Monday, August 4, 2014

நீர்மலமே பொதுநலம் - தினமணி கட்டுரை 4.08.2014


    வறுமையின் எதிர்மறை செல்வமா என்றால் செல்வமல்ல, நீதியும் நியமும் தான் வறுமையை வெல்ல வல்லது என்பது தான் உண்மை.     
       2011-ன்படி ஜனத்தொகை கணக்கெடுப்பில் ஒரு முக்கியமான புள்ளிவிவரம் கொடுக்கப்பட்டுள்ளது.  67 சதவிகிதம் கிராம குடியிருப்புகளில் உள்ளவர்கள் வெட்ட வெளியில்தான் வெளிக்க வேண்டிய அவல நிலை நமது நாட்டில் தொடர்கிறது.  எந்த ஒரு பிரச்சனை எடுத்துக் கொண்டாலும் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் என்பதற்கு இது மேலும் ஒரு எடுத்துக்காட்டு.
    நகரங்களில் சகட்டு மேனிக்கு மக்கள் இயற்கை அழைப்பிற்கு பொது இடங்களில் ஒதுங்கிவிடும் அருவருப்பான காட்சி சகஜமாகிவிட்டது.  “இங்கு மலம் கழிக்கக் கூடாது” என்று எச்சரிக்கையிட்ட இடங்களிலேயே கூச்சமின்றி இருந்துவிடுகிறார்கள். இதில் ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடு இல்லை.  பல லட்சம் பெறுமான காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு நடைபாதையில் அசுத்தம் செய்வது, குழந்தைகளை உட்கார வைக்கும் நாகரிக பெண்களையும் பார்க்கலாம்.
    2011 ஆண்டு ஜனத்தொகைக் கணக்கெடுப்பின்படி 16.78 கோடி குடியிருப்புகளில் 11.30 கோடி குடியிருப்புகளில் கழிப்பறை வசதியில்லை என்று தெரியவந்துள்ளது.  ஜார்கண்ட் மாநிலத்தில் 91.67% கிராம குடியிருப்புகள், சட்டிஸ்கர் மாநிலத்தில் 85.15% கிராம குடியிருப்புகளில் கழிப்பறை வசதி இல்லாதது மட்டுமல்ல அந்த மாநிலங்களில் பொது கழிப்பறை வசதியும் செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
    திறந்த வெளி அசுத்தமாவதால் அந்தந்த சுற்றுப்புறம் சுகாதாரமற்ற நிலைக்கு தள்ளப்படுகிறது.  சென்னையில் சுற்றுலா பொருட்காட்சி மையம் அருகில் உள்ள பிரதான சாலை முத்துசாமி பாலம் அகலமான நடைபாதை உள்ளது.  ஆனால் அதில் நடக்க முடியாது.  பார்க்க சகிக்காத காட்சி.
ஊட்டச்சத்து குறைவால் இந்தியாவில் உள்ள 45 சதவித குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சில வருடங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.  இதற்கு முக்கிய காரணம் பொது சுகாதாரத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் திறந்த வெளி கழிப்பிடங்கள்.
    இத்தகைய திறந்த வெளிதான் தெரிந்த வழி என்ற நிலை குடிசைவாழ் மக்களை மட்டுமல்ல எல்லோரையும் பாதிக்கிறது.  திறந்த வெளி அசுத்தங்களிலிருந்து பரவும் கிருமிகள் சொகுசான ‘அமுல்பேபி’ மாடி வீட்டுக் குழந்தைகளையும் தாக்கும்.  தாயின் கருவில் இருக்கும் வரை குழந்தையை நன்கு வளரச் செய்து நோய் எதிர்ப்பு சக்தியோடு இயற்கை நமக்கு அளிக்கிறது.  நலம் தரும் பாக்டீரியாக்கள் நமது உடலில் ஜீரணத்திற்கும் ஊட்டச்சத்தை உணவிலிருந்து உடல் வளர்ச்சிக்கு கிரகிப்பதற்கும் அசுத்தங்களை வெளியேற்ற பயன்படுகிறது.  இயற்கையாக நன்மை பயக்கும் நுண்மங்கள்  நல்ல மண்ணிலும் காய்கறிகளிலும் தானியங்களிலும் உள்ளன.  சுத்தமான ஆற்று மண்படுகையில் குழந்தைகள் மண்ணில் விளையாட வைத்தனர் நமது முன்னோர்கள்.  சுத்தமான சுவாசம், ரம்யமான பொழுதுபோக்கு, நன்மை பயக்கும் நுண்மங்களின் சகவாசம் கிடைத்தது.  கண்ணன் மண்ணில் விளையாடி அதையே வாயில அள்ளிப்போட்டு யசோதையின் கோபத்திற்கு ஆளான கதை எவ்வளவு தரம் கேட்டாலும் நடன நிகழ்ச்சியாக பார்த்தாலும் அலுக்காது.  அதன் உட்கருத்து கண்ணன் தன் பிஞ்சுவிரல்களால் அளாவி வாயில் திணித்த மண்ணில் தான் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அடங்கும் என்பதுதான்.  அத்தகைய நன்மை பயக்கும் சூழல் இப்போது இல்லை.  இருப்பதையும் கெடுப்பது திறந்த வெளி அசுத்தம்.
   
    நமது நாட்டில் விளையும் தானியங்கள் பழவகைகள் காய்கறிகள் அதை வைத்துதான் உணவுப்பழக்கம், உணவு வகைகள் காலங்காலமாக செப்பனிடப்பட்டு உருவாகியுள்ளது. சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு அதிக ஈரப்பதம் கலந்த உணவு உட்கொள்கிறோம்.  ஆனால் மேலை நாடுகளில் உலர்ந்த உணவு வகைகள். நமது உணவு வகையில் நன்மை பயக்கும் நுண்மங்கள் உள்ளன,  எல்லா ருசியும் கலந்திருப்பதால் ஜீரணிக்க உதவும் பாக்டீரியாக்கள் உணவுக் குழாயிலும் குடல் பகுதிகளிலும் குடி கொண்டு செரிமானத்திற்கு உதவுகின்றன.  அத்தகைய உணவு வகைகளை மறந்து வெளிநாட்டு உணவு வகைகளின் மோகத்தால் தேவையான ஊட்டச்சத்து வசதியான குழந்தைகளுக்கும் கிடைப்பதில்லை.
    விவசாயத்திலும் அதிகமான ரசாயன உரங்கள் மண்ணின் இயற்கையான வளத்தை பாதிக்கின்றன.  போதாதற்கு பூச்சி மருந்து வேறு தெளிக்கப்படுகிறது.  பூச்சி கொல்லி எவ்வாறு மருந்தாகும்!  மனிதன் உட்கொள்ள முடியுமா? இது சர்வ சாதாரணமாக பயிர்களுக்குத் தெளிக்கப்படுகிறது.  அதைத்தான் உட்கொள்கிறோம், இதனால் மேலும் பல உடல் உபாதைகளுக்கு ஆளாகிறோம்.
    இயற்கை விவசாயி நம்மாழ்வார் எவ்வாறு ஒவ்வொரு உயிரினமும் இயற்கை பாதுகாப்பிற்கு அவசியம் என்பதை அழகாகக் கூறுவார்.  ஒரு தும்பியை எடுத்துக்கொண்டால் அது கொசு முட்டையை தின்று கொசுப் பரவாமல் தடுக்கும். ஆனால் பூச்சிக் கொல்லியால் தும்பிகள் அழிந்து விட்டன.  கொசு பரவலாக பெருகி அதை அழிக்க மேலும் ரசாயனத்தை உபயோகிக்கிறோம்.  இதுவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு முக்கிய காரணம்.
1999 –ல் மத்திய அரசு நிர்மல் பாரத் அபியான் என்ற சுகாதார திட்டத்தை அறிமுகம் படுத்தியது.  முழுமையான கழிவு நீக்க ஏற்பாடு என்ற திட்டம் இதற்கு முன்னோடியாக இருந்தது.  அத்திட்டத்தின்படி 2017 ஆம் ஆண்டுக்குள் திறந்தவெளி கழிக்கும் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பது குறிக்கோளாக வைக்கப்பட்டது.  அந்தந்த பகுதி மக்களே முன்வந்து சுகாதார முறைகளை கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அவர்களுடைய அன்றாட வாழ்க்கை முறையை ஆராய்ந்து சுகாதாரத்திற்கு ஏதுவாக மாற்றம் கொண்டுவருவது, கலாச்சார நிலைகளை மனதில் கொண்டு நல்வாழ்விற்கு வழிவகுப்பது ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள்.
    மராட்டிய மாநிலத்தில் இந்த திட்டம் துவங்கப்பட்டு 2000 கிராம பஞ்சாயத்துகளில் திறந்த வெளி கழித்தல் பிரச்சனை ஒழிக்கப்பட்டு விட்டது வரவேற்கத்தக்கது.  இந்த திட்டத்தை நன்கு நிறைவேற்றும் கிராம பஞ்சாயித்துகளுக்கு பரிசு கொடுக்கப்படுகிறது.  வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், ஒடுக்கப்பட்ட பிற்படுத்துப்பட்ட மக்கள், மாற்றுத் திறனாளிகள் அவர்களது குடியிருப்புகளில் கழிப்பறை வசதி செய்து கொடுக்க இத்திட்டம் வழிவகுக்கிறது.  இது மட்டுமல்லாது கிராம துவக்கப் பள்ளிகள், அரசு பள்ளிகள், அங்கன்வாடிகள், மக்கள் கூடும் இடங்களில் கழிப்பறை வசதி நிர்மாணிப்பது இத்திட்டத்தில் அடங்கும்.
    இந்த சமுதாய சுகாதாரப் பிரச்சனைக்கு மனித உரிமை சம்மந்தப்பட்ட பரிமாணமும் உண்டு.  மனித மலத்தை தலைச் சுமையாக அகற்றும் பரிதாபம் நமது நாட்டில் தான் இன்னும் நீடிக்கிறது.   இந்தியாவில் உள்ள பல கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் உலர்ந்த கழிப்பறைகளில் உள்ள மலங்கள் மனிதர்களால் அகற்றப்படுவது வேதனை அளிக்கும் விஷயம் மட்டும் அல்ல மனித உரிமை மீறலும் ஆகும். 1993-ம் வருடம் கைகளால் அசுத்தங்கள் அகற்றும் முறை ஒழிப்புச் சட்டம் மத்திய அரசால் இயற்றுப்பட்டு ஆறு மாநிலங்கள் ஆந்திரா, கோவா, கர்நாடகாக, மஹராஷ்ட்ரா, திரிபுரா, மேற்கு வங்காளம், மற்றும் யூனியன் பிரதேங்களிலும் அமலாக்கத்தில் உள்ளது.  இவ்வாறு மனிதர்களை மலங்களை அகற்றுவதற்கு உட்படுத்தினால் தண்டனை ஒரு வருடம் அபராதம் ரூபாய் 2000/- என்று விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் சட்டத்தில் இந்த இழிவு முறையை ஒழிப்பதற்கான மாற்று நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    நகரங்களில் சாக்கடையில் உள்ள கழிவுப் பொருட்களை அகற்ற இப்போது இயந்திரங்கள் உபயோகத்தில் உள்ளன, முன்பு பணியாளர் குழியில் உள்ளே சென்று அடைப்புகளை கையால் அகற்றுவார்.  உடம்பில் கிருமிகள் தாக்காமல் இருக்க உப்புப் பசையை உடம்பில் தெளித்து இறங்குவார்.  கமலஹாசனின் தசாவதாரம் படத்தில் சாக்கடை கழிவு நீக்கும் பணியாளர்களை இணைத்து வயிற்றில் உப்புப் பூசிக் கொள்ளும் காட்சி வரும்.  நோய் தாக்கமல் இருக்க உப்புப் பசைதான் முதல் பாதுகாப்பு.
    1214 ம் வருடத்திலிருந்து ஐரோப்பா நாடுகளில் உலர்ந்த கழிப்பறையிலிருந்து மனிதர்களால் மலங்களை நீக்கும் முறை இருந்துள்ளது.  1596ம் வருடம் ஜான் ஹாரிங்டன் தண்ணீர் மூலம் அசுத்தங்களை வெளியேற்றும் வழியை கண்டு பிடித்தார். இந்தியாவில் சமூகத்தில் ஒரு பகுதியினர் இந்த தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.  மஹாத்மா காந்தி அவர்கள் மனிதர்கள் மலம் நீக்கும் முறைக்கு எதிராக முயற்சிகள் எடுத்தார். சபர்மதி ஆசிரமத்தில் தானே முன்நின்று எல்லா கழிப்பறைகளையும் சுத்தம் செய்து,  அவரவர் சுத்தம் செய்ய கட்டுப்பாடு விதித்தார்.
    நிர்மல் பாரத் அபியான் திட்டத்திற்கு  12-ம் ஐந்தாண்டு திட்டடத்தில் ரூபாய் 37,159 கோடி ஒதுக்கப்பட்டு கழிப்பறை கட்டும் திட்டம் நிறவேற்றப்படவுள்ளது. சமுதாய பங்களிப்பும் ஒத்துழைப்பும் இத்திட்டம் வெற்றியடைய மிக அவசியம்.  அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
    “சுலப் சௌசாலயா” என்று 1970-ல் டாக்டர் பிந்தேஷ்வர் பாடக் என்பவர் பொது இடங்களில் மக்கள் சுலபமாக உபயோகிக்க கழிப்பிடங்கள் நிறுவினார்.  இதன் முக்கிய அம்சம் விஞ்ஞான முறையில் கழிவுப் பொருட்களை அகற்றும் தொழில் நுட்பம்.  குறைந்த கட்டணம், சுகாதார பராமரிப்பு பலருக்கு வேலைவாய்ப்பு என்பதால் பல நகரங்களில் இச்சேவை மக்களால் வரவேற்கப்படுகிறது.  ஐக்கிய நாடுகளின் பொது மக்கள் குடியிருப்பு மையம், ‘சுலப்’ சேவையை வெகுவாக பாராட்டியுள்ளது.  இச்சேவையின் மூலம் நமது நாட்டில் 240 நகரங்களில் கழிவுப் பொருட்கள் அகற்றும் முறை சுலபமாகிவிட்டது. 
மனிதவளம் மேம்பாட்டிற்கு சுற்றுப்புற சுகாதாரம் மிக முக்கியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மனிதவள மேம்பாடு குறியீட்டில்  உலக நாடுகளில் நமது நாடு 134-ம் நிலையில் உள்ளோம் என்பது நம்மை இடிக்க வேண்டும்.
    பொது இடங்களில் அசுத்தம் செய்யும் போக்கு தமிழ் நாட்டில் அதிகம் உள்ளது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. அண்டை மாநிலமான கோரளாவில் இந்த அளவில் சாலைகளை மக்கள் அசுத்தம் செய்வதில்லை. கண்ட இடத்தில் குப்பை போடுவதில்லை.   முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன் பொது இடங்களை அசுத்தம் செய்தால் சிறு குற்றமாக கருதி போலீஸ் வழக்குப் போடுவார்கள், பயம் இருந்தது. இப்போது காவல்துறையினருக்கு வாகனத் தணிக்கைக்கே நேரம் போதவில்லை!
சைனாவை பல முன்னேற்ற நடவடிக்கைக்கு உதாரணமாக ஒப்பிட்டு கூறப்படுகிறது.  சைனாவில் பொதுக் கழிப்பிடங்களை உபயோகிக்க இலவசம், பொது இடங்களை அசுத்தம் செய்தால் அபராதம்.  ஆனால் நம் நாட்டில் பொதுக் கழிப்பிடங்களுக்கு கட்டணம் பொது இடங்கள் இலவசம். இந்த நிலை மாறவேண்டும்.

சுகாதாரமான ‘நிர்மலமா’ அல்லது பொறுப்பற்ற நடவடிக்கையால் சுற்றுப்புற ‘நிர்மூலமா’ என்பதை நாம் தான் நிர்ணயிக்க வேண்டும்.