அந்தி மாலைப்பொழுது பகல் இரவோடு சங்கமிக்கும் காலம். சூரியன் அஸ்தமிக்கும் அந்தத் தருணத்தில்தான் எல்லா காவல் மற்றும் இராணுவ பாசறைகளில் ஒருவித சோகம் கலந்த குழல் இசையோடு கொடி இறக்கப்படும். படைவீரர்களை ஒருமுகப்படுத்தி அன்றைய பணிகளின் குறைநிறை பற்றி சிந்திக்கவும் ஓய்வெடுக்கும் அதே வேளையில் இன்னும் நிறைவேற்ற வேண்டிய பணிகளை ஒன்று பட்டு செயல்படுத்தி எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான நினைவூட்டல் தான் அந்த குழல் ஓசை.
எவ்வாறு அலைகள் ஓய்வதில்லையோ அதே போல் காவல் பணிகளுக்கும் ஓய்வில்லை, முடிவில்லை. நேர்மையோடு, கடமை உணர்வோடு சில காவல்துறை ஆளினர்கள் காவல் பணிபுரிவதால்தான் சமுதாயத்தில் அமைதி நிலவுகிறது. அமைதி காப்பதில்தான் எத்தனை இடைஞ்சல்கள், சாடல்கள், பழிப்புகள், காயங்கள் முடிவில் உயிரிழப்புகள்.
2008 ஆம் ஆண்டு நவம்பர் 26–ல் உலகையே உலுக்கிய மும்பை நகர தாக்குதல் நிகழ்ந்து இரண்டு வருடம் பூர்த்தியாகிறது. சம்பிரதாய காவல் அணிவகுப்போடு உயிரிழந்த பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களக்கும் புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. மும்பை பயங்கரத்தில் உயிரோடு பிடிக்கப்பட்ட தீவிரவாதி கசாப்பிற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டு தண்டனை நிறைவேற்றுவதில் நடைமுறை விதிகள் கடைபிடிப்பில் உள்ளன. அவை முடிந்தபின் உரிய தண்டனை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்க வேண்டும். இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் அரசியல் சாசனத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் கடைபிடிக்க வேண்டும். அதனால் ஏற்படும் தாமதம் தவிர்க்கமுடியாதது.
ஆனால் மற்ற நாடுகளில் இந்த நிலையில்லை. அன்வர் சதாத் எகிப்திய ஜனாதிபதி அக்டோபர் 6, 1981 ஆம் ஆண்டு தேசிய நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள மேடையில் நின்று கொண்டிருக்கும் பொழுது அணிவகுப்பில் வந்த ஒரு பிரிவினர் மேடையை நோக்கி சுட்டதில் அன்வர் சதாத்தோடு காயமுற்று 11 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அந்த நிகழ்வில் கையெறி குண்டு வீசிய காலித் இஸ்லாம்பௌலி என்ற இராணுவ அதிகாரி கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் மரண தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டு உடனடியாக 1982 ஏப்ரல் மாதத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இஸ்ரேல் நாட்டின் பிரதம மந்திரி இத்சாக் ராபின் 1995ம் ஆண்டு நவம்பர் 4ம் நாள் இஸ்ரேல் தலைநகரான டெல்அவிவின் பிரதான சதுக்கத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கு கொண்டு விடைபெறும் பொழுது இகால் அமீர் என்ற 25 வயது யூத வாலிபரால் கொலைசெய்யப்பட்டார். வலது சாரி மதவாத மயக்கத்தில் ஈர்க்கப்பட்ட இந்த இளைஞர் பிரதமரின் முற்போக்கு சமாதான முடிவுகள் ஏற்புடையதல்ல என்ற காரணத்திற்காக துப்பாக்கியால் பிரதமரை கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான். நீதிமன்ற விசாரணை ஜனவரி 1996ல் துவங்கி மூன்று மாதங்கள் நடைபெற்றது. விசாரணை முடியில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. நாட்டின் தலைவர்களை கொன்ற குற்றத்திற்கு பொது மன்னிப்பு வழங்கலாகாது என்ற சட்டத்திருத்தமும் கொண்டுவரப்பட்டது. இன்றும் அமிர் தனி அடைப்பில் வைக்கப்பட்டுள்ளான்.
1991ம் ஆண்டு மே 21ம் தேதி இந்தியாவின் பிரபலமான இளந்தலைவர் ராஜுவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் குண்டுவெடிப்பில் கோரமான முறையில் உயிரிழந்தார். நாடே குமுறியது. பிரத்யேகமாக அமைக்கப்பட்ட விசேஷ புலன் விசாரணைக்குழு 1992 ம் ஆண்டு மே 22 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தது. தனிநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. 6 வருடங்களுக்குப் பிறகு 1998ஆம் ஆண்டு ஜனவரி 28 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் இன்னும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் நமது நாட்டில் முக்கிய குற்ற நிகழ்வுகள் கண்டுபிடிக்கப்பட்டு முடிவுக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது என்பது உண்மை. ஒவ்வொரு நிலையிலும் இத்தகைய கால தாமதத்தை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமான குற்ற நிகழ்வுகளிலும் பாதுகாப்பிற்கு சவாலாக தலையெடுக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையிலும் காவல் துறைக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் முழுநிர்வாக ஒத்துழைப்பு அளிப்பது இன்றியமையாததது. அவர்களுக்கு தேவையான உபகரணங்கள், ஆளினர்கள், வாகனங்கள், தங்கும் வசதி போன்றவை அளிக்கப்பட்டால்தான் துரிதமாக செயலில் இறங்க முடியும். ஆனால் நடைமுறையில் சம்மந்தப்பட்ட பொறுப்பில் உள்ள அதிகாரி அங்கும் இங்கும் அலைந்து நியாயமாக பெற வேண்டியதற்கு முட்டி மோத வேண்டிய நிலை வருந்தத்தக்கது. பஞ்சாப் தீவிதவாதத்தின் உச்சநிலையில் பொறுப்பேற்ற உயர் போலிஸ் அதிகாரி திரு கில் அவர்களுக்கு முழு அதிகாரம் எல்லாவிதத்திலும் கொடுக்கப்பட்ட பிறகு தான் நிலைமையை சீர் செய்ய முடிந்தது. வீரப்பன் வேட்டையிலும் முழுஅதிகாரமும், விசேஷ இடர்படிகளும் சிறப்பு விரைவுப் படையினருக்கு அளிக்கப்பட்டதாலும், அதுமட்டுமின்றி அவர்களுக்கு முழு ஊக்கமும் ஆதரவும் மனமுவந்து அளித்ததால் அவர்களால் இலக்கை வெற்றிகரமாக அடையமுடிந்தது.
இராணுவ வீரர்கள் இந்தியாவின் வடமேற்கில் ‘சியாசன்’ எல்லைப் பகுதியில் வருடம் முழுவதும் கொட்டும் பனியில் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு விசேஷ இடர்படிகளும் மற்றும் பனியை எதிர்கொள்வதற்கு சாதனங்களும் உடைகளும் அளிக்க வேண்டும் என்று இராணுவத் தலைமையிடத்திலிருந்து அனுப்பப்பட்ட கருத்துரு வெகுநாட்களாக பரிசீலனையில் இருந்து உத்தரவு வழங்கப்படாமல் இருந்தது. அப்போது இருந்த பாதுகாப்பு அமைச்சர் சியாசன் பகுதிக்கு சென்று சிப்பாய்களோடு தங்கி அவர்களது குறைகளைக் கேட்ட போது முடக்கப்பட்ட பயனளிப்பு கோப்புகள் விவரம் தெரிவிக்கப்பட்டது. தில்லிக்கு திரும்பியதும் தாமதத்தில் இருந்த பயனளிப்பு கோப்புகளில் உத்தரவு பிறப்பித்து தாமதத்திற்கு காரணமான சம்மந்தப்பட்ட அலுவலர்கள் சியாசன் பகுதிக்குச் சென்று பணிபுரிந்தால் தான் அவர்களுக்கு உறைக்கும் என்று கடிந்து கொண்டதாகவும் செய்தி வந்தது.
மும்பை பயங்கரத்தில் உயிரிழழுந்த ஹேமந்த் கர்கரே, விஜய் சல்ஸ்கர், அஷோக் காம்தே போன்ற உயர் போலிஸ் அதிகாரிகள் சம்பவத்தின் போது குண்டு துளைக்காத பாதுகாப்பு கவசம் போட்டிருந்தும் பயனில்லாமல் பயங்கரவாதிகளின் குண்டிற்கு இரையானார்கள் என்றும் பாதுகாப்புக் கவசம் தரமானதாக இருந்திருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம் என்று தனது ஆதங்கத்தை விதவைகளான திருமதி கவிதா கர்கரே மற்றும் திருமதி வினோத் காம்தே தெரிவித்திருக்கின்றனர். மும்பை தாக்குதலை ஆராய்ந்த பாதுகாப்பு வல்லுனர்களும் மும்பை நகர காவல்துறை இத்தகைய பயங்கரவாத தாக்குதல்களை சமாளிக்க தயார் நிலையில் இல்லாததை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அசாதாரண நிகழ்வுகளை எதிர்கொள்ள தேவையான நவீன துப்பாக்கிகள், பாதுகாப்பு கவசங்கள், தீவிர பயிற்சி, நொடிப்பொழுதில் களத்தில் இறங்க மனம், உடல் அளவில் உறுதி, இவை முக்கியம். இதை கருத்தில் கொண்டு மும்பை நகர காவல் “ஃபோர்ஸ் ஒன்“ என்ற ஒரு அதிரடி அணியை இப்போது உருவாக்கியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக சிறந்த ஆளினர்களை தெரிவு செய்து தேவையான ஆயுதங்களோடு உயர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரை பணயம் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு எதிரிகளின் தாக்குதலை சமாளிக்க போதுமான ஆயுதங்கள் மட்டுமல்லாமல் உரிய தகவல்கள் அடிப்படையில் அணிகளை திரட்ட வேண்டும். திட்டமிடப்படாத எதிர்தாக்குதல் உயிரிழப்பில்தான் முடியும். சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் இத்தகைய தவிர்க்கக்கூடிய உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மேலும் பாதுகாப்பு வீரர்களுக்கு விசேஷ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்களது குடும்பங்கள் பாதுகாக்கப் படவேண்டும். ஊர்விட்டு ஊர்வந்து பாதுகாப்புப் பணியில் இருக்கும் வீரர்களுக்கு குடும்பங்கள் நலமாக இருக்கிறார்கள் அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் தான் பணியில் முழுமையாக கவனம் செலுத்தமுடியும்.
பாதுகாப்பு வீரர்களின் மனநிலை பக்குவமாக இருப்பதற்கு உரிய நேரத்தில் விடுப்பும் அவசியம். மத்திய ரிசர்வ் படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருவதாக செய்தி வந்துள்ளது. 2007ம் ஆண்டிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் 218 பாதுகாப்புப்படை வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் மத்திய ரிசர்வ் படையில் 143 தற்கொலைகள். மனஅழுத்தத்தில் உள்ள வீரர்கள் தனது உயர்அதிகாரிகள் மீதே துப்பாக்கி பிரயோகம் செய்த நிகழ்வுகளும் வருந்தத்தக்கவை. இங்குதான் நேரடி மேற்பார்வை செய்ய வேண்டிய அதிகாரிகள் சீரிய முறையில் தமது அணியில் உள்ளவர்களை திறமையாக பணியில் ஈடுபடுத்துவது மட்டுமல்லாமல் அவர்களை அரவணைத்து குறைகளை பாரபட்சமின்றி நிவர்த்தி செய்தல் அவசியம்.
செயலக நிர்வாகத்தில் இருப்பவர்கள் பாதுகாப்பு படையினரின் தேவைகளை உரிய நேரத்தில் பூர்த்தி செய்தால்தான் களத்தில் சாதனை புரிய முடியும். எதற்கெடுத்தாலும் குறுக்குக் கேள்வி கேட்பது பாதுகாப்பு வீரர்களின் ஆளுமையை சந்தேகிப்பது போன்ற மனஉளச்சல் தரக்கூடிய அணுகுமுறை தவிர்க்கப்பட வேண்டும்.
எதிரிகளின் தாக்குதலில் இரத்தம் சிந்திய, காயமுற்று உயிரிழந்த வீரர்களுக்கு சம்பிரதாய ஆறுதலோடு நின்று விடக்கூடாது. உயிர் நீத்தாருக்கு மலர் வளையம் வைத்து இரண்டு வார்த்தைக் கேட்பதோடு உயர் அதிகாரிகளின் கடமை முடிவதில்லை. வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களின் நிலை வருந்தத்தக்கது. உயிரிழப்பில் முதல் இடியின் ஆரவாரம் அடங்கிய பிறகு துக்கத்தையும், வாழ்க்கையில் தவிர்க்க முடியாத போராட்டங்களையும் தனியே நின்று சமாளிக்க வேண்டிய நிலையில் குடும்பங்கள் தள்ளப்படுகின்றன. இரண்டு வருடங்கள் ஆகியும் மும்பை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் முழுநிவாரணம் சென்றடையவில்லை என்று குறை கூறப்பட்டுள்ளது.
2004-2005 ம் ஆண்டுகளில் காவல்துறையில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களை சென்னை ஆணையரகத்தில் அழைத்து குறைகளை கேட்டு வாத்ஸல்யத்தோடு அவர்களது குடும்ப நாயகனின் தியாகத்தை பாராட்டியது பெரும் வரவேற்பை பெற்றது. இதே நிகழ்ச்சி தீயணைப்புத் துறையிலும் இவ்வருடம் நடத்தப்பட்டது. இத்தகைய அணுகுமுறை பணியில் இருப்பவர்களுக்கும் நம்மை பாதுகாக்க நமது அணி இருக்கிறது என்ற புதுத் தெம்பும் புத்துணர்வும் பிறக்கும்.
எல்லாவற்றிலும் மேலாக “எங்கிருந்தோ வந்தான் காக்கும் காவலன் நான் என்றான் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்” என்ற சமுதாயத்தின் பாராட்டுதல்தான் பாதுகாப்பு வீரருக்கு ஊக்கமருந்து அதைப் பெற்றுத் தருவது கூழைக்கும்பிடிட்டு, பதவியை தக்க வைப்பதே குறி என்றில்லாமல் தன்னலமின்றி துறையின் உயர்வுக்காக போராடக்கூடிய உயர் அதிகாரிகளின் கடமை.