Saturday, June 6, 2009

வற்றுமா குற்றம்?

தினெட்டாம் நூற்றாண்டின் ஆங்கில எழுத்தாளர் ஹென்றி ஃபீல்டிங் ‘குற்ற நிகழவுகளுக்கான காரணங்களை களையெடு’ என்ற அறைகூவல் விடுத்தார்.

சமீபத்தில் நிதின் குமாரி என்ற விமானப்பணிப் பெண் சென்னை நொளம்பூர் குடியிருப்புக் பகுதியில் கோரமான முறையில் கொல்லபட்டது எல்வோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கும். பீஹாரிலிருந்து வேலை நிமித்தமாக சென்னையில் தங்கி தன்னம்பிக்கையோடு வாழ்ந்த இப்பெண்ணுக்கு ஏன் இந்த முடிவு? தனியாக நிர்பந்தத்தின் பேரில் வாழும் பெண்கள் அதுவும் பார்வையாக இருக்கக்கூடிய பெண்கள் என்றாலே அவதூறு சொல்வதற்கு கூசாத நபர்கள் சமுதாயத்தில் இருக்கிறார்கள். முதலில் சந்தேக மரணம் என்ற செய்தியில் பல ஆண்களோடு சகவாசம் இருந்தது, போதைப் பொருட்கள் உட்கொள்ளும் பழக்கம் உடையவர் என்று அவளைப் பற்றி அபாண்டமாக கூறப்பட்டது. புலன் விசாரணையில் அதே பகுதியில் வாழும் ஒரு வாலிபன் அந்த பெண்ணின் செல்போன் திருடுவதற்காக இந்த கோரக் கொலையை செய்தான் என்பது பல வியாக்கியானங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. திறம்பட விசாரணை செய்து குற்றவாளியை துரிதமாகக் கண்டு பிடித்ததற்கு சென்னை காவல்துறைக்கு சபாஷ் போடலாம்.

நிதின் குமாரியின் கொலை பல பாடங்களை நமக்குப் புகட்டுகிறது. வீட்டுக்கு கட்டுப்படாத இளைஞர்கள், அவர்களை கட்டுப்படுத்தத் தவறிய பெரியவர்களால் சமுதாயத்திற்கு எத்தனை பாதிப்பு என்பது முக்கியமான பாடம். அந்த குற்றவாளி பல சில்லறைத் திருடுகளில் ஈடுபட்டுள்ளான் என்பதைப் பற்றிய தகவல் சரக காவல் நிலையம் சேகரித்திருக்க வேண்டும். தனியாக வாழும் பெண்கள் அடிப்படை பாதுகாப்பு நெறிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது மற்றொரு பாடம். தெருவில் நடக்கும் பொழுதோ, வாகனம் ஓட்டும் பொழுதோ செல்போன் உபயோகிக்க கூடாது என்று காவல் துறை பல முறை எச்சரித்து வருகிறது. நடந்து கொண்டே செல்போன் பேசுபவர்களிடமிருந்து பலமுறை சமுக விரோதிகள் செல்போன்களை பறித்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அப்படி போன் பேச அவசியம் ஏற்பட்டாலும் நின்று இரண்டு வார்த்தை பேசிவிட்டு இருப்பிடம் சென்று பேசுவது பாதுகாப்பானது. எல்லோருடைய கண்படும்படி விலையுயர்ந்த செல்போனை அந்தப் பெண் உபயோகித்தது கயவன் கண்களிலும் பட்டு விபரீத முடிவு ஏற்பட்டது. அசிரத்தையாலும் அசட்டையாலும் ஒரு இளம்பெண்ணின் உயிர் பறிபோனது.

குற்றங்கள் ஏன் நிகழ்கின்றன, சரியான தடுப்பு முறைகள் என்ன, தனிமனிதனையும் திட்டமிட்டுக் குற்றப் புரிபவர்களையும் எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்பது சமுதாய வல்லுனர்களால் பல நூற்றாண்டுகளாக ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. காலப்போக்கிற்கேற்ப சமுதாய வளர்ச்சியைப் பொறுத்து குற்றப்பரிமாணங்களும் மாறிக்கொண்டு வருகின்றனவே ஒழிய குற்றம் ஏன் நடக்கிறது என்பதற்கு விடை கிடைக்காமல் இருக்கிறது.

டேவிட் ஆபிராஹம்ஸன் என்ற சமூகவியல் மேதை குற்ற நடப்பிற்கு காரணங்களை விகிதாச்சார முறையில் துல்லியமாக கணக்கிட முற்பட்டார். தனிமனிதனின் உள்ளக்குமுறல்கள், மன அழுத்தம் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலை இதனை சேர்த்து, சமுதாயக் கட்டுப்பாடு, தனிமனிதனின் நல்லியல்புகளின் எதிர்ப்பு சக்தியால் வகுத்தால் குற்றத்தின் பரிமாணம் புலப்படும் என்கிறார். அதாவது சமுதாயக் கட்டுப்பாடும், தனிமனித நற்பண்புகள் மேலோங்குதலும், குற்ற நிகழ்வுகளை குறையச் செய்யும். அதே சமயம் சமுதாயத்தில் ரம்யமான சூழல் உருவானால் தனி மனித மன அழுத்தம் குறையும். சுயக் கட்டுப்பாடு வளரும் நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலையும் எதிர்மறை விளைவுகளுக்கு வித்திடாது. இத்தகைய அடித்தளம்தான் சீர்மிகு குற்றமற்ற சமுதாயம் உருவாக வழிவகை செய்யும்.

தனிப்பட்ட அபிப்பிராயங்கள் ஒத்து இருந்தாலும், பொதுநலன் மேலோங்கினால்தான் சமுதாயத்தில் அமைதியான சூழல் உருவாகும். குடும்ப வாழ்க்கை, பள்ளிகள், கல்லூரிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், கேளிக்கை மற்றும் விளையாட்டு மையங்கள் போன்ற சமுதாயத்தின் நிலையான ஆதாரங்களின் கூட்டமைப்பின் மூலம் மனிதனிடையே நல்லிணக்கத்தைத் பரவச் செய்ய வேண்டும். தனி மனிதன் சுய கட்டுப்பாடு, நற்பண்புகள் பயிற்றுவித்தல் போன்றவை சமுதாய கூட்டமைப்பில் நடைபெற்றதால் தான் நிலைத்து நிற்கும்.

சமுதாயத்தில் அமைதி நிலை நாட்டுதலுக்கு மூன்று கட்ட நடவடிக்கை அவசியம் ஆகிறது. முதல் கட்ட நடவடிக்கையில் எத்தகைய மக்கள் குற்றவலையில் சிக்கக்கூடும் என்பதை கணித்து அவர்களுக்கு உதவிக்கரம் கொடுத்து சீரான பாதையில் எடுத்துச் செல்லுதல். இந்த நடவடிக்கையின் போது குற்றம் இன்னும் தலைதூக்கவில்லை, இந்த தருணத்தில் குற்றப்பாதையை தவிர்த்து நல்வழிகளில் இட்டுச் செல்லும் முயற்சி முக்கியமானது.

இரண்டாவது கட்டம் தண்டனையுற்றவர்களை சிறை இல்லங்களில் நல்வழிப்படுத்தும் முயற்சி. இதில் சிறைத்துறைக் களப்பணியாளர்கள், நன்னடத்தை பிரிவினர் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் இணைந்து குற்றம் புரிந்தவர்களுக்கு மனமாற்றம் ஏற்படுத்தி அவர்களுக்குள் உள்ள அசூயயை நீக்கி நற்பாதையை தெரிவு செய்ய உதவி நல்க வேண்டும்.

மூன்றாவது கட்டம் தண்டிக்கப்பட்டவர்கள் சிறையிலிருந்து வெளி வரும்பொழுது அவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பது, சமுதாயத்தோடு இணைவதற்கு ஏற்பாடு செய்வது. ஆக இந்த மூன்று நிலைகளிலும் தீர்க்கமான அணுகுமுறையோடு செயல்படவேண்டியது இன்றியமையாதது.

சமுதாயக்கட்டுப்பாட்டுக்குள் குற்றத் தடுப்பு முயற்சிகள் பிரதானமாகக் கருதப்படுகிறது. அந்தந்தப்பகுதி மக்கள் ஆரோக்கியத்துடன் மன உளைச்சலின்றி வாழ்க்கையை நடத்துவதற்க்கு ஏற்ற வகையில் நன்மை பயக்கக் கூடிய சூழல் உருவாக்கிட வேண்டும். குடியிருப்பு பகுதி அருகில் பள்ளிகள், எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் உடல் ஆரோக்கியத்திற்கான விளையாட்டு மையங்கள், சந்தோஷத்திற்கு மக்கள் கூடி உறவாடுவதற்கான கேளிக்கை மையங்கள் ஆனந்தமான சூழலை உருவாக்குவதற்கு அத்தியாவசியமானவை. 1884-ம் வருடம் இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரக் கிழக்குப்பகுதியில் முதலில் இத்தகைய திட்டம் விவாதிக்கப்பட்டு செயல் முறைக்கு வந்தது. அமெரிக்காவில் சிக்காகோ நகரில் மேலே கூறிய அடிப்படைக் கருத்தினை விரிவாக சமுதாயப் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. ஜப்பான் நாட்டில் சுமார் 40,000 தன்னார்வு தொண்டர்கள் இலவசமாக நன்னடதையாளர்களாக பணி புரிகிறார்கள். தாம் வசிக்கும் பகுதியில் குற்றத்தடுப்பு முறைகளை செயல்படுத்துகின்றனர்

தமிழ்நாட்டிலும் பாய்ஸ் க்ளப் என்று சிறார் மன்றங்கள் 1960-ல் இருந்து பல முக்கிய நகரங்களில் தோற்றுவிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொது மக்கள் நலனுக்காக சமீபத்தில் சென்னையில் அதுவும் வடசென்னையில் நிறுவப்பட்ட விளையாட்டு மையங்கள், கண்ணுக்கினிய பூங்காக்கள் வரவேற்கத்தக்கது.
மும்பாய், தில்லி, கொல்கத்தா, சென்னை போன்ற மாநகரங்களில் வேலைத் தேடி நகரத்திற்கு குடிபெயரும் மக்கள் அதிகரிக்கும்பொழுது புதிதாக குடிசைப் பகுதிகள் உருவாகுகின்றன. மும்பாயில் தாராவி, கொல்கத்தாவில் துறைமுகப் பகுதி என்று லட்சக்கணக்கான குடியிருப்புக்களைக் கொண்ட குடிசைப்பகுதிகள் உள்ளன. ஆனால் சென்னையில் ஒரே இடம் என்றில்லாமல் சுமார் 900 குடிசைப் பகுதிகள் நகரில் பரவலாக அமைந்துள்ளன. இது தவிர கடற்கரையொட்டி சுமார் 50 மீனவர் குடியிருப்பு பகுதிகள். இந்தப் பகுதிகளில் இயங்கும் “சிறார் மன்றங்கள்” அங்கு வாழும் இளைஞர்களுக்கு விளையாட்டு மையமாகவும் நல்லியல்புகளைப் புகட்டும் இடமாக காவல் துறையால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது, தமழகத்தில் 125 சிறார் மையங்கள் அரசு நிதி உதவியோடு இயங்குகிறது. இந்த மன்றங்கள் சிறப்பாக அமைந்திட தன்னார்வு தொண்டு நிறுவானங்களும் உதவுகின்றன. சென்னை மாநகரில் மட்டும் சுமார் 7 வயதில்ருந்து 17 வயதிற்குப்பட்ட சுமார் 7000 சிறார்கள் பயனடைந்து வருகிறார்கள்.

ஆந்திர மாநிலத்திலும் குற்றங்களில் ஈடுப்படக்கூடியவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு மாற்று வழி அமைக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்தகைய நலன் பேணும் திட்டங்களில் தனிமனிதன் குற்றங்களில் ஈடுபடாமல் தடுப்பதற்கும் கெடுதலை எதிர்க்கும் சக்தி வளர்வதற்கும் உதவும்.

குற்றவாளிகள் தண்டனைப் பெற்ற பிறகு அவர்களை திருத்தும் பணி சிறை இல்லங்களில் நன்னடத்தைப் பிரிவு அலுவலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து சிறைக் களப்பணியாளர்கள் நிறைவு செய்ய வேண்டும். சிறை என்றாலே எல்லோருக்கும் ஒரு அச்சம் விளைவதற்குக் காரணம் சிறை கொடுமைப் படுத்தும் இடம் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பது தான். சிறையிலிடப்படுவதுதான் தண்டனையே தவிர அதற்கு மேல் பிராயச்சித்தமாக தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் தவறானது. அதற்கு மாறாக சிறை இல்லவாசிகளின் உயிர், கண்ணியம், சமத்துவம் ஆகிய ஆதார மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

சிறையிலுள்ளவர்களை கண்ணியமாக நடத்துவது சமுதாயத்தின் உயரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்டிருக்கும் நிலையில் இல்லவாசிகளை நல்வழிப்படுத்தும் பணி மிகக் கடினமானது. ஆதலால் தான் மேலைநாடுகளில் சிறை அடைப்பு என்றில்லாமல் கட்டாய சமுதாயப்பணி மாற்று தண்டனையாக கொடுக்கப்படுகிறது. சிறு குற்றங்களுக்காக சிறைவாசம் கூடாது என்ற அடிப்படையில் இங்கிலாந்து நாட்டில் மூன்று மாதங்களுக்கு குறைவாக சிறை தண்டனை 12,000-மாக 1960 வருடத்தில் இருந்தது, படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது ஆயிரத்துக்குக் கீழ்தான் சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகின்றன. இது நீதிமன்ற அதிகாரத்திற்குட்பட்டது. இத்தகைய சமுதாயமேவிய பணிகளை மாற்று தண்டனையாக வழங்குதல் நடைமுறைப்படுத்த வேண்டும்.

சிறைக்கதவு அடைக்கும் பொழுது ஏற்படும் விரக்தியைவிட சிறைக்கதவு திறக்கும்பொழுது வெளிவரும் நபருக்கு மனவேதனை அதிகமாகிறது என்பது உண்மை. சிறைக்கு செல்வதே வாடிக்கையாகக் கொண்டவர்களுக்கு இது பொருந்தாது. அவர்களுக்கு சிறைவாசம் பழகிவிடுகிறது, உணர்ச்சிகளும் மரத்து விடுகின்றன. ஆனால் சிறைக்கு வரும் பெரும்பாலானவர்கள் சந்தர்ப்ப வசத்தால் சிக்கியவர்கள். அவர்கள் சமுதாயத்தோடு இணைவதற்கும், மாற்று வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதற்கும் மிக கவனமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

விடுதலை பெற்று வருபவருக்கு முதல் பிரச்சனை பொருளாதாரமின்றி எவ்வாறு வாழ்வை துவங்குவது என்பதுதான். மற்றது சமுதாயம் தன்னை புறக்கணித்து விடும் என்ற பயம். குற்றம் புரிந்தவர்கள் சமுதாயக் கட்டுப்பாட்டிலிருந்து விலகியதால் ஊனமுற்றவர்கள் என்று கருதி, ஆனால் இப்போது நல்வழியில் வந்துள்ளார்கள் என்று அவர்களை சகஜ நிலைக்கு கொண்டுவர சமுதாயம் முன்வர வேண்டும். அவர்கள் மீண்டும் குற்றவழிப்பாதையில் செல்லாமல் இருப்பதற்கு உதவிக்கரம் கொடுக்கப்பட வேண்டும்.

சிறையிலிருந்து வெளி வருபவர்களுக்கு மாற்றுவழி கொடுப்பதற்கு சென்னை உட்பட 16 மாவட்டங்களில் உதவி மையங்கள் உள்ளன. பல தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் இந்த கூட்டுறவு மையங்களோடு இணைந்து செயல்படுகின்றன.

குற்றங்கள் நடவாமல் தடுப்பதில்தான் விவேகம் இருக்கிறது. சுய உந்துதலோடு காவல்துறையினர் செயல்பட்டால் குற்றங்கள் நடவாமல் தடுக்க முடியும். நிதின் குமாரியின் கொலையிலும் குற்றவாளி பராரியாக திரிந்து கொண்டிருந்தவன், சிறு குற்றங்களில் ஈடுபட்டவன். தக்க தருணத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் பெரிய குற்றம் நிகழாமல் தடுத்திருக்கலாம். செய்ததைவிட செய்யாமல் ஏன் சந்தர்ப்பத்தை நழுவ விட்டோம் என்ற ஏக்கம் தான் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் கண்கூடாகத் தெரிகிறது.

வற்றுமா குற்றம் என்ற கேள்விக்கு விடை நமது கையில் இருக்கிறது. ஒருங்கிணைந்து செயல்பட்டால் குற்றம் பற்றில்லாமல் வற்றுவது உறுதி.

இந்த கட்டுரை தினமணி நாளிதழில் 06.06.2009 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Monday, May 25, 2009

சிலிர்க்க வைக்கும் சிக்கிம்







இந்திய துணை கண்டம் என்று நமது நாட்டைப் பற்றி குறிப்பிடுவது பொருத்தமானதொன்று. ஏனெனில் பலதரப்பட்ட மக்கள், மாறுபட்ட சீதோஷ்ணநிலை, விதவிதமான தாவர வகைகள், விலங்கினங்கள், கலாச்சாரப் பரிமாணங்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் காணமுடிகிறது. இந்தியா எவ்வளவு மாநிலங்கள் உள்ளடங்கியது என்று கேட்டால் பலருக்கு உடனடியாக பதில் சொல்ல முடியாது. அதிலும் வடகிழக்கு மாநிலங்கள் பற்றிய தகவல்கள் பலருக்குத் தெரிவதில்லை. சிக்கிம் நமது நாட்டின் எல்லைக்குட்பட்டதா என்று ஐயமுறுபுவர்கள் உள்ளனர் என்பது ஆச்சிரியத்திற்குரியது.




1975-ம் ஆண்டு சிக்கிம் நமது நாட்டின் இருபத்திரண்டாவது மாநிலமாக இணைக்கப்பட்டது. 7110 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடைய இம்மாநிலம் கோவாவிற்கு அடுத்து சிறிய மாநிலம். ஜனத்தொகை 5 லட்சத்து நாற்பதாயிரம். வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து, மிசோராம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிமும் வடகிழக்கு மாநிலமாக மத்திய அரசு எடுத்துக் கொண்டு சலுகைகள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசு அலுவலர்களுக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு விடுமுறை பயணச் சலுகை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அளிக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் சொந்த ஊர் செல்வதற்கு பதிலாக வடகிழக்கு மாநிலம் ஏதாவது ஒன்றிற்கு செல்லலாம் என்று மத்திய அரசு சமீபத்தில் ஒரு ஆணை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த ஆணை அடுத்த இரண்டு வருடங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆணையில் மத்திய அரசு ஊழியர்கள் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு. அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மூலம் உள்ளூர் மக்களுக்கு வருமானத்திற்கு வழிவகை.




கொல்கத்தா நகரம் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு சந்திப்பு மையம். சிக்கிம் மேற்கு வங்காளத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. சிலிகுரி, புதிய ஜல்பாய்குரி பிரதான ரயில் சந்திப்புகள். சிலிகுரி டவுனிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாக்டோக்ரா கடைசி விமானதளம். இது இந்திய விமானப் படையின் முக்கியமான தளம். சிலிகுரியிலிருந்து சுமார் நாலரை மணி சாலைப் பயணத்திற்குப் பிறகு சிக்கிம் தலைநகரான கேங்டாக்கை அடையலாம்.




மலைப்பாதை டீஸ்ட் நதியின் கரையோரமாக செல்கிறது. பசுமையான அடர்ந்த காடுகள் கண்ணுக்கினிய காட்சிகள். பிரம்மாண்டமான மலைப்பகுதி, மலையிலிருந்து வேகமாக உருண்டோடிவரும் டீஸ்ட் நதி மனதுக்கு ஆனந்தத்தை அளிக்கும்.




சிக்கிம் மாநிலம் நான்கு மாவட்டங்களைக் கொண்டது. மாநிலம் மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு என்று நான்கு திசைகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. எல்லா மாநிலங்களுக்கு உண்டான அரசு அமைப்புகள் உள்ளன. சிக்கிம் சட்டசபையில் 32 உறுப்பினர்கள். தலைமைச் செயலகம், காவல், பொதுப்பணி, கல்வி முதலிய எல்லாத் துறைகளும் இயங்குகின்றன. சிக்கிமின் பெருவாரியான பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பராமரிக்கப்படுகிறது. மக்கள் ஜனத்தொகை சதுர கிலோ மீட்டர் கணக்கில் மிகக் குறைவு. விதிக்கப்பட்ட சில இடங்களில்தான் கட்டிடங்கள் கட்டலாம். வெளிமாநிலத்தவர் இங்கு இடங்கள் வாங்க இயலாது.




சிக்கிம் மாநிலம் நேபாளம், சைனா, பூட்டான் ஆகிய நாடுகளின் எல்லையைக் கொண்டது. இது தவிர மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங் மலைப்பிரதேசம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநில எல்லையும் சிக்கிம் எல்லையில் அடங்கும். நமது நாட்டின் பாதுகாப்பு என்ற நிலையில் பார்த்தால் சிக்கிம் ஒரு முக்கியமான பகுதி என்பது தெளிவு.
சிக்கிம் மாநிலத்தில் பழங்குடி மக்கள் “லெப்சா” இனத்தைச் சேர்ந்தவர். ரம்யமான தமது பிரதேசத்தை “ நயி மேயில்” புதுக்கருக்கு அழியாத இடம் என்று வர்ணிக்கின்றனர். வானத்தைக் கிழித்துக் கொண்டு கம்பீரமாக நிற்கும் வெண்பனி சூழ்ந்த ‘கஞ்சன்சங்கா’ மலைத்தொடர் கண்கொள்ளாக் காட்சி. சுமார் 8596 மீட்டர் உயரத்தில் நிற்கும் இந்த மலைத்தொடர் உலகத்தில் மூன்றாவது உயரமான மலை என்ற பெருமை கொண்டது. புனிதமான மலை என்று சிக்கிம் மக்களால் கருதப்படுவதாலோ என்னவோ இதன் உச்சியை எவரும் முழுமையாக அடைய முடியவில்லை. 5000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கோச்சாலா கணவாய் மலைத்தொடரை நடை பயணமாய் காண விரும்புபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். எங்கும் கண்டிராத தாவர வகைகளையும், அழகிய நீர்வீழ்ச்சிகளயும் காணமுடியும்.




சரித்திரப் புகழ் வாய்ந்த 14,200 அடி உயரத்தில் அமைந்துள்ள “நாதுலா கணவாய்” கேங்டாக்கிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. போய் சேர்வதற்கு மூன்று மணி நேரம் பிடிக்கும். இப்போது சைனா கட்டுப்பாட்டில் உள்ள திபேத்திய நாடு அதற்கப்பால் அமைந்துள்ளது. நமது நாதுலா எல்லைப் பகுதிக்குச் செல்ல சிக்கிம் காவல்துறை அனுமதிச் சீட்டு பெற வேண்டும். இந்திய ராணுவ வீரர்களும், சைனா நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் எதிரும் புதிருமாக நிற்கும் இடம். சைனா ராணுவ வீரர்கள் சிரித்துக் கொண்டு சகஜமாக இந்திய யாத்ரிகர்களை புகைப்படம் எடுத்தனர். ஆனால் நமது எல்லையில் கட்டுப்பாடும் கெடுபிடியும் அதிகம். பீஹார் ரெஜிமெண்ட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் அங்கு எல்லை பாதுகாப்பு பணியில் இருந்தனர். நமது மக்களை ஏன் கனிவோடு நடத்தக்கூடாது ஏன் இந்தக்கடுகடுப்பு என்று தோன்றியது. சீருடை அணிந்தால், விறைப்பாக நடந்து கொண்டால் தான் தமது அதிகாரம் மதிக்கப்படும் என்ற பாதுகாப்புப் பணியில் உள்ளவர்களின் நினைப்பு எப்போது மாறுமோ? புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. சில நாட்களில் நமது ராணுவத்தினர் அனுமதிப்பார்கள் என்றார்கள்.
1958-ம் வருடம் பாரதப் பிரதமர் ஜஹர்லால் நேரு அவர்கள் நாதுலா எல்லைக்கு வந்ததற்க்கு அடையாளமாக ஒரு நினைவுச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அப்போது சிக்கிம் இந்திய பாதுகாப்புக்கு உட்பட்ட நாடாக இருந்தது. சைனா எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்கள் தங்குவதற்க்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. உயர்வான பகுதியில் கண்காணிப்பு பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளான. புதிதாக செப்பனிடப்பட்டுள்ள அகல சாலைகள் போடப்பட்டிருந்தது. சாலை நடுவே பளிச்சென்று மஞ்சள் கோடு, போக்குவரத்தே இல்லாத இப்பகுதியில் எதற்கு என்ற கேள்விக்குறி எழாமல் இல்லை. ஆனால் இந்திய எல்லைப்பகுதியில் கரடு முரடான மண்பாதை வழியே சிரமப்பட்டுத்தான் உச்சியை அடைய முடியும். இதுவும் பாதுகாப்புக் கருதி தடைகள் தடைகளாகவே இருக்கட்டும் என்று விடப்பட்டிருக்க வேண்டும் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது! நமது பக்கத்தில் சுற்றுலா பயணிகளுக்கான சிற்றுண்டி விடுதியில் கன ஜோரான வியாபாரம். அருகில் இன்டெர்னட் இணைப்புடன் கணினிகள் வைக்கப்பட்டிருந்தன. உலகின் மிக உயரமான இன்டெர்னட் மையம் இதுதான் என்ற அறிவிப்புப் பலகை பெருமையோடு பறைசாற்றியது.




“சிப்சு” என்ற பகுதியில் சாலை ஒட்டி மதராஸ் ரெஜிமெண்ட் அணி அமைந்துள்ளது. ‘பத்தொன்பதே வெற்றி நமதே’ என்ற வீர வரிகள் முகப்பில் எழுதப்பட்டிருந்தது கவனத்தை ஈர்த்தது. தூய்மையாகவும், நேர்த்தியாகவும் ராணுவத்திற்கே உண்டான ஒழுக்கமுடன் பராமரிக்கப்பட்டிருந்தது. முகப்பில் நின்ற வீரர் சகஜமாக அணியின் பொறுப்புகளை விவரித்தார். அவரது பொறுப்புணர்ச்சியும் ஈடுபாடும் மெச்சத்தக்கது. சிப்சு கிராமவழி சாலையில் ஒரு அறிவிப்புப் பலகை இந்தியிலும் ஆங்கிலத்திலும் போடப்பட்டிருந்தது. அதில் ராணுவ விரர்கள் கிராமத்திற்க்கு முகாந்திரம் இன்றி செல்லக் கூடாது என்று அறிவுறுத்தும் வாசகங்கள், எந்த ஒரு உள்ளுர் பிரச்சனையிலும் ராணுவத்தினர் ஈடுபடுக்கூடாது என்பதற்காக ராணுவ தலைமையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.




இந்தியாவின் பொக்கிஷம் என்று உணரப்படுவது பல நூற்றாண்டுகளாக சமுதாயாதோடு இழைந்த கலாச்சாரம், எல்லா நாட்டவரையும் வரவேற்கும் மனப்பாங்கு, வேறுபாடுகளை அனுசரித்துப் பழகும் பக்குவம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம், கேங்டாக் நகரில் உள்ள நாம்கியால் திபேத்திய ஆராய்ச்சி மையம் தொன்மையான இந்திய கலாச்சாரத்தின் அடிச்சுவடுகளை தாங்கிய தங்கப் பெட்டகம் என்றால் மிகையில்லை. ஐம்பது வருடங்களாக இயங்கிவரும் இந்த ஆராய்ச்சி மையத்தின் முக்கியக் குறிக்கோள் புத்த மதத்தின் மஹாயானா பிரிவின் சித்தாந்தங்களை பண்டை நூல்களிலிருந்து தொகுத்து ஆராய்ந்து மக்களிடையே பகிர்ந்து கொண்டு சமுதாயத்தை மேன்மையடையச் செய்வது, அரிய பல சமஸ்கிருத நூல்களும் அதன் மொழி பெயர்ப்பும் பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்தப் பகுதியில் விஜயம் செய்த புகழ் பெற்ற சர்வதேச யாத்திரிகர்களின் குறிப்புகள், விமர்சனங்கள், வியாக்கியானங்கள், அந்த காலத்திய சமூகநிலையை நன்கு விளக்குகிறது. சிக்கிம் அரசப் பரம்பரையை சேர்ந்த சோக்யால் தோஷி நாம்கியால் அவர்களின் அரசாட்சியின் போது துவங்கப்பட்ட இந்த ஆராய்ச்சி மையம் வளர்ச்சியடைய நல்ல பல முயற்சிகள் எடுக்கப்பட்டு சிறந்த பராமரிப்பில் உள்ளது, சிக்கிம் விஜயம் இந்த மையத்தை பாராமல் பூர்த்தியடையாது.




டார்ஜிலிங் மிக அழகான குளிர் பிரதேசம். ஹிமாலய மலைத்தொடரை “டைகர் டாப்” என்ற உச்சி இடத்திலிருந்து கண்டு களிக்கலாம். கூர்க்கா இனத்தை சேர்ந்தவர் அதிகம். அண்டை நாடான நேபாளத்திலிருந்து குடிபெயர்ந்தவர்களின் வரத்து, அவர்களின் சொந்த பந்தங்கள், நேபாளத்தில் உள்நாட்டு பிரச்சினையின் தாக்கம் என்று டார்ஜிலிங் கொதுவை நிலையில் உள்ளது. செப்பனிடப்படாத சாலைகள், நெரிசல் மிகுந்த மையப்பகுதி, அகற்றப்படாத குப்பைகள் ஒரு முக்கிய சுற்றுலா மையத்திற்கு அழகு சேர்ப்பதாக இல்லை. அரசு அலுவலகங்களில் கோர்க்கா மாநிலம் என்று தன்னிச்சையாக வைக்கப்பட்ட பெயர் பலகை வாகனங்களில் மேற்கு வங்காளம் என்பதற்கு பதிலாக கோர்க்கா மாநிலம் என்பதற்கு அடையாளமாக ஜி.எல்.என்ற பதிவுக் குறியீடு அங்குள்ள பிரச்சனையை பிரதிபலிக்கிறது. நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மையை கருத்தில் கொண்டு தீர்வு ஏற்படுவதற்கு பலதரப்பட்ட பங்கேற்பாளர்களின் ஒத்துழைப்பு தேவை.பழங்குடி மக்கள் வாழும் இடங்களில் அவர்களுடைய பழக்க வழக்கங்கள், உணர்வுகள், காலம் காலமாக வாழ்க்கையில் இழைந்த நம்பிக்கைகள் இவைகளை மனதில் கொண்டு அரசுப் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும். எந்த இடமானாலும் மக்களின் தேவைகளை உணர்ந்து அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நாட்டில் ஆட்சி நடத்துவது போன்ற முறையில் நடந்து கொள்ளக்கூடாது. இத்தகைய மனநிலையுடன் அதிகார தோரணையோடு நடந்து கொள்ளும் சில அரசு அதிகாரிகளால் மக்களுக்கு வெறுப்பு உண்டாகிறது. நாட்டின் வளர்ச்சியில் தமக்குரிய பங்கு மறுக்கப்படுகிறது என்ற நிலைக்குத் மக்கள் தள்ளப்படுகிறார்கள். பிரிவினைவாதத்திற்கு இடப்படும் முதல் வித்து இதுதான். டார்ஜிலிங் கூர்க்கா தனிமாநிலம் வேண்டும் என்ற போராட்டமும் இதன் காரணமாக ஏற்பட்டதுதான். சிக்கிம் போர்த்திற முக்கியத்துவம் வாய்ந்த எல்லைப் பகுதியில் உள்ளது. பழங்குடி மக்களுக்கே உரித்தான எளிமை காண முடியும். ஆனால் கூருணர்வுடையவர்கள். “செப்பு மொழி பல உடையாள் ஆனால் சிந்தனை ஒன்றுடையாள்” என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப பாரத தேசத்தோடு ஒன்றிய சிக்கிம் மாநில மக்கள் போற்றுதலுக்குரியவர்கள்.





இந்த கட்டுரை தினமணி நாளிதழில் கதிர் இணைப்பில் 24.05.2009 அன்று பிரசுரிக்கப்பட்டது.