காலம்
பொன்னானது
காலத்தின்
அருமைக் கருதி பேச்சை விரைவில் முடிக்கிறேன் என்று நீட்டி முழங்கி மணிக்கணக்கில் அரங்கில்
பேசி சோதிப்பவர்கள் இருக்கிறார்கள். காலத்தின்
அருமையை நாம் உணர்வதில்லை. காலம் பொன்னானது.
எந்த ஒரு செயலாக்கத்திற்கும் தடங்கல் ஏற்பட்டால் இழப்பை ஈடுகட்ட முடியாது. உதாரணமாக சென்னை விமானதளம் விரிவாக்கத்திற்கு
2003ம் வருடம் தமிழக அரசால் சுமார் 1450 ஏக்கர் ஒதுக்கப்பட்டது. ஆனால் சில அமைப்புகளின் எதிர்ப்பால் விரிவாக்கத்தில்
தடங்கல் ஏற்பட்டது. விளைவு சென்னையில் தேக்கநிலை,
பங்களுரூ, ஐதராபாத் புதிய விமானதளம் அமைப்பதில் முந்திக்கொண்டது,
ஒரு
கட்டமைப்பிற்கும் தேவை தீர்கமான திட்டம், போதுமான
நிதி, செயலாற்றுவதற்கான நிபுணர்கள், களப்பணியாளர்கள். இவைற்றைல்லாம் ஒருங்கிணைத்து குறிப்பிட்ட காலத்திற்குள்
நிறைவேற்ற வேண்டும். கால அளவு நிர்ணயிப்பதுதான்
மிக முக்கியம். எவ்வளவோ பயன் தரும் திட்டங்கள்
குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படாததால்,
நிதி விரயமாகிறது. திட்டத்தின் பயனளிப்பு
பெறுவதில் தடங்கல், அதைச்சார்ந்த நிறுவனங்களுக்கு
இழப்பு, இதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள் என்று ஒரு இடத்தில் ஏற்படக்கூடிய தாமதம்,
நேர விரயம் அடுக்கடுக்காக காற்றலையாக பாதிப்பு ஏற்படுத்துகிறது.
ஒரு நாட்டின் வளமையை நிர்ணயிப்பதே அந்நாட்டு
மக்கள் எவ்வாறு தமது நேரத்தை செலவிடுகிறார்கள் என்பதைப் பொருத்திருக்கிறது. முன்னேறிய
நாடுகளில் வேலை செய்யும் பாங்கு, பணிக்கலாச்சாரம் மெச்சத்ததக்கதாக இருக்கும். அநாவசியமாக வம்பளப்பது, தொலைபேசியில் பேசி காலம்
கழிப்பது போன்ற சோம்பேறித்தனமான நடவடிக்கையை பார்க்க முடியாது. இந்தியாவில் உள்ள பல
பன்னாட்டு நிறுவனங்களிலும் இந்த ஒழுங்குமுறை கடைபிடிக்கப் படுகிறது. காலத்தின் அருமையை உணர்ந்ததால் தான் வளமான நாடுகளில்
செல்வச் செழிப்பு நிலைக்கிறது.
நமது நாட்டில் சுதந்திரம் அடைந்த முதல் 30 ஆண்டுகள்
சோஷலிச பொருளாதார கொள்கை கடைபிடிக்கப்பட்டது. பின்தங்கிய பகுதிகளுக்கும், ஏழை மக்களுக்கும்
வளர்ச்சியின் பயன் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கம் இருந்தாலும், நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள். ‘பெர்மிட்
ராஜ்’ என்ற வகையில் ஒவ்வொன்றுக்கு அரசு அனுமதி பெற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் தனி
மனித வளர்ச்சியும் ஈடுபாடும் குன்றி தேக்க நிலைதான் தொடர்ந்தது. அப்போது நடைமுறைப் படுத்தப்பட்ட நடவடிக்கைகள் தவறு என்று இப்போது ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் விரயமான காலத்தை ஈடு செய்ய முடியுமா? அந்த தேக்க நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்பை
திரும்பப் பெற முடியுமா? வறுமையில் இழந்த வாலிபம்
தான் திரும்புமா! அதைத்தான் ஜெயகாந்தன் அவர்கள்
தைலியின் கிழிந்த ஒத்தப்புடைவையை குளித்துவிட்டு காய்ந்த பிறகு கட்டிக் கொள்ளும் நிலை
1947-ல் எவ்வாறு இருந்ததோ 25-ந்து ஆண்டுகளுக்குப் பிறகும் 1972-ல் மாறவில்லை என்று
எழுதியிருந்தார். இன்னும் எவ்வளவோ தைலிகள்
நாட்டில் இருக்கிறார்கள். கால விரயத்தின் கொடுமைகளை
அனுபவித்துக் கெண்டிருக்கிறார்கள்.
ஆப்பிள்
கணினியை உருவாக்கி படங்கள், வீடியோக்கள் மற்றும் டிஜிட்டல் கோப்புகளை பகிர்ந்து கொள்ளும்
முறையில்
ஐ–பாட் மூலம் புரட்சி ஏற்படுத்தியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். விதி அவருக்கு எவ்வளவோ துரோகம் செய்தது. விவாகம் முடிக்காத இளம்மாணவிக்கு கூடா உறவு மூலம் பிறந்து, வேறொரு தம்பதியினரால் தத்து எடுக்கப்பட்டு, அவர்களுக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று தனது உயர் கல்வியை பாதியில் நிறுத்தி சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்ற உந்துததில் கார் ஷெட்டில் கணினி வடிவமைக்கும் சிறு தொழிலைத் துவங்கி வாழ்கையில் வெற்றிக் கண்டார். பல போராட்டங்களுக்கு இடையில் தன்னம்பிக்கை மற்றும் தனது நேரம், முழு உழைப்பையும் மூலதனமாக வைத்து உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் ‘ஆப்பிள் மேக்’ கம்ப்யூட்டர். நாலாயிரம் பணியாளர்களைக் கொண்ட இரண்டு பில்லியன் டாலர் கம்பெனியாக இப்போது வளர்ந்துள்ளது. ஐஃபோன், ஐ-பாட் இவையில்லாமல் வாழ்க்கையில்லை என்று உலகில் உள்ள இளைஞர்களை ஆட்கொண்ட சாதனையாளர் ஸ்டீவ் ஜாப்ஸ். நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர். எங்கு சென்றாலும் இளைஞர்களுக்கு அதன் அருமையை விளக்குவார். பல தோல்விகள் அவரைத் துரத்தின. ஆனால் தோல்வியைக் கண்டு துவளாமல் நேரத்தை புதிய யுக்திகளில் செலுத்தி வெற்றிப்பாதையை அமைத்துக் கொண்டார். நேரம் ஒன்றுதான் வற்றாத செல்வம். எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் மூலதனம்.
ஐ–பாட் மூலம் புரட்சி ஏற்படுத்தியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். விதி அவருக்கு எவ்வளவோ துரோகம் செய்தது. விவாகம் முடிக்காத இளம்மாணவிக்கு கூடா உறவு மூலம் பிறந்து, வேறொரு தம்பதியினரால் தத்து எடுக்கப்பட்டு, அவர்களுக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று தனது உயர் கல்வியை பாதியில் நிறுத்தி சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்ற உந்துததில் கார் ஷெட்டில் கணினி வடிவமைக்கும் சிறு தொழிலைத் துவங்கி வாழ்கையில் வெற்றிக் கண்டார். பல போராட்டங்களுக்கு இடையில் தன்னம்பிக்கை மற்றும் தனது நேரம், முழு உழைப்பையும் மூலதனமாக வைத்து உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் ‘ஆப்பிள் மேக்’ கம்ப்யூட்டர். நாலாயிரம் பணியாளர்களைக் கொண்ட இரண்டு பில்லியன் டாலர் கம்பெனியாக இப்போது வளர்ந்துள்ளது. ஐஃபோன், ஐ-பாட் இவையில்லாமல் வாழ்க்கையில்லை என்று உலகில் உள்ள இளைஞர்களை ஆட்கொண்ட சாதனையாளர் ஸ்டீவ் ஜாப்ஸ். நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர். எங்கு சென்றாலும் இளைஞர்களுக்கு அதன் அருமையை விளக்குவார். பல தோல்விகள் அவரைத் துரத்தின. ஆனால் தோல்வியைக் கண்டு துவளாமல் நேரத்தை புதிய யுக்திகளில் செலுத்தி வெற்றிப்பாதையை அமைத்துக் கொண்டார். நேரம் ஒன்றுதான் வற்றாத செல்வம். எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் மூலதனம்.
நேரம் எல்லாப் பணிகளுக்கும் முக்கியம் என்றாலும்
காவல்துறையை பொறுத்தமட்டில் நேரம் தவறினால் விபரீத விளைவுகள் ஏற்படும். உயிர் உடமைகளைப்
பாதிக்கும். குற்றங்கள் தடுப்பதில் கவனம் செலுத்தி வியர்வை சிந்தினால் குற்ற நடப்புகளால்
ஏற்படும் ரத்த சிதறல்களைத் தவிர்க்கலாம். எந்த
ஒரு குற்ற நிகழ்வை எடுத்துக் கொண்டாலும், உரிய சமயத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால்
குற்ற நிகழ்வை தவிர்த்திருக்கலாமே என்று அந்த சரக அதிகாரிக்கு உள்ளூர நெஞ்சு குறுகுறுக்கும்
என்பதில் ஐயமில்லை.
குற்றத்தடுப்பு
செயலாக்கத்தில் அதிக கவனம் செலுத்திவதில்லை. நிகழ்ந்த குற்றங்கள் கண்டுபிடித்துவிட்டால்
காவல் துறை அதிகாரிகள் மெச்சப்படுகின்றனர்.
ஆனால் தனது உழைப்பால் குறித்த நேரத்தை தவரவிடாது பணி செய்து குற்ற நிகழ்வை தவிர்த்தவர்
பாராட்டப்படுவதில்லை.
மாவோயிஸ்ட்
பிரச்சனை இவ்வளவு தலைவிரித்தாடுகிறது. மாவட்ட
ஆட்சியர்கள் கடத்தப்படுகிறார்கள். இன்னும்
அந்த பிரச்சனைகளுக்கு முனைப்பான தீர்வு எடுக்கப்படவில்லை. மாநில அரசும் மத்திய அரசும் பல்முனை நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டதாக பட்டியலிட்டாலும் பிரச்சனை வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒடிசா மாநிலத்தில் மால்காங்கிரி மாவட்டம் ஆட்சியர்
வினீல் கிருஷ்ணா கடத்தப்பட்டார். பின்பு இரண்டு இத்தாலி நாட்டு சுற்றூலா பயணிகள், சட்ட
சபை அங்கத்தினர் இப்போது சுக்மா ஆட்சியர் அலக்ஸ் பால் மேனன். மேனன் கடத்தலில் கொடுமை என்னவென்றால் அவரது இரண்டு
பாதுகாவலர்களும் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டனர்.
மேனன் கடத்தல் நாட்டை உலுக்கியதே தவிர இரண்டு காவலர்களின் உயிரிழப்பிற்கு இரண்டு
சொட்டுக் கண்ணீர் கூட எவரும்விடவில்லை. காவலர்களின்
உயிர் அவ்வளவு துச்சமாகிவிட்டது!
மாவோயிஸ்டுகள்
ஆதிக்கத்தில் உள்ள இடங்களுக்கு அரசு அதிகாரிகள் செல்லும் பொழுது பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்ற வேண்டும். ஏதோ ஒரு ஆர்வத்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்
பாதுகாப்பு முறைகளை மறந்து களம் இறங்கிவிடுவதால் இத்தகைய விபரீதங்கள் நிகழ்சின்றன. இரண்டு உயிர்களை இழந்த குடும்பங்களின் நிலை என்ன? வானம் பொழிந்தாலும் பூமி விளைந்தாலும் அந்தக் குடும்பங்களின்
வாழ்வு கண்ணீரில்தான் தளும்பும். சட்டம் ஒழுங்குப்
பிரச்சனைகள் உரிய சமயத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறுவதால்தான் பெரிதாக பாதிப்பை ஏற்றபடுத்துகிறது. கணம் தப்பினால் மரண அபாயம் தலை தூக்கும் என்பது
காவல்துறைப்பணியில் அன்றாடம் உணரலாம்.
வாழ்வின் சாரம் மின்சாரம் என்ற அளவுக்கு மின்சாரத்தினால்
இயங்கும் பல உபகரணங்களுக்கு நாம் அடிமையாகி விட்டோம். மின்சாரப் பற்றாக் குறை ஏற்பட்டதற்க்குப் பல காரணங்கள்
இருந்தாலும் உரிய நேரத்தில் திட்டமிட்டு உற்பத்தியைப் பெருக்காதது ஒரு முக்கியக் காரணம்.
அந்த
உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால் விளைவுகளை இப்போது சந்திக்க நேரிடுகிறது. இப்போது எடுக்கப்படும் முயற்சிகளால் அதுவும் பசுமை
சக்தி எனப்படும் சூரிய சக்தியை அறுவடை செய்யும் பல்முனை முயற்சி மின்சாரம் பற்றாக்குறை
என்ற நிலை மாற வழி வகுக்கும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் வருடத்திற்கு
310 நாட்கள் சூரிய சக்தி பயனளிப்பிற்கு கொண்டு வரமுடியும் என்று நிபுணர்கள் ஆய்வில்
தெரிய வருகிறது. அரசும் அதற்கான நிதி ஒதுக்கீடு
செய்துள்ளது. சம்மந்தப்பட்ட பொறியாளார்களும்,
அதிகாரிகளும், காலந்தாழ்த்தாது போர்க்கால அடிப்படையில் சக்தி ஈட்டும் கதிர் தளங்களை
அமைக்க வேண்டும். குஜராத்தில் 16 மாதங்களில் இத்தகைய சூரிய சக்தி ஈட்டக்கூடிய சோலார் கருவிகள் அமைக்கப்பட்டு பயனளிப்பிற்கு வந்துள்ளது. இது நிச்சயமாக நம்மாலும் முடியும்.
“காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது” என்றார் வாள்ளுவர். அரசின் நலத்திட்டங்கள்
உரிய சமயத்தில் ஏழை மக்களுக்கு அளித்தால் பெரிதும் உதவும். நமது முதலமைச்சர் அறிவித்தப் பல நலத்திட்டங்கள்
துரிதமாக நடைமுறைப் படுத்தப்பட்டது நிறைவைத் தருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு
இலவச மடிக் கணினி, இருபதுக் கிலோ இலவச அரிசி, மாணவர்களுக்கு காலணி, சீருடை, புத்தகங்கள்,
ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆடு வளர்க்கும் திட்டம் பேன்ற பல திட்டங்களில் ஏழை
மக்களுக்கு தக்க சமயத்தில் உதவி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1.51 இலட்சம் மடிக் கணினிகளும், 1.85 கோடி
குடும்பங்களுக்கு இலவச அரிசியும், 14.38 இலட்சம் மக்களுக்கு இலவச மின்விசிறி, மின்
அரைவை இயந்திரம், 81.20 லட்சம் குழந்தைகளுக்கு காலணிகள், புத்தகங்கள் கடந்த ஒரு வருடத்தில்
உரியவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது மகத்தான சாதனை. இது காலத்தினால் செய்த உதவி. ஏழைக் குடும்பங்கள் இதனை சரியாக பயன்படுத்தி ஏதோ
இலவசமாக கிடைத்தது என்று சோம்பி இருக்காமல் மேலும் உத்வேகத்துடன் உழைத்தால் தான் குடும்பம்
முன்னேறும், சமுதாயம் வளம் பெரும்.
தமிழக
அரசு வெளியிட்டுள்ள “தொலை நோக்கும் பார்வை 2023” இசைத்தமிழ்போல் தமிழ்நாட்டிற்கு தொழில்
சாதனையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்
அரசு 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் முக்கியமாக கட்டமைப்புகளை மேம்படுத்தும்
வகையில் அடுத்து வரும் ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.. ‘விஷன் 2023’ பொருளாதார, நிர்வாக நிபுணர்களின் பெருமளவு
பாராட்டைப் பெற்றுள்ளது.
இவ்வாறு
இலக்குகள் நிர்ணயிப்பது அவசியம். இத்திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றுவதற்கு நிதிமட்டுமின்றி
சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் முனைப்பான செயலாக்கம் அவசியம். சுய ஆர்வத்தோடு செயல்படுபவர்களை தெரிவு செய்து அவர்கள்
நிபுணத்துவம் பெற்ற துறைகளுக்கு நியமித்தால் திட்டங்கள் காலதாமதமின்றி நிறைவேறும்.
வாழ்க்கையை
நேசிப்பவர்கள் நேரத்தை விரயமாக்கக் கூடாது. வாழ்க்கையில் சாதனைப்படைத்தவர்கள் எல்லோரும்
நேரத்தை திறமையாக பயன்படுத்துவதை பழக்கமாகக் கொண்டவர்கள்.
என்னமாய் நேரம் பறக்கிறது என்று அங்கலாய்க்கிறோம். கடந்த நேரம் திரும்பி வராது. ஆனால் தற்கால நேரம் நமது கையில். நேரம் பறந்தாலும் விமான ஓட்டி நாம் தான் என்பது எவ்வளவு உண்மை. நேரத்தை வெறுமையில் ஓட்டாமல் சமுதாயத்திற்கு ஒட்டும்
படி பயனளிக்கும் வகையில் செலவிடுவதே விவேகம்.
This article Published in Dinamani Newspaper on 16.05.2012