“எலக்சன் கமிசன்ல யாரு. சாமி தலைவரு அவருக்கு கோயில் வச்சு கும்பிடனும்”. இது சாதாராண எழுதப்படிக்கத் தெரியாத ஏழை சலவைத் தொழிளாளியின் வேண்டுகோள். தேர்தல்களத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வாகன சோதனையில் பல கோடி பணத்தை முடக்கிய தோதல் ஆணையத்திற்கு இத்தகைய ஒரு பொது ஜனத்தின் பாராட்டை மதிப்பிட முடியாததொன்று.
இது வரை தமிழகத்தில் 42 கோடி ருபாய் வாகன சோதனையிலும், சந்தேக இல்லங்களில் சோதனையின் போது சிக்கியிருக்கின்றது. ஆனால், தமிழகத்துடன் சேர்த்து புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் நடைபெறுகிறது. அதில் தமிழகத்தில் கைபற்றிய பணம்தான் அதிகம் என்று நாம் பெருமைப்படுவதா அல்லது வேதனைப்படுவதா? அரசியல்வாதிகளாள் நமது மாநிலத்தில் பணப்புழக்கம் அதிகம் என்று சில சுயநலவாதிகள் பெருமைக்கொள்ளலாம் ஆனால் லஞ்சப் பணப் புழுக்கம் நெஞ்சை பதபதைக்க வைக்கிறதே என்ற ஆதங்கம் பெருவாரியான மக்களுக்கு இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.
காந்தியவாதி அன்னா ஹசாரே லஞ்சலாவண்யத்தை எதிர்த்து துவக்கிய உண்ணாவிரதப் போராட்டம் சாதாரண இந்தியனின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. எதோ ஊடகங்களில் வந்த செய்தியை வைத்து இந்திய நடுத்தர வர்க்கம் மட்டும் ஆர்வமாக களம் இறங்கியுள்ளது என்று புறக்கணித்து விடமுடியாது. லஞ்சம் என்பது எல்லா விதத்ததிலும் தலைவிரித்தாடுகிறது என்பது எல்லோருடைய கோபத்தையும் தூண்டியுள்ளது. எவ்வளவு நாள் தான் தாங்கிக் கொள்வார்கள்? எந்த அரசு அலுவலகத்திற்கு சென்றாலும் பணம் கொடுக்காமல் கோப்பு நகராது என்ற நிலை. பணம் வாங்கினாலும் வேலை நடந்தால் பெரிய விசயம் என்ற நிலை வந்துள்ளது. மேலும் நாட்டின் சொத்து இயற்கை வளம் அதிகாராத்தில் உள்ளவர்களால் சூரையாடப்படுவது மத்திய புலனாய்வின் முலம் வெளிவந்துள்ளது மக்களின் வெறுப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடுதான் தில்லி ஜந்தர் மந்தரில் அன்னா ஹசாரேவிற்கு கிடைத்த பொதுமக்களின் ஆதரவு.
1964-ம் வருடம் சந்தானம் கமிட்டி அரசுத் துறைகளில் ஊழலைத் தடுப்பதற்கு மத்திய புனாய்வுப் பிரிவினை பலப்படுத்தவும் பல பரிந்துரைகளைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுத்தாலும் அது கடலில் கரைந்த பெருங்காயமாக பிசுபிசித்தது. அதற்கு முக்கிய காரணம் இயற்றப்பட்ட சட்டங்கள் சரியாக முனைப்பாக பாராப்பட்சமின்றி பிரயோகிக்கப்படவில்லை என்பதை மறுக்க முடியாது. தற்போது லோக்பால் மசோதாவை விவாதத்திற்கு கொண்டு வர அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவில் இடம் பெற்றவர்கள் மீதே அதிருப்தி நிலவியதால் ஒரு அமைச்சர் குழுவில் இருந்த விலக நேர்ந்தது. இப்போது அன்னா ஹசாரே போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர அரசு திருத்தி அமைக்கப்பட்ட குழு உருவாகப்படும் என்று அறிவித்துள்ளளது. அதில் சமுதாயப்பற்றுவுடைய நல்லோர் இடம் பெறுவார்கள் என்ற ஆணை எல்லோராலும் வரவேற்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் காந்தியவாதி அன்னா ஹசாரே மேற் கொண்ட உண்ணாவிரத போராட்டம் கண்ணியமான வழியில் மக்கள் ஆதரவோடு முடிவிற்கு வந்துள்ளது. இந்த முடிவு ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் முக்கிய ஆரம்பம். இது பரிமாண வளர்ச்சி அடைய வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பு.
தேர்தல் களத்தில் மக்களை பணபலத்தால் வசப்படுத்த முடியும் என்ற நிலை ஜனநாயகத்தையே அழிவுப்பாதைக்கு கொண்டு சென்று விடும். இது ஊழல் ஊடுருவலின் உச்சகட்டம். அந்த நிலை மாறுவதற்கு விழிப்புணர்வு மிகப் பெரிய அளவில் எற்படுத்த வேண்டும். திருமங்கலம் ஃப்ர்முலா என்று நாட்டிலே பேசப்படுவது தமிழகத்திற்கு தலைகுனிவு.
தேர்தலின் போது அதை அமைதியாக நடத்த தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் பல நடவடிக்கைகளில் முக்கிமானது பணம், மதுபானங்கள், பரிசுப்பொருட்கள் சட்டத்திற்கு விரோதமாக விநியோகிப்பதை தடுக்க எடுக்கப்படும் முயற்சி. வாகனத் தணிக்கையிலிந்து தப்பிக்க பேருந்துகளிலும், இரு சக்கர வாகனங்களிலும் பணம் கடத்தப்படுவது கவனத்திற்கு வந்துள்ளது. பல மாவட்டங்களுக்கு பிரத்யேக தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுபானங்கள் விற்கும் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் சுமார் 6,800 உள்ளன. எது கிடைக்கிறதோ இல்லையோ மதுபானம் சுலபமாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ள மாநிலம் தமிழகமாகத்தான் இருக்க முடியும். எந்த மாநகரத்திலும் மது விற்ப்படும் கடை ஒட்டி மது அருந்தும் வசதி கிடையாது. உரிமங்கள் பெற்ற பார்களில்தான் மது அருந்த முடியும். ஆனால் மதுக்கடைகளுக்கு அருகில் உள்ள திறந்த வெளியில் தற்காலிகமாக கூரை போட்ட சுகாதாரமற்ற இடங்கள் பார்களாக கருதப்பட்டு உரிமங்கள் கொடுக்கப்பட்டு நடைபெறும் அவல நிலை தமிழகத்தில்தான் உள்ளது.
பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் வழிபாட்டுத்தலங்கள் அருகில் மதுபானக்கடைகள் அமையக்கூடாது என்று விதிகள் இருந்தாலும் பல கடைகள் பார் வசதியோடு இயங்குவதைக் காணலாம். கூட்டம் நிரம்பி வழியும் இந்த கடைகளில் அதிக விலைக்கு விற்பது, கலப்படம், குறிப்பிட்ட விற்பனை நேர விதிகள் மீறுவது, விடுமுறை நாட்களில் மறைமுகமாக விற்பது போன்ற பல முறைகேடுகளை கண்காணித்து களையும் பொறுப்பு அமலாக்கப் பிரிவிற்கு உண்டு. பார்களிருந்து குடித்து விட்டு தள்ளாடும் குடிமகன்களின் அட்டகாசம் அந்த வட்டார பொதுமக்களுக்கும் முக்கியமாக மகளிருக்கும் பெரிய பிரச்சனை. விளக்கு வைத்தால் வெளியில் போக முடியாது.
பஞ்சாப், ஆந்திர மாநிலங்களுக்கு அடுத்தால்போல் அதிகமாக மது அருந்தும் மக்கள் தமிழர்கள். கடந்த நான்கு வருடங்களில் மது விற்பனை 61 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. ஆதுவும் 19 வயதிலிருந்து 26 வயது நிரம்பிய இளைஞர்கள் இடையே மது அருந்துப் பழக்கம் 60 சதவிகிதம் அதிகமாகியிருக்கிறது. ஓரு ஆய்வின்படி கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்கள் தமது வருமானத்தில் சராசரி 30 சதவிகிதமும், நகர்புறங்களில் 38 சதவிகிதமும் மது அருந்துவதற்கு செலவிடுகிறார்கள் என்பது கவலைத்தரும் தகவல் மது விற்பனை முலம் வருமானம் பத்தாயிரம் கோடியை 2008-09 வருடம் கடந்தது. 2009-10 ம் ஆண்டு ருபாய் 12,491 கோடியை எட்டிவுள்ளது. மாநில வருவாயில் மதுவிற்பனையில் வரும் வருமானம் சுமார் ஐம்பது சதவிகிதம்.
1937 ம் வரும் முதல் பூரணமதுவிலக்கு தமிழகத்தில் அமலில் இருந்தது, 1970 வருடம் தளர்த்தப்பட்டது. மதுவைப்பற்றி அறியாமல் ஒரு தலைமுறை வளர்ந்தது, ஆனால் இப்போது மதுவால் இளைய தலைமுறை தள்ளாடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் தலைமகன் அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்கள் அதிகமாக கொண்ட நமது நாடு வரும்காலத்தில் சிறந்த நாடாக விளங்கும் என்று நமது சமுதாயத்திற்கு நம்பிக்கையூட்டி வருகிறார். அது மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்றால் மயக்கத்தில் உள்ள இளைய தலைமுறை விழித்துக் கொள்ள வேண்டும்.
இந்த சூழலில்தான் அன்னா ஹசாரே அவர்களின் போராட்டத்திற்கு இளைஞர்கள் கொடுத்த ஆதரவு ஆறுதலைத்தருகிறது. மாரட்டிய மாநிலத்தை சேர்ந்த ஹசாரே 1965 இந்திய பாகிஸ்தான் போரில் ராணுவத்தில் பணியற்றியவர். அகமதுநகர் ஜில்லாவில் ரோலேகாவன் சித்தி என்ற கிராமம் 1975-ம் வருடம் பின்தங்கிய கிராமம். எளிய கிராம மக்களின் உழைப்பை உயர்த்தி தன்னிறைவு அடையச்செய்து செழிப்பான சுற்றுப்புற சூழல் பாதுகாகக்ப்பட்ட கிராம்மாக மாற்றியவர் அன்னா ஹசாரே அவர்கள்.
இன்று அந்த கிராமத்தில் சூரிய செளிச்சம் முலம் மின் சக்தி தயாரிக்கப்படுகிறது. மக்கக்கூடிய கழிவுப் பொருட்கள் முலம் எரிவாயு உற்பத்தியாகிறது. இந்தியாவில் செழிப்பான வசதி படைத்த கிராமமாக திகழ்கிறது. யாரிடமும் கையேந்தாமல் சுய மரியாதையோடு இந்த கிராம மக்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்.
அன்னா ஹசாரே அவர்கள் மக்கள் நலனுக்காக பல போராட்டங்களில் பங்கு கொண்டவர். 1972-ம் வருடம் அப்போதிருந்த சட்ட அமைச்சர் திரு சாந்தி பூஷன் அவர்களால் முன்மொழிப்பட லோக்பால் மசோதா இப்போதாவது குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் நிறைவேற்றப் பட வேண்டும் என்று அவர் மேற்க்கொண்ட உண்ணாவிர போராட்டத்திற்கு அபரிதமான மக்கள் ஆதரவு அதிலும் இளைஞர்களின் ஆர்வம் அரசை அசர வைத்தது என்றால் மிகையில்லை. விவசாய அமைச்சர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ரசாயன அமைச்சர் போன்றவர்கள் கொண்ட அமைச்சர்கள் குழு கலைக்கப்பட்டு 50 சதவிகிதம் அரசு தரப்பிலும் 50 சதவிகிதம் மக்கள் நலம் விரும்பிகள் அடங்கிய 10 நபர்கள் குழு அமைக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது இந்திய மக்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி.
நேர்மைக்கு ஒருநிறம் தான். வாய்மை, உண்மை, நேர்மை என்று பிரித்து பொய்மையை நியாப்படுத்தாமல் நேர்மையான அரசு நிர்வாகம் அமைய லோக்பால் சட்டம் வழிவகை செய்யும். சுயமரியாதையை மேடையில் மட்டும் முழங்கி நடைமுறையில் விழங்கி விழங்கி ஏழைகளின் பெயரைச் செல்லி சுரண்டும் சுயநலவாதிகள் களையப்பட வேண்டும். மக்கள் ஆதரவைப் பெற்ற ஹசாரேவின் கனவு மெய்ப்பிக்கப்படவேண்டும்.
The article published in Dinamani 21.04.2011