Monday, November 10, 2014

ஊழலற்ற பாதை வகுப்போம்! Dinamani Article 10.11.2014



உலகம் ஒரு கிராமம் என்றவாறு நாடுகளிடையே இடைவெளி குறுகி வருகிறது. பன்னாட்டு வணிக ஒப்பந்தம் மற்றும்  உலக வணிகமயமாக்கலை தொடர்ந்து பல நாடுகள் இடையே பண்டம் பரிமாற்றல், தொழில் நுட்ப தொடர்பு சுலபமாக அமைந்துள்ளது. 
“வெட்டுக் கனிகள் செய்து தங்கமுதலாம்
வேறு  பல பொருளுங்  குடைந்தெடுப்போம்
எட்டுத்  திசைகளிலுஞ்  சென்றிவைவிற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டுவருவோம் என்று உலக வணிகத்திற்கு அவன் காலத்தே பாரதி பாடி உரைத்தான். ஆனால் குடைதெடுக்கும் தங்கம் என்ன, பல களிமனங்கள் காற்றலைகள் என்று பஞ்ச பூதங்களில் ஊற்றெடுத்து ஆழிபேரலையாய் உருவெடுக்கும் ஊழலை இப்போது பார்த்தால் மனம் வெதும்பி பாடியிருப்பான். 
உலக வணிக முறை சீராக இயங்க தடங்கலாக இருப்பது ஊழல் என்பதை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை ஊழலை தடுக்கவும் தவிர்க்கவும் 1990ல் இருந்து கூட்டு முயற்சி பல கலந்தாய்வு கூட்டங்கள் மூலம் எடுத்துள்ளது.  ஊழல் தடுப்பு உடன்படிக்கை 2003ம் ஆண்டு டிசம்பர் 9ம் நாள் கையெழுத்திட்டு டிசம்பர் 14 2005ல் பிரகடனப்படுத்தப்பட்டு அமலுக்கு வந்தது.  இதுவரை 140 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தத்தம் நாட்டில் அமல்படுத்த துவங்கியுள்ளன.  இந்தியா 2011ம் ஆண்டுதான் நாடாளுமன்றத்தில் வைத்து பிரகடனத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.   பிரிட்டன் போன்ற பல நாடுகள் கையூட்டு தடுக்கும் சட்டம் (ப்ரைபரி ஆக்ட்) அமல்படுத்தியுள்ளது. இன்னும் லோக்பால், லோக் ஆயுக்தா, ஒருங்கிணைந்த ஊழல் தடுப்பு சட்டம் இந்தியாவில் விவாத அளவில் தான் பாராளுமன்றத்தில் உள்ளது. தனியார் முறைகேடுகளையும் ஒருமுகப்படுத்தும் சட்டம் விரைவிலே நிறைவேற வேண்டும்.
     1964ம் ஆண்டு அரசு நடவடிக்கைகளில் ஊழலை தவிர்க்க எடுக்க வேண்டிய செயல் முறைகளை ஆராய்ந்து சந்தானம் தலைமையிலான கமிட்டி பரிந்துரைகளை அளித்தது.  அதன் அடிப்படையில் உருவானதுதான் சிவிசி எனப்படும் மத்திய விழிப்பணர்வு ஆணையம். ஒவ்வொரு வருடமும் முக்கியமான ஊழல் தடுப்பு செய்தியை முன்நிறுத்தி அதற்கான விழிப்புணர்வை நாடெங்கிலும் எடுப்பதற்கு எல்லா அரசுத்துறைகளுக்கும் சிவிசி அறிவுறுத்தும், ஊழல் ஒழிப்பு உறுதிமொழியும் எடுக்கப்படும்.
2013ம் வருடம் அரசு தனது தேவைக்கான கொள் முதலில் வெளிப்படைத்தன்மையும், ஊழலற்ற முறையையும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.  வளர்ச்சிப் பணிகளுக்காக அரசுதுறைகள் முலமாக கொள்முதல் மதிப்பு வருடத்திற்கு சுமார் ரூபாய் பனிரெண்டாயிரம் கோடி.  இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிச் குறியீட்டில் முப்பது சதவிகிதம்.  இதில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஊழலற்ற நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிவிசி இந்த பொருண்மையை முன் வைத்தது.  எந்த அளவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது அதன் விளைவாக ஊழல் குறைந்தன என்பது கேள்விக்குறி.  காற்றலை, நிலக்கரி போன்ற இயற்கை வளங்கள் ஒதுக்கீட்டில் எழுந்த முறைகேடுகள் நீதிமன்றங்கள் பார்வைக்கு வந்துள்ளன.    
எட்டு அத்தியாயம் 71 ஷரத்துக்கள் கொண்ட ஐநா உடன்படிக்கையில் எல்லா நாடுகளும் ஊழல் தடுப்பு முறைகளை மேம்படுத்தவும் நன்னெறி வழிகளுக்கு ஊக்கம் அளிக்கவும் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்படும் சொத்துக்களை மீட்க பரஸ்பர உதவி நல்க வேண்டும் என்று 54 1A பிரிவில் தெளிவாக உள்ளது. ஊழல் தொடர்பு சொத்துக்களை முடக்க நாடுகளுக்கிடைய சட்ட உதவி புரிந்துணர்வு ஒப்பந்தமும் இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக கலந்தாய்வு தொடர்ந்து நடந்து சர்ச்சைக்கு முடிவில்லாமல் இருந்தது.  வளர்ந்து வரும் நாடுகளில் அரசியல் நிலையாமை, ராணுவ ஆதிக்கம் அரசு அதிகாரிகளின் வஞ்சகம் காரணமாக ஊழல் தறிகெட்டு ஊழல் பணம் பாதுகாப்பான நாடுகளில் பதுக்குவது தொடர்ந்து வருவதால் ஒரு கட்டத்தில் சொத்து மீட்பு முக்கியமான நடவடிக்கையாகிறது.  கொள்ளையடிக்கப்பட்ட  சொத்துக்களை மீட்க வழிவகை செய்யும் சர்வதேச சொத்து மீட்பு அத்தியாயம் ஐந்தில் உள்ளடக்கிய ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டதின்  அடிப்படையில்தான் வளர்ந்து வரும் பல நாடுகள் இந்த உடன்படிக்கையில் ஒப்புதல் அளிக்க முன் வந்தன. 
தற்போது மத்திய அரசு உச்ச நீதிமன்றம் ஆணையின்படி வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கணக்கில் வராத பணத்தை மீட்க விஷேச விசாரணை குழாமை நீதிபதி ஷா தலைமையில் அமைத்துள்ளது.  உச்ச நீதிமன்றம் இதில் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் முன்னேற்றதை முனைப்பாக கண்காணிக்கிறது.  அதை விட முக்கியம் நாட்டில் புழங்கும் கணக்கில் வராத பணத்தை வெளிக் கொணரும் நடவடிக்கை.
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் இரும்பு மனிதர் சர்தார் படேல் அவர்களின் பிறந்த ஜயந்தியை வைத்து நாடெங்கிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  இந்தியா சுதந்திரம் அடைந்த மறு வருடமே ராணுவத்திற்கு வாகனங்கள் வாங்குவதில் முறைகேடு பரபரப்பை ஏற்படுத்தியது.  அப்போதே படேல் அவர்கள் பொது வாழ்வில் தரம் தாழ்ந்து வருவது பற்றியும், ஆளுமையிலும் நிர்வாகத்திலும் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை, மனவேதனை அளிக்கிறது என்று தனது வருத்தத்தை தெரிவித்தார்.  நிலமையை சீர்செய்ய தேவை மாற்றம் ஆனால் வீண் சர்ச்சைதான் தொடர்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  அந்த சர்ச்சை முழுநடவடிக்கையின்றி இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது!
இந்த வருடம் மத்திய விஜிலன்ஸ் கமிஷன் தொழில் நுட்பம் எவ்வாறு ஊழலை தவிர்க்க முடியும் என்பதை மையக் கருத்தாக அறிவுத்துள்ளது.  அரசு நிர்வாகத்தில் பல சட்ட திட்டங்கள் உள்ளன.  பல்வேறு துறைகளில் நிர்வாக நெறிமுறைகள் விதிகள் உள்ளன.  அதனை புரிந்து கொண்டு அமல் படுத்துவதே அரசு ஊழியருக்கு பிரமிப்பை ஏற்படுத்தும்.  குழப்பமான விதிகளுக்கும் குறைவில்லை.  இத்தகைய குழப்பமான விதிகள்தான் ஊழலுக்கு வித்திடுகிறது.
ஊழலை தவிர்ப்பதற்கு முதல் நடவடிக்கை விதிகளை சுலபமாக்குதல், தேவையற்றவையை நீக்குதல் எல்லோரையும் சமமாக பாவித்து விதிகளை நடைமுறை படுத்துதல்.  ஆனால் சுலபமாக்குவது சுலபமல்ல என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.  உதாரணமாக காவல்துறையில் புகார் கொடுக்க கணினி மூலமாக பதிவு செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இயலவில்லை. அரசு விதிகளை புரிந்து கொள்வதை ஜனரஞ்சக அறிவு எனலாம். எவ்வளவுதான் படித்திருந்தாலும் இந்த ஜனரஞ்சக நடைமுறை அறிவை அடைவது பிரம்ம பிரயத்தனம் என்றால் மிகையில்லை. சம்மந்தப்பட்ட துறைகளும் தங்களது உடும்புப் பிடியை லேசில் தளர்த்த மாட்டார்கள்.
இந்த சூழலில் தான் தொழில் நுட்பம் மக்களின் உதவிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மத்திய விஜிலன்ஸ் கமிஷன் தொழில் நுட்பத்தை கடைபிடிக்க அரசுதுறைகளை அறிவுத்தியது வரவேற்றக்தக்கது. அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக பல போரட்டங்கள் நடத்தி மக்களின் கவனத்தையும் அரசின் பார்வையையும் இந்த முக்கிய பிரச்சனை மீது திருப்பினார்.  அதில் ஒரளவு வெற்றியும் கண்டார்.  தெய்வாதீனமாக அதே சமயம் சிஏஜியின் தலைவர் வினோத் ராயின் 2ஜி அறிக்கையும் ஹிமாலய ஊழலை மக்கள் முன் வைத்தது.
அன்றாட வாழ்க்கையில் மக்கள் எதிர்க் கொள்ளும் அரசு துறைகளில் சங்கடமின்றி சேவையைப் பெற தொழில் நுட்பம் அதிக அளவில் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வருவாய், காவல்துறை, கிராம நிர்வாகம், வட்டாட்சியர் அலுவலகம், பதிவுத்துறை, போக்குவரத்துத்துறை, பல்வேறு அன்றாட நடவடிக்கைகளுக்கு  உரிமங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் துறைகள், இவ்விடங்களில் தான் மக்கள் அதிகமாக அல்லல் படுகிறார்கள்.
ஜனத்தொகை அதிகமாக இருப்பதால் தேவைகளும் அதிகம். சம்பந்தப்பட்ட துறைகளுக்கு எண்ணிக்கைகளை சமாளிக்க முடியாத நிலை. இதனால் வேகமாக சேவையை பெற மக்கள் குறுக்கு வழி நாடுகிறார்கள்.  நப்பாசை பிடித்த ஊழியர்கள் சந்தர்பத்தை பயன்படுத்தி கை நீட்டுகிறார்கள் ஊழல் ஊடுருவுகிறது ஊழியர்கள் கை ஒங்குகிறது.  ஒடுங்கும் அப்பாவி மக்கள் மேலும் ஒதுக்கப்படுகிறார்கள். 
மக்கள் நேராக எதிர்க் கொள்ளும் துறைகளில் கணினி மூலம் தகவல்களை பதிவு செய்து நடவடிக்கை எடுத்தல் மக்களுக்கு அரசின் சேவை சுலபமாக வந்தடையும்.  ‘இ-சேவா’ என்ற முறை பல இடங்களில் வழிமுறைகளை சுலபமாக்கியுள்ளது.
அரசு பணியாளர்கள் நியமனம், பணிமாற்றம், கல்வி நிர்வாகம், மருத்துவமனை நிர்வாகம் இவைகளில் நேரும் தவறுகள் நேர்முகமாக பாதிப்பு தெரியாது, ஆனால் அதன் விளைவின் அழுத்தம் அதிகம். பணியாளர் தேர்வில் வெளிப்படைத்தன்மையும் காலதாமதமின்றி தேர்வுகளின் முடிவுகள் பணிநியமன ஆணை அளித்தால்தான் நம்பிக்கை பிறக்கும்.  அரசுப்பணியாளர்கள் சுமார் முப்பது வருடம் பணியில் இருக்கக் கூடியவர்கள்.  அவர்களது தேர்வு நேர்மையாக நடந்தால்தான் அவர்கள் நேர்மையாக பணிபுரிவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.  நேர்காணலே கோணலாக இருந்தால் பணியும் சறுக்கல்கள் நிறைந்த கோணலான பாதையில்தான் செல்லும். சம்மந்தபட்ட துறையும் சரியும். கணினிமூலம் தகவல் பரிமாற்றம் நிர்வாக சீர்திருத்தம் வெகுமளவு சறுக்கல்களை தவிர்க்கும்.
தவறு செய்யும் அரசு ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புத்துறை மூன்று வகையாக குற்ற நடவடிக்கை எடுக்கிறது. கையும் களவுமாக கையூட்டு பெறும்போது பிடிப்பது ஒரு வகை.  விதிகளை மீறி சட்ட விரோதமாக நடவடிக்கை எடுத்து லஞ்சம் பெறுவதை கோப்புகளை ஆராய்வது மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது இரண்டாவது வகை. மூன்றாவது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தலை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்தல்.  முதல் இரண்டு வழிகளும் தவறு செய்யும் ஊழியரை ஊழல் குற்றத்தோடு நேராக இணைக்கும்.  மூன்றாவது வழியான வரவிற்கு அதிகமான சொத்து என்பது சுற்றி வளைக்கும் வழி.  எந்த ஒரு நபரும் வீட்டில் உள்ள ஒவ்வொரு குந்து மணிக்கும் கணக்கு காட்டுவது முடியாத காரியம். அபாண்டமாக ஜோடனை செய்வதற்கும் நேர்மையற்ற புலன் விசாரணை அலுவலர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கும்.  நேர்மையற்ற விசாரணையும் அதைத் தூண்டி துணை போவதும் ஊழலின் ஒரு பரிமாணம் தானே.

அரசு நிர்வாகம் கோப்புக்களோடு நின்றுவிடாது மக்களின் வாழ்க்கையை கோலமிட வல்லது.  அன்றாட வாழ்க்கைக்கு இடையூறின்றி உதவிக்கரம் கொடுக்கும் அரசே வல்லரசு. மத்திய அரசில் உள்துறை,பாதுகாப்பு, தொழில்கள், உணவு,நிதி என்று ஐம்பத்தொரு அமைச்சகங்கள் உள்ளன.  சிவிசி, மனித உரிமை என்று கண்காணிப்பு ஆணையங்கள் மத்தியிலும் மாநிலங்களிலும் எல்லா நேர்வுகளையும் பார்வையிடுகின்றன.
நிர்வாக மேல் மட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், சட்ட திருத்தங்கள், நாட்டின் இயற்கை வளங்கள் பயன்படுத்தல், அரசியல் சாசன கட்டமைப்பை பாதுகாத்தல் இவை அரசியல் திறம் சார்ந்தவை.  இங்கு தொழில் நுட்பத்தைவிட நேர்மையான சிந்தனையும் மக்கள் பயன்பாட்டை உள்ளடக்கிய நோக்கமும் தான் முக்கியம். அவைதான் ஊழலற்ற பாதையை வகுக்கும்.


Monday, November 3, 2014

இந்தியர்களைத் துயிலெழுப்பிய அன்னி பெசன்ட்! - தினமணி கட்டுரை 16.10.2014



     அக்டோபர் மாதத்திற்கு என்ன ஒரு மகிமை! நாம் நேசிக்கும் பல மாமனிதர்கள் இவ்வுலகில் அடி வைத்த மாதம் என்ற பெருமை! நமது தேசத் தலைவர்கள் மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஜெயபிரகாஷ் நாராயணன், இரும்பு மனிதர் வல்லபாய் படேல், சுப்பிரமணிய சிவா பிறந்த  மாதம் அக்டோபர். ஏன் வால்மீகியின் ஜெயந்தியும் புரட்டாசி மாதத்தில்.  நம் நாட்டிற்காக அர்ப்பணிப்போடு உழைத்த தேசிய தலைவர் அன்னி பெசன்ட் அம்மையாரின் ஜெயந்தி அக்டோபர் ஒன்று. ஆனால் அவரை நாம் அதிகம் நினைவில் கொள்வதில்லை.
     1893-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உலக சமய மாநாட்டில் “சகோதர சகோதரிகளே” என்று தன் பேச்சைத் துவங்கி கூடியிருந்தவரின் ஆத்மார்த்த வரவேற்பை பெற்ற நிகழ்வை அந்த மாநாட்டிற்குச் சென்ற அன்னி  பெசன்ட் நேரில் கண்டார்.  மனிதப் பிறவியின் நோக்கம் இந்த பிரபஞ்சத்தின் விந்தைகள், மதங்களின் நெறிகள் இவைகளுக்கான விடைகளின் தேடலின் முடிவு இந்தியாவில் கிடைக்கும் என்ற உணர்வு உதிக்க அதே ஆண்டு இந்தியாவின் தென்முனை தூத்துக்குடி துறைமுகத்தில் வந்திறங்கினர்.
     அன்னி பெசன்ட் இளம்பருவத்தில் அனுபவித்த கஷ்டங்கள் வேறொருவருக்கு ஏற்பட்டிருதால் விரக்தியின் எல்லைக்கே சென்றிருப்பார்.  ஐந்து வயதில் தந்தை இறப்பு, சில வருடங்களில் சகோதரன் இறப்பு, இரு சிறு குழந்தைகளை  வைத்து அன்னியின் தாயார் தனது உழைப்பால் இன்னல்களுக்கு  இடையில் வளர்த்தது என்று அன்னியின் இளம் பிராயம் கஷ்ட ஜீவனத்தில் கழிந்தது.  ஆனால் அதுவே மற்றவர்களுக்கு உதவுவதே வாழ்க்கையின் குறிக்கோள் என்ற ஒரு ஆழமான வைராக்கியத்தை அளித்திருக்க வேண்டும். 
வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்ற தேடலில் இறங்கினாள். தான் சார்ந்திருந்த மதத்தின் இறுக்கமான கோட்பாடுகள் உறுத்தியது. உண்மையை தேடும் உள்மனதிற்கு ஏற்புடையதாக அமையவில்லை. இந்நிலையில் பத்தொன்பது வயதிலேயே ப்ராங்க பெசன்ட் என்ற போதகருடன் திருமணம்.  பத்தாம் பசலியான புகுந்த இடத்தில் நிம்மதியில்லை.  அடுத்தடுத்து பிறந்த இரு குழந்தைகளின் உடல்நிலை பாதிப்பு, அவர்களை நலம் பெற வைப்பதில் மாதக்கணக்காக போராட்டம் என்று தொடர் கஷ்டங்கள். குடும்ப வாழ்க்கை சகிக்காமல் விவாகரத்து,  குழந்தைகள் மீது உரிமை பெற கோர்ட்டில்  வழக்கு, அன்புத்தாயாரின் மரணம் கொடுத்த வேதனை மதங்கள் மீது கொண்ட அவ நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.
     1872-ம் வருடம் பிளாவட்ஸ்கி அம்மையாரின் பிரம்ம ஞான சபையில் தன்னை இணைத்துக் கொண்டார். சோஷலிஸ கொள்கைகளில் அதிக பற்று கொண்டு ஃபேபியன் இயக்கத்தில் இணைந்து அப்போதைய உயர்ந்த சிந்தனையாளர்கள் பர்னாட் ஷா, பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், வெல்ஸ், வெர்ஜீனியா உல்ப். போன்றவர்களோடு சிந்தனைப் பரிமாற்றம் செய்து கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்தது.   மனித பிறவி, மதம், அரசியல் சமுதாய ஏற்றத்தாழ்வு பற்றிய நிதர்ஸன உண்மைகள் அவரை மிகவும் பாதித்தது.  சமுயத்தில் மனிதப்பண்பு உயரவேண்டும் மனித நேயம் நிலைப்பட வேண்டும் என்ற திடமான முடிவோடு பிரம்ம ஞான சுவையோடு இணைத்துக் கொண்டார்.
     எவ்வாறு ராமகிருஷ்ணா பரமஹம்சருக்கு ஞான ஒளி சீடராக விவேகானந்தர் அமைந்தாரோ அதே போல் பிளாவட்ஸ்கி அம்மையாருக்கு அன்னி பெசன்ட் உண்மை தொண்டராக பிரம்ம ஞான சபையின் கொள்கைகளை இந்தியாவில் பல இடங்களுக்கு சென்று மக்களோடு பகிர்ந்து கொண்டதோடு அதே சமயம் இந்தியாவின் பழம்பெருமை, கலாச்சாரம் என்ற பொக்கிஷத்தை சுமந்து கொண்டு அதைப்பற்றி ஸ்மரணையின்றி கொத்த அடிமைகளாக வாழும் இந்தியர்களைக் கண்டு மனம் வருந்தினார்.
     கல்வி மூலமாகத்தான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் அதுவும் பெண் கல்வியின் அவலநிலை கண்டு கல்வி முன்னேற்றத்திற்கு பல முயற்சிகள் எடுத்துக் கொண்டார்.  1898ம் ஆண்டு வாரணாசியில் பெண்களுக்கான கல்வி கூடத்தை நிறுவினார்.
     காசியில் நிறுவப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரியை மையமாக வைத்து தர்பங்கா மஹாராஜா ராமேஸ்வர பிரதாப் சிங் தலைமையில் காசி இந்து பல்கலைக்கழகம் உருவாக அஸ்திவாரம் போடப்பட்டது.  இந்து சமயத்தையும் இந்திய பண்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட புதிய கல்வித்திட்டம் அவர் நிறுவிய பெண்கள் கல்லூரியில் 1904ம் அறிமுகப்படுத்தினார்.  அந்த கல்வித் திட்டம் பல்கலைக்கழகத்தின் அடிப்படை சித்தாந்தமாக அமைந்தது.  1921ம் வரும் காசி பல்கலைக்கழகம் பெசன்ட் அம்மையாரின் சேவையைப் பாராட்டி கொளரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
     கல்வி பயில்வது பள்ளி கல்லூரியில் மட்டும் அல்ல வாழ்க்கையும், சூழலும் சுற்றமும் கல்வி புகட்டுகின்ற அதனை கிரகிக்க முயல வேண்டும் என்ற மூதுரையை முற்றிலும் அன்னி செயலாக்கியதினால்தான் அவர் மிகச்சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர் பேச்சாளர் என்று பல பரிமாணங்களில் சோபிக்க முடிந்தது. 
     அன்னி பெசன்ட் முற்றிலும் தன்னை சமுதாயப்பணியில் அர்ப்பணித்தது மட்டுமல்ல உண்மையாகவும் தைரியமாகவும் கருத்துக்களை சமுதாயத்தோடு பகிர்ந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  அவரது கருத்து சுதந்திரத்தால் பல எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது.  அறிஞர் சார்லஸ் பிராட்லோவுடன் சேர்ந்து ஆண் பெண் மணம் புரிதல், கருத்தடை, ஜனத்தொகை அதிகரிப்பால் ஏழைகள் படும் இன்னல் இவை குறித்து இவர்களது மதசார்பற்ற கொள்கைகள், பிற்போக்கான மதபோதகர்கள் மாற்றத்தை சுயநலதிற்காக புறக்கணிக்கும் கனவான்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.   நீதிமன்றத்தில் நாத்திகம் பரப்புவதாக அவதூறு வழக்கு தொடரப்பட்டது ஆறுமாதம் தண்டனை விதிக்கப்பட்டது.  அதனால் அசரவில்லை அன்னி.  மேல்முறையீட்டில் நிரபரதியாக வெளி வந்து, ஆண் பெண் உறவு, விவாகம் பற்றிய கருத்துக்களை துண்டு பிரசுரமாக வெளிட்டடார்.  அவை லட்சக்கணக்கில் விற்பனையானது.  பல மொழிகளிலும் வெளிவந்தது.
     முற்போக்கு சிந்தனை நிறைந்த அன்னி இந்தியாவிற்கு வந்தபோது இங்கிருந்த சமுதாய சூழலைக் கண்டு மாற்றம் கொண்டு  வர  வேண்டும் என்று விழைந்ததில் வியப்பில்லை.  சமுதாய முன்னேற்றம், மாற்றம், விழிப்புணர்வு, ஆண் பெண் சம நோக்கு இவைகளை தனது துவக்கப்பணியாக  தமிழ்நாட்டில் செயலாக்கியது தமிழருக்கு பாக்கியம்.  ‘மகன்கள் மகள்கள்’ என்ற அமைப்பை 1912ம் வருடம் ஏற்படுத்தி மகன் மகள் பாகுபாடின்றி குடும்பத்திலும் வெளி உறவுகளிலும் நடத்தப்பட வேண்டும் என்ற குறிக்கோளை  வலியுத்தினார்.
இந்தியாவில் முதல் மாமன்ற உறுப்பினர் என்ற பெருமை கொண்டவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள். இரு சமூக சீர்திருத்தவாதிகள் ஒருமித்த கருத்தோடு இணைந்ததில் வியப்பில்லை. இந்திய பெண்களின் நிலையை உயர்த்தவும் சமுதாய பிற்போக்கான பிணைப்புகளிலுருந்து பெண்களை விடுவிக்கவும் இந்திய மாதர் சங்கம் என்ற அமைப்பை 1913ம் வருடம் ஊருவாக்கினார். டாக்டர் முத்துலட்சுமியோடு இணைந்து பெண்களுக்கு சம கல்வி, ஆண்களுக்கு இணையான உரிமைகளை நிலைநாட்ட பல முயற்சிகள் மேற் கொண்டார்.
     இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் அதற்கு போராட வேண்டும் என்ற எண்ணத்தை வித்திட்டவர் அம்மையார் அவர்கள்.  “இந்தியாவே விழித்தெழு” என்ற தனது கட்டுரைகளின் தொகுப்பினை 1913ம் வருடம் வெளியிட்டு அதன் மூலம் விடுதலைக்கான விழிப்புணர்வை நாடெங்கும் பரவச் செய்தார்.
     நாட்டின் இளைஞர்களை ஒன்றிணைக்க ஒரு அமைப்பு தேவை என்று உணர்ந்து இந்திய இளைஞர்கள் சங்கம்(YMIA) 1914 வருடம் துவங்கினார். எவ்வாறு உடற் பயிற்சிக் கூடம் மூலம் உடலை வலுவடைச் செய்கிறோமோ அதுபோல, கல்வி, விவாதம் மூலம் சீரிய குடிமகனாக அரசியல் உணர்வோடு உருவாகும் மையமாக இச்சங்கம் வளர்ந்திட வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்தார்.  இச்சங்கம் இப்போது நூற்றாண்டு சேவையை கொண்டாடுகிறது.
     “சுயாட்சி பேரியக்கம்” என்ற விடுதலை போராட்டத்தை சென்னையில் துவக்கியதற்கு பேருதவியாக இருந்தவர் பாலகங்காதர திலக் அவர்கள்.  விடுதலை வீரர் தாதாபாய் நௌரோஜி தலைவராக செயல்பட்டார். அடையார் ஆலமரம் போல அன்னி பெசன்ட் தூவிய விடுதலை விருட்சத்தின் விழுதுகள் நாடெங்கும் விழுந்தன.  மூதறிஞர் ராஜாஜி,
சர் சி.வி. ராமசாமி, வி.கலியாண சுந்தரனார்,சுப்பிரமணிய ஐயர், இந்து பத்திரிகை ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் போன்றோர் சென்னையிலும், மோதிலால் நேரு, சாப்ரூ, தாஸ் போன்ற பல பெருந்தலைவர்கள் அகில இந்திய அளவிலும் முனைந்து செயல்பட்டனர்.  அன்னையின் சுதந்திர முழுக்கம் பல இடங்களிலும் ஒலித்தது.  பிரிட்டிஷ் அரசு 1917 ஜுன் மாதம்  அன்னையை சிறையிலிட்டது.  ஆனால் எதிர்ப்பு மேலும் வளர்ந்தது.  அன்னை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
     அகில இந்திய காங்கிராஸ் தலைவராக 1917-ம் வரும் கல்கத்தாவில் நியமிக்கப்பட்டார்.  காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவர் அன்னி பெசன்ட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
          அன்னையின் மனித வாழ்க்கையின் தாத்பரிய தேடல்  பிரம்ம ஞான சபையில் ஐக்கிய மானதில் முடிவுற்றது.  பிரம்ம ஞான சபை தலைவராக 1907ல் இருந்து மதங்களின் ஒற்றுமைக்காக பாடுப்பட்டார்.  உண்மை நெறி நேர்மையான பாதை மனித நேயம்,சகோதரத்துவம் இவைதான் பிரம்ம ஞான சபையின் கொள்கைகள்.  அவைதான் எல்லா மதங்கள் சங்கமிக்கின்ற கோட்பாடுகள்.
     அன்னை இந்தியாவையும் இந்தியர்களையும் வெகுவாக நேசித்தார்.  மகாத்மா காந்தி அவர்கள் அன்னி பெசன்ட் தான் இந்தியர்களை நீண்ட துயிலிலிருந்து தட்டி எழுப்பி சுதந்திர உணர்வை செலுத்தினார் என்று பாராட்டியுள்ளார்.  தமிழறிஞர் திருவிகா அவர்கள் அம்மையாரால் வெகுவாக கவரப்பட்டார்.
     “அம்மையாரின் கிளர்ச்சி என்னுள் கனன்றுக் கொண்டிருந்த கனலை எழுநாவிட்டு எரியச் செய்தது. வெஸ்லி கல்லூரிப் பணியை விட்டு விடத் தூண்டியது.  தேசபக்தன் இதழ்க்கு ஆசிரியனாக்கியது.  தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. மொத்தமாகச் சொல்ல வேண்டுமானால் என் வாழ்க்கைப் போக்கையே மாற்றி அமைத்தது.  என வாழ்க்கைப் போக்கை முற்றிலும் மாற்றி அமைத்த அன்னி பெசன்ட் எனக்கு அன்னை வசந்தை ஆனார்.” என்று மனம் நெகிழ கூறியுள்ளார்.
     புனித அக்டோபர் மாதத்தில் “சான்றோர்களை போற்றுதும்” என்று காலச்சுவட்டில் தன் வாழ்வை அர்ப்பணித்த காந்தி, அன்னி பெசன்ட், சாஸ்திரி, ஜெய பிரகாஷ், படேல் போன்றவரை நினைவு கூர்வோம். அவர்கள் சமுதாய இன்னல்களுக்கு எதிராக போராடினார்கள் வெற்றி கண்டார்கள். ஆனால் நமது சுணக்கத்தால் சமுதாயத்தை வலுவிழக்கச் செய்யும் காளான்களாக முளைத்துள்ள சாதி மத பேதம், பாலியல் கொடுமை, குழந்தைகள் வன்கொடுமை நமக்கு சவாலாக இருக்கின்றன.
     நாலாந்திர நடிகர்களை பின் தொடர்கிறோம் ஒரு கைலாஷ் சத்யார்த்திக்கு நோபல் பரிசு கிடைத்தபிறகுதான் யார் இந்த இந்தியர் என்று அறிய முற்படுகிறாம்.  குலையும் சமுதாய மதிப்பீடுகள் முகத்தில் அடிக்கிறது.
     இன்னொரு அன்னை வசந்தை, காந்தி, சாஸ்திரி, காமராஜ் அம்பேத்கர் வரமாட்டார்கள்.  அவர்கள் இட்டுச் சென்ற பாதையில் உபாதைகள் முளைக்காமல் கண்காணித்தலே நாம் செய்யக்கூடிய மிக பெரிய சமூக சேவை.