Thursday, June 25, 2015

"கிடைத்தற்கரிய பொக்கிஷம்" - Dinamani TamilNewspaper Article Published on 25.06.2015


      இனக்கலவரம் தூண்டுவது எளிது ஆனால் ஒற்றுமையை வளர்ப்பது கடினம்.  ஜீன் 17, இருபத்தியொரு வயதே நிரம்பிய டைலன் ரூஃப், தென் கரோலினாவில் கருப்பர்களுக்கான திருச்சபையில் நுழைந்து அநியாயமாக 9 பக்தர்களை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அமெரிக்காவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இனக்கலவரம் மீண்டும் தலை தூக்குமோ என்ற பயம்.
     மே மாதம் கராச்சியில் பஸ்ஸில் பயணித்த 43 இஸ்லாமியர்களை மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.  இப்போது ஆப்கானிஸ்தானில் பாராளுமன்ற தாக்குதலில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர்.  இத்தகைய வன்முறைக்கு என்ன காரணம்? டைலன் ரூஃப், மிகப்பழமையான ’மதர் இம்மானுவேல்’ என்ற கருப்பர்களின் சர்ச்சுக்கு கொலை செய்யும் நோக்கத்தோடு சென்றபோது பைபிள் வகுப்பு நடந்து கொண்டிருந்தது.  கூடியிருந்தவர்கள் டைலன் ரூஃபை வரவேற்று உட்காரச் செய்தனர்.  அவர்களது கனிவான உபசரிப்பு அவனிடம் ஒரு கணம் மனமாற்றத்தை ஏற்படுத்தியது.  ஆனால் நோக்கம் கருப்பர்களைக் கொன்று இனக்கலவரத்தை தூண்டுதல், அதையே குறிவைத்து பாதகச் செயலில் ஈடுபட்டான்.  ஒன்பது கருப்பர்களை சுட்டு வீழ்த்தினான்.
     இவ்வாறு பயங்கரவாதத்தில் ஈடுபடுவர்கள் ஒரு வித மனநிலைக் குன்றியவர்கள்.  தன்னலம் மிகுதல், அதன் காரணமாக மனிதர்களை விரோதிகளாக பார்க்கும் மனோபாவம், ஒட்டுரவற்ற வாழ்க்கை, சமுதாயத்தின் மீது வெறுப்பு இவையெல்லாம் பயங்கரவாதிகளின் அடையாளங்கள்.
     மனநிலை மாற்றம் என்பது ஒழுக்கமான வாழ்க்கை மூலமும் சிந்தனைகளை நேர்வழியில் ஒரு முகம்படுத்துதல் மூலம் ஏற்படும்.  ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த வருடம் செப்டம்பர் 27ல் உரையாற்றிய பிரதமர் பயங்கரவாதம் என்ற அழிவுப்பாதையை தவிர்த்து முன்னேற்றம் என்ற வளமைப் பாதையில் பயணிக்கவும், இயற்கையை நேச உணர்வோடு அணுகி அதன் வளங்களை எல்லோருடைய பயன்பாட்டிற்காக பகிர்ந்து கொள்வதின் அவசியத்தை வலியுறுத்தினார்.  இயற்கை வளமையும் சுற்று சூழலையும், சமுதாயத்தையும் நேச உணர்வோடு பார்க்கும் பக்குவத்தை ஏற்படுத்தவல்லது யோகா என்னும் உன்னத பயிற்சி.  சிந்தனை, ஆழ்மன உணர்வு, செயல்கள் இவற்றை ஒருமுகப்படுத்துகிறது.  செயல்களில் நிதானத்தை ஊக்குவிக்கிறது.  சமுதாயத்தோடு ஒன்றி வாழும் மனப்பக்குவத்தை வளர்க்கிறது. உலக நாடுகள் யோகா தினம் அனுசரிக்க வேண்டுகோள் விடுத்தார்.
     சர்வதேச அளவில் ஜீன் 21 ம் தேதி சக்தி தரும் சூரியன் அதிகமாக பிரகாசிக்கும் நாளில் யோகாதினமாக அனுசரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை டிஸம்பர் 11 2014ல் ஒருமனதாய் தீர்மானம் மூலம் அங்கீகாரம் அளித்தது.  ஜீன் 21 உத்தராயணத்திலிருந்து தக்ஷிணாயத்திற்கு பிரபஞ்சம் சஞ்சரிக்கும் நல்ல நாளில் உலகெங்கிலும் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது இந்தியாவிற்குப் பெருமை.
   தில்லியில் 35985 யோகா ஆர்வலர்கள், 84 நாடுகளிலிருந்து 21 ஆசனங்கள் 35 நிமிடம் செய்து உலக சாதனை நிகழ்த்தினர்.  கின்னஸ் சாதனை அளவுபடி இதுதான் பெரும் எண்ணிக்கை கொண்ட யோகா வகுப்பு. இரண்டாவது சாதனை 84 நாடுகளிலிருந்து ஆர்வலர்கள் பங்கு கொண்டது.
     சாதனை ஒருபுறம் இருக்க சில எதிர்மறைக் குரல்களும் எழுந்தன.  இந்துமத கோட்பாடுகள் கொண்ட யோகப் பயிற்சி மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பது தான் முக்கிய வாதம். யோகா பயிற்சி மதத்திற்கு  அப்பாற்பட்டது.  மனதையும் சிந்தனையையும் உடலோடு ஒருமுகப்படுத்துவது,  கட்டுங்கடங்காத மனம் நினைவலைகளின் பாய்ச்சலை கட்டுக்குள் கொண்டுவருவது யோகப் பயிற்சி.  இது எல்லா மனிதர்களுக்கும் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பொருந்தும்.  இஸ்லாம் தோழர்களின் ஐந்து முறை தொழுகை மனம் லயித்து செய்கிறார்கள்.  யோகா முறையில் இது வஜ்ராசன அமர்வு.  யோகா பிரிவுகள் கர்ம யோகம், ஹட யோகம், அஷ்டாங்க யோகம், ஞான யோகம், பக்தி யோகம், லய யோகம்.  கிறிஸ்துவர்கள் பக்தி சிரத்தையுடன் ஆலயங்களுக்கு செல்வது மனதை கட்டுபடுத்தி ஜெபிப்பதும் ஒரு வித யோக நிலையே ஆகும்.  யோக பாதையை ஒரு வட்டத்திற்குள் அடைக்க முடியாது.  அது எல்லைகளுக்கு அப்பாற்பட்டு ஒருவரை உன்னத நிலைக்கு அழைத்துச் செல்ல வல்லது.
     முனிவர் பதஞ்சலி இயற்றிய யோக சூத்திரம் 196 யாப்புகள் கொண்டது.  முதன் முதலாக அரேபிய மொழியில் ’அல்பரோனி’ என்ற அறிஞரால் மொழி பெயர்க்கப்பட்டது.  அதன் பெயர் ‘கிதாப் பதஞ்சலி’. மொஹமத் கஜினி மொழிபெயர்ப்பிற்கு ஆணையிட்டதாக சரித்திரம்.
   திருமூலர் திருமந்திரத்தில் யோகக் கலையைப்பற்றி ஆத்மார்த்தமாக உணர்த்தியுள்ளார்.  உடம்பார் அழியில் உயிரார் அழிவர், ஆதலால் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிவோம் உடம்பை வளர்ப்போம் உயிரை வளர்ப்போம் என்கிறார்.  ஏனெனில் உடம்பினுக்குள்ளே உறு பொருள், உலகத்தை ஆட்டிப்படைக்கும் சக்தி உள்ளது, அந்த உத்தம சக்தியிருப்பதால் உடம்பினை, செய்கைகளுக்கு உகந்ததாக பராமரிப்பதின் முக்கியத்துவம் உணரப்பட வேண்டும்.  யோக முறையின் மூலம் மனதையும் உடலையும் கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.
     மன அழுத்தம் பலரை பாதிக்கிறது.  மன அழுத்தம் நிறைந்த துறை காவல்துறை.  அன்றாடம் பதட்டம் சூழ்ந்த உலகில் பணியாற்ற வேண்டிய பொறுப்பு காவலர்களுடையது.  கொலை கொள்ளை, களவு, பேரிடர் தாக்கம், உயிரிழப்பு இவற்றையே  நாள் தோறும் பார்த்து பிரச்சனைகளை கையாள்வது தீர்வு காண்பது என்பது மிகப்பெரிய சவால், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அழுத்தம் விளைவிக்கக் கூடிய பணி.  பரபரப்போடு செயல்பட வேண்டும்.  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கால தாமதம் கூடாது.  போக்குவரத்து நெரிசலில் பயணிப்பதே மன அழுத்தத்தை கொடுக்கிறது.  அதைவிட பன்மடங்கு இறுக்கம் நிறைந்த ஓய்வில்லாத பணி காவலர் பணி.
     யோகப் பயிற்சி காவல்துறைக்கு இன்றியமையானது.  மன அழுத்தத்தை சீரமைக்கும் நிதானத்தை அளிக்கும்.  வாழ்க்கையின் அவலங்களை காணும் போது சபலங்களின் வலையில் விழாமல் நம்மையே பாதுகாத்துக் கொள்வது அவசியம். சபல வலையில் வீழ்ந்த பலர் காவல்துறையில் மீள முடியாத நிலையில் மடிந்த சான்றுகள் பல. இத்தகைய நோயாளிகளுக்கு யோகா ஒரு அருமருந்து.
     சந்தர்பவசம் காரணமாகவும், ஏழ்மை, அறிவின்மையால் குற்றம் புரிபவர்கள் ஏராளம். இந்தியாவில் 1494 சிறைகள் உள்ளன.  தமிழகத்தில் மட்டும் 134 சிறைகள். சராசரி எல்லா சிறைகளிலும் சுமார் நான்கு லட்சம் குற்றம் புரிந்தவர்கள் உள்ளனர்.  அவர்களில் பொரும்பான்மையோர் ஏதோ ஒரு விதத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். குற்றம் புரிவதே மனநிலை பாதிப்பின் வெளிப்பாடு என்கிறார்கள் மனதத்துவ நிபுணர்கள். சிறைகளில் யோகா பயிற்சி பல தொண்டு அமைப்புகள் உதவியோடு நடத்தப்படுகின்றது.  ஈஷா யோகா, வாழும் கலை அமைப்பு, சத்ய சாய், உலக அமைதிகாப்பகம் போன்ற பல தொண்டு நிறுவனங்கள் சிறை இல்லங்களில் யோகா பயிற்சியும் சுவாச அப்யாசங்களும் நடத்துகின்றன.  குற்றம் புரிந்தவர்கள் திருந்தி சமவாழ்வில் சமுதாயத்தோடு இணைவதற்கான நல்லியல்புகளை பயிற்றுவிக்கும் இடம் சிறைச்சாலை.
   யோகாவின் சிறப்பு என்னவென்றால் அந்த பயிற்சி நம்மை நாமே அறிந்து கொள்வதற்கு உதவுகிறது. தனித்திருந்து அமைதியாக மூச்சைக் கட்டுப்படுத்தி அமரும் போது ஒருவித சாந்தம் சூழ்கிறது.  செய்த காரியங்களின் நல்லவை, கெட்டவை புலப்படுகிறது. பூரண தன்னிலை உணர்வு ஓங்கினாலே நேரான பாதையை அடையாளம் காட்டும், திருந்தி வாழ உத்வேகம் பிறக்கும்.  இது சிறைச்சாலை மட்டுமல்ல நமது அன்றாட வாழ்க்கையிலும் தவறுகளைக் களைந்து சீரான வாழ்க்கையை அமைத்துக்  கொள்ள உதவும் என்பது உண்மை.  யோக பயிற்சிக்குப் பிறகு பல இல்லவாசிகள் மனதிலிருந்து பாரம் இறங்கியது போல ஆனந்த கண்ணீர் வடித்ததைப் பார்த்திருக்கிறேன்.
     யோகி ஜக்கி வாசுதேவ் அழகாக கூறுவார் இமாலய மலைத் தொடர், இந்துமஹா சமுத்திரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் வாழ்பவர்கள் இந்தியர்கள் என்ற மிகப்பெரிய சமுதாயக் கூட்டமைப்பு, அவர்கள் தொன்று தொட்டு வாழ்க்கையின் உண்மை நிலையை அறிவதற்காக பாடுபட்டனர்.  ஒரு கோட்பாட்டின் மீது நம்பிக்கையை விட இயற்கையின் பல பரிமாணங்களின் விந்தையை உணர்ந்து தெளிவதே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டவர்கள்.
     சொர்கத்தை அடைவதை விட உன்னத விடுதலையே உயரிய குறிக்கோளாக கொண்டவர்கள் இந்தியர்கள் என்று அழகாக குறிப்பிட்டுள்ளார் ஜக்கி வாசுதேவ். யோக பயிற்சி அத்தகைய நிலையை உணர்வதற்கு வழிவகுக்கிறது.  யாமம், நியமம், ஆசனம், ப்ராணாயாமம், நல் ஆகாரம், தாரணம், தியானம், சமாதி என்று எட்டு நிலைகள் வழியே நம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவுகிறது.
     மேற்கத்திய நாடுகளுக்கு யோகக் கலையை பரவச் செய்த மஹான் சுவாமி விவேகானந்தர்.  சிகாகோ நகரில் சர்வ மதங்கள் கூட்டமைப்பில் உலக ஒற்றுமைக்காக எல்லோரையும் கவரும் விதத்தில் சொற்பொழிவாற்றி இந்தியாவின் அருமை பெருமைகளை உலகிற்கு எடுத்துரைத்தார் விவேகானந்தர்.  யோகப் பயிற்சியின் உயர் நோக்கத்தையும் அது மனித சமுதாயத்திற்கு நல்லிணக்கம் ஏற்படுத்த வல்லது என்பதையும் உணர்த்தினார்.
     வியட்நாம் யுத்தம், அமைதியின்மை நம்பிக்கையிழப்பு 1960,70 களில் பல நாடுகளில் இளைஞர்களை பாதித்தது.  ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்ற அடக்கமான வாழ்க்கை முறையை விரும்பும் இந்தியாவின் மீது மேல் நாட்டவர் பார்வை திரும்பியதில், யோகா என்ற தியான வழி பலரையும் கவர்ந்தது.  மேலை நாடுகள் குறிப்பாக அமெரிக்காவில் யோகா பயிற்சி மையம் இல்லாத நகரே இல்லை என்ற அளவில் வளர்ந்துள்ளது.  அமெரிக்காவில் சுய உதவியை ஓங்கச் செய்யும் சொற் பொழிவாளர் தீபக் சோப்ரா, யோகா அடுத்த தலைமுறையின் அடையாள மொழியாக உருவெடுத்துள்ளது என்று பெருமிதப்படுகிறார்.  இளைஞர்களுக்கு ஏற்றவாறு, ’பவர்’ யோகா, கலை யோகா, ’ஆத்லடிக்’ யோகா என்று பல வகையில் யோகாசனப் பயிற்சி அளிக்கும் மையங்கள் உருவாகியுள்ளன.
     திருநெல்வேலி பத்தமடையில் பிறந்த குப்புசாமி என்ற தமிழர் மருத்துவர் பட்டம் பெற்று தமிழ்நாடு மலேசியாவில் டாக்டராக பணியாற்றி, 1924ம் வருடம் தியானம் புரிய ரிஷிகேஷ் அடைந்து துறவறம் பூண்டு சுவாமி சிவானந்தராக உருவெடுத்தார். சிவானந்த ஆசிரமக்கிளைகள் உலகில் பல நாடுகளில் உள்ளன.  மக்கள் சேவை ஒன்றே தாரக மந்திரமாகக் கொண்ட இந்த அமைப்பில் யோகா பயிற்சி எல்லா இடங்களிலும் அளிக்கப்படுகிறது. சுவாமி சிவானந்தர் கூறியதாவது யோகா ஒருவரை நல்ல மனிதராக்குகிறது நற்செயல்கள் புரிய வைக்கிறது. உண்மைதான்!

   யோகக் கலை அறிவுசார்ந்த முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாக பாதுகாத்து வளர்த்த கலை. ‘அன்மோல் விராசத்’  விலைமதிப்பற்ற பொக்கிஷம் இந்தியா உலகிற்கு அளித்துள்ளது.