இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும்
சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த தினமாகிய அக்டோபர் 31 ஊழல் மற்றும் விழிப்புணர்வு
அறிதல் தினமாகவும், இது சம்மந்தமாக விழிப்புணர்வு முகாம்கள் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய
வாரமாகவும் அனுசரிக்கப்படுகிறது. ஜனநாயக அமைப்பில்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் ஆராய்ந்து செயல் வடிவம் கொடுக்க
வேண்டியது நிர்வாக அமைப்பின் முக்கியப் பொறுப்பாகும். நிர்வாக அமைப்பு திறம்பட இயங்குவதற்கும் பாரபட்சமின்றி
பொதுநலன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயரிய குறிக்கோளை வைத்து அகில
இந்திய சேவைப்பணி அரசியல் சாசனத்தின் 312 பிரிவு படி அமைக்கப்பட்டது. இதில் இந்திய ஆட்சிப்பணி மற்றும் இந்திய காவல் பணி
அடங்கும்.
அரசுப்பணியாளர்கள்
ஆங்கிலத்தில் “பப்ளிக் சர்வண்ட்” என்று சட்டத்தில்
குறிப்பிடப்படுகின்றனர். இதன் அடிப்படைக் கருத்து
அவர்கள் பொதுமக்களுக்காக சேவை செய்ய வேண்டும.
மக்களின் அடிப்படை உரிமைகளான சுதந்திரம், சமத்துவம், கண்ணியம் பாதுகாப்பதில்
அரசு ஊழியர்களுக்கு முக்கியப்பங்கு உண்டு. நிர்வாகம் முகம் அறியாது என்பதற்கேற்ப விதிகளின்
அடிப்படையில் நடு நிலமை பிறழாது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
தொழில்முறை
திறமை, நேர்மை, பாரபட்சமின்மை எல்லாவற்றிற்கும் மேலாக மாறிவரும் சவால்கள் மிகுந்த உலகில்
செயலாக்கத்தில் சிறப்பு ஆகிய குணாதிசயங்கள் நிரம்பியவர்தான் பொது ஊழியர்களாக பொறுப்பேற்கத்
தகுதியானவர். இதன் அடிப்படையில்தான் அரசுப்
பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று 1854-ம் வருடம் பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட
ட்ரவிலியான் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
தூய்மையான
வழிமுறைகள் பின்பற்றப்படவேண்டும். இதுதான்
நேர்மையான நிர்வாகத்தின் அடையாளம். மகாத்மா
காந்தி அடிகள் நிர்வாக ஊழலைப்பற்றி குறிப்பிடும் பொழுது தனிநபருக்காக நாடு இயங்கவில்லை தனிநபர்
நாட்டுக்காகவும் நாட்டின் உயர்வுக்காகவும் உழைக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
தன்னலம் தலைதூக்கும்பொழுது எல்லாம் தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் சொந்தம்
என்ற வகையில் செயல்படுவதால்தான் பொது நிர்வாகத்தில் ஊழல் பெருகுகிறது.
மத்திய
ஊழல் கண்காணிப்பு ஆணையகம் நிர்வாகத்தில் ஊழலை கட்டுப்படுத்துவதற்காக விதிகளையும், வழிகாட்டுதல்களையும்,
ஆலோசனையும் வழங்கி வருகிறது. ஒவ்வொரு வருடமும்
விழிப்புணர்வு வாரமாக அக்டோபர் இறுதி நவம்பர் மாத துவக்கத்தில் அனுசரிக்கப்படுகிறது. ஒரு முக்கிய நிர்வாக சீர்திருத்த நடவடிக்கையை முன்வைத்து
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்த வருடம் அரசு திட்டங்களுக்கு கொள்முதல் செய்யப்படும் பொருட்கள், டெண்டர்
முறைகள் வெளிப்படையான ஊழலற்ற வகையில் நடைபெற வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெளிப்படையான
ஒப்பந்தம்புள்ளி விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசுக்காக கொள்முதல் செய்யப்படும் பொருட்கள்
துறைவாரியாக இனணயதளத்தில் வெளியிடப்படுகிறது.
அதற்கான படிவங்கள் எளிதாக பெற்றுக் கொள்ளலாம். பொருட்கள்
கொள்முதல் செய்யப்படுவதின் நோக்கம், பொருட்களின் தரம், எதிர்பார்ப்பு, எவ்வாறு ஒப்பந்தப்புள்ளி
பரிசிலிக்கப்படும், தெரிவு செய்யும் முறைகள், ஆகியவை ஒப்பந்ததார்களுக்கு கலந்தாய்வுக்
கூட்டம் மூலம் தெளிவு படுத்த வேண்டும். தொழில்நுட்ப
தகுதி முதலிலும் கொள் முதல் செய்யபடும் பொருட்களின் விலைப்பட்டியல் பின்பும் பரிசீலனைக்கு
உட்படுத்தப்படும்.
இவ்வாறு
பொருள்கள் கொள்முதல் செய்வது, கட்டுமானப்பணிகான ஒப்பந்தம் வழங்குதல், இதர சேவைகள் பங்கிடுதல்
போன்ற நடவடிக்கைகளில் ஊழல் ஊடுருவ வாய்ப்புகள் அதிகம் என்பதால் இந்த வருடம் கொள்முதலில்
முறைகேடுகள் தவிர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட
வேண்டும் என்பது வலியிறுத்தப்பட்டுள்ளது. கொள்முதல்
நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை, பொறுப்பாளர் கடமை, எந்த ஒரு கேள்விக்கும் பதில் அளிக்கும்
திறன், சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதே மத்திய
ஆணையத்தின் முக்கிய குறிக்கோள். மெச்சத்தக்க
வழிமுறைகளை பயன்படுத்தி கணக்கிடக்கூடிய முன்னேற்றம் அடைந்திட வேண்டும் என்பதும் இலக்காக
வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச வெளிப்படை நிர்வாக அமைப்பு பொது
நிறுவனங்களில் ஊழலை தடுப்பதற்கு ”நேர்மை ஒப்பந்தம்” என்னும் முறையை பரிந்துரைத்துள்ளது. அரசுப்பணிகளில் பங்கெடுக்க விண்ணப்பிக்கும் தனியார்
ஒப்பந்ததாரர்கள் பங்கெடுப்பதற்கு முன் நேர்மை கடைபிடிக்க வலியுறுத்தல் ஒப்பந்தத்தில்
பரஸ்பரம் கையெழுத்திட வேண்டும் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் டெண்டர் பரிசீலிக்கும் சமயம் மற்றும் முடிவு எடுக்கும்
வரையில் எந்தவிதமான ஊழலில் ஈடுபட மாட்டோம் என்ற உறுதியினை அவர்கள் அளிக்கவேண்டும். இம்முறை ஊழலைத்தடுக்க பெரிதும் உதவுகிறது என்று
நடைமுறையில் தெரிய வந்துள்ளது. நேர்மையற்ற
முறையில் டெண்டர் யாருக்காவது சென்று விடுமோ என்ற அச்சம் நீக்கப்படுகிறது. சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொது நிறுவனங்களும்,
அமைச்சகங்களும் இம்முறையை பின்பற்றுகின்றன என்று மத்திய விழிப்புணர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.
அன்றாட
சிறு ஊழல்கள்தான் சாதாரண மனிதனைத் தாக்குகிறது.
இதற்கு கணினி மூலம் மக்கள் பெற வேண்டிய எல்லா பயனளிப்புகளும் பதிவு செய்தால்
பொது மக்களுக்கும் கீழ்மட்ட அரசு ஊழியர்களுக்கும் நேரடி தொடர்பு தவிர்க்கப்பட்டு தகுதி
அடிப்படையிலும் முதலில் பதிவு செய்தவர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மனுக்கள்
பரிசீலிக்க வழிவகை செய்ய முடியும்.
வெளிப்படைத்தன்மை
எவ்வளவு முக்கியமோ அந்த அளவு விதிகளுக்கு உட்பட்ட
முடிவுகளும் முக்கியம். விதிகள் சுலபமாக்கப்படவேண்டும்.
நடைமுறைகளும் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.
துறை அதிகாரிகள் சுலபமாக மக்களுக்கு அரசுப்பணிகள் சென்று அடைய எல்லாமுயற்சிகளும்
எடுக்க வேண்டும். உதாரணமாக பட்டா மாற்றம் என்பது
கடினமான முறையாக இருந்ததால் அதில் முறைகேடுகளுக்கு
வாய்ப்பாக அமைந்தது. அதனை மாற்றி பட்டா மாற்றம்
சமீபத்திய அரசாணை மூலம் சுலபமாக்கப்படுள்ளது.
மின் இணைப்பு, குடிநீர், கழிவு நீர்
அகற்றும் வசதி, சாதிச்சான்றிதழ், அரசு மானியம் பெறுவதற்கான மனுக்கள், பல்வேறு நலத்திட்டங்கள்
கீழ் பயனாளிகள் பெற வேண்டிய பயன்கள், கடன் உதவி பெறுதல், முதியோர் ஊதியம் போன்ற பல்வேறு
சேவைகளை பெறுவதற்கு மக்கள் சம்பந்தப்பட்ட அரசுத்துறையை நாடுகின்றனர். இந்த சேவைகள் சுலபமாக கிடைத்திட வேண்டும். சாதிச்சான்றிதழ் பள்ளிக்கூடங்களே வழங்கலாம் என்ற
அரசாணை எல்லோராலும் வரவேற்கப்பட்டுள்ளது.
ஊழல்
விவகாரங்களைப்பற்றி தகவல் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அதே சமயம் தகவல் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பும்
தகவல் அடிப்படையில் உடனடி நடவடிக்கையும் அவசியம். 2004 வருடம் தகவல் கொடுப்பவர் பாதுகாப்பு ஆணை அமலுக்கு
வந்துள்ளது. மத்திய விழிப்புணர்வு ஆணையம் இத்தகைய
புகார்களை கவனிப்பதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஊழல்
குற்றச்சாட்டுகளின் மீது நடவடிக்கை ஒருபுறம் எடுத்தாலும் ஊழல் நடவாமல் தடுப்பது என்பது
குறித்தும் ஆய்வு நடத்தப்படுகிறது. தற்போதுள்ள
தடுப்பு முறைகள், விதிகள் 1970-ல் வடிவமைக்கப்பட்டன. காலப்போக்கில் பல மாற்றங்கள் வந்துள்ளன, தொழில்நுட்பம் வளர்ந்ததுள்ளது அதற்கேற்றால் போல்
நடைமுறையிலும் மாற்றம் வரவேண்டும். அப்போது
தான் ஊழல் ஊடுருவலை நிறுத்த முடியும்.
தனியார் நிறுவனங்கள் இழப்பு நிகழக்கூடிய
இடங்கள் என்ன என்பதை ஆராய்ந்து தெரிவு செய்து அங்கு அதிகம் கவனம் செலுத்தி இழப்பு தவிர்க்கும்
முறைகளை கையாளுகின்றனர். இதே வகையில் பொது
நிறுவனங்களில், பொது சேவைகளிலும் எந்த துறைகளில் எந்த நடைமுறையில் தவறுகள் அதிகம் நிகழக்கூடும்
என்பதை ஆராய்ந்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய இழப்பச்சம் முறையில் கலந்தாய்வு செய்து
ஊழல் நடவாமல் தவிர்க்கப்பட வேண்டும் என்று விழிப்பிணர்வு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
2005-ம்
வருடம் ஐக்கிய நாடுகளின் ஊழலுக்கு எதிரான உடன்படிக்கையில்
இந்தியா கையெழுத்திட்டது. அதற்கு முழு அங்கீகாரம்
2011-ம் ஆண்டு மே மாதம் தான் வழங்கியது. ஆனால்
இன்னும் சட்ட மாற்றங்கள் கொண்டுவரப்படவில்லை.
தனியார் நிறுவனங்களையும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான திருத்தங்கள்
இன்னும் பரிசீலனை நிலையில் உள்ளன.
அரசு
அலுவலகங்களில் மூன்று வகையான ஊழியர்களை காணலாம்.
அப்பழுக்கற்று தம்மை முழுமையாக ஈடுபடுத்தி சுய உந்துதலோடு செயல்படுபவர்கள். அதிக கடமையுணர்வு உடையவர்கள். இத்தகைய பணியாளர்கள் முதல் ரகம். நிர்வாக சுமை தாங்கிகள். போற்றுதலுக்குரியவர்கள். இரண்டாவது வகை குறைந்தபட்சம் எவ்வளவு பணி செய்தால்
தம்மீது குறைவராதோ அந்த அளவுக்கு மட்டும் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள். இவர்கள் சுமை தவிர்ப்பவர்கள். சந்தர்ப்பவாதிகள்.
மூன்றவது ரகம் ‘எங்கள் வீட்டுக்காரரும் கச்சேரி செய்கிறார்’ என்ற அளவில் பணிக்கு வந்து
செல்வார்கள்! நிர்வாகத்திற்கு இவர்கள் சுமைகள். எந்த துறையில் சுய உந்துதலோடு பணி செய்பவர்கள்
அதிகமாக இருக்கிறார்ளோ அந்தத்துறை சிறந்து விளங்கும். முதல் வகை பணியாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்
அவர்களது மெச்சத்தக்கப்பணி பாராட்டப்பட வேண்டும்.
இத்தகைய பணியாளர்கள் சாதாரணமாக ஊழலில் ஈடுபடமாட்டர்கள். செயல் திறன் உயர்வு, ஊக்கம் இவை குறிக்கோளாக வைத்து
பணியில் ஈடுபடுத்த வேண்டிய பொறுப்பு மேற்பார்வையாளர்களைச் சார்ந்தது.
சாதாரணப்
பணியாளர்களை அசாதாரண மேன்மையான பணி செய்யும் திறமைசாலிகளாக மாற்றுவதே தலமை வகிப்பவரின்
பொறுப்பு. ஏதோ வம்பு தும்பு இல்லாமல் குறந்தபட்சம்
பணி செய்கிறோம் என்பது துறைக்கும் பெருமையல்ல.
திறமையற்ற குறித்த நேரத்தில் முடிவுறாத, ஒப்புக்கு செய்யப்படும் பணிகளும் ஒரு
வகையில் நேர்மைக்கு முரணான பணிகள் என்பது உண்மை.
சர்வதேச வெளிப்படை அமைப்பின் ஆய்வுப்படி
ஒன்றிலிருந்து பத்து தர அளவில் இந்தியா மூன்றுக்கு கீழ்தான் உள்ளது. ஐரோப்பிய நாடுகள் ஒன்பது என்ற அளவில் தலை நிமிர்ந்து
நிற்கின்றன. மேலும் அந்த ஆய்வில் இந்தியாவில்
வருடத்திற்கு சுமார் ரூபாய்.30,000/- கோடி லஞ்சமாக சாதாரண ஊழலில் பரிமாரப்படுகிறது
என்ற தகவலும் வெளிவந்துள்ளது. 64 சதவிகிதம்
மக்கள் ஏதாவது ஒரு நிலையில் ஊழலுக்கு துணை போகிறார்கள் என்பதும் வேதனைக்குரியது.
ஊழலை
கட்டுப்படுத்த பல்முனை முயற்சிகள் தேவை. அதில்
மக்கள் ஒத்துழைப்பு இன்றியமையாதது. உண்மையான
உழைப்பிற்கு ஒத்துழைப்பு நல்க மக்கள் முன்வருவார்கள். அரசுத்துறை பொதுமக்கள் சேவைக்காக இயங்குகிறது. இரும்புக்கவசம் நிர்வாகத்தின் வலிமையை தெரிவிக்கிறது. அதே சமயம் மக்கள் பணியில் மெழுகாக உருக வேண்டும்
என்பதை மறக்கலாகாது.
நேர்மை, நம்பகத்தன்மை, தரம், ஒருபுறச்சார்பின்மை
இவையனைத்தும் நேர்மையான பணிக்கு இலக்கணம்.
நேர்மையான அணுகுமுறையை அன்றாட வாழ்க்கையில் கடைபிடித்தால்தான் விழிப்புணர்வு
முழுமையடையும்.
இக்கட்டுரை தினமணி நாளிதழில் 01.11.2012 அன்று பிரசுரிக்கப்பட்டது