Tuesday, July 7, 2009

அம்மா பரதேவதே! சுஜாதா எங்கே இருக்கார்?


சமீபத்தில் நண்பர் பாரதி மணி எனது உறவினரான திரு.பூர்ணம் விசுவநாதனைப் பற்றி உயிர்மை இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்ததோடு அதை என் பார்வைக்கும் அனுப்பி வைத்தார். ஏதெதோ நினைவுகளை கிளர்த்தக்கூடிய இக்கட்டுரையை வாசகர்களின் பார்வைக்கு பிரசுரிக்கிறேன்.

-----------------------------

ஐம்பது வருடங்களுக்கும் மேலாக பூர்ணம் விசுவநாதனுடனான நட்பு நீடித்தது. நட்பு என்றால் தினமும் ஒருதடவை நேரிலோ அல்லது போனிலோ ‘என்னையா, செளக்கியமா?’ என்று குசலம் விசாரிக்கும் சினேகிதமல்ல. வருடத்திற்கொரு முறை சந்தித்துக்கொண்டாலும், முகமும் கண்களும் மலர, அவருக்கே சொந்தமான அந்தச்சிரிப்புடன், ‘என்ன மணி, எப்படியிருக்கேள்?’ என்று இருகைகளையும் பிடித்துக்கொண்டு கேட்கும்போது, அவரை நேற்றுத்தான் சந்தித்தது போலிருக்கும். இடைவெளியைக்கடந்த நட்பு அது. காம்பஸ் வைத்து வரைந்ததுபோல் வட்ட முகம். கண்ணாடிக்குப்பின்னாலிருந்து சிரிக்கும் கண்கள். அவருடன் நெருங்கிப்பழகியவர்களுக்கெல்லாம் இதே அநுபவம் இருந்திருக்கும். போனமாதம் மறைந்த திரு.பூர்ணம் விசுவநாதனைபற்றி சில நினைவுகளை உயிர்மை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமென்று நினைக்கிறேன்.

தில்லி ஆல் இந்தியா ரேடியோ செய்திப்பிரிவில் தமிழ்ச்செய்தி வாசிப்பாளராக பலவருடம் பணிபுரிந்தார். நமக்கெல்லாம் தெரிந்த விஷயம் இந்தியா சுதந்திரமடைந்ததை தமிழில் உலகுக்குச்சொன்னவர். இவருடன் பணியாற்றிய ராமநாதன் (நடிகர் சரத்குமாரின் தந்தை), தர்மாம்பாள், வெங்கட்ராமன், நாகரத்தினம் இவர்களது குரல்கள் -- தினமும் காலை ஏழேகால் மணிக்கு ‘ஆல் இண்டியா ரேடியோ... செய்திகள்... வாசிப்பது பூர்ணம் விஸ்வநாதன்’... செய்தியை பாதியிலிருந்து கேட்கத்தொடங்கும் நம்ம ஊர் பெரிசுகள் குரலை வைத்தே, ‘ஓ இன்னிக்கு பூர்ணமா?’ என்று கேட்குமளவிற்கு, டி.வி. வராத அந்தக்காலத்தில் தமிழ்நாட்டில் பரிச்சயமான குரலாக இருந்தது. கையில் ரிமோட்டுடன் 150 சானல்கள் கொண்ட இடியட் பாக்ஸ் இல்லாத காலத்தில் தமிழ்ச் செய்திகளுக்கு, காலையில் 5,30 மணிக்கு (தென்கிழக்காசிய சேவை), காலை 7,15, மதியம் 1.30, மாலை 7.15 மணிக்கு இவர்களை விட்டால் வேறு மார்க்கமில்லை! ஜனாதிபதியோ முக்கியமான மத்திய அமைச்சரோ இறந்தாலும், அந்தச்செய்திக்காக நாம் காத்திருக்கவேண்டும். இப்போதைய சானல்களில் Breaking News என்ற சாக்கில் அரைத்த மாவையே அரைப்பதுபோல் 24 மணிநேரமும் ‘செய்திகளை உடைப்பது’ போன்ற வியாபார உத்திகள் அப்போதைய அப்பாவி ஆல் இந்தியா ரேடியோவுக்கு தெரிந்திருக்கவில்லை. தமிழ்ச்செய்தி வாசிப்பாளர் தர்மாம்பாள் இலங்கைத்தமிழ் ரசிகர்கள் அழைப்பில், தில்லியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கே போய்வந்தவர்! போய்விட்டு வந்து ஆறுமாதத்துக்குப்பிறகும், நேரில் பார்ப்பவர்களிடம், தன் சிலோன் விஜயத்தைப்பற்றி அரைமணி நேரம் அறுக்காமல் விடமாட்டார்! யாரும் அவர் எதிரே மாட்ட பயப்படுவார்கள்.

நெல்லை மாவட்டத்தில் பிறந்த இவருக்கு பூர்ணம் என்பது அவர் தந்தையின் பெயரான பூர்ண கிருபேசுவரன் என்பதன் சுருக்கம். பூர்ணம் விசுவநாதனின் மூத்த சகோதரர், பூர்ணம் சோமசுந்தரம் ரேடியோ மாஸ்கோ தமிழ்ப்பிரிவின் தலைவராக இருந்தார். அங்கேயே ஒரு ரஷ்யப்பெண்மணியை மணம் புரிந்துகொண்டு மாஸ்கோவிலேயே செட்டிலாகிவிட்டார். ஐம்பதுகளில் ஒரு தமிழர் சேலையுடுத்திய வெளிநாட்டு மனைவியிடம் ரஷ்யமொழியில் பேசுவது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இன்னொரு சகோதரர் ஐம்பதுகளில் எழுத்தாளராகப் புகழ் பெற்றிருந்த உமாசந்திரன் (சென்னை டி.ஜி.பி.யாக இருந்த நடராஜ், ஐ.பி.எஸ். அவர்களின் தந்தை). இவரது கதையைத்தான் டைரக்டர் மகேந்திரன் ‘முள்ளும் மலரும்’ திரைப்படமாக எடுத்தார். விசுவநாதனின் தங்கை பூர்ணம் லட்சுமி தில்லி ஆல் இந்தியா ரேடியோ External Services Division தினமும் காலை 5.30 - 6.30 மணிக்கு ஒலிபரப்பும் தென் கிழக்காசிய நேயர்களுக்கான தமிழ்ப்பிரிவில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்தார். தில்லியில் அவர் மறையும்வரை எனக்கு குடும்ப நண்பர். திருமண வாழ்க்கையில் விருப்பமில்லாமல் பெண்ணியத்தின் இலக்கணமாக இருந்தவர். என் வயதுள்ள யாழ்ப்பாண, மலேஷிய, சிங்கப்பூர் தமிழ் ரசிகர்களுக்கு பூர்ணம் லட்சுமியின் குரலும் பரிச்சயமாக இருந்தது. ‘....அடுத்ததாக வெள்ளவத்தை கார்த்திகேசு, கோலாலம்பூர் சிவசாமி, யாழ்ப்பாணம் சங்கரலிங்கம்......பினாங்கு பீர் முகம்மது.......ரங்கூன் ரமாதேவி ஆகியோர் விரும்பிக்கேட்ட பாடல் ’தூக்கு தூக்கி’ படத்திலிருந்து டி.எம். செளந்தரராஜன் பாடியது’........ என்று அவரது கணீரென்ற குரல் ஐம்பதைத்தாண்டிய அ. முத்துலிங்கம் போன்றோருக்கும் நினைவிருக்கலாம்.

1955-ல் நான் தில்லி போன இரு வாரங்களில், செளத் இந்தியா கிளப் ஆண்டுவிழா கலைநிகழ்ச்சியில் பூர்ணம் எழுதி நடித்த ஓரங்க நாடகம் இடம் பெற்றிருந்தது. நாடகத்திற்குப்பிறகு ’விலாசமில்லாத’ என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். பிறகு ஒரு நாள் ரேடியோ ஸ்டேஷனில் சந்தித்தபோது, ‘மணி, அடுத்த நாடகத்தில் உங்களுக்கும் ஒரு ரோல் இருக்கு. ரிகர்ஸலுக்கு வந்துடுங்க’ என்றார். நானும் அவர் நடிக்கும் ஓரங்க நாடகங்களில் பங்குபெற ஆரம்பித்தேன். தில்லியில் தமிழ் நாடகத்திற்கென்றே தனி அமைப்புகளாக எனது தட்சிண பாரத நாடக சபாவும், பூர்ணம் பங்குபெற்ற செளத் இந்தியன் தியேட்டர்ஸும் பின்னால் தான் தொடங்கப்பட்டன.

நான் தில்லி போன மறுமாதமே AIR External Services Division தமிழ்ப்பிரிவு தினமும் காலை 5.30 முதல் 6.30 வரை ஒலிபரப்பும் நிகழ்ச்சியில் இடம்பெறும் ரேடியோ நாடகங்களில் பங்குபெற கான்ட்ராக்ட் வர ஆரம்பித்தது. மாதத்தில் ஐந்தாறு நாடகங்களில் கலந்துகொள்வேன். தில்லி போகுமுன்னரே திருவனந்தபுரம் திருச்சி ரேடியோ நிலையங்களில் ஆடிஷனில் தேர்ந்து நடித்து வந்தவன். அப்போதெல்லாம் ரிக்கார்டிங் வசதி கிடையாது. செய்தி வாசிப்பதுபோல நாடகங்களும் லைவ் தான். அந்த நாடகங்களை பூர்ணம் லட்சுமி, தர்மாம்பாள், என். ஆர். ராஜகோபாலன் போன்றவர்கள் இயக்குவார்கள். தில்லி குளிர்காலத்தில் அதிகாலை மூன்றுமணிக்கு அலாரம் வைத்து எழுந்து, வெடவெட குளிரில் குளித்து தயாராகி, வாசலில் அழைத்துப்போக வரும் AIR Van அடிக்கும் ஹாரனுக்காக காத்திருக்கவேண்டும். உலகமே நிச்சிந்தையாகத் தூங்கும் நேரமது. போகும் வழியில், பூர்ணம் லட்சுமியையும், வினே நகரிலிருந்த பூர்ணத்தையும் மற்ற நடிகர்களையும் ஏற்றிக்கொள்ளும். வழியில் அண்ணன்-தங்கை பேசிக்கொள்வதைக் கேட்டால், அவர்கள் பாசம் இழையோடும். ரேடியோ ஸ்டேஷன் போகும்வரை லட்சுமியின் ’கொல்’லென்ற சிரிப்பு (ஆமாம், இதென்ன சிரிப்பு?!) தொடரும். இந்த ஒருமணிநேர நிகழ்ச்சி 10 நிமிட தமிழ்ச்செய்தியுடன் தொடங்கும். அதனால் தன் மேசையில் தயாராக வைத்திருக்கும் ஆங்கிலப்பிரதியை தமிழில் மொழிபெயர்த்து தயாராக்க தமிழ் யூனிட்டை நோக்கி ஓடுவார் பூர்ணம்.

முன்பே ஒருதடவை வந்து ஒத்திகை பார்த்திருப்பதால், நாங்கள் அவசரமில்லாமல் ஸ்டுடியோவுக்கு போவோம். சரியாக ஐந்தரை மணிக்கு முகப்பு அறிவிப்பு முடிந்ததும் அடுத்த ஸ்டுடியோவிலிருந்து, விசு ‘ஆல் இண்டியா ரேடியோ.. செய்திகள்... வாசிப்பது பூர்ணம் விஸ்வநாதன்..’ என்று தன் கணீரென்ற குரலில் ஆரம்பிப்பார். அதற்குமுன் நாங்கள் இடையிலுள்ள கண்ணாடிச்சுவர் வழி கட்டைவிரலை உயர்த்தி ‘Best of Luck!’ சொல்லுவோம். நாடகத்துக்கு தேவையான பிரதிகளை காப்பி எடுத்து Copywriter பஞ்சாபகேசன் தயாராக வைத்திருப்பார். இவரை தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் பஞ்சாபகேசன் என்ற பெயரிலல்ல. இவர் தான் நடிகர் அர்விந்த் ஸ்வாமியின் தந்தையும், மெட்டி ஒலி போன்ற பல சீரியல்களில் அப்பா வேஷத்தில் நடிப்பவருமான டில்லி குமார் அவர்கள். தில்லி மேடையில் பூர்ணத்துடன் நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறார். ஸ்டுடியோ கடிகாரத்தின் மேல் இருக்கும் ON AIR என்ற சிவப்பு விளக்கு எரியும்போது, உலகத்தில் அனைவருமே தூக்கத்தை மறந்து, என் நாடகத்தைக்கேட்க ரேடியோ பெட்டிகள் முன் உட்கார்ந்திருப்பதாக கற்பனை செய்துகொள்வேன். ரேடியோ நாடகத்தில் பார்த்துப்படிப்பதால், வசனங்களை மனப்பாடம் செய்யவேண்டிய தேவையில்லை. ஒரு பக்கத்திலிருந்து அடுத்தபக்கத்துக்குப் போகும்போது, குனியாமல் பேசிக்கொண்டே மைக்கில் பேப்பர் சலசலப்பு சத்தமில்லாமல் கீழே நழுவவிடுவது ஒரு கலை. வாழ்க்கை வசதிகளை பெருக்கிக்கொள்ள, என் நேரத்தை வேலை செய்யும் கம்பெனிகளுக்கும், அது சம்பந்தமான பிரயாணங்களுக்கும் தாரை வார்த்துக்கொடுக்கும் வரை, தில்லியில் ஆயிரம் ரேடியோ நாடகங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். அவைகள் என் தில்லி வாழ்க்கையில் ரம்மியமான நாட்கள்.

நாடகம் முடிந்து, Duty Officer Room-க்கு வந்து தயாராக வைத்திருக்கும் நமது காசோலைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர் ரூமில் வைத்திருக்கும் நாலைந்து ஸ்பீக்கர்களிலிருந்து அப்போது ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி, ஒரியா, பெங்காலி நிகழ்ச்சிகள் மொழி புரியாத ஓர் ஒலிக்கலவையாக எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும். அதை நாம் ஒருமணி நேரம் கேட்டுக்கொண்டிருந்தால், உத்தரவாதமாக பைத்தியம் பிடித்துவிடும். ஆனால் அதையெல்லாம் அவர் நாள் பூராவும் கேட்டாகவேண்டும். அவர் Duty! டூட்டி ஆபீசரல்லவா? மற்றவர்களுக்கெல்லாம் ரூ. 15 எனக்குமட்டும் ரூ. 20. ஏனென்றால் நான் 1948-லேயே திருவனந்தபுரம் ரேடியோ ஸ்டேஷனில் ஆடிஷன் ஆன ‘ஏ’ கிரேடு ஆர்ட்டிஸ்ட். மற்றவர்கள் வெறும் கையெழுத்து போட்டு காசோலையை வாங்கிக்கொள்வார்கள். எனக்குமட்டும் ரூ. 20 என்பதால் ரசீதில் ஒரு அணா ரெவென்யூ ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்துப்போடவேண்டும். ஒரு அணா (ஆறு பைசா) இல்லையென்றால், உன் சொத்தை விற்றாவது ஒரணா கொண்டுவா, பிறகுதான் செக் தருவேன் என்பார்கள். சிலசமயம் பாக்கெட்டில் சில்லறையில்லாமல், நியூஸ் ரூமுக்கு ஓடிப்போய் பூர்ணம் விசுவநாதனிடம் ஒரு அணா கடன் வாங்குவேன். (இந்தக்கடனை கான்டீனில் காபி வாங்கிக்கொடுத்து கழித்துவிடுவேன்.) இந்த ரூ. 20-க்கான Government of India காசோலைக்கு ராஷ்டிரபதி பவனில் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருக்கும் குடியரசுத் தலைவரை துணைக்கு கூப்பிட்டு For and on behalf of President of India சார்பில் Accounts Officer கையெழுத்து போட்டிருப்பார். இந்த இருபது ரூபாயை பணமாகக்கொடுக்க நம் அரசாங்கத்தின் ரூல்ஸ் இடம் தராது. இன்னும் நாம் மாறவில்லை. Nobody can beat our Indian Bureaucracy! அமெரிக்கா போய்விட்டு வந்த இந்திரா பார்த்தசாரதி தன் பென்ஷன் அரியர்ஸுக்கு விண்ணப்பித்தபோது, ‘ஆறுமாதத்துக்கு முன்னால் உயிரோடு இருந்தீர்கள்’ என்பதற்கான சான்றிதழுடன் நேரில் வரவும்’ என்றது தில்லி பல்கலைக்கழகம்!

ஏழுமணி அளவில் AIR Canteen-ல் காத்திருப்பேன். செய்தி வாசிப்பு தடங்கலின்றி நிறைவேறியதாக ஒரு ரிப்போர்ட் எழுதி டூட்டி ஆபீசரிடம் கொடுத்துவிட்டு பூர்ணமும் வருவார். அந்தவேளையில் கான்டீன் காலியாகவே இருக்கும். அங்கே காலைவேளையில் சுடச்சுட மெதுவடை கிடைக்கும். ஆனால் தொட்டுக்கொள்ள சட்னிக்குப்பதிலாக, வெள்ளைப் பூசணிக்காயுடன் புளி காரம் உப்பு கலந்து அரைத்த ஒரு வகை ஸாஸ் தான் பாட்டிலில் வைத்திருப்பார்கள். ஒருநாள் காலை இருவரும் காபி சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, இருபது வயதுள்ள ஒடிசலான ஓர் இளம் பெண்மணி கையில் காபி கப்புடன், ‘Can I join you?’ என்று கேட்டுவிட்டு பதிலுக்கு காத்திராமல் எங்கள் எதிரில் உட்கார்ந்தார். சரளமான ஆங்கிலத்தில் பூர்ணத்தை தெரியுமென்றும், அடிக்கடி பார்த்திருப்பதாகவும் சொன்னார். தன் பெயர் ஆங் ஸான் ஸூ சி என்றும் தில்லியில் தங்கிப் படிப்பதாகவும், காலை நேரங்களில் வெளிநாட்டுச்சேவை ஒலிபரப்பில் பர்மியமொழிச் செய்தி வாசிப்பாளராக இருப்பதாகவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். ரேடியோ ஸ்டேஷனில் பர்மீஸ் யூனிட்டை தாண்டித்தான் தமிழ் யூனிட்டுக்குப் போகவேண்டும். பிறகு அதே கான்டீனில் எப்போதாவது பார்க்க நேர்ந்தால் முகமன் சொல்லிக்கொள்வோம். ஒருமுறை, பர்மியரான அவர் இந்தியாவில் தங்குவதில் சில சிக்கல்கள் இருப்பதாகச் சொன்னார். வெளியுறவுத்துறையின் கீழ் இயங்கும் Foreigners’ Registration Office-ல் என் நெருங்கிய நண்பன் உயர் பதவியில் இருந்ததால், என் விசிட்டிங் கார்டைக்கொடுத்து, அவனைப்போய் பார்க்கச்சொன்னேன். அடுத்தவாரம் பார்க்க நேர்ந்தபோது, ஓடி பக்கத்தில் வந்து, என் நண்பன் உதவியால் இந்தியாவில் இன்னும் இரண்டு ஆண்டுகள் தங்க அனுமதி ஒரு நொடியில் கிடைத்துவிட்டதாக நன்றி சொன்னார். அதன்பிறகு அவரை நான் சந்திக்கவில்லை. அவர் தான் 1991-ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற பர்மியப்போராளி Aung San Suu Kyi. 1990-ல் மிலிட்டரி சர்வாதிகாரத்தை எதிர்த்து, சமாதானப்போர் நடத்தி, வீட்டுச்சிறையிலிருந்தபடியே, பிரசாரத்துக்குக்கூட போகாமல், தன் கட்சியான National League of Democracy-க்கு 80% இடங்களைத்தேடிக்கொடுத்தவர். ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத பர்மிய மிலிட்டரி சர்வாதிகாரம் தேர்தலை, null and void என்றுகூறி ஆட்சியிலிருந்து விலக மறுத்தது. உலக வல்லரசுகளும் பத்திரிகைகளும் வற்புறுத்தியும்கூட, அவரை ஸ்வீடனுக்கு நேரில் போய் நோபல் பரிசை பெற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. 1989-லிருந்து இன்று வரை – சில மாதங்கள் தவிர – பர்மிய சர்வாதிகாரம் இவரை வீட்டுக்காவலிலேயே வைத்திருக்கிறது. இந்த நூற்றாண்டிலும் சர்வாதிகாரத்தால் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. உலகத்தின் இரண்டாவது பெரிய ஜனநாயக வல்லரசான நாம், மெளனமாக பார்த்தும் பார்க்காமலிருக்கிறோம்! இல்லை....ஆரம்பத்தில் 1969-ல் Ghungi Gudiya (பேசாத பொம்மை) என்று கேலியாகவும் பிறகு எண்பதுகளில் The only Man in her entire Cabinet என்றும் அரசியல் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட இந்திரா காந்தி போல் இன்னொருவர் வர காத்திருக்கிறோமா? அது சரி, கிழக்கு பாகிஸ்தானை பங்களா தேஷாக மாற்றி என்னத்தெ வாழ்ந்தது? நன்றியுணர்ச்சியில்லாத இன்னொரு அண்டைநாடு உருவாயிற்று!

நான் சென்னை வந்தபிறகு, 2002-ல் ஸூ சி அம்மையாரை காவலிலிருநது விடுவிக்கவேண்டுமென்று போராட்டம் வலுத்துவந்தது. தினமும் அவர் பெயர் தினசரிகளில் தென்பட்டது. செய்திச்சானல்களில் அடிக்கடி வருவார். அப்போது ஒரு நாள் திரு. பூர்ணத்தைப் பார்க்கப்போயிருந்தேன். பேசிக்கொண்டிருக்கும்போது, ‘இந்த அம்மையாரை நாம் சந்தித்திருக்கிறோம். ஞாபகம் இருக்கிறதா?’ என்று கேட்டேன். அவருக்கு நினைவில்லை. விளக்கிச்சொன்னவுடன் மகிழ்ச்சியோடு, ‘அப்போ நாம ஒரு நோபல் ப்ரைஸ் வின்னருடன் கைகுலுக்கியிருக்கிறோம்!’ என்றார். நான், ‘இல்லை. In anticipation of her getting Nobel Prize, நாம 25 வருஷம் முன்னாடியே அட்வான்ஸா கைகுலுக்கி விட்டோம்’ என்று சொன்னதும் கண்ணை மூடிக்கொண்டு சிரித்தார்.

தில்லி செளத் இந்தியன் தியேட்டர்ஸ் சார்பில், பிரஸிடென்ட் பஞ்சாட்சரம், நாலுவேலி நிலம், போலீஸ்காரன் மகள், தேவனின் கோமதியின் காதலன், ரமேஷ் மேத்தாவின் அண்டர் செக்ரட்டரி போன்ற நாடகங்களில் முக்கியமான பாத்திரங்களில் நடித்தார். கோமதியின் காதலனில், கோவிலுக்குப் போய்விட்டு அர்ச்சனைத்தட்டுடன் வீட்டுக்குத்திரும்பும் பூர்ணம், தெருவில் நண்பருடன் பேசிக்கொண்டிருப்பார். அவ்வப்போது அர்ச்சனைத் தட்டிலிருக்கும் அட்சதைகளை ஒவ்வொன்றாக எடுத்து வாயில் போட்டுக்கொள்வார். உடைத்த தேங்காய்மூடியை நகத்தால் கிள்ளுவார். This is the spontaneous use of Set Properties by a Performer! யதார்த்த நடிப்பில் ஊறியவருக்குத்தான் இது கைவரும். தேர்ந்த நடிகருக்கான உத்தி. இதை ஒரு பத்திரிகையில் பதிவு செய்திருக்கிறேன்.

தில்லியில் அடிக்கடி நடக்கும் ‘யாத்ரிக்’ குழுவின் ஆங்கில நாடகங்கள், சம்புமித்ரா, ஷ்யாமானந்த் ஜலான், சத்யதேவ் தூபே, உத்பல் தத் போன்றவர் நாடகங்களுக்கோ, இப்ராஹிம் அல்காஸியின் என்.எஸ்.டி நாடகங்களுக்கோ அவர் வந்ததேயில்லை. கூப்பிட்டால், ‘டூட்டி இருக்கு, மணி’யென்று தப்பித்துக்கொள்வார். அவைகளைப்பார்த்து புதிதாகத் தெரிந்துகொள்ள அவருக்கு அவசியம் இருந்ததில்லை.

எனக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமையுண்டு. சுஜாதா எழுதிய நாடகங்களில், சென்னையில் இவர் நடித்த பாத்திரங்களை தில்லியில் நான் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என் பேறு! அவர் “பூர்ணம் தியேட்டர்ஸ்” தொடங்கியபின், தில்லிக்கு நாடகம் போட வந்திருந்தார். முதல் நாடகம் ‘தனிக்குடித்தனம்’. சென்னையிலிருந்து செட் சாமான்கள் ஏற்றிவந்த லாரி நாக்பூர் அருகே ரிப்பேராகிவிட்டதால், அவசர அவசரமாக எங்கள் D.B.N.S. குழுவின் செட் உபகரணங்களைக் கொண்டுபோய் மேடையமைப்பு செய்துகொடுத்தது ஞாபகம் வருகிறது.

எங்கள் நட்பு இறுக்கமானது அவரது சகோதரி லட்சுமி இறந்தபோது. திருமணத்தில் நாட்டமில்லாத அவர் தனியாக மோதி பாக்கில் ஓர் அரசாங்கவீட்டில் குடியிருந்தார். சென்னையிலிருந்த பூர்ணத்துக்கு தங்கையின் மரணச்செய்தியை அறிவித்ததே நான் தான். அவர் தில்லி வரும்வரை காத்திருந்து, நிகம்போத் சுடுகாட்டுக்கு சடலத்துடன் போய், கடைசிவரை கூட இருந்தேன். கிட்டத்தட்ட நவம்பர் 2007 உயிர்மை யில் நான் பதிவு செய்த ‘தில்லி நிகம்போத் சுடுகாடு’ கட்டுரையில் எழுதியிருந்ததையெல்லாம் அவர் நேரில் பார்த்திருக்கிறார். காரில் திரும்ப வரும்போது, ’மணி, நீங்க இவ்வளவு உதவியா இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கலே. லட்சுமியின் ஆத்மா உங்களை வாழ்த்தும். உங்களுக்கு சுடுகாட்டிலேயும் நெறைய நண்பர்கள் இருக்காங்களே’ என்றார். ‘நான் கடைசியா இங்கே தானே வந்தாகணும். அப்போ என்னை ஸ்பெஷலா கவனிச்சுப்பாங்களே” என்ற பதிலுக்கு, அவர் உரக்க ‘No silly Jokes’ என்று சொல்லி என் வாயைப்பொத்தினார். பிறகு அவர் குடியிருந்த வீட்டை காலிசெய்து சாமான்களை ஒரு லாரியில் ஏற்றி, சென்னையில் பூர்ணம் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். போனவருடம் நவம்பரில் உயிர்மையில் நான் தில்லி நிகம்போத் சுடுகாட்டைப்பற்றி எழுதியிருந்த கட்டுரையைப் பாராட்டி நீண்ட நேரம் பேசினார். ‘நான் தான் நேரிலேயே பாத்திருக்கேனே! You are a great person’ என்று ஒரு சர்ட்டிபிகேட்டையும் கூடவே தந்தார்!

என்னைப்போன்ற இவரது தில்லி நண்பர்களுக்கு வருத்தமளிக்கும் விஷயம் இவருக்கும் இசை விமர்சகர் சுப்புடுவுக்குமிடையே இருந்த தீராப்பகை. அதன் காரண காரியங்களை இப்போது ஆராய வேண்டாம். தில்லியில் நடந்த சில சம்பவங்கள் இவரை அளவுக்கதிகமாக காயப்படுத்திவிட்டன. பூர்ணம் சென்னைக்கு மாற்றலாகி வந்ததற்கு அவையும் முக்கியமான காரணங்கள். எங்கள் சமரச முயற்சிகள் கடைசிவரை பலனளிக்கவேயில்லை.

தொண்ணூறுகளில் மத்திய சங்கீத நாடக அகாடெமி இவருக்கு சிறந்த நாடக நடிகருக்கான விருதையளித்து தன்னையும் கெளரவப்படுத்திக்கொண்டது.

பலருக்குத்தெரியாத விஷயம் பூர்ணம் ஒரு தேர்ந்த நகைச்சுவை எழுத்தாளர் என்பது. ஐம்பது அறுபதுகளில் தில்லி தமிழ்ச்சங்கம் வெளியிட்டுவந்த ‘சுடர்’ ஆண்டுமலரில் இவரது ஓரங்க நாடகங்கள் தவறாமல் இடம்பெறும். சென்னை பத்திரிகைகளிலும் அடிக்கடி எழுதிக்கொண்டிருந்தார். பிரபல பத்திரிகைகளின் தீபாவளி மலரில் எழுதுவார். இவரது ஓரங்க நாடகங்களில் தான் என் தில்லி நாடக வாழ்க்கை தொடங்கியது. சென்னைக்கு வந்தபின் ஏனோ எழுதுவதை குறைத்துக் கொண்டு விட்டார். அதனால் தமிழுக்குத்தான் நட்டம்.

என் நண்பர் மரபின் மைந்தன் சொன்னது:

தமிழிலக்கிய மேடைகளிலும் பூர்ணம் விசுவநாதன் பலமுறை பேசுபொருளாகியிருக்கிறார்.
ஒரு விழாவில் பார்வையாளர் வரிசையில் அவர் வந்து அமர்ந்தபோது, பேச்சாளர் ஒருவர் சொன்னார்: "கொழுக்கட்டை மாதிரி இருக்காரே இவர் யார்னு விசாரிச்சேன்.....பூர்ணம்னு சொன்னாங்க! அதுசரி, பூர்ணம் இருந்தாத்தானே கொழுக்கட்டை!". தமிழக அரசின் சுற்றுலா சம்பந்தப்பட்ட குழு ஒன்றில் பூர்ணம் விசுவநாதன் ஆலோசகராக இருந்தார். அதன் விழா ஒன்று நிகழ்ந்தபோது பார்வையாளர்கள் மத்தியில் வந்து அமர்ந்தார். வீடியோ வெளிச்சத்தில் மேடையில் இருப்பவர்களுக்குக் கண்கூசிற்று. பேச்சாளர் கண. சிற்சபேசன் கூறினார்: "இங்கிருந்து பார்த்தா பூர்ணம் மாதிரித் தெரியுது, ஆனா பூரணமாத் தெரியலை".

’பாரதி’ படப்பிடிப்பின்போது, நடிகர்கள் தேர்வு எனக்களிக்கப்பட்ட பணிகளில் ஒன்று. டைரக்டர் ஞான. ராஜசேகரன் பூர்ணத்தை பார்த்துவரச்சொன்னார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த பூர்ணம், கண் ஆபரேஷனுக்குப்பிறகு அதிக வெளிச்சம் பார்த்தால் கண் கூசுகிறது என்பதால் பாரதியில் நடிக்க இயலாதென்று வருத்தம் தெரிவித்தார். He has acted in some good, bad and indifferent Movies! ‘மஹாநதி’ இவரது மாஸ்டர்பீஸ்! ‘மூன்றாம் பிறை’ படத்தில் சில்க் ஸ்மிதாவுடன் நெருங்கி நடிக்கும்போது கொஞ்சம் நெளிந்தார்! இவரது நடிப்பை Stereo-typed Acting என்று இப்போது இவர் மறைவுக்குப்பின் பல வலைப்பூவினர் விமர்சனம் செய்கின்றனர். இது இவரது குறையல்ல. கமல் போன்ற வெகுசிலரைத்தவிர, மற்றவர்கள் இவரை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இவருடைய திரைப்பட வாழ்க்கையைப் பற்றி, என்னைவிட உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். பல நடிகர்-குரலில் பேசும் இன்றைய மிமிக்ரி கலைஞர்களுக்கு வாரி வழங்கும் ஒரு அட்சயபாத்திரமாக பூர்ணம் திகழ்கிறார்.

தில்லியில் சுஜாதாவுக்கு பூர்ணம் விசுவநாதனை அறிமுகப்படுத்தி வைத்த பெருமை அடியேனையே சாரும். அப்போது அவர்கள் நட்பு சென்னை வந்தபிறகு ஒரு நாடகக்கூட்டணியாக மாறி இந்த அளவு விகசிக்குமென்று மூவருமே நினைத்ததில்லை.

கையில் லக்கேஜ் எதுவும் இல்லாமல் மேலுலகம் போன பூர்ணம், ஊர்தியை விட்டு இறங்கியதுமே, வழியில் தென்பட்ட தேவதையிடம், ‘அம்மா பரதேவதே! சுஜாதா எங்கே இருக்கார்?’ என்றுதான் கேட்டிருப்பார். ஆமாம், ஏழு மாதங்களுக்கு முன் மேலே போன சுஜாதா எழுதி தயாராக வைத்திருக்கும் புது நாடகத்தில் நடிக்கத்தான் போயிருக்கிறார்!

Saturday, June 6, 2009

வற்றுமா குற்றம்?

தினெட்டாம் நூற்றாண்டின் ஆங்கில எழுத்தாளர் ஹென்றி ஃபீல்டிங் ‘குற்ற நிகழவுகளுக்கான காரணங்களை களையெடு’ என்ற அறைகூவல் விடுத்தார்.

சமீபத்தில் நிதின் குமாரி என்ற விமானப்பணிப் பெண் சென்னை நொளம்பூர் குடியிருப்புக் பகுதியில் கோரமான முறையில் கொல்லபட்டது எல்வோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கும். பீஹாரிலிருந்து வேலை நிமித்தமாக சென்னையில் தங்கி தன்னம்பிக்கையோடு வாழ்ந்த இப்பெண்ணுக்கு ஏன் இந்த முடிவு? தனியாக நிர்பந்தத்தின் பேரில் வாழும் பெண்கள் அதுவும் பார்வையாக இருக்கக்கூடிய பெண்கள் என்றாலே அவதூறு சொல்வதற்கு கூசாத நபர்கள் சமுதாயத்தில் இருக்கிறார்கள். முதலில் சந்தேக மரணம் என்ற செய்தியில் பல ஆண்களோடு சகவாசம் இருந்தது, போதைப் பொருட்கள் உட்கொள்ளும் பழக்கம் உடையவர் என்று அவளைப் பற்றி அபாண்டமாக கூறப்பட்டது. புலன் விசாரணையில் அதே பகுதியில் வாழும் ஒரு வாலிபன் அந்த பெண்ணின் செல்போன் திருடுவதற்காக இந்த கோரக் கொலையை செய்தான் என்பது பல வியாக்கியானங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. திறம்பட விசாரணை செய்து குற்றவாளியை துரிதமாகக் கண்டு பிடித்ததற்கு சென்னை காவல்துறைக்கு சபாஷ் போடலாம்.

நிதின் குமாரியின் கொலை பல பாடங்களை நமக்குப் புகட்டுகிறது. வீட்டுக்கு கட்டுப்படாத இளைஞர்கள், அவர்களை கட்டுப்படுத்தத் தவறிய பெரியவர்களால் சமுதாயத்திற்கு எத்தனை பாதிப்பு என்பது முக்கியமான பாடம். அந்த குற்றவாளி பல சில்லறைத் திருடுகளில் ஈடுபட்டுள்ளான் என்பதைப் பற்றிய தகவல் சரக காவல் நிலையம் சேகரித்திருக்க வேண்டும். தனியாக வாழும் பெண்கள் அடிப்படை பாதுகாப்பு நெறிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது மற்றொரு பாடம். தெருவில் நடக்கும் பொழுதோ, வாகனம் ஓட்டும் பொழுதோ செல்போன் உபயோகிக்க கூடாது என்று காவல் துறை பல முறை எச்சரித்து வருகிறது. நடந்து கொண்டே செல்போன் பேசுபவர்களிடமிருந்து பலமுறை சமுக விரோதிகள் செல்போன்களை பறித்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அப்படி போன் பேச அவசியம் ஏற்பட்டாலும் நின்று இரண்டு வார்த்தை பேசிவிட்டு இருப்பிடம் சென்று பேசுவது பாதுகாப்பானது. எல்லோருடைய கண்படும்படி விலையுயர்ந்த செல்போனை அந்தப் பெண் உபயோகித்தது கயவன் கண்களிலும் பட்டு விபரீத முடிவு ஏற்பட்டது. அசிரத்தையாலும் அசட்டையாலும் ஒரு இளம்பெண்ணின் உயிர் பறிபோனது.

குற்றங்கள் ஏன் நிகழ்கின்றன, சரியான தடுப்பு முறைகள் என்ன, தனிமனிதனையும் திட்டமிட்டுக் குற்றப் புரிபவர்களையும் எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்பது சமுதாய வல்லுனர்களால் பல நூற்றாண்டுகளாக ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. காலப்போக்கிற்கேற்ப சமுதாய வளர்ச்சியைப் பொறுத்து குற்றப்பரிமாணங்களும் மாறிக்கொண்டு வருகின்றனவே ஒழிய குற்றம் ஏன் நடக்கிறது என்பதற்கு விடை கிடைக்காமல் இருக்கிறது.

டேவிட் ஆபிராஹம்ஸன் என்ற சமூகவியல் மேதை குற்ற நடப்பிற்கு காரணங்களை விகிதாச்சார முறையில் துல்லியமாக கணக்கிட முற்பட்டார். தனிமனிதனின் உள்ளக்குமுறல்கள், மன அழுத்தம் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலை இதனை சேர்த்து, சமுதாயக் கட்டுப்பாடு, தனிமனிதனின் நல்லியல்புகளின் எதிர்ப்பு சக்தியால் வகுத்தால் குற்றத்தின் பரிமாணம் புலப்படும் என்கிறார். அதாவது சமுதாயக் கட்டுப்பாடும், தனிமனித நற்பண்புகள் மேலோங்குதலும், குற்ற நிகழ்வுகளை குறையச் செய்யும். அதே சமயம் சமுதாயத்தில் ரம்யமான சூழல் உருவானால் தனி மனித மன அழுத்தம் குறையும். சுயக் கட்டுப்பாடு வளரும் நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலையும் எதிர்மறை விளைவுகளுக்கு வித்திடாது. இத்தகைய அடித்தளம்தான் சீர்மிகு குற்றமற்ற சமுதாயம் உருவாக வழிவகை செய்யும்.

தனிப்பட்ட அபிப்பிராயங்கள் ஒத்து இருந்தாலும், பொதுநலன் மேலோங்கினால்தான் சமுதாயத்தில் அமைதியான சூழல் உருவாகும். குடும்ப வாழ்க்கை, பள்ளிகள், கல்லூரிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், கேளிக்கை மற்றும் விளையாட்டு மையங்கள் போன்ற சமுதாயத்தின் நிலையான ஆதாரங்களின் கூட்டமைப்பின் மூலம் மனிதனிடையே நல்லிணக்கத்தைத் பரவச் செய்ய வேண்டும். தனி மனிதன் சுய கட்டுப்பாடு, நற்பண்புகள் பயிற்றுவித்தல் போன்றவை சமுதாய கூட்டமைப்பில் நடைபெற்றதால் தான் நிலைத்து நிற்கும்.

சமுதாயத்தில் அமைதி நிலை நாட்டுதலுக்கு மூன்று கட்ட நடவடிக்கை அவசியம் ஆகிறது. முதல் கட்ட நடவடிக்கையில் எத்தகைய மக்கள் குற்றவலையில் சிக்கக்கூடும் என்பதை கணித்து அவர்களுக்கு உதவிக்கரம் கொடுத்து சீரான பாதையில் எடுத்துச் செல்லுதல். இந்த நடவடிக்கையின் போது குற்றம் இன்னும் தலைதூக்கவில்லை, இந்த தருணத்தில் குற்றப்பாதையை தவிர்த்து நல்வழிகளில் இட்டுச் செல்லும் முயற்சி முக்கியமானது.

இரண்டாவது கட்டம் தண்டனையுற்றவர்களை சிறை இல்லங்களில் நல்வழிப்படுத்தும் முயற்சி. இதில் சிறைத்துறைக் களப்பணியாளர்கள், நன்னடத்தை பிரிவினர் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் இணைந்து குற்றம் புரிந்தவர்களுக்கு மனமாற்றம் ஏற்படுத்தி அவர்களுக்குள் உள்ள அசூயயை நீக்கி நற்பாதையை தெரிவு செய்ய உதவி நல்க வேண்டும்.

மூன்றாவது கட்டம் தண்டிக்கப்பட்டவர்கள் சிறையிலிருந்து வெளி வரும்பொழுது அவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பது, சமுதாயத்தோடு இணைவதற்கு ஏற்பாடு செய்வது. ஆக இந்த மூன்று நிலைகளிலும் தீர்க்கமான அணுகுமுறையோடு செயல்படவேண்டியது இன்றியமையாதது.

சமுதாயக்கட்டுப்பாட்டுக்குள் குற்றத் தடுப்பு முயற்சிகள் பிரதானமாகக் கருதப்படுகிறது. அந்தந்தப்பகுதி மக்கள் ஆரோக்கியத்துடன் மன உளைச்சலின்றி வாழ்க்கையை நடத்துவதற்க்கு ஏற்ற வகையில் நன்மை பயக்கக் கூடிய சூழல் உருவாக்கிட வேண்டும். குடியிருப்பு பகுதி அருகில் பள்ளிகள், எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் உடல் ஆரோக்கியத்திற்கான விளையாட்டு மையங்கள், சந்தோஷத்திற்கு மக்கள் கூடி உறவாடுவதற்கான கேளிக்கை மையங்கள் ஆனந்தமான சூழலை உருவாக்குவதற்கு அத்தியாவசியமானவை. 1884-ம் வருடம் இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரக் கிழக்குப்பகுதியில் முதலில் இத்தகைய திட்டம் விவாதிக்கப்பட்டு செயல் முறைக்கு வந்தது. அமெரிக்காவில் சிக்காகோ நகரில் மேலே கூறிய அடிப்படைக் கருத்தினை விரிவாக சமுதாயப் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. ஜப்பான் நாட்டில் சுமார் 40,000 தன்னார்வு தொண்டர்கள் இலவசமாக நன்னடதையாளர்களாக பணி புரிகிறார்கள். தாம் வசிக்கும் பகுதியில் குற்றத்தடுப்பு முறைகளை செயல்படுத்துகின்றனர்

தமிழ்நாட்டிலும் பாய்ஸ் க்ளப் என்று சிறார் மன்றங்கள் 1960-ல் இருந்து பல முக்கிய நகரங்களில் தோற்றுவிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொது மக்கள் நலனுக்காக சமீபத்தில் சென்னையில் அதுவும் வடசென்னையில் நிறுவப்பட்ட விளையாட்டு மையங்கள், கண்ணுக்கினிய பூங்காக்கள் வரவேற்கத்தக்கது.
மும்பாய், தில்லி, கொல்கத்தா, சென்னை போன்ற மாநகரங்களில் வேலைத் தேடி நகரத்திற்கு குடிபெயரும் மக்கள் அதிகரிக்கும்பொழுது புதிதாக குடிசைப் பகுதிகள் உருவாகுகின்றன. மும்பாயில் தாராவி, கொல்கத்தாவில் துறைமுகப் பகுதி என்று லட்சக்கணக்கான குடியிருப்புக்களைக் கொண்ட குடிசைப்பகுதிகள் உள்ளன. ஆனால் சென்னையில் ஒரே இடம் என்றில்லாமல் சுமார் 900 குடிசைப் பகுதிகள் நகரில் பரவலாக அமைந்துள்ளன. இது தவிர கடற்கரையொட்டி சுமார் 50 மீனவர் குடியிருப்பு பகுதிகள். இந்தப் பகுதிகளில் இயங்கும் “சிறார் மன்றங்கள்” அங்கு வாழும் இளைஞர்களுக்கு விளையாட்டு மையமாகவும் நல்லியல்புகளைப் புகட்டும் இடமாக காவல் துறையால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது, தமழகத்தில் 125 சிறார் மையங்கள் அரசு நிதி உதவியோடு இயங்குகிறது. இந்த மன்றங்கள் சிறப்பாக அமைந்திட தன்னார்வு தொண்டு நிறுவானங்களும் உதவுகின்றன. சென்னை மாநகரில் மட்டும் சுமார் 7 வயதில்ருந்து 17 வயதிற்குப்பட்ட சுமார் 7000 சிறார்கள் பயனடைந்து வருகிறார்கள்.

ஆந்திர மாநிலத்திலும் குற்றங்களில் ஈடுப்படக்கூடியவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு மாற்று வழி அமைக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்தகைய நலன் பேணும் திட்டங்களில் தனிமனிதன் குற்றங்களில் ஈடுபடாமல் தடுப்பதற்கும் கெடுதலை எதிர்க்கும் சக்தி வளர்வதற்கும் உதவும்.

குற்றவாளிகள் தண்டனைப் பெற்ற பிறகு அவர்களை திருத்தும் பணி சிறை இல்லங்களில் நன்னடத்தைப் பிரிவு அலுவலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து சிறைக் களப்பணியாளர்கள் நிறைவு செய்ய வேண்டும். சிறை என்றாலே எல்லோருக்கும் ஒரு அச்சம் விளைவதற்குக் காரணம் சிறை கொடுமைப் படுத்தும் இடம் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பது தான். சிறையிலிடப்படுவதுதான் தண்டனையே தவிர அதற்கு மேல் பிராயச்சித்தமாக தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் தவறானது. அதற்கு மாறாக சிறை இல்லவாசிகளின் உயிர், கண்ணியம், சமத்துவம் ஆகிய ஆதார மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

சிறையிலுள்ளவர்களை கண்ணியமாக நடத்துவது சமுதாயத்தின் உயரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்டிருக்கும் நிலையில் இல்லவாசிகளை நல்வழிப்படுத்தும் பணி மிகக் கடினமானது. ஆதலால் தான் மேலைநாடுகளில் சிறை அடைப்பு என்றில்லாமல் கட்டாய சமுதாயப்பணி மாற்று தண்டனையாக கொடுக்கப்படுகிறது. சிறு குற்றங்களுக்காக சிறைவாசம் கூடாது என்ற அடிப்படையில் இங்கிலாந்து நாட்டில் மூன்று மாதங்களுக்கு குறைவாக சிறை தண்டனை 12,000-மாக 1960 வருடத்தில் இருந்தது, படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது ஆயிரத்துக்குக் கீழ்தான் சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகின்றன. இது நீதிமன்ற அதிகாரத்திற்குட்பட்டது. இத்தகைய சமுதாயமேவிய பணிகளை மாற்று தண்டனையாக வழங்குதல் நடைமுறைப்படுத்த வேண்டும்.

சிறைக்கதவு அடைக்கும் பொழுது ஏற்படும் விரக்தியைவிட சிறைக்கதவு திறக்கும்பொழுது வெளிவரும் நபருக்கு மனவேதனை அதிகமாகிறது என்பது உண்மை. சிறைக்கு செல்வதே வாடிக்கையாகக் கொண்டவர்களுக்கு இது பொருந்தாது. அவர்களுக்கு சிறைவாசம் பழகிவிடுகிறது, உணர்ச்சிகளும் மரத்து விடுகின்றன. ஆனால் சிறைக்கு வரும் பெரும்பாலானவர்கள் சந்தர்ப்ப வசத்தால் சிக்கியவர்கள். அவர்கள் சமுதாயத்தோடு இணைவதற்கும், மாற்று வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதற்கும் மிக கவனமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

விடுதலை பெற்று வருபவருக்கு முதல் பிரச்சனை பொருளாதாரமின்றி எவ்வாறு வாழ்வை துவங்குவது என்பதுதான். மற்றது சமுதாயம் தன்னை புறக்கணித்து விடும் என்ற பயம். குற்றம் புரிந்தவர்கள் சமுதாயக் கட்டுப்பாட்டிலிருந்து விலகியதால் ஊனமுற்றவர்கள் என்று கருதி, ஆனால் இப்போது நல்வழியில் வந்துள்ளார்கள் என்று அவர்களை சகஜ நிலைக்கு கொண்டுவர சமுதாயம் முன்வர வேண்டும். அவர்கள் மீண்டும் குற்றவழிப்பாதையில் செல்லாமல் இருப்பதற்கு உதவிக்கரம் கொடுக்கப்பட வேண்டும்.

சிறையிலிருந்து வெளி வருபவர்களுக்கு மாற்றுவழி கொடுப்பதற்கு சென்னை உட்பட 16 மாவட்டங்களில் உதவி மையங்கள் உள்ளன. பல தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் இந்த கூட்டுறவு மையங்களோடு இணைந்து செயல்படுகின்றன.

குற்றங்கள் நடவாமல் தடுப்பதில்தான் விவேகம் இருக்கிறது. சுய உந்துதலோடு காவல்துறையினர் செயல்பட்டால் குற்றங்கள் நடவாமல் தடுக்க முடியும். நிதின் குமாரியின் கொலையிலும் குற்றவாளி பராரியாக திரிந்து கொண்டிருந்தவன், சிறு குற்றங்களில் ஈடுபட்டவன். தக்க தருணத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் பெரிய குற்றம் நிகழாமல் தடுத்திருக்கலாம். செய்ததைவிட செய்யாமல் ஏன் சந்தர்ப்பத்தை நழுவ விட்டோம் என்ற ஏக்கம் தான் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் கண்கூடாகத் தெரிகிறது.

வற்றுமா குற்றம் என்ற கேள்விக்கு விடை நமது கையில் இருக்கிறது. ஒருங்கிணைந்து செயல்பட்டால் குற்றம் பற்றில்லாமல் வற்றுவது உறுதி.

இந்த கட்டுரை தினமணி நாளிதழில் 06.06.2009 அன்று பிரசுரிக்கப்பட்டது.