன்றம் மூலம் பெற்றுத்தர முடிகிறது.
நூதன மோசடிகளுக்கு தந்தை என்று அழைக்கப்படுபவர் ‘சார்லஸ் பான்ஸி’ என்ற இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர். 1949ம் ஆண்டு வரை அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்தவர் மிக அதிகமான பயன் மிகக் குறுகிய காலத்தில் கிடைக்கும் என்று ஒரு திட்டத்தை விளம்பரப்படுத்துவார். முதலில் வரும் முதலீட்டார்களுக்கு தடங்கலின்றி சொல்லியபடி முதலீட்டின் லாபம் என்று ஒரு தொகை திரும்பி கொடுக்கப்படும். இதில் பயனடைந்தவர்கள் மூலமாக மற்றவர்களும் புற்றீசல் போல பணம் போடுவார்கள். இவ்வாறு புதிதாக வரும் முதலீட்டார்களின் பணத்தை வைத்து திட்டத்தின் லாபம் என்று முதலீட்டார்களுக்கு திருப்பிக் கொடுப்பதால் திட்டம் வெற்றிகரமாக செயல்படுவதாக ஒரு மாயை உண்டாகும். இத்தகைய தொடர் அடுக்கு மோசடி திட்டங்கள் ‘பான்சி திட்டம்’ என்று பிரபலமாகியுள்ளது.
‘பான்ஸி திட்டம்’ தொடர புதிய முதலீட்டாளர்கள் வரவேண்டும். அவர்கள் வரத்து குறைந்தால் இந்த திட்டம் குறுகிய காலத்தில் அதனுடைய பளுவாலேயே தொய்ந்து விடும். திட்டத்தை துவக்கியவர் சுருட்டியவரைக்கும் லாபம் என்று மறைந்து விடுவார். அல்லது சட்டப்படி திட்டம் தூய்மையானதா என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்கையில் சாயம் வெளுத்துவிடும்.
சமீபத்தில் ‘பெர்னி மெய்டாஃப்’ என்பவர் பல வருடங்களாக அமெரிக்க வால் ஸ்ட்ரீட் பங்கு மார்க்கெட்டில் சுமார் 65 பில்லியன் டாலர் மோசடி செய்தது வெளிவந்துள்ளது. இவர் செய்தது பல உறர்ஷத் மேத்தாக்களை உள்ளடக்கிய மோசடி. அமெரிக்க புலனாய்வுப் பிரிவு துரிதமாக நடவடிக்கை எடுத்ததால் இவருக்கு அதிகபட்சமாக 150 வருட சிறைதண்டனை இந்த வ்ருடம் ஜுன் மாதம் நீதிமன்றம் விதித்துள்ளது.
பரிசுச்சீட்டு மற்றும் பணம் பட்டுவாடா திட்டங்கள் தடுக்கும் சட்டம் மத்திய அரசால் 1978-ல் இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி பல அடுக்கு வியாபார திட்டங்கள் மூலம் தொடர்ந்து பலரை திட்டத்தில் இணைத்து லாபம் ஈட்டுவது குற்றமாகும். சமீபத்தில் தமிழகத்தில் தொடரப்பட்ட ‘தங்கப் புதையல்’ வழக்கு இதில் அடங்கும். உச்சநீதிமன்றம் மேற்கு வங்காளம் எதிர் ஸ்வபன் குமார் என்ற வழக்கில் (AIR 1982 SC 949) இம்மாதிரியான பணப்பட்டுவாடா திட்டம் என்ன என்று விவரித்துள்ளது. எளிதிலும் விரைவிலும் பணம் ஈட்டக்கூடிய திட்டம் என்ற அறிவிப்பும், பணமோ, பொருளோ ஒரு இலக்கை அடைந்தாலோ அல்லது புதிய அங்கத்தினர்களை சேர்த்தாலோ கொடுக்கப்படும் என்ற உத்திரவாதம் அடங்கிய திட்டம், இந்த பரிசுச் சீட்டு ஒழிக்கும் சட்டத்தின் பார்வையில் வரும் என்று கூறியுள்ளது. மேலும் இந்த சட்டம் அரசியல்சாசன சட்டம் 19(1)(ஜி) அடிப்படை உரிமைக்கு புறம்பானது அல்ல என்றும் உச்சநீதிமன்றம் சீனிவாசா தொழிலகம் எதிர் மத்திய அரசு (AIR 1981, 504 SC) என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது. ஜஸ்டிஸ் கிருஷ்ண ஐயர் அவர்கள் இந்த தீர்ப்பில் தனக்கே உரித்த நடையில் “ஒளியில் மாயும் விட்டில் பூச்சியை காப்பாற்ற ஒரே வழி அழிக்கும் ஒளியை ஒழிப்பது ஒன்றுதான்” என்று கூறியுள்ளார் !
தமிழ்நாட்டில் அமலில் உள்ள முதலீட்டார்கள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த சட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.
இந்தியாவில் எல்லா மாநிலங்கள் சேர்த்து ஆண்டொன்றிற்கு சராசரி 90,000 மோசடி வழக்குகள் பதிவாகின்றன. இதில் 72 சதவிகித வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகின்றன. ஆனால் 2007ம் ஆண்டில் 25.6 சதவிகித வழங்குகள் தான் தண்டனையில் முடிந்துள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 42 சதவிகித மற்ற வழக்குகள் வெற்றிகரமாக முடிக்கப்படும் நிலையில் மோசடி வழக்குகள் சரியாக புலனாய்வு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்க முடியாது. மேலும் பணம் படைத்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் திறமையான வழக்காடுதல் மூலம் தப்பித்து விடுகின்றனர் என்பதும் உண்மை. காவல் துறைக்கு புலனாய்வுத் திறனோடு பணம் இழந்த ஏழை முதலீட்டாளர்களின் நம்பிக்கை, ஆதரவு, ஒன்றே பக்கபலம்.
பொருளாதார குற்றங்களில் புலன் விசாரணை கடினமானது. தமிழக பொருளாதார குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பாக செயல்பட்டு 2007, 2008-09 ஆண்டுகளில் சுமார் 170 கோடி ரூபாய் மீட்டு சாதனை படைத்துள்ளது. இம்மாதிரியான வழக்குகளில் ஒப்பந்த மீறலும் இருப்பதால் இவை சிவில் வழக்குகள் என்றும் குற்றவியல் வழக்குகள் முறையில் விசாரிக்க முடியாது என்ற வாதமும் இருக்கிறது. ஒரு சிறிய திரைதான் கிரிமினல் வழக்குகளை மறைத்து சிவில் வழங்குகளாக காண்பிக்கும். தீர்க்கமாக விசாரித்து அப்பாவி மக்களுக்கு உதவி செய்வது காவல்துறையின் பொறுப்பு. மோசடி நிறுவனகள் பற்றி தகவல் சேகரித்து தடுப்பு நடவடிக்கை முலம் முதலீட்டளர்களை பாதுகாப்பதும் காவல்துறையில் கடமை.
சமுதாயத்திற்கு விரோதமாக தனிமனிதன் பணம் சம்பாதித்து தழைக்கமுடியாது. சமுதாயம் நன்றாக இருந்தால் தான் ஈட்டிய பொருள் நிலைக்கும். மனம் ஆழமானது என்றாலும் சஞ்சலம் மிகுந்தது. பாதாளம் பாயும் பணம் மனதை எளிதாக ஆட்கொண்டுவிடும். மனிதன் நோக மனிதன் பார்க்கும் பார்வையால் தான் இத்தகைய மோசடிகள் நீகழ்கின்றன. உழைக்காமல் பணம் சம்பதிக்க முடியும் என்ற மக்களின் பேராசைதான் ஏமாற்றுபவர்களுக்கு மூலதனமாக அமைகிறது. உழைத்து சம்பாதித்தால் உடம்பில் ஒட்டும் இலவசமாக சுலபத்தில் கிடைக்கும் என்பது மாயை. அந்த சபலத்திற்க்கு இடம் கொடுப்பது அழிவுக்கு வழி. அத்தகைய பொருள் பாதாளம் பாய்ந்து மறைந்து விடும்.


This Article published in Dinamani Newspaper on 03.10.2009

Thursday, October 8, 2009

ஆல் இந்திய ரேடியோ - தமிழ்சுவை

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதானது” எங்கும் காணோம் என்றார் பன்மொழி புலமைப் பெற்ற மகாகவி பாரதி. தொன்மையான உயர்ந்த கோட்பாடுகள் மற்றும் கவின்மிகு காலாச்சாரத்தின் வெளிப்பாடு தமிழ்மொழி. “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற பரந்த மனப்பான்மை தமிழருக்கு உண்டு. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பல மேடைகளில் முழங்க கேட்டிடுக்கிறோம். கணியன் பூங்குன்றனாரின் முழுப்பாடல் தமிழரின் உயர்ந்த சிந்தனையும், வாழ்க்கை தத்துவத்தையும் விளக்குகின்றது.
யாதும் ஊரே; யாவரும் கேளீர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியப்பதும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் ஓர் குலம் என்று உலகம் ஒன்றே அது நன்றே என்ற உயர்ந்த சிந்தனையை 2000 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டிருந்தவர்கள் தமிழர்கள்.
தீயது தீயவை பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என்றார் வள்ளுவர். அந்த தீயது நமது செயலின் வினையே.
நன்மை உண்டாவதும் நமது நற்செயலின் விளைவே என்பதை ‘தீதும் நன்றும் பிறர்தரவாரா’ என்று உணர்த்துகிறார்.
அத்தகைய தீயவை கண்டு வருந்துதலும் நன்மையில் மகிழ்ச்சியடைவது அர்த்தமற்றது. இவ்வுலகில் உண்டாகும் ஒவ்வொரு உயிரும் முடிவில் அழியப்போகிறது. பிறப்பும் இறப்பும் சுழன்று வருகிறது. வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிப்பதோடு பற்றற்று வாழ்தலும் சாவைக் கண்டு அஞ்சாது அதை ஏற்கும் பக்குவமும் வேண்டும். ஏனெனில் எவ்வாறு ஆறு, மலை, காடு மேடு பள்ளம் பாய்ந்து முடிவில் கடலை அடைகிறதோ அவ்வாறு உயிர்நிலையும் ஒருநிலைப்படும் ஆன்மாவிற்கு அழிவில்லை.
இதனை நன்கு உணர்ந்து ஆற்றல் படைத்தவரைப்பார்த்து வியப்பதும் தாழ்ந்த நிலையில் உள்ளோரை இகழ்வதும் முறையன்று. மாட்சியில் பெரியவரை வியந்தாலும் ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நம்மில் தாழ்ந்தவரை இகழ்வது பெருங்குற்றம் என்பதை இடித்துரைக்கின்றார். வாழ்க்கை கோட்பாட்டினையும் வாழ்வியல் தத்துவத்தையும் இதைவிட சிறப்பாக விவரிக்க முடியாது.
புறநூற்றின் இந்த ஒரு பாடல் ஒன்றே போதும் தமிழின் இனிமையை உணர.
தமிழோடு ஒன்றியது பக்தி இலக்கியம். தமிழ் மொழி அண்ட உலகங்களையும் ஆட்டிப்படைக்கும் சக்தியின் வடிவமாகவும் உணரப்படுகிறது.
"பின்னே நின்றென்னை பிறவிபெறுவது
முன்னே நன்றாக முயல்தவம் செய்திலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே”

தமிழை வளர்ப்பது தமிழ் தொண்டாற்றுவது இறைவனுக்கு பணி செய்வதாகும் என்று மிக அழகாக திருமூலர் திருமந்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

மூன்று பெரும் புலவர்கள் தோன்றியதால் தமிழ்நாடு பெருமையும் புகழும் பெறுகிறது என்கிறார் பாரதியார்

கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகாரமென்றோர்- மணி
யாரம் படைத்த தமிழ்நாடு
திருக்குறளுக்கு ஒப்பான நூல் உலகில் வேறெங்கும் இல்லை. 1330 அருங்குறள்களைக் கொண்ட திருக்குறளில் சமூக நோய்களுக்கு அருமருந்தாகவும், வாழ்வியலுக்கு வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது. உள்ளக்கிடக்கையில் எழும் கேள்விகளுக்கு விடைகள் விரவிய அரிய நூல் திருக்குறள்.
கல்வி கண்ணெனத்தகும் என்று தனிமனிதனுக்கு மட்டுமல்ல உலகத்திற்கு கல்விதான் கண்.
“கற்க கசடற” என்ற வள்ளுவர் “கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்று கல்வியின் நோக்கத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

கல்வி அகக்கண்ணால் கற்பது. கல்வி ஊற்று போன்றது.
மழலைச்சொல் கேட்டு மகிழ்ந்த பெற்றோர் தம்மகனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிகின்றனர். தாய் உணவூட்டி உடல்சார்ந்த போட்டிகளில் முந்தி இருக்க செய்கிறாள். தந்தை உணர்வூட்டி அறிவு சார்ந்த போட்டிகளில் வெற்றிபெறச் செய்கிறான்.
‘தம்மில் தம்மக்கள் அறிவுடமை’ கண்டு ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாய்’ ‘இவன் தந்தை என்னோற்றான் கொல்’ என்றும் உலகம் வியக்கிறது. இத்தனை உவகையும் பெருமையும் ‘உலகத்தோடு ஒட்டு ஒழுகல்’ எனும் உயர்பண்பு அவனிடம் உள்ளவரை தான். அது தான் கல்வி கற்றதின் பயன்.
‘உலகத்தோடு ஒட்ட ஒழுகார் கல்லார்’
மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். உரிமைகள் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி உலகெங்கும் இப்போது ஏற்பட்டுள்ளது. மனித நேயத்தின் அடிப்படை சித்தாந்தம் நாம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகின்றோமோ அவ்வாறு மற்றவர்களையும் மதிக்கவேண்டும். இந்தக் கருத்து சிறப்பாக குறளில் கூறப்பட்டுள்ளது. “சிறப்புஈனும் செல்வம் பெரினும் பிறர்க்கு
இன்னா செய்யாமை மாசற்றார் கோள்”
புகழும் பொருளும் பொருட்டல்ல பிறருக்கு தீங்கு இழைக்காமல் வாழ்வதே மாசற்றவர்களின் கொள்கை. இதனையே ஔவை
ஈதல் அறம் தீவினைவிட்டேல் பொருள் என்று தீயவை அற்று பணி செய்து ஈட்டும் பொருளே தூய்மையானது என்பதை எளிமையாக விளக்குகிறார்.
வலிமையான பொருளை சுருங்கச் செர்ல்லி விளங்க வைப்பதற்கு தமிழ் மொழியின் வளமையை எவ்வளவு அழகாக கையாண்டிருக்கிறார்கள் சான்றோர்கள் என்று வியக்காமல் இருக்க முடியாது.
இன்றைய உலகில் மனித குலத்திற்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருப்பது பயங்கரவாதம். மதவெறி எனும் மமதையும், இனவெறி, மொழிவெறி மற்றும் உலகத்தோடு ஒட்டு ஒழுகல் எனும் ஒப்புரவு கண்ணோட்டத்துக்கு எதிரான குறுகிய மனப்பாங்கும்தான் காரணம்.
கல்வி இல்லா நிலம் களர் நிலம், மனம் களர் மனம்.
களர் நிலம் கூட உப்பை விளைவிக்கிறது.
களர் மனம் வெறும் உப்பைக்கூட விளைவிப்பதில்லை – வெறுப்பைதான் விளைவிக்கிறது.
பழக்கம் வழக்கமாகி, வழக்கம் ஒழுக்கமாகி, ஒழுக்கம் கலாச்சாரமாக பரிமளிக்க செய்வது கல்வி.
பயிற்றுவிப்பது ஒவ்வொரு கல்வி பயின்றவரின் கடமை என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.
கல்வி இந்நாட்டில் கணக்காயர்களை, கவிஞரை, புலவரை, விஞ்ஞானிகளை வினளத்தது – ஆயினும் கற்றவர் கல்லாரிடத்தும், கல்வியைப் பரப்ப முயலவில்லை.
பாழிருள் விட்டு மீண்டவர் பிறரை மீட்கிலர்
கற்றவர் சிலர் கல்லாதவர் பலர்
என்னும் இழிவு நாட்டில் இருக்கலாம் என்பது கற்றவர் எண்ணம் போலும் எல்லாரும் இந்த நாட்டில் கற்றவர் எனும் நிலை இயற்றுதல் கற்றவர் பொறுப்பே.
கல்வி இருட்டிற்கு கலங்கரை விளக்கு.
யாவர்க்கும் வாக்குரிமை இருக்கும்.
இந்நாட்டில்
“யாவர்க்கும் கல்வி இருக்க வேண்டும்
கண்ணுளார் எண்ணிலார் என்பது கண்டும்
கண்ணுளார் கண்ணிலார் போல இருப்பதா?
கல்லாவறியர்க்கு கைப்பொருள் கல்வியே
இல்லை என்பது கல்வி இல்லாமையே
உடையவர் என்பவர் கல்வி உடையவரே”
என்னே பாவேந்தரின் சீரிய சிந்தனை- சமுதாய உணர்வு !
கல்வி கற்க வேண்டும் கற்பிக்க வேண்டும்
தமிழ் கல்வி வேண்டும் என்று போராடியவர் பாவேந்தர்.
தமிழக்கு மெருகூட்டும் உயிருட்டும் வடிவங்கள் ழ,ண,ன, ள
இதனை சரியாக உச்சரிக்காவிட்டால் பிழை கேட்க சகிக்காது.
இதையேதான் செந்தமிழும் நாப் பழக்கம் என்று கூறினாள் ஔவை.
ஒரு நாட்டுப்பாடலிலும் தமிழ் தேனாக வடிகிறது.
“மூங்கில் இலை மேலே
தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை
வாங்கும் கதிரோனே”
“துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து
இசை நீ தரமாட்டாயா” என்று யாழின் பெருமையை கூறுகிறார் பாரதிதாசன்.
தமிழ் கற்போம்.
தமிழை பிழையின்றி கற்போம்.
தேன்மதுரத் தமிழோசையை உலகெங்கும் பரப்பிடச் செய்வோம்.
இலக்கியம் என்பது ஒரு இலட்சியத்தை இலக்காக வைத்து புனையப்பட்ட காவியம். இராமனின் பெருமை பேச இராமாயணம் ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்பதை விளக்கும் இலக்கியமே சிலப்பதிகாரம். ஒவ்வொரு படைப்பாளியும் தனது படைப்பின் நோக்கத்தை வெளிப்படுத்த முயல்வான். நோக்கம் என்பது சாதாரண பார்வையைத் தாண்டியது. நங்கையும் நோக்கினாள் அண்ணலும் நோக்கினார் இது சாதாரண பார்வை அல்ல. ஆத்மார்த்தமான தீர்க்கமான பார்வை. ஒரு கவிஞனின் நோக்குதல் பார்வையைத்தாண்டி கவியுமை காண்பது. அந்த நோக்கத்திற்கு இலக்கு உண்டு. அது தான் இலட்சியம். அத்தகைய படைப்புதான் இலக்கியம்.
உலகக் காப்பியங்களில் ஒன்றாக கருதப்படுவது வால்மீகியின் இராமாயணம். அதனை தனது அறிவாற்றலாலும் கற்பனை வளத்தாலும் கம்பன் இராம சரிதத்தை தமிழில் அளித்தான். கோசல நாட்டின் மன்னன் தரசதனின் ஆட்சியை வர்ணிக்கிறான்.
வயிர வான் பூணணி மடங்கல் மொய்ம்பினான்
உயிரெலாம் தன்னுயிர் ஒப்ப ஓம்பலால்
செயிரிலா உலகினில், சென்று நின்று வாழ்
உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்.
எல்லா உயிர்களையும் தன் உயிர்போல்
கருதிக்காப்பவன் என்றும் குற்றமில்லாத
உயிர்களுக்கெல்லாம் பாதுகாவலன்
என்று தசரதனை புகழ்கிறான்.
இராமனின் எழில் தோற்றத்தை பார்ப்பவர் எவராலும் முழுமையாக கொள்ளமுடியாது. அத்தகைய கண்கொளா தோற்றம் என்பதை
தோள் கொண்டார் தோளே கண்டார்,
தாள் கண்டார் தாளே கண்டார், என்றும்
வாள் கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியில் கண்டார் என்று நம்மை வியக்க வைக்கிறார்.
நம்பியைக்காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும் என்று
சீதைப்பிராட்டின் நிலையை நயம்பட கூறுகின்றார்.
தமிழ் தந்தை கி.ஆ.பெ அவர்கள் இதற்கு சீதையைக் கண்ட இராமனுக்கு அதே நிலை - இதனை

நம்பியைக்காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்
நம்பிக்கும் நங்கையைக்காணுந்தோறும் அந்ததேயாம் என்று இராமனுக்கு ஏற்றவள் சீதை என்று உறுதிபடுத்துகிறார்.
ஒரு நாட்டில் பாதுகாப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை கம்பர் அழகாக விளக்குகின்றார்.
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
தீண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரை இலாமையால்
வெண்மை இல்லை, பல் கேள்வி ஓங்கலால்
கோசல நாட்டில் வறுமைஇல்லை. படைவீரர்களின் ஆற்றலுக்கும் வீரத்திற்கும் அஞ்சி எதிர்கொள்ள பகைவர் இல்லை. பொய்யுரை இல்லை மக்களின் எவ்வுரையும் மெய்யுரையே என்று வர்ணிக்கிறார். காவலர் திறம்பட பணிகள் செய்தால் குற்றம் புரிவதற்கு அஞ்சுவர் என்பது எவ்வளவு உண்மை ! அத்தகைய திண்மையை போற்றுகிறார் கம்பர்.
மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார்.
கண்துஞ்சார்
எவ்வவர் தீமையும் மேற்கொள்ளார்
- செவ்வி
அருமையும் பாரார்
அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்.
என்ற பதினென்கீழ் கணக்குப் பாடல்
காவல்துறைக்கு பொருத்தமான பாடல்
தமிழ் இலக்கியம் ஊற்று போன்றது. படிக்க படிக்க தெவிட்டாதது.

தமிழர்க்கு புத்துணர்வு ஊட்டியவர் பாரதி. அவரது சொல்லாட்சியும் கவிநயமும் விவரிக்க முடியாதது. முழமையாக அனுபவிக்க வேண்டியது. பாரதி வங்காளத்தில் பிறந்திருந்தால் நோபல் பரிசு அவருக்குத் தான் கிடைத்திருக்கும் என்பார் கவிஞர் கண்ணதாசன். பாப்பா பாட்டு, குயில் பாட்டு தேசபக்திப் பாடல்கள் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் உறக்கத்தில் இருந்த சமுதாயத்தை தட்டி எழுப்பவும் முனைந்தார்.
அச்சம் தவிர் ஆண்மை தவறேல் ரௌத்திரம் பழகு வல்லமை தாராயோ என்று இளைஞர்களுக்கு உத்வேகத்தை ஊட்டினார். நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் என்று உறைந்துள் ஆற்றல் வெளிவர வேண்டும் என்று முழுங்கினார்.
நெட்டை மரங்களாக நின்று புலம்பினர் பெட்டைப் புலம்பல் பிறர்க்கு துணையாகுமோ என்று மடமையில் மூழ்கிய மாந்தரை நொந்து வெதும்பினார்.
அச்சமில்லா வாழ்க்கைக்கு வழிகாட்டியவர் பாரதி அச்சம் ஒன்றுதான் முன்னேற்றத்திற்கு தடை.
அச்சம் இல்லை அமுங்குதல் இல்லை
நடுங்குதல் இல்லை நாணுதல் இல்லை
பாவம் இல்லை பதுங்குதல் இல்லை
எது நேரினும் இடர்படமாட்டோம்
அண்டம் சிறிதானாலும் அஞ்சமாட்டோம்
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்
எங்கும் அங்சோம் எப்போதும் அஞ்சோம்
இதைப்படித்து உணர்ந்து துணிவு பெறாதவர் இருக்க முடியாது.
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்தில் குஞ்சொன்று மூப்பென்று முண்டோ
எவ்வளவு அழகாக வீரத்திற்கு வயதில்லை என்று Moral Courage என்ற மனவலிமையை எவ்வளவு அழகாக சொல்லுகிறார்.
வாடியப் பயிரைக் கண்டு வாடினேன் என்பது சமய சன்மார்க்க தந்தை வள்ளலார் வாக்கு. இதற்கு ஆழமான அர்த்தங்கள் பல உண்டு. பயிர் வாடியதால் மக்களுக்கு பயனில்லாமல் போகுமே, பயிர் வாடியதால் மக்கள் பசியில் வாடவேண்டும் என்ற வருத்தம். பயிர் வாடுவதும் நம்மை பாதிக்க வேண்டும். அத்தகைய மனித நேயம் வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்து வெளிப்படுகிறது. பாரதியாரைப் போல எளிய நடையில் மக்களுக்கு தமிழை எடுத்து சென்றவர் வள்ளலார். எவ்வாறு வாழ்க்கையில் நற்பண்புகள் வளர்க்க வேண்டும் என்பதை சாமானியனுக்கும் புரியும் வகையில் நமக்கு அளித்துள்ளார்.
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும்
பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும்
பொய்மைபேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வுதான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத் துள்வளர்
தலம் ஓங்கும் கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே !
இதனை தினமும் படித்தால் நிச்சயம் தெளிவு பிறக்கும் பிழையில்லா வாழ்க்கையால் நிம்மதி கிடைக்கும்.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று ஒவ்வொரு நாளையும் பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் என்று போற்றி வாழ்ந்தார் பாரதி.
சென்றதை சிந்திக்காதே வருவதை எதிர்க்கொள் சந்தோஷமாக வாழ கற்றுக் கொள் என்பதை
சென்றதினி மீளாது மூடரே நீவிர்
எப்போதும் சென்றதையே
சிந்தை செய்து கொன்றழிக்கும்
கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்
சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.


இன்று புதிதாய் பிறந்தோம் என்ற
எண்ணமதை திண்ணமுற இசைத்து
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்.
தீமையெல்லாம் அழிந்து போய் திரும்புவாரா
என்று யதார்த்தத்தை தமிழில் குழைத்து கொடுத்துள்ளார்.
தமிழை ஆராதித்த பாரதியும், பாரதிதாசனும்
தமிழுக்கு அமுதென்று பேர்,
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
என்று போற்றினர்.
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழ்
வாழிய பாரதி மணித் திருநாடு
ஆல் இந்திய ரேடியோ - தமிழ்சுவை 12.10.2009 முதல் 16.10.2009, காலை 07.30 மணிக்கு.