இந்திய துணை கண்டம் என்று நமது நாட்டைப் பற்றி குறிப்பிடுவது பொருத்தமானதொன்று. ஏனெனில் பலதரப்பட்ட மக்கள், மாறுபட்ட சீதோஷ்ணநிலை, விதவிதமான தாவர வகைகள், விலங்கினங்கள், கலாச்சாரப் பரிமாணங்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் காணமுடிகிறது. இந்தியா எவ்வளவு மாநிலங்கள் உள்ளடங்கியது என்று கேட்டால் பலருக்கு உடனடியாக பதில் சொல்ல முடியாது. அதிலும் வடகிழக்கு மாநிலங்கள் பற்றிய தகவல்கள் பலருக்குத் தெரிவதில்லை. சிக்கிம் நமது நாட்டின் எல்லைக்குட்பட்டதா என்று ஐயமுறுபுவர்கள் உள்ளனர் என்பது ஆச்சிரியத்திற்குரியது.
1975-ம் ஆண்டு சிக்கிம் நமது நாட்டின் இருபத்திரண்டாவது மாநிலமாக இணைக்கப்பட்டது. 7110 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடைய இம்மாநிலம் கோவாவிற்கு அடுத்து சிறிய மாநிலம். ஜனத்தொகை 5 லட்சத்து நாற்பதாயிரம். வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து, மிசோராம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிமும் வடகிழக்கு மாநிலமாக மத்திய அரசு எடுத்துக் கொண்டு சலுகைகள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசு அலுவலர்களுக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு விடுமுறை பயணச் சலுகை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அளிக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் சொந்த ஊர் செல்வதற்கு பதிலாக வடகிழக்கு மாநிலம் ஏதாவது ஒன்றிற்கு செல்லலாம் என்று மத்திய அரசு சமீபத்தில் ஒரு ஆணை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த ஆணை அடுத்த இரண்டு வருடங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆணையில் மத்திய அரசு ஊழியர்கள் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு. அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மூலம் உள்ளூர் மக்களுக்கு வருமானத்திற்கு வழிவகை.
கொல்கத்தா நகரம் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு சந்திப்பு மையம். சிக்கிம் மேற்கு வங்காளத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. சிலிகுரி, புதிய ஜல்பாய்குரி பிரதான ரயில் சந்திப்புகள். சிலிகுரி டவுனிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாக்டோக்ரா கடைசி விமானதளம். இது இந்திய விமானப் படையின் முக்கியமான தளம். சிலிகுரியிலிருந்து சுமார் நாலரை மணி சாலைப் பயணத்திற்குப் பிறகு சிக்கிம் தலைநகரான கேங்டாக்கை அடையலாம்.
மலைப்பாதை டீஸ்ட் நதியின் கரையோரமாக செல்கிறது. பசுமையான அடர்ந்த காடுகள் கண்ணுக்கினிய காட்சிகள். பிரம்மாண்டமான மலைப்பகுதி, மலையிலிருந்து வேகமாக உருண்டோடிவரும் டீஸ்ட் நதி மனதுக்கு ஆனந்தத்தை அளிக்கும்.
சிக்கிம் மாநிலம் நான்கு மாவட்டங்களைக் கொண்டது. மாநிலம் மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு என்று நான்கு திசைகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. எல்லா மாநிலங்களுக்கு உண்டான அரசு அமைப்புகள் உள்ளன. சிக்கிம் சட்டசபையில் 32 உறுப்பினர்கள். தலைமைச் செயலகம், காவல், பொதுப்பணி, கல்வி முதலிய எல்லாத் துறைகளும் இயங்குகின்றன. சிக்கிமின் பெருவாரியான பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பராமரிக்கப்படுகிறது. மக்கள் ஜனத்தொகை சதுர கிலோ மீட்டர் கணக்கில் மிகக் குறைவு. விதிக்கப்பட்ட சில இடங்களில்தான் கட்டிடங்கள் கட்டலாம். வெளிமாநிலத்தவர் இங்கு இடங்கள் வாங்க இயலாது.
சிக்கிம் மாநிலம் நேபாளம், சைனா, பூட்டான் ஆகிய நாடுகளின் எல்லையைக் கொண்டது. இது தவிர மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங் மலைப்பிரதேசம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநில எல்லையும் சிக்கிம் எல்லையில் அடங்கும். நமது நாட்டின் பாதுகாப்பு என்ற நிலையில் பார்த்தால் சிக்கிம் ஒரு முக்கியமான பகுதி என்பது தெளிவு.
சிக்கிம் மாநிலத்தில் பழங்குடி மக்கள் “லெப்சா” இனத்தைச் சேர்ந்தவர். ரம்யமான தமது பிரதேசத்தை “ நயி மேயில்” புதுக்கருக்கு அழியாத இடம் என்று வர்ணிக்கின்றனர். வானத்தைக் கிழித்துக் கொண்டு கம்பீரமாக நிற்கும் வெண்பனி சூழ்ந்த ‘கஞ்சன்சங்கா’ மலைத்தொடர் கண்கொள்ளாக் காட்சி. சுமார் 8596 மீட்டர் உயரத்தில் நிற்கும் இந்த மலைத்தொடர் உலகத்தில் மூன்றாவது உயரமான மலை என்ற பெருமை கொண்டது. புனிதமான மலை என்று சிக்கிம் மக்களால் கருதப்படுவதாலோ என்னவோ இதன் உச்சியை எவரும் முழுமையாக அடைய முடியவில்லை. 5000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கோச்சாலா கணவாய் மலைத்தொடரை நடை பயணமாய் காண விரும்புபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். எங்கும் கண்டிராத தாவர வகைகளையும், அழகிய நீர்வீழ்ச்சிகளயும் காணமுடியும்.
சரித்திரப் புகழ் வாய்ந்த 14,200 அடி உயரத்தில் அமைந்துள்ள “நாதுலா கணவாய்” கேங்டாக்கிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. போய் சேர்வதற்கு மூன்று மணி நேரம் பிடிக்கும். இப்போது சைனா கட்டுப்பாட்டில் உள்ள திபேத்திய நாடு அதற்கப்பால் அமைந்துள்ளது. நமது நாதுலா எல்லைப் பகுதிக்குச் செல்ல சிக்கிம் காவல்துறை அனுமதிச் சீட்டு பெற வேண்டும். இந்திய ராணுவ வீரர்களும், சைனா நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் எதிரும் புதிருமாக நிற்கும் இடம். சைனா ராணுவ வீரர்கள் சிரித்துக் கொண்டு சகஜமாக இந்திய யாத்ரிகர்களை புகைப்படம் எடுத்தனர். ஆனால் நமது எல்லையில் கட்டுப்பாடும் கெடுபிடியும் அதிகம். பீஹார் ரெஜிமெண்ட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் அங்கு எல்லை பாதுகாப்பு பணியில் இருந்தனர். நமது மக்களை ஏன் கனிவோடு நடத்தக்கூடாது ஏன் இந்தக்கடுகடுப்பு என்று தோன்றியது. சீருடை அணிந்தால், விறைப்பாக நடந்து கொண்டால் தான் தமது அதிகாரம் மதிக்கப்படும் என்ற பாதுகாப்புப் பணியில் உள்ளவர்களின் நினைப்பு எப்போது மாறுமோ? புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. சில நாட்களில் நமது ராணுவத்தினர் அனுமதிப்பார்கள் என்றார்கள்.
1958-ம் வருடம் பாரதப் பிரதமர் ஜஹர்லால் நேரு அவர்கள் நாதுலா எல்லைக்கு வந்ததற்க்கு அடையாளமாக ஒரு நினைவுச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அப்போது சிக்கிம் இந்திய பாதுகாப்புக்கு உட்பட்ட நாடாக இருந்தது. சைனா எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்கள் தங்குவதற்க்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. உயர்வான பகுதியில் கண்காணிப்பு பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளான. புதிதாக செப்பனிடப்பட்டுள்ள அகல சாலைகள் போடப்பட்டிருந்தது. சாலை நடுவே பளிச்சென்று மஞ்சள் கோடு, போக்குவரத்தே இல்லாத இப்பகுதியில் எதற்கு என்ற கேள்விக்குறி எழாமல் இல்லை. ஆனால் இந்திய எல்லைப்பகுதியில் கரடு முரடான மண்பாதை வழியே சிரமப்பட்டுத்தான் உச்சியை அடைய முடியும். இதுவும் பாதுகாப்புக் கருதி தடைகள் தடைகளாகவே இருக்கட்டும் என்று விடப்பட்டிருக்க வேண்டும் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது! நமது பக்கத்தில் சுற்றுலா பயணிகளுக்கான சிற்றுண்டி விடுதியில் கன ஜோரான வியாபாரம். அருகில் இன்டெர்னட் இணைப்புடன் கணினிகள் வைக்கப்பட்டிருந்தன. உலகின் மிக உயரமான இன்டெர்னட் மையம் இதுதான் என்ற அறிவிப்புப் பலகை பெருமையோடு பறைசாற்றியது.
“சிப்சு” என்ற பகுதியில் சாலை ஒட்டி மதராஸ் ரெஜிமெண்ட் அணி அமைந்துள்ளது. ‘பத்தொன்பதே வெற்றி நமதே’ என்ற வீர வரிகள் முகப்பில் எழுதப்பட்டிருந்தது கவனத்தை ஈர்த்தது. தூய்மையாகவும், நேர்த்தியாகவும் ராணுவத்திற்கே உண்டான ஒழுக்கமுடன் பராமரிக்கப்பட்டிருந்தது. முகப்பில் நின்ற வீரர் சகஜமாக அணியின் பொறுப்புகளை விவரித்தார். அவரது பொறுப்புணர்ச்சியும் ஈடுபாடும் மெச்சத்தக்கது. சிப்சு கிராமவழி சாலையில் ஒரு அறிவிப்புப் பலகை இந்தியிலும் ஆங்கிலத்திலும் போடப்பட்டிருந்தது. அதில் ராணுவ விரர்கள் கிராமத்திற்க்கு முகாந்திரம் இன்றி செல்லக் கூடாது என்று அறிவுறுத்தும் வாசகங்கள், எந்த ஒரு உள்ளுர் பிரச்சனையிலும் ராணுவத்தினர் ஈடுபடுக்கூடாது என்பதற்காக ராணுவ தலைமையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
இந்தியாவின் பொக்கிஷம் என்று உணரப்படுவது பல நூற்றாண்டுகளாக சமுதாயாதோடு இழைந்த கலாச்சாரம், எல்லா நாட்டவரையும் வரவேற்கும் மனப்பாங்கு, வேறுபாடுகளை அனுசரித்துப் பழகும் பக்குவம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம், கேங்டாக் நகரில் உள்ள நாம்கியால் திபேத்திய ஆராய்ச்சி மையம் தொன்மையான இந்திய கலாச்சாரத்தின் அடிச்சுவடுகளை தாங்கிய தங்கப் பெட்டகம் என்றால் மிகையில்லை. ஐம்பது வருடங்களாக இயங்கிவரும் இந்த ஆராய்ச்சி மையத்தின் முக்கியக் குறிக்கோள் புத்த மதத்தின் மஹாயானா பிரிவின் சித்தாந்தங்களை பண்டை நூல்களிலிருந்து தொகுத்து ஆராய்ந்து மக்களிடையே பகிர்ந்து கொண்டு சமுதாயத்தை மேன்மையடையச் செய்வது, அரிய பல சமஸ்கிருத நூல்களும் அதன் மொழி பெயர்ப்பும் பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்தப் பகுதியில் விஜயம் செய்த புகழ் பெற்ற சர்வதேச யாத்திரிகர்களின் குறிப்புகள், விமர்சனங்கள், வியாக்கியானங்கள், அந்த காலத்திய சமூகநிலையை நன்கு விளக்குகிறது. சிக்கிம் அரசப் பரம்பரையை சேர்ந்த சோக்யால் தோஷி நாம்கியால் அவர்களின் அரசாட்சியின் போது துவங்கப்பட்ட இந்த ஆராய்ச்சி மையம் வளர்ச்சியடைய நல்ல பல முயற்சிகள் எடுக்கப்பட்டு சிறந்த பராமரிப்பில் உள்ளது, சிக்கிம் விஜயம் இந்த மையத்தை பாராமல் பூர்த்தியடையாது.
டார்ஜிலிங் மிக அழகான குளிர் பிரதேசம். ஹிமாலய மலைத்தொடரை “டைகர் டாப்” என்ற உச்சி இடத்திலிருந்து கண்டு களிக்கலாம். கூர்க்கா இனத்தை சேர்ந்தவர் அதிகம். அண்டை நாடான நேபாளத்திலிருந்து குடிபெயர்ந்தவர்களின் வரத்து, அவர்களின் சொந்த பந்தங்கள், நேபாளத்தில் உள்நாட்டு பிரச்சினையின் தாக்கம் என்று டார்ஜிலிங் கொதுவை நிலையில் உள்ளது. செப்பனிடப்படாத சாலைகள், நெரிசல் மிகுந்த மையப்பகுதி, அகற்றப்படாத குப்பைகள் ஒரு முக்கிய சுற்றுலா மையத்திற்கு அழகு சேர்ப்பதாக இல்லை. அரசு அலுவலகங்களில் கோர்க்கா மாநிலம் என்று தன்னிச்சையாக வைக்கப்பட்ட பெயர் பலகை வாகனங்களில் மேற்கு வங்காளம் என்பதற்கு பதிலாக கோர்க்கா மாநிலம் என்பதற்கு அடையாளமாக ஜி.எல்.என்ற பதிவுக் குறியீடு அங்குள்ள பிரச்சனையை பிரதிபலிக்கிறது. நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மையை கருத்தில் கொண்டு தீர்வு ஏற்படுவதற்கு பலதரப்பட்ட பங்கேற்பாளர்களின் ஒத்துழைப்பு தேவை.பழங்குடி மக்கள் வாழும் இடங்களில் அவர்களுடைய பழக்க வழக்கங்கள், உணர்வுகள், காலம் காலமாக வாழ்க்கையில் இழைந்த நம்பிக்கைகள் இவைகளை மனதில் கொண்டு அரசுப் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும். எந்த இடமானாலும் மக்களின் தேவைகளை உணர்ந்து அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நாட்டில் ஆட்சி நடத்துவது போன்ற முறையில் நடந்து கொள்ளக்கூடாது. இத்தகைய மனநிலையுடன் அதிகார தோரணையோடு நடந்து கொள்ளும் சில அரசு அதிகாரிகளால் மக்களுக்கு வெறுப்பு உண்டாகிறது. நாட்டின் வளர்ச்சியில் தமக்குரிய பங்கு மறுக்கப்படுகிறது என்ற நிலைக்குத் மக்கள் தள்ளப்படுகிறார்கள். பிரிவினைவாதத்திற்கு இடப்படும் முதல் வித்து இதுதான். டார்ஜிலிங் கூர்க்கா தனிமாநிலம் வேண்டும் என்ற போராட்டமும் இதன் காரணமாக ஏற்பட்டதுதான். சிக்கிம் போர்த்திற முக்கியத்துவம் வாய்ந்த எல்லைப் பகுதியில் உள்ளது. பழங்குடி மக்களுக்கே உரித்தான எளிமை காண முடியும். ஆனால் கூருணர்வுடையவர்கள். “செப்பு மொழி பல உடையாள் ஆனால் சிந்தனை ஒன்றுடையாள்” என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப பாரத தேசத்தோடு ஒன்றிய சிக்கிம் மாநில மக்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
இந்த கட்டுரை தினமணி நாளிதழில் கதிர் இணைப்பில் 24.05.2009 அன்று பிரசுரிக்கப்பட்டது.