Wednesday, January 13, 2010

சுவாமி விவேகானந்தர் என்ற உத்தம புருஷ்ர்



இந்தியாவை அகண்ட பாரதமாகவும், ஒரு தேசமாகவும் இந்திய மக்களை இணைத்தவர்கள் என்ற பட்டியலில் மூன்று முக்கியமான சான்றோர்கள் உள்ளனர். ஆதிசங்கரர், மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர். இவர்கள் தான் இந்தியாவை ஒன்றாக பார்த்தனர். ஒரே கலாசாரத்தில் உருவாகிய மக்களை இணைத்தனர். கேரளாவில் காலடியில் இருந்து இந்தியாவின் நான்கு திசைகளிலும் சென்று சமுதாய தர்மத்தை நிலைநாட்டினார் ஆதிசங்கரர். அதன் பின்பு மகாத்மா காந்தி மற்றும் சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் பல இடங்களுக்கு சென்று ஒருமைப்பாட்டிற்கு வழிவகுத்தனர். ஒருமைப்பாடு பட்டுவிடக்கூடாது என்று பாடுபட்டனர். சுவாமி விவேகானந்தர் அவர்கள் இந்தியர்களின் சிந்தனையை ஒருமுகப்படுத்தியதோடு விரிவாக ஆன்மீகத்திற்கும், ஆத்தீகத்திற்கும் உள்ள வேறுபாடுகளை சாமான்யர்களுக்கும் புரியும் வகையில் விவரித்துள்ளார். “தெய்வம் நீ என்று உணர்” என்று பாரதி முழங்கியது சுவாமி விவேகானந்தரின் “தன்னிற் பிறிதில்லை தெய்வம்” என்ற கொள்கையின் அடிப்படையில் உருவானது. அச்சம் தவிர் என்றார் பாரதி. அச்சமின்மையே உண்மையான மதம் என்று கூறுகிறார் சுவாமி விவேகானந்தமர்.

வள்ளலார் அவர்கள் பசித்தவர்களுக்கு பக்தி இருக்காது என்றார். பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது, மற்றவர்களுக்கு உதவுவது உண்மையான மனித நேயம் என்ற கொள்கையை சுவாமி விவேகானந்தரின் கொள்கையை வள்ளலார் நடைமுறைப்படுத்தினார். சுவாமி விவேகானந்தர் மதநெறி தேவை ஆனால் மதவெறி கூடாது என்றார். ஜாதி என்பது ஒரு சதி,. ஜாதியும் மத வெறியும் சமுதாயத்திற்கு அழிவு என்று தான் சென்ற இடத்தில் எல்லாம் உணர்த்தியுள்ளார். அத்தகைய முற்போக்கு கொள்கைகளை சமுதாயத்திற்கு நிலைநாட்டியவர் பெரியார், அண்ணா. கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் சிந்தனையாளர்களை சிந்திக்க வைத்து அவர்களுடைய சிந்தனைகளுக்கு கருவூலமாகவும் ஊற்றாகவும் முன்னோடியாகவும் விளங்கியவர் சுவாமி விவேகானந்தர்.

Awake Arise என்று விழித்துக்கொள் கடைமையைச் செய் என்று இளைஞர்களக்கு நல்வழி புகட்டினார். பல கதைகளைச் கூறி தனது கருத்துக்களை மக்களிடம் சென்றடையச் செய்வார் சுவாமி விவேகானந்தர். ஒரு எஜமானரின் அழகிய தோட்டத்தில் இரு தோட்டக்காரர்கள். ஒருவர் உண்மையாக உழைப்பவர். மற்றொருவர் உண்மையாக உழைக்காமல் எஜமானர் வரும்போது மட்டும் அவர்களுக்கு பணிவிடை செய்து தான்தான் அனைத்து வேலைகளையும் செய்ததாக வேலையே செய்யாமல் தன்னை முந்நிறுத்திக் கொள்வார். உண்மையாக உழைப்பவர் அமைதியாக தமது பணிகளை செய்து தோட்டத்தின் வளமையைப் பாதுகாத்து எஜமானருக்கு பொருள் ஈட்டிக் கொடுப்பார். இதில் அமைதியாக தமது வேலையைச் செய்தவரே உயர்ந்தவர். உலகமே ஒரு தோட்டம், கடவுளே தோட்டத்தின் எஜமானர். எவர் ஒருவர் தமது பணிகளை செவ்வனே செய்கிறாரோ அவரையே இறைவன் நேசிப்பார். சுவாமி விவேகானந்தர் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று பாகுபாடு இல்லை எவர் மற்றவர்களுக்கு பாடுபடுகிறாரோ அவர்தான் உண்மையாக உயர்ந்தவர் என்றார்.

தொன்றுதொட்டு நாட்டில் ஊறிய பழக்கவழக்கங்கள் மூடநம்பிக்கை இவற்றை தகர்தெறிய வேண்டும். நல்ல நேரம் கெட்டநேரம் என்றில்லை. உழைப்பதற்கு எந்த நேரமும் பொன்னான நேரம்தான். ஒரு அரசன் துறவியிடம் சென்று வாழ்க்கையில் நாம் பழகும் மனிதர், உரித்த நேரம், முக்கிய பணி இவைகளில் முக்கியமான நபர் யார், முக்கியமான நேரம் எது முக்கியமான பணி எது என்று ஞானியிடம் கேட்டார். அதற்கு ஞானி இந்த கேள்விகளுக்கு பதில் எளிதானது நீ இப்பொழுது யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாயோ அவர்தான் முக்கியமான நபர், தற்காலமே முக்கியமான நேரம், இப்பொழுது நீ செய்து கொண்டிருக்கும் பணியே முக்கியமான பணி என்றார் ஞானி. இதை மனதில் நிறுத்தி இளைஞர்களாகிய நீங்கள் உங்கள் நேரத்தை உபயோகமான வகையில் அமைத்துக்கொண்டால் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கைக்கூடும்.

தன்னம்பிக்கையும், அச்சமின்மையும் இரு முக்கியமான கோட்பாடுகள் என்று மீண்டும் மீண்டும் உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். பகவத்கீதையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தவர். கீதையில் கிருஷ்ணபகவான் அர்ஜுனனுக்கு தைரியமாக வருவதை எதிர்கொண்டு அதர்மத்தை எதிர்த்து போராடி தர்மத்தை நிலைநாட்டு என்று “க்ளைப்பயம் மாஸ்ம கம பார்த்த” என்று விவேகத்தை மீண்டும் மீண்டும் இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். குறிப்பான தீர்க்கமான கேள்விகள் கேட்க கற்றுக் கொள்ள வேண்டும். அலெக்சாண்டர் என்ற மாவீரனை உருவாக்கியவர் அவரது ஆசிரியர் அரிஸ்டாட்டில். அலெக்சாண்டர் நுணுக்கமான கேள்விகளைக் கேட்க பயிற்சி பெற்றதால் தொடர்ந்து வெற்றிகளை குவிக்க முடிந்தது. “Critical questioning is the capacity to raise incisive and ever uncomfortable questions”. மௌனம் சாதிப்பதைவிட கோழைத்தனம் வேறொன்றுமில்லை. டைட்டானிக் கப்பல் மூழ்கியது ஆனால் அது கட்டப்படும்பொழுது பல சந்தேகங்கள் எழுந்தன. அவை ஆராயப்படவில்லை. கேள்விகள் கேட்கப்படவில்லை. சாதாரண traffic பிரச்சனையை எடுத்துக் கொண்டால் நெரிசல் ஏன் ஏற்படுகிறது என்று சரியாக ஆராய்வதில்லை. சாலை அளவு வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப விரிவடையவில்லை என்பது பொதுவான காரணம். ஆனால் அதற்கு தீர்வு அந்தந்த நெரிசல் இடங்களைப் பொருத்தது. சாலை அகலப்படுத்தினால் விரைவில் போய்விடலாம் என்று அதிக வாகனங்கள் குவிந்து முன்பைவிட அதிக நெரிசல்தான் ஏற்படும். ஒவ்வொரு பிரச்சனையையும் தீர ஆராய்வதற்கும் முடிவுகள் எடுக்க உகந்த கேள்விகள் கேட்கப்படவேண்டும். இளைஞர்கள் கடினமான கேள்விகள் கேட்டால் தான் அறிவு வளரும்.

“உரிமை மேல் ஆண்மை பாராட்டதார் சாந்தம் பெருமையில் பிணத்தில் பிறந்தோர் சீதம்” என்ற மனோன்மணீய வாக்கியத்திற்கு ஏற்ப கேள்வி கேட்கும் உரிமையை சரியாக பயன்படுத்துவோம்.
கடந்த நூற்றாண்டின் உண்மையான எழுச்சி நாயகன் சுவாமி விவேகானந்தர். அவருடைய பெயரிலேயே உச்சமும், விவேகமும், வேகமும் ஆனந்தமும் உள்ளது. வேகமாக பணியினை செய்வதில் உண்மையான ஆனந்தம் கிடைக்கிறது என்பதை அவருடைய பெயர் விவேகானந்தர் அறிவுறுத்துகிறது. அவருடைய வழியில் மிகச்சிறப்பாக பணிகளை செய்துகொண்டிருக்கும் ராமகிருஷ்ண மடத்திற்கு எனது இதயமார்ந்த பாராட்டுக்கள்.